யாருக்கும் தோல்வி இல்லை!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                   ர்வலம் புறப்பட்ட தேர் கடைசியில் தேரடிக்கே வந்து நிற்பதுமாதிரி லோக்பால் விவகாரம் ஆரம்பித்த இடத்துக்கே திரும்பவும் வந்துவிட்டது. ‘சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது நாடாளுமன்றம்தான். உண்ணாவிரதங்களால் சட்டங்களை உருவாக்க முடியாது’ என்று எப்போதோ சொன்னார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

 அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை அடுத்து பிரதமர் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டமும் இதைத்தான் நாசூக்கான வார்த்தைகளால் சொல்லி, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்தது. ஜன்லோக்பால் மசோதாவை தீண்டத்தகாத பொருளாக ஒதுக்கிய அரசு, அதை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டதே உண்ணாவிரதத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

மக்கள் சக்தியின் மகத்துவத்தை அரசியல் கட்சிகளும் உணர்ந்திருக்கின்றன. ‘அன்னா ஹசாரே தலைமையிலான சிவில் சொசைட்டியின் கோரிக்கை தொடர்பாக உறுதியான நிலைப்பாடு எடுக்கவில்லை’ என தங்கள் கட்சித் தலைமையைக் குற்றம் சாட்டி பாரதிய ஜனதா சீனியர் தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹாவும், சத்ருகன் சின்ஹாவும் வெளிப்படையாகப் பேசினர். ‘அன்னாவை கைது செய்தது தவறு’ என தங்கள் அரசையே கண்டித்து காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீட்சித் பேசினார். இப்படி எல்லா தரப்பிலிருந்தும் தங்களுக்கு ஆதரவாளர்களைத் திரட்டியது அன்னாவின் பலம் மட்டும் இல்லை; அவர் வைத்த கோரிக்கையின் பலம்.

எனினும், ‘அன்னா தலைமையிலான குழுவினர் கற்பனையான எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை. உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள இறுதியாக மூன்று நிபந்தனைகளை விதித்தார் அன்னா. அதில் ‘அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு வேலையையும் அதிகாரிகள் செய்து முடிப்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். அப்படி முடிக்காவிட்டால் அபராதம் விதிக்க வேண்டும்’ என்பது மட்டுமே பிராக்டிகலாக செய்ய முடிகிற விஷயம். இது ஊழலை ஒழிப்பதற்கும் உதவும்.

ஆனால், ‘லோக்பாலுக்கு இணையாக எல்லா மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைய வேண்டும்’ என்ற கோரிக்கையை மத்திய அரசால் நிறைவேற்ற முடியாது. இது மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதாக ஆகிவிடும். இதற்குத் தனியாக எல்லா மாநில அரசுகளுக்கும் எதிராக போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.

அதேபோல ‘கீழ்மட்ட அதிகாரிகள் வரை எல்லோரையும் தண்டிக்கும் அதிகாரம் கொண்டதாக லோக்பால் இருக்க வேண்டும்’ என்ற கோரிக்கையும் ஆபத்தானது. பிரதமரில் ஆரம்பித்து மத்திய அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர் வரை எல்லோரையும் கண்காணிக்கும் சர்வ அதிகாரத்தையும் லோக்பால் அமைப்புக்குக் கொடுத்தால், திரும்பவும் எல்லா அதிகாரமும் ஒரே புள்ளியில் குவிந்துவிடும். அப்படி சர்வ அதிகாரமும் படைத்த அமைப்புக்குத் தலைவராக காந்தி போல, ஜெயப்பிரகாஷ் நாராயண் போல, வினோபாஜி போல ஒரு நல்லவர் வந்தால் பிரச்னை இல்லை. தவறான, அல்லது செயல்படாத நபர்களின் கையில் அதிகாரம் சிக்கினால் ஆபத்து!

 உதாரணம் காட்டக்கூட நல்லவர்கள் குறைவாக இருக்கும் தேசத்தில் இப்படிப்பட்ட உத்தமர்களை எங்கே தேடுவது? 16 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இருந்தாலும், கர்நாடகாவில் சந்தோஷ் ஹெக்டே என்ற நேர்மையான நீதிபதி அதன் தலைவராக வந்தபிறகுதானே, முதல்வரையே கடிக்கும் அளவுக்கு இந்த அமைப்புக்கு பற்கள் இருப்பது உலகத்துக்குத் தெரிய வந்தது! சட்டங்களைவிட, அவற்றை அமல்படுத்தும் உறுதியும் நேர்மையும் கொண்டவர்களால்தான் ஊழலை ஒழிக்கமுடியும்.

கடந்த 1968ம் ஆண்டிலிருந்து பலமுறை லோக்பால் மசோதா நாடாளுமன்றத்துக்கு வந்து வந்து போகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இப்படித்தான் ஆண்டாண்டு காலமாக கவனிப்பாரற்று ஒதுங்கிக் கிடக்கிறது. அந்த நிலைமை லோக்பாலுக்கு வராது. கேள்வி கேட்கவும் உண்ணாவிரதம் இருக்கவும் இங்கே லட்சக்கணக்கில் திரளுவார்கள் என்ற பயம் அரசுக்கு நிச்சயமாக இருக்கும்.

ஆனாலும் இந்த உண்ணாவிரதம் தந்த எழுச்சி, பலவிதமான சடங்குகளுக்கு மறுமலர்ச்சி தந்திருக்கிறதோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. ஒரு குறுஞ்செய்தி இப்படி உலவுகிறது... ‘வெளிநாட்டு வங்கிகளில் பதுங்கியிருக்கும் கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவர அன்னா ஹசாரே வலியுறுத்துகிறார். 1,456 லட்சம் கோடி ரூபாய் இப்படி வந்தால் என்ன ஆகும் தெரியுமா? இந்தியா பொருளாதாரத்தில் நம்பர் 1 ஆகும்; ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 60 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்; ஒரு கிராமத்துக்கு நூறு கோடி ரூபாய் கிடைக்கும்; 20 ஆண்டுகளுக்கு வரி கட்ட வேண்டியதில்லை; பெட்ரோல் 25 ரூபாய், டீசல் 15 ரூபாய், பால் 8 ரூபாய்க்கு லிட்டர் விற்கும். இந்த மெஸேஜை 10 இந்தியர்களுக்கு ஃபார்வர்ட் செய்யுங்கள்!’ இப்படி ‘திருப்பதி ஏழுமலையானின் மகிமையை 11 போஸ்ட்கார்டு எழுதச் சொல்வது’ போல செய்வதில் யாருக்கு நன்மை? செல்போன் கம்பெனிகள்தானே கொழிக்கும்!

டெல்லியைச் சேர்ந்த மாடலும் நடிகையுமான சலினா வாலி கான் என்ற பெண், ‘அன்னாவின் கோரிக்கையை ஏற்று ஜன்லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றாவிட்டால் நிர்வாண நடனம் ஆடுவேன்’ என அறிவித்திருக்கிறார். உண்ணாவிரதம் உட்காருவதற்கு முன்பாக, அன்னா ஹசாரே என்ற பெயரையே கேள்விப்பட்டதில்லை அவர். ‘உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி ஜெயித்தால் நிர்வாண நடனம் ஆடத் தயார்’ என்று சொன்ன ஒரு மாடலுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்?

ஃபேஷன் ஷோக்களில் அரைகுறை ஆடைகளோடு கேட்வாக் நடக்கும் பெண்களுக்கு காந்தி குல்லாவை தருகிறார்கள் சிலர்; சோனம் கபூர், நேஹா தூப்யா போன்ற பல நடிகைகள் தங்கள் படத்துக்கு விளம்பரம் தேட அன்னாவின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

இதுபோன்ற ஆட்களிடம்தான் அன்னா ஹசாரே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
அகஸ்டஸ்