காற்றின் கையெழுத்து



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

           ஆகஸ்ட் 22, சென்னைக்கு வயது 372. ‘தருமமிகு சென்னை’ என்று வள்ளலார் வாழ்த்திய நகரம்.

‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவங்க யாருமில்லே & இங்கே
சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
வித்தியாசம் தோணலே
அநியாயம் ஆத்தாடியோ’
 இப்படி ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தில் கண்ணதாசன் எழுதினார். அனுபவிப்போர், அல்லற்படுவோர் இருவராலும் நிறைந்து வழிகிறது சென்னை.

பெரிய வணிக வளாகங்கள், திரையரங்குகள், நட்சத்திர உணவகங்கள், உல்லாச விடுதிகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் & இவையெல்லாம் அனுபவிப்பவர்களுக்கு. கையேந்தி பவன்கள், கட்டணக் கழிப்பறைகள், சாராயக் கடைகள் & இவையெல்லாம் அல்லற்படுபவர்களுக்கு.

‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ என்றொரு புத்தகம். கவிதா பப்ளிகேஷன் வெளியீடு. 60 வருடங்களுக்கும் மேலாக சென்னையில் வாழ்கிற எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதியது. அன்றைய சென்னையை அப்படியே வரைந்து வைத்திருக்கிறார். அதில் ‘தியாகராய நகர்’ பகுதியை மட்டும் திரும்பிப் பார்த்தால் போதும்... சென்னையின் முகம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை உணர முடியும்.

‘தி.நகரில் என் வாசம் தொடங்கிய 1948&ம் ஆண்டில் தண்ணீர் முதல் விறகு வரை கடும் பற்றாக்குறை. விறகுக்கு ரேஷன் கார்டு இருந்தது. காபிக்கொட்டைக்கு ஒரு ரேஷன் கார்டு. அரிசி, சர்க்கரை பற்றிக் கேட்க வேண்டியதில்லை.

ரங்கநாதன் தெருவில் 9 எண்ணிட்ட வீட்டில் இருந்தேன். குடிதண்ணீர் அடுத்த தெருவிலிருந்து. குளிப்பது அரை கிலோமீட்டர் தள்ளி தாமோதர ரெட்டித் தெருவில் இருந்த ஓர் உறவினர் வீட்டில். அது ‘நரி உலவும் இடம்’ என்று சொல்வார்கள். பிசாசுகளும் உலவலாம். அன்று தாமோதர ரெட்டித் தெருவிலிருந்து கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் எரியும் சடலங்களைப் பார்க்கலாம். அவை வேகும் மணத்தைச் சுவாசிக்கலாம்.

ரங்கநாதன் தெருவில் மூன்றே கடைகள். கும்பகோணம் பாத்திரக்கடை, கல்யாண் ஸ்டோர்ஸ், 9ம் எண் வீட்டையொட்டி ஒரு வெற்றிலை பாக்குக் கடை. ரங்கநாதன் தெருவில் நுழையும்போது ரயில் ஒலி கேட்டால் ஓடிப்போய்ப் பிடித்து விடலாம்.’

இன்று ரங்கநாதன் தெருவுக்குள் போகிற ஒவ்வோர் ஆணும் பெண்ணும் ஏதாவது ஒரு பொருளோடுதான் திரும்புகிறார்கள். ஆனால், ஏதாவது ஓர் உறுப்பை இழந்துவிடுகிறார்கள். அந்தளவுக்கு நெரிசல்; நெரிசல்; நெரிசல்.

சென்னையைச் சுற்றிச் சுற்றி நம் கவனத்தைத் திருப்பும் இன்னொரு விஷயம், கூவம். பக்கிங்காம் கால்வாயை வங்காள விரிகுடாவில் இணைக்கும் நதி இது. சென்னையிலிருந்து நீர்வழிப் பாதையாக புதுச்சேரிக்கு சற்று தொலைவு வரை பக்கிங்காம் கால்வாய் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது. வள்ளல் பச்சையப்ப முதலியார், ஏ.கே.செட்டியார் போன்றவர்களெல்லாம் இதில் நீந்திக் குளித்திருக்கிறார்கள். பாரதிதாசனும் அவரது தோழர்களும் ஒரு பௌர்ணமி நாளில் சென்னையில் மாலை நான்கு மணிக்குத் தோணியில் ஏறிக்கொண்டு, மறுநாள் காலை ஒன்பது மணிக்கு இதன் வழியாகத்தான் மாவலி புரத்திற்குச் சென்றிருக்கிறார்கள். ஒரு தெளிந்த கால்வாயைச் சாக்கடையாக்கிவிட்டு இன்றைய சென்னை அதில் குப்பையும் கூளமுமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் புகையால் சென்னையின் நுரையீரல்கள் கறுப்புத் தாமரைகளாகக் கருகிவிட்டன. வாகனங்களின் விளக்கொளியில் சென்னையின் கண்கள் கூசுகின்றன. வயல்வெளிகளும் ஏரி குளங்களும் சோலைகளும் நிறைந்திருந்த சென்னை, இன்று கல்மரங்கள் முளைத்த கான்க்ரீட் வனமாக மாறிவிட்டது. மனிதர்கள் ரோபோக்களாக மாறிவிட்டார்கள்.

துக்கத்தைக் கொண்டாடும் கறுப்புத்தார் சாலைகளில் அழுகிய குப்பைகளை நாற்றத்தோடு அள்ளிப் போகும் மாநகராட்சி லாரிகள் முன்னால் போய்க் கொண்டிருக்கின்றன... குடிதண்ணீர் லாரிகள் பின்னால் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் விபத்துகளில் நசுங்கிப் போகும் உடல்களை கோணிகளைக் கொண்டு மூடிவிடுகிறார்கள் போக்குவரத்து போலீஸ்காரர்கள்.

சென்னை எல்லோரையும் ‘வா வா’ என்றழைத்து வாசல் திறக்கிறது. வந்த பிறகு பலபேரை தெருவிலேயே விட்டு விடுகிறது. ‘கெட்டும் பட்டணம் போ’ என்பார்கள். சென்னைப்பட்டணத்தில் கெட்டுப் போவதற்காகவே பல இடங்கள் இருக்கின்றன.

சென்னையில் என்னை உறுத்திய விஷயங்கள்:

1. சிக்னலில் குழந்தைகளைக் காட்டி பிச்சையெடுக்கும் பெண்கள். அவர்களுக்குக் குழந்தைகளை வாடகைக்கு விடும் தாய்மார்கள்.
2. தெருவோரம் உறங்கும் ஏழைத்தொழிலாளர் குடும்பங்களின் பெண்களை, தங்கள் அகோரப் பசிக்கு அல்லது அடுத்தவருக்காக அள்ளிக்கொண்டு போகும் ராத்திரி ரவுடிகள்.
3. எல்லா இடங்களிலும் எச்சில் துப்பும் பான்பராக் வாயர்கள்.
4. கடலோரங்களை கழிவறையாக்கி வைத்திருக்கும் குப்பத்து மக்கள்.
5. பள்ளிக்குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிப் போகும் ஆட்டோக்கள்.
6. அன்னா ஹசாரே வந்தாலும் அசராமல் அவரிடமும் கையூட்டுக் கேட்கும் சில அரசாங்க ஊழியர்கள்.
7. அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதைக்கூட அறிந்து வைத்திருக்காத ‘அபார்ட்மென்ட்’ ஆசாமிகள்.

நகரத்து மனிதர்கள் பலரிடம் ஒரு விஷயத்தை நான் அடிக்கடி கவனிக்கிறேன். அவர்கள் எதையோ உளறிக்கொண்டே போகிறார்கள்... வருகிறார்கள். அவர்களது கைகளில் செல்பேசியும் இல்லை. அவர்கள் யாரோடு பேசுகிறார்கள் என்றும் தெரியவில்லை. நகராத வாழ்க்கையின் மனப்பிறழ்வை அவர்கள் நகரத்தோடு பேசிக்கொண்டே நகர்கிறார்கள் போலிருக்கிறது.

சென்னையின் புறநகர்களில் உள்ள தீம் பார்க்குகளில் ‘ராட்சஸ தாலாட்டு’ என்றொரு விளையாட்டு உண்டு. அது அந்தரத்தில் அசுரத்தனமாகப் பிள்ளைகளைத் தாலாட்டும். பயந்த குழந்தைகள், ‘அய்யோ அம்மா’ என்று அலறுவார்கள். ஆனாலும், பாதியில் இறங்க முடியாது. சென்னைக்குப் பிழைக்க வந்த பலருக்கும் அது பாடுவது ராட்சஸ தாலாட்டுதான்!

ஒரு மலர் உதிர்ந்து மண்ணைத் தொடுவதற்கு முன்னால் தன்னைக் கொடுத்துத் தாங்குகிற ஈர எழுத்து வண்ணதாசனுடையது. சூரியன் போல எல்லா உயிர்களுக்கும் அதனதன் நிறங்களை வழங்குவது. கதைக்களத்தையும் மனிதர்களையும் ‘தூரிகைப்பேனா’வால் அவர் வர்ணிக்கும்போது அவரது பேனா முள்ளில் உள்ள சிறிய துளை கேமரா கண்ணோ என்று தோன்றும். வற்றாத தாமிரபரணி இவரது விரல்களில் நுங்கும் நுரையுமாக நுழைந்து வெளியேறுகிறது. இவர் கையை விரித்துப் பார்க்கிறபோது எல்லாருடைய கைகளும் நனைந்திருக்கின்றன.

2011 ஆகஸ்ட் 22 அவரது 66&வது பிறந்தநாள். குறுஞ்செய்தி மூலமாக அவருக்கு எனது வணக்கத்தைச் சொன்னேன். அவர் பதிலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்.

‘இன்றைக்கு மறுபடியும் சிற்பி விழாவில் உங்களுடன் நிற்கிறேன் பாரதி. இப்படி உங்களைப்போல யாராவது ஒருவரின் கையைப் பிடித்துக்கொண்டு, எங்கோ ஒரு வேப்பமர நிழலில் பேச முடியுமெனில் போதும் எனக்கு...’

வேப்ப மரங்கள் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் அண்ணன், மாமா, சித்தப்பா என்று ஒரு வண்ணதாசனும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

‘தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்துதானே’
 வண்ணதாசன் ஒவ்வொரு இதயத்திலும் அன்பு, காதல், கவிதை, பறவை, பூ, குழந்தை என ஏதாவதொன்றை விதைத்துக்கொண்டே இருக்கிறார்; அல்லது முளைத்துக்கொண்டே இருக்கிறார்.
(சலசலக்கும்)
பழநிபாரதி