அரசு பல்கலைக்கழகத்தில் படித்தால் அரசாங்க வேலை கிடையாது!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            ‘10, 12ம் வகுப்புகளை முடிக்காமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கும் பட்டத்தால் அரசு வேலையோ, பதவி உயர்வோ பெறமுடியாது’ என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக அரசு. மிகுந்த எதிர்பார்ப்போடு திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
படிக்கும் ஆசை இருந்தும் சூழ்நிலை காரணமாக கல்லூரி செல்ல இயலாதவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் திறந்தநிலை பல்கலைக்கழகம். உலகெங்கும் இப்படிப்பட்ட திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டம், பிற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் ரெகுலர் டிகிரிக்கு இணையாகவே கருதப்படுகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் திறந்தநிலை பல்கலைக்கழகப் பட்டங்களை அரசு வேலை மற்றும் பதவி உயர்வுக்கு பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் 1985ல் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இதே காலகட்டத்தில், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் திறந்தவெளிப் பட்டப்படிப்பை அறிமுகம் செய்தன. இந்த பட்டப் படிப்புகளில் சேர கல்வித்தகுதி தேவையில்லை. இளங்கலை படிக்க 18 வயதும், முதுகலை படிக்க 21 வயதும் ஆகியிருக்க வேண்டும். எளிமையான தகுதித்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழகத்திலும் பல பல்கலைக்கழகங்களில் இது நடைமுறையில் இருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏராளமானோர் இளங்கலை படிக்காமல் நேரடியாக முதுகலை பட்டம் பெற்றனர். பட்டம் பெற்ற பலர் பி.எல், எம்.பில் போன்ற மேற்படிப்புகளிலும் சேர்ந்தார்கள். சிலருக்கு பணிகளும் கிடைத்தன.

இதனால் ரெகுலர் பட்டம் பெற்றவர்கள் பாதிக்கப்பட, திறந்தவெளிப் பட்டப்படிப்பு பற்றி கேள்விகள் எழுந்தன. விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல, ‘இளங்கலை பட்டம் பெறாமல், நேரடியாக முதுகலை பட்டம் பெற்றால் செல்லாது’ என்று தீர்ப்பு வந்தது.

இந்நிலையில், 2002&ல் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. மற்ற பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்டு வந்த திறந்தநிலைப் பட்டப்படிப்புகள் நிறுத்தப்பட்டன. வயது மற்றும் தயார்படுத்துதல் தேர்வின் அடிப்படையில் திறந்தநிலை பல்கலையில் மாணவர் சேர்க்கை நடந்தது. அரசு ஊழியர் உள்பட பலர் இப்பல்கலையில் சேர்ந்தார்கள்.
2009&ல் திடீரென, ‘10, 12&ம் வகுப்புகள் படிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வாங்கிய பட்டங்களை, அரசுப்பணிக்கோ, பதவி உயர்வுக்கோ பயன்படுத்த முடியாது’ என்று குண்டைத் தூக்கிப்போட்டது தமிழக அரசு. உயர் நீதிமன்றமும் அரசு உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது.

ஆனால் இதுபற்றி எந்த அறிவிப்பும் செய்யாமல் மாணவர் சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டது திறந்தநிலை பல்கலைக்கழகம். படித்தாலும் வேலைவாய்ப்பு இல்லை என்று தெரியாமலேயே பலர் சேர்ந்தார்கள். இந்நிலையில், வழக்கறிஞர் சத்தியசந்திரன் உயர் நீதிமன்றத்தை அணுக, ‘திறந்தநிலை பல்கலைக்கழகப் பட்டத்தால் அரசு வேலை பெறமுடியாது என்று விளம்பரப்படுத்த வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் சத்தியச்சந்திரனிடம் பேசினோம். ‘‘அரசு நடத்துகிற கல்வி மையம் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது என மாணவர்கள் நம்புகிறார்கள். அந்த எண்ணத்தில்தான் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பலர் சேர்ந்தார்கள். ‘படித்தால் வேலை கிடைக்காது’ என்ற தகவல் அவர்களுக்குத் தெரியாது.

பட்டப்படிப்புகளில் சேரத் தேவையான தகுதி, அல்லது அதற்கு சமமான தகுதி அவசியம் என்று திறந்தநிலை பல்கலைக்கழகச் சட்டத்திலேயே தெளிவாக உள்ளது. சாதாரணமாக, 10ம் வகுப்பில் 5 பேப்பரும், 12ம் வகுப்பில் 6 பேப்பரும் எழுதி பாஸ் செய்துவிட்டுத்தான் பட்டப்படிப்பில் சேர்கிறார்கள். திறந்தநிலை பல்கலைக்கழக தகுதித்தேர்வில் ஒரு மொழிப்பாடம், அறிவியல், கணிதம், வணிகவியல் இவற்றில் ஏதாவது ஒரு பாடம்... இந்த இரண்டு மட்டும்தான் பாடத்திட்டமாக உள்ளது. இரண்டும் எப்படி சமமாகும்? இந்தப் படிப்புகளை முறைப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும். அல்லது, படிப்புகளை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் வழக்கைத் தாக்கல் செய்தேன்’’ என்கிறார் சத்தியச்சந்திரன்.

இதுபற்றி பேச தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகப் பதிவாளரை தொடர்புகொண்டோம். அவர் நம்மைத் தவிர்த்தார்.

தமிழகத்தில் திறந்தநிலை பல்கலைகளில் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை பல்லாயிரங்களைத் தாண்டும். பலர் மேற்படிப்பு படித்து பணியாற்றியும் வருகிறார்கள். பட்டம் பெற்ற பலர் பதவி உயர்வுக்காகவும் காத்திருக்கிறார்கள். திறந்தநிலை பட்டத்தால் பயனில்லை என்று தெரியாமலேயே படித்த இவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இறுதி முடிவெடுக்க வேண்டும்.
 வெ.நீலகண்டன்