திருப்பு முனை



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

          வெற்றியின் பாதையில்
தங்களை திருப்பிவிட்ட
தருணங்களை, ஜெயித்தவர்கள்
அடையாளம் காட்டும் தொடர்
இந்த வாரம் சூர்யா

‘‘மனிதர்களில் ரெண்டு வகையினர் இருக்காங்க. திறமையானவர்கள் ஒரு வகை; தனக்குள்ள இருக்கற திறமையை பயன்படுத்தாதவர்கள் இரண்டாவது வகை. நிஜத்துல திறமை இல்லாதவங்கன்னு யாருமே இல்லை. எனக்குள் என்ன திறமை இருக்குன்னு கண்டுபிடிக்கவோ, அதை பயன்படுத்தவோ தெரிஞ்சிக்கறதுக்குள்ள 25 வருஷம் ஓடிப்போச்சு. ‘இழப்பதற்கு ஒன்றுமில்லை. மீட்பதற்கோ சொர்க்கம் இருக்கு’ன்னு சொல்லுவாங்க இல்லையா... அது அப்படியே அடியேன் வாழ்க்கைக்குப் பொருந்தும். 25 வயசு வரைக்கும் இழப்பதற்கு ஒன்றும் சேர்க்கவில்லை.

ஆனால் அடைவதற்கு நிறைய இருந்தது’’ என்கிற சூர்யாவின் வாழ்க்கையை கறுப்பு & வெள்ளை பக்கத்திலிருந்து, கலர்ஃபுல் பக்கமாக மாற்றிய திருப்புமுனை தருணங்கள் சினிமாவைவிட சுவாரஸ்யமாக இருக்கின்றன. அடர்ந்த இருளை விட, கண்கள் கூசும் வெளிச்சம் ஆபத்தானது. எந்த வெளிச்சத்திலும் இயல்பு தொலையாமல் இருப்பதே சூர்யாவின் தனித்துவம்.

‘‘டிரஷர் ஹன்ட்’னு ஒரு விளையாட்டு. நாம தேடவேண்டிய பொருளை நமக்குத் தெரியாம ஒளிச்சு வச்சுடுவாங்க. கண்ணை கட்டி சுத்தி விட்ட மாதிரி இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள்ள நாம அந்தப் புதையலைத் தேடி எடுத்தா ஜெயிச்சதா அர்த்தம். சின்ன பிள்ளைகள் விளையாடுகிற இந்த விளையாட்டைத்தான் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் எல்லாருமே விளையாடுறோம். நமக்கான புதையல் எங்கே வேண்டுமானாலும் ஒளிந்திருக்கலாம். யார் வேண்டுமானாலும் ஒளிச்சு வச்சிருக்கலாம். தீராத தேடல்தான் நமக்கு அந்தப் புதையலைக் கண்டுபிடிச்சு குடுக்கும். தேடும்போது எங்கெங்கேயோ மோதிக்குவோம்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineமத்தவங்க கேலியாவும் ஜாலியாவும் நம்மைப் பார்த்து சிரிக்கிறது காதுல விழும். எதையும் மனசுக்குள்ள கொண்டு போகாம இன்னும் தீவிரமா தேடணும். தடுமாறிக் கீழே விழலாம். அப்போ இன்னும் அதிகமான சிரிப்பு சத்தம் கேட்கும். ஒண்ணுமே நடக்காதமாதிரி திரும்ப எழுந்து தேடணும். நமக்கானதை அடையற வரைக்கும் தேடிக்கிட்டே இருக்கணும். இதையெல்லாம் அறிவுரையா கேட்டா போரடிக்கும். அனுபவிச்சு முயற்சி செய்தால், பலன் நிச்சயம் இருக்கும். எனக்கு அப்படித்தான் இருந்திருக்கு’’ என்கிற சூர்யாவுக்கு வெற்றி ஒரு பக்கமும், பணிவு ஒரு பக்கமும் பாதுகாப்பாக இருக்கின்றன.

தோல்வியில், ‘இதோ வர்றேன் பாருங்க’ என்கிற திமிரும், வெற்றியில் ‘இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்குங்க’ என்கிற பணிவும் காட்டுகிற சூர்யாவின் வெற்றி மந்திரம் சிதம்பர ரகசியம் அல்ல. உற்றுப் பார்த்தால் தெரிகிற உள்ளங்கை ரேகை. எதுவும் செய்யாமல் சும்மா இருந்து துருப்பிடித்துப் போவதைவிட, உழைத்து தேய்ந்து போகலாம் என்கிற எளிய உண்மையில் இன்னும் அழகனாகத் தெரிகிறார் சூர்யா.

‘‘முத்தெடுக்கலாம் என்று கடலில் மூழ்குபவர்கள் செத்துப்போவதும் உண்டு. செத்துப்போகலாம் என்று கடலில் விழுபவர்கள் முத்தெடுப்பதும் உண்டு. நான் இரண்டாவது ரகம். சில விஷயங்களில் நான் ஆவரேஜ். பல விஷயங்களில் அதுக்கும் கீழே. நான் படிச்ச ஸ்கூல்ல, ரொம்ப நல்லா படிக்கிற பசங்களை ‘ஏ’ செக்ஷனிலும், ரொம்ப ரொம்ப மக்குனு அவங்க நினைக்கிற பசங்களை ‘டி’ செக்ஷனிலும் போடுவாங்க. ‘டி’க்கு கீழே வேற செக்ஷன் இல்லாததால் என்னை ‘டி’ செக்ஷன்ல போட்டாங்க. பசங்களை ஸ்கூலே அப்படி பிரிச்சு வெக்கிறது ரொம்பப் பெரிய தப்புன்னு இப்போ புரியுது. அப்போ அதெல்லாம் தெரியாது.

‘நமக்கெல்லாம் எதுவும் வராது போல இருக்கு’ன்னு மனசார நம்பினேன். அப்போ எனக்கு ரொம்ப நெருங்கின நண்பனுக்குப் பெயர் ‘பயம்’. குழந்தைப் பருவத்தில் மனசுக்குள்ள வருகிற பயங்கள் ரொம்ப ஆபத்தானவை. அருமையான வீடு; அக்கறையான உறவுகள்; வறுமை இல்லை; தேவையான வசதி இருந்துச்சு. எல்லாம் இருந்தும் எப்படியோ நான் தனிமைக்கு சொந்தமானேன்.

லயோலா கல்லூரியில் பி.காம் முடிக்கிறதே என்னைப் பொறுத்தவரைக்கும் பெரும் சாதனை. எங்கப்பா என்னை காலேஜ்ல சேர்க்கும்போதே, கல்லூரி முதல்வர் தெளிவா கேட்டார். ‘உங்கள மாதிரி நடிகர்களோட பசங்க சிபாரிசுகளோடு வந்து சேர்றாங்க. யாரும் படிப்பை முடிக்க மாட்டேங்கிறாங்க. இன்னொருத்தர் படிக்க வேண்டிய இடத்தை எதுக்கு வீணாக்கிறீங்க?’ அப்பா எந்த நம்பிக்கையில், ‘என் பையன் அது மாதிரி இல்லை’ன்னு வாக்கு குடுத்தார்னு தெரியலை. முதல் ரெண்டு வருஷம் எல்லா செமஸ்டர்லயும், ஏதாவது ஒரு சப்ஜெக்ட்ல ஃபெயில் ஆகிட்டே இருந்தேன். ‘குடுத்த வார்த்தையை காப்பாத்திடு ராஜா’ன்னு அப்பா ஸ்பெஷல் டியூஷன் எல்லாம் வச்சார். தட்டுத்தடுமாறி முடிச்சேன்.

படிப்பு முடிஞ்ச பிறகு வாழ்க்கை இன்னும் வெறிச்சோடிப் போச்சு. அதுவரைக்கும் தூங்கி எழுந்திருச்சு கிளம்பறதுக்கு ஒரு காலேஜ் இருந்துச்சு. மூணு வருஷத்துல அதுவும் முடிஞ்சிட, எங்கே போய் ஒரு நாளைக் கழிப்பதுன்னு குழப்பம் மிஞ்சும். என்னோடு படித்தவர்களில் பாதிப்பேர் மல்டி மில்லினியர். படிப்பு முடிஞ்சதும் அப்பா பிசினஸ் பார்க்க போயிட்டாங்க. சொந்தமா தொழில் தொடங்கினாங்க. மேற்படிப்புக்கு சிலர் போனாங்க.

எனக்கு என்ன பண்ணணும்னு தெரியலை. ஆனா ஏதாவது பண்ணணும்னு நல்லாவே புரிஞ்சது. உறவினர்கள் மூலம் கார்மெண்ட்ஸ் தொழில் அறிமுகம் கிடைச்சது. அப்பா மாதிரி நடிகராகணும்னு ஒரு முறைகூட தோணினது இல்லை. அதுக்கெல்லாம் அசாத்திய திறமை வேணும்னு நல்லா தெரிஞ்சது. வீட்ல சின்னச்சின்ன தப்பு பண்ணிட்டு சரியா நடிக்கத் தெரியாம வகையா சிக்குவேன். வீட்லயே நடிக்க முடியாதவன், கேமரா முன்னால் நடிக்கறதைப் பற்றி யோசிக்கிற வாய்ப்பு இல்லை.

சிவகுமார் பையன்னு சொல்லாம, சென்னையில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போதைய லட்சியம், கனவு எல்லாமே ஒண்ணுதான்... சொந்தமா ஒரு கார்மெண்ட் ஃபேக்டரி கட்டணும். நூறு பேருக்கு வேலை குடுக்கணும். தொழில் கத்துக்க வெறித்தனமாக வேலை பார்த்தேன். உழைப்பின் பெருமையும், ஓய்வின் அருமையும் தெரிந்த நாட்கள் அவை. குடுத்த வேலையில் எந்த தப்பும் நடந்துடக்கூடாதுங்கிற பொறுப்புணர்வு வந்தது. கார்மெண்ட்ஸ் கம்பெனியில் நிறைய பெண்கள் வேலை பார்ப்பாங்க. அத்தனை பேரும் ஏழைங்க. அன்னைக்கு வேலைக்கு வந்தாதான் அடுத்த நாள் சாப்பாடுங்கிற நிலையில் இருக்கறவங்க. ஆனா எந்த சோகத்தையும் வெளில காட்டாம, எப்பவும் ‘கலகல’ன்னு சிரிச்சு பேசிக்கிட்டே இருப்பாங்க. எல்லாம் இருந்தும் நமக்கு அவ்வளவா சிரிக்கத் தெரியலை; எதுவுமே இல்லாம இருந்தும் கவலை மறந்து சிரிக்கறாங்களேன்னு ஆச்சர்யமா இருக்கும். எனக்கு தம்பி, தங்கை உண்டு. கார்மெண்ட்ஸ் கம்பெனியிலதான், அன்பு நிறைந்த நிறைய அக்காக்களைச் சந்திச்சேன். 

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
ஓவியராக வேண்டும் என்பது அப்பாவின் விருப்பம்; நடிகனாக வேண்டியது என்பது அவருக்கு அவசியம். எனக்கு கார்மெண்ட்ஸ் கம்பெனி நடத்த ஆசை; முதலீடு இல்லாமல் போனால் கடைசிவரை ஊழியனாகவே இருக்கவேண்டிய ஆபத்திலிருந்து மீள சினிமா தேர்வானது. அப்பாவின் நண்பர்களான இயக்குனர்கள் என்னை நடிக்க அனுப்பும்படி கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ‘பையன் ஒழுங்கா வேலை பார்க்கிறான். ஏற்ற இறக்கம் நிறைந்த சினிமா அவனுக்கு எதற்கு’ன்னு ஆரம்பத்தில் நினைத்தார் அப்பா. முப்பதாண்டு கால அனுபவம் அவரை அப்படி யோசிக்க வைத்தது. இயக்குனர் மணிரத்னம் அவர்களின் தயாரிப்பில் வசந்த் அவர்களின் இயக்கத்தில் ‘நேருக்கு நேர்’ பட வாய்ப்பு வந்ததும் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
சினிமா நான் விரும்பி வந்த துறை என்று சொல்ல முடியாது. வேறுவழி தெரியாமல் வந்த துறை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆனால், அதுதான் என் வாழ்வின் திருப்புமுனையாக மாறியது.

எல்லோருக்குமே தவறு செய்கிற வாய்ப்பு கிடைத்துவிடாது. அப்படியே கிடைத்தாலும், ஒரே தப்பை இரண்டு முறை செய்கிற வாய்ப்பு கிடைக்காது. எந்த அடையாளமும் இல்லாமல், ஒரு சராசரியாக தொலைஞ்சு போகிற ஆபத்திலிருந்து நான் நூலிழையில் தப்பிய கதை எனக்கே மலைப்பைத் தரும். கார்மெண்ட்ஸ் தொழிலில் என் தவறுகள் சிறிய வட்டத்திற்கு மட்டுமே தெரியும். சினிமா அப்படி அல்ல. பேசுகிற வார்த்தை, பார்க்கிற பார்வை, போடுகிற உடை அத்தனை பற்றியும் உடனுக்குடன் விமர்சனம் வந்துவிடும். குருவி தலையில் பனங்காய் இருந்தாலே தாங்குவது கஷ்டம். குருவி தலையில் பலாப்பழம் வைத்தால் என்னாகும்? வரிசை கட்டி வந்தன அவமானங்கள்.

‘வாத்தியார் பையன் மக்கு’ என்ற பழமொழியின் பாதிப்பு எனக்கும் ஏற்பட்டது. தேடிப் போகாமலே எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை நான் முழுமையாகப் பயன்படுத்தினேன் என்று சொல்ல முடியாது. ஒரு வார்த்தை தைரியமாக பேசத் தெரியாதவன், பக்கம் பக்கமாக உணர்ச்சியோடு வசனம் பேச வேண்டும். நிமிர்ந்து நடக்க வராது. நேராக பார்க்கத் தெரியாது. சட்டைக்குப் பொருத்தம் இல்லாத பேன்ட் அணிந்திருப்பேன். நடிப்புக்கே போராட வேண்டி இருந்தது; நடனம் ஆடுவதற்கு ஒரு யுத்தமே நடத்த வேண்டி இருந்தது.

ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்த கதைகளும் எனக்குப் பொருத்தமாக இல்லை. அல்லது அந்தக் கதைகளுக்கு நான் பொருந்தவில்லை. எப்படியோ எந்தப் படமும் பேர் வாங்கித் தருகிறபடி ஓடவில்லை. ‘சூர்யா படம் தியேட்டர்ல ஓடுதோ இல்லையோ, தியேட்டரை விட்டு சீக்கிரம் ஓடிடுது’ என்று காதுபட கமென்ட் விழும். கஷ்டமாக இருந்தாலும், ‘அதுக்கு நான் என்ன பண்றது’ என்று இருந்த நாள் வரையில் தோல்விகள் காயங்களாகவே இருந்தன. காயங்கள் மறக்கமுடியாத தழும்புகளாக மாறின. ஒரு படத்தில் க்ளைமாக்ஸில் ‘பைத்தியமாக’ நடிக்க வேண்டும். கிட்டத்தட்ட குழப்பத்தில் பைத்தியமாகவே நான் இருந்தேன். ஆனால், எப்படி பைத்தியமாக நடிப்பது என்று தெரியவில்லை.

‘இனிமே நான் நடிக்கலப்பா’ என்று அப்பாவிடம் போய் கண்கலங்கி இருக்கிறேன். சினிமாவில் இருந்து வெளியே வந்துவிட நான் தயார். ஆனால், எங்கே போவது?

தொடர்கிறார் சூர்யா...
 த.செ.ஞானவேல்