சுவடுகள்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

           பதவி போச்சு!

அமெரிக்காவின் கடன் தகுதி ரேட்டிங்கைக் குறைத்த ‘ஸ்டாண்டர்டு அண்டு புவர்’ நிறுவனத்தின் தலைவராக இருந்த தேவன் சர்மா இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்க இந்தியரான சர்மாவின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட பலரும் ரசிக்கவில்லை. உலகப் பொருளாதாரமே இதனால் ஆட்டம் கண்டது. இந்நிலையில், அமெரிக்க நிதி நிறுவனங்கள் பலவற்றுக்கு ‘ஸ்டாண்டர்டு அண்டு புவர்’ நிறுவனம் கொடுத்த ரேட்டிங்குகள் பற்றிய விசாரணையை அரசு துவங்கியது. இதனால் ஏற்பட்ட சங்கடத்தில் சர்மா பதவி விலகுகிறார்.

பெயர் மாறியாச்சு!

மேற்கு வங்காள மாநிலத்தின் பெயர் இனி ‘பஷ்சிம் பங்கா’. ஆங்கிலத்தில் ‘வெஸ்ட் பெங்கால்’ என்பது டபிள்யூ என்ற எழுத்தில் தொடங்குகிறது. ஆங்கில எழுத்துகள் வரிசையில் அடிவாரத்தில் டபிள்யூ இருப்பதால், தேசிய அளவிலான போட்டிகள், கருத்தரங்குகளில் தங்கள் மாநிலத்தவருக்கு கடைசியில்தான் வாய்ப்பு கிடைக்கிறது என்பது பெங்காலிகளின் ஆதங்கம். பஷ்சிம் பங்கா என்ற வங்கமொழிப் பெயருக்கும் மேற்கு வங்காளம் என்றுதான் அர்த்தம். ‘பங்கபூமி’ என்பதுதான் முதல்வர் மம்தாவின் பர்சனல் சாய்ஸ். ஆனால் பஷ்சிம் பங்கா எல்லோருக்கும் பிடித்ததால் ஏற்றுக்கொண்டார்.

ரிட்டயர் ஆகியாச்சு!

இந்தியக் கால்பந்து அணியின் ஒரே நட்சத்திர வீரரான பைசுங் பூட்டியா ஓய்வை அறிவித்திருக்கிறார். 34 வயதாகும் பூட்டியா, சர்வதேச போட்டிகளில் அதிக கோல் போட்ட இந்தியர். ஆறு முக்கிய கோப்பைகளை இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தவர். கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ அப்படி இந்தியக் கால்பந்துக்கு பூட்டியா. பயிற்சியாளராக அவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொண்டால், உலகக் கோப்பையில் இடம் பிடிக்கும் கனவை இந்தியா காணலாம்.

அவமானமா ஆச்சு!

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பாவோடு இணைந்து ஆடி வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார் ஜ்வாலா கட்டா. 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா பெற்ற பட்டம் இது. உற்சாகத்தோடு லண்டனிலிருந்து ஹைதராபாத் திரும்பிய ஜ்வாலாவை வரவேற்க ஒரே ஒரு ரசிகர்கூட இல்லை. பாராட்டு, வாழ்த்து என அரசு தரப்பிலிருந்தும் ஏதுமில்லை. கடுப்பாகிவிட்டார் ஜ்வாலா. ‘‘பாட்மின்டன் இங்கே சாய்னாவுக்கு மட்டுமே சொந்தம்னு எல்லாம் நினைக்கறாங்க. ஆனா டபுள்ஸ் போட்டியிலதான் சாதிக்கறோம். இப்படி அலட்சியம் செய்தா, இந்த விளையாட்டு தேறாது. இது ஒலிம்பிக் பதக்கத்துக்கு இணையானது. இப்படி ஜெயிச்சாலும் எனக்கு ஸ்பான்சர்கள் கிடைக்கறதில்லை. ஒருவேளை அவங்க எதிர்பார்க்கிற எதுவும் என்கிட்ட இல்லையோ என்னவோ!’’ என சாய்னாவை சீண்டுகிறார் ஜ்வாலா.