அடுத்த கட்டம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

 
                      பேப்பரில் வந்திருந்த ‘நினைவு அஞ்சலி’ விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜனா. யாரோ ஒரு டேவிட். மரணமடைந்து ஏழு வருடங்கள் ஆகின்றன. இப்போது இருந்திருந்தால் 85 வயது ஆகியிருக்கும். அதாவது, இப்போதைய ஜனாவின் வயது. டேவிட் கொடுத்து வைத்தவராக இருக்க வேண்டும். மரணம் காலாகாலத்தில் அவரை அழைத்துச் சென்றிருக்கிறது.

ஜனா பேப்பரையே வெறிப்பதைப் பார்த்த அவரது மூத்த மகன், ‘‘யாருப்பா, தெரிஞ்சவரா?’’ என்று கேட்டுப் போனான். அப்புறம்தான் அந்த யோசனை வந்தது. அவசரமாக நினைவுகளை ஆராய்ந்து, ஏமாற்றம் அடைந்தார். டேவிட் பரிச்சயமானவர் மாதிரியும் தெரிகிறார்... அந்நியராகவும் தெரிகிறார். சிறிது குழம்பினார்.

ஏனென்றால் தான் சேகரித்து வைத்திருந்த நினைவுகளின் வெளிச்சம் மங்கிப் போவதையும், தான் அதன் துணையின்றி பரிதாபமாக நிற்பதையும் அவர் சமீபகாலமாக உணரத் தொடங்கியிருந்தார்.

போன வாரம் அவரது வீடே பரபரத்தது... ‘‘அப்பா, முதலியார் இறந்துட்டார்பா...’’ என்று மகனும் பேரனும் இவரை ஆட்டோவில் அழைத்துச் சென்றார்கள்.

துக்க வீட்டில் இவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள். மனதெங்கும் ஒரே கேள்வி... ‘யார் இந்த முதலியார்? ஏன் என்னை இங்கெல்லாம் கூட்டி வந்து கஷ்டப்படுத்துகிறார்கள்?’
திடீரென தொடையில் ஈரத்தை உணர்ந்தார். அவரது கட்டுப்பாட்டை மீறி சிறுநீர் கழிந்திருந்ததில் அவருக்கு கோபம் வரத் தொடங்கியது. அதை யாரும் புரிந்து கொள்ளாததை எண்ணி, அவர் மேலும் கோபம் அடைந்தார்.

பிணத்தின் அருகில் கொண்டு சென்றபோது, அவரது வளைந்த உடலிலிருந்து வேட்டி வேறு அவிழ்ந்துவிட்டது. அதை யாரோ கட்டி விட்டார்கள். மேலும் கோபம். ஒரு பெண் ஆவேசக்குரலில் அழுது, ‘‘பாருங்க இந்தக் கொடுமையை...’’ என்று முறையிட்டாள். இவருக்கோ கால்களின் மூட்டிலிருந்து வலி கிளம்பியிருந்தது. வேட்டி மீண்டும் அவிழும் போலிருந்தது. அருகிலிருந்த வேறு சிலர், ‘‘இவரை ஏன் சிரமப்படுத்துகிறீர்கள்? இவரால் இதை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?’’ என்று பதறினார்கள்.

சிறிது நேரம் ஜனா அந்த உடலையே பார்த்தார். எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. இவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? இவர்கள் ஏன் என்னைப் பாடாய்ப் படுத்தி, வயசான காலத்தில் இங்கே கூட்டி வந்து துன்புறுத்துகிறார்கள்? என்னால் நிற்க முடியவில்லை. உட்கார்ந்தால் தேவலை. இல்லை, படுத்து உறங்கினால் நல்லது.

மகனிடம் சொன்னார்... ‘‘வீட்டுக்குப் போகணும்.’’

ஆட்டோவில் உட்கார்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. ‘‘பெருசுக்கு பிரச்னை ஒண்ணுமில்லியே...’’ என்று ஆட்டோக்காரன் விசாரித்தது எரிச்சலாக இருந்தது. ‘‘தாத்தா, நீங்க நார்மலாத்தான இருக்கீங்க?’’ என்றான் பேரன்.

‘‘எனக்கென்ன குறை?’’

‘‘இல்ல... கேட்டேன்...’’

‘‘நல்லாத்தான் இருக்கேன்!’’

‘‘இல்ல... நீங்க தாங்கிக்கணுமேன்னு உள்ளுக்குள்ள கவலையா இருந்தது...’’

‘‘இதுல தாங்கறதுக்கு என்ன இருக்கு...’’ என்றார் ஜனா. எவனோ செத்துப்போனான். ஒழுகும் மூக்கைக்கூட துடைக்க இயலாமல் துவண்ட கைகளுடன் சீரழிகிறேன் நான்.

‘‘எனக்குத் தெரியும்ப்பா... நீங்க மெச்சூர்டான ஆள். இதை ஈஸியா எடுத்துப்பீங்கன்னு எனக்குத் தெரியும்ப்பா...’’ என்றான் மகன்.

இரண்டு நாள் கழித்து மாத்திரை கொண்டு வந்த மகனிடமும், தண்ணீர் கொடுத்த பேரனிடமும் கேட்டார்.

‘‘எங்க இந்த சுந்தரம் பய? ஒரு வாரமா ஆளையே காணோமே...’’மகனும், பேரனும் திகைத்துப் போனார்கள்.

‘‘அப்பா, முதலியார்...’’

‘‘என்னடா, ‘முதலியார்’னு மரியாதை இல்லாம... ‘சுந்தரம் மாமா’ன்னு மரியாதையா சொல்லு... என்னைவிட ஒரு வயசு மூத்தவன்டா அவன்... என்ன ஆச்சு அவனுக்கு? என்னைப் பாக்காம இருக்க மாட்டானே. மழை இப்ப பெய்யுதில்ல... நனைஞ்சு காய்ச்சல், சளின்னு ஏதாச்சும் வந்திருக்குமோ என்னவோ... போன்ல கூப்பிடுடா... தாத்தா தேடீட்டிருக்கார்னு... எழுபத்தஞ்சு வருஷ ஃபிரண்டுடா!’’

‘‘தாத்தா! அதுதான் உங்களை ஆட்டோல கூட்டீட்டுப் போனோமே... நீங்க கடைசியா அவர் முகத்தப் பாக்க ஆசைப்படுவீங்கன்னுதான் உங்களக் கூட்டீட்டுப் போனோம்...’’ என்றான் பேரன் அதிர்ச்சியுடன்.

குடும்பம் எல்லாவற்றையும் விவரித்தது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகுதான் ஆட்டோவில் போனதே நினைவுக்கு வந்தது. சுந்தரம் வீட்டில் நடந்தது எதுவுமே நினைவுக்கு வரவில்லை. இடிந்து உட்கார்ந்தார். அன்றைய தினம் எதுவுமே சாப்பிடவில்லை.

மனதெங்கும் எழுபத்தைந்து வருட நட்பு.

‘எல்லா நினைவுகளையும் அறிந்த முகங்களையும் வயோதிகம் மறந்து போக வைத்து விடுகிறது என்றால், அவற்றைச் சேகரிக்க மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் வீண். கடந்த காலத்தை வயோதிகம் வெறிகொண்டு தின்றிருக்கிறது என்றால், வயோதிகத்தையும் உள்ளடக்கிய வாழ்வின் அர்த்தம்தான் என்ன? அர்த்தங்கள் எதுவாக இருப்பினும், எல்லாமே வீண்!’
நிச்சயமாக வாழ்க்கை என்பதே அபத்தமானது. மலங்க விழித்துக்கொண்டே, சுவரைப் பிடித்தவாறு நகர்ந்து பாத்ரூம் சென்று குழந்தை மாதிரி அழுதார். நண்பனுக்காக அழுதார். அவன் முகம் மறந்ததை எண்ணி அழுதார். இந்தத் தகவல்கள்கூட நாளை மறந்து போகலாம் என்ற எண்ணத்தில் மேலும் அழுதார்.

‘ஒரு விதத்தில் சுந்தரம் கொடுத்து வைத்தவன். இது போன்ற உபாதைகளிலிருந்து விடுபட்டு விட்டான். நினைவுகளில் தடுமாற்றம், நடுங்கும் கரங்கள், பார்வை இழக்கும் விழிகள், வார்த்தைகளை உள்வாங்காத காதுகள், கூன் முதுகு, தோல் சுருக்கங்கள், வளைந்து விட்ட கால்கள்... நிச்சயமாக வாழ்க்கையால் மென்று துப்பப்பட்ட சக்கை நான்...’

சாப்பிட வற்புறுத்தி அழைத்தவாறு, ‘‘தாத்தா, உங்களுக்கு ஆறுதல் சொல்ல எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரைக் கூட்டீட்டு வரேன். ‘நிலையாமை’ பத்தி அவர் புக் எழுதியிருக்கார்...’’ என்றான் பேரன்.

பெருமூச்சுடன் பேப்பரில் அடுத்த செய்திகளைப் படித்தார் ஜனா. விபத்து செய்திகள். உடனே கடந்த காலத்தில் தனக்கு நேர்ந்த சில விபத்துகளை எண்ணி ஏங்கினார் ஜனா. குறைந்தபட்சம் அந்த பைக் விபத்தில் போய்ச் சேர்ந்திருந்தால் கூட, இப்போது எச்சில் ஒழுகும் வாயைத் துடைக்கும் அவலம் நேர்ந்திருக்காது. அந்தப் பேருந்து விபத்து முழுமை பெற்றிருந்தால், இப்படி ஊன்றுகோலைத் தேட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

பேப்பர் படித்து என்ன பயன்? படிப்பதும் மறந்து விடுகிறது. சலிப்புடன் பேப்பரைச் சுருட்டியபோது மேசை மீது ஒரு கரப்பான் பூச்சி இருப்பதைப் பார்த்தார். சுருட்டிய பேப்பரால் அதை அடிக்க முயல, அது தப்பி ஓடியது. அப்புறம் இன்று என்ன கிழமை என்று யோசித்தார். நினைவுக்கு வரவில்லை. இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. சில நேரம் தன் பெயர் என்ன என்பதும், தான் ஆணா, பெண்ணா என்பதும்கூட மறந்து விடுகிறது. ஞானிகளும் ரிஷிகளும் இந்தக் கொடுமைக்குப் பயந்துதான் இனி பிறவியே வேண்டாம் என்று கதறியிருக்க வேண்டும். கடவுளே... என்னைக் காப்பாற்று!  மனதுள் அலறியவாறு நாற்காலியிலேயே தூங்கி விட்டார்.

‘‘மாமா’’ என்று மருமகள் அழைத்த சத்தத்தில் விழித்தார் ஜனா. அவரது எதிரில் நடுத்தர வயதில் ஒருவர். ‘‘உங்க பேரன் சொன்ன பேராசிரியர் இவர்தான். டி.வி&ல எல்லாம் பேசியிருக்கார். சார், மாமாவுக்கு நீங்கதான் ஆறுதல் சொல்லணும். ரொம்ப குழம்பிப் போய் இருக்கார்...’’

இரண்டு பேரிடமும் சொல்லிவிட்டு நகர்ந்தாள். வந்தவர் ஜனாவின் எதிரில் அமர்ந்தார். தனது புலம்பல்களைச் சகிக்க முடியாமல் ஆறுதல் வார்த்தைகளுக்காக குடும்பம் யார் யாரையோ கூட்டி வருகிறது. எப்படியோ, பித்து நிலை மாறினால் சரிதான்.

 ஜனா அந்த உருவத்தையே பார்த்தார்.

தான் பார்வையால் தீண்டப்படுவதை ஜனா முதலில் உணரவில்லை. தலையைக் குனிந்து மீண்டும் பார்த்தபோது, அதே ஊடுருவும் பார்வை. ஒரு கணம் என்னவோ போலிருந்தது. அடுத்த கணம் தான் இன்னமும் பார்க்கப்பட வேண்டும் போலிருந்தது. தான் மெல்ல அமைதியடைவது புரிந்தது.

மிக மென்மையாக குரல் வெளிப்பட்டது.

‘‘ஜனா, என்னைத் தெரியவில்லையா?’’ & புன்னகை. ஜனா பரவசத்தில் திளைத்தார். புரிந்துவிட்டது.

‘‘கடவுளே, வந்திருப்பது நீங்களா?’’

‘‘நானேதான். என்னை அடையாளம் கண்டு விட்டாயே... நான் வந்திருப்பதாகத் தெரிவித்தும் நம்பாமல் இருந்தவர் கோடி. என்னைப் பரிசோதித்துத் தோற்றவர் கோடானு கோடி!’’

‘‘இந்த உருவத்தில் நான் உங்களை...’’

‘‘எந்த வடிவிலும் வருபவர்தானே கடவுள்?’’

‘‘ஸ்வாமி, நான் ஒரு சாதாரண ஆள். ஆன்மிகப்பள்ளியில் மழைக்குக்கூட ஒதுங்காதவன். எனக்கு காட்சி தர வேண்டும் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?’’

‘‘சற்று நேரம் முன் நீ என்னைச் சரணடைந்தாய் அல்லவா? அது முழுமையாக இருந்தது. அந்த அர்ப்பணத்துக்கு யாம் வந்தே தீர வேண்டும். இது கடவுளர் விதி. மேலும், அந்த நொடியில் இந்தப் பூவுலகில் உன்னைத் தவிர என்னை அழைத்தவர் எவருமில்லை...’’ என்றார் கடவுள்.

‘‘நன்றி, பரம்பொருளே...’’ & கை கூப்பினார் ஜனா. கண்ணீர் பெருக்கெடுத்தது. கடவுளுடன் பேச ஆசைப்பட்டார். அவரை உபசரிக்க விரும்பினார். பார்த்துக்கொண்டே இருக்க விரும்பினார். காலில் விழ விரும்பினார். கடவுள் எப்போது வேண்டுமானாலும் சென்று விடலாம். அறிமுகம் செய்து வைக்கலாம் என்றால் எங்கே போனார்கள் வீட்டில் உள்ளவர்கள்? அவர்களுக்கு வந்திருப்பது கடவுள் என்று தெரியாது.

‘‘ஜனா, வணங்கியது போதும். எதற்காக அழைத்தாய்?’’

‘‘முடியலை’’ & ஜனா தழு தழுத்தார்... ‘‘நானே எனக்கு ஒரு சுமை. என்னுடைய உடலே எனக்கு பாரம். இதுவரை அர்த்தமாகப்பட்டது எல்லாம் இப்போ அபத்தமாகப்படுது. கண்டிப்பா வயோதிகம் ஒரு சாபம். மனித உடலுக்கு ஏதாவது எக்ஸ்பயரி டேட் இருக்கக் கூடாதா?’’

கடவுள் புன்னகைப்பது போல இருந்தது.

‘‘நீ பூமியில் பிறக்கும் முன்பே உனது உணவுக்காக உன் தாயின் மார்பகங்களைப் படைத்தவன் நான். எல்லாத்தையும் யோசிக்காம இருப்பேனா?’’

‘‘...............’’

‘‘இந்த வாழ்வோடு எதுவும் முடியப்போவதில்லை. உன்னை அடுத்த கட்டத்திற்கு தயார் செய்ய, உனது இப்போதைய நிலை பயன்படும் என்று நீ ஏன் நினைக்கக் கூடாது?’’

‘‘.................’’

‘‘இந்த கூன் உடல், பீடித்துள்ள வயோதிகம்... இவற்றை நீ எப்படி எடுத்துக்கொள்கிறாய், எப்படி எதிர்கொள்கிறாய் போன்ற விஷயங்கள் உன்னை நான் அடுத்த கட்ட பணிக்கு அனுப்புவதற்குப் பயன்படலாம். ஓ, மானுடனே! வாழ்வில் பொருளற்றது என்று எதுவுமில்லை!’’ ஜனா தலையசைத்தார். நடுக்கத்துடன் எழ முயன்றார்.

‘‘உன்னையே நீ தொடர்ந்து கண்காணித்து வா. எந்த அனுபவமும் வீணாவதில்லை. எந்த அனுபவம் எங்கு பயன்படுமோ! புரிந்ததா?’’

‘‘புரிந்தது’’

‘‘வரட்டுமா?’’ என்றார் கடவுள்.

ஜனா தள்ளாடி எழுந்து, கை கூப்பினார்... ‘‘நன்றி’’ என்றார்

& புத்தகத்தின் மீதிருந்த அந்தக் கரப்பான் பூச்சியைப் பார்த்து!

பேராசிரியர் திடுக்கிட்டு எழவும், மருமகள் அறையினுள் வரவும் சரியாக இருந்தது.

‘‘டாக்டர்கிட்ட கூட்டீட்டுப் போறது நல்லதுன்னு நினைக்கறேன்மா. வந்ததுல இருந்து எங்கிட்ட ஒரு வார்த்தைகூட பேசலை. கரப்பான் பூச்சியப் பாத்து பேசிக்கிட்டே இருக்கிறார். அதப் பாத்து கும்பிடறார்...’’ என்றார் பேராசிரியர்.

மருமகள் அருகில் இருந்த விளக்குமாறை எடுத்து கரப்பான் பூச்சியை அடிக்க முயல, நிலை குலைந்து கால்கள் மடங்க பீரோவை நோக்கி விரைந்தார்.

தலையில் அடிபட்டு, தான் தன் சுயநினைவை இழந்து சிறிதுகாலம் கோமாவில் இருக்கப் போகிறோம் என்பது அவருக்குப் புரிந்தது.

என்றாலும்...  விழுந்தார்
சந்தோஷமாகவே! 

ஷங்கர்பாபு