சிறுகதை - கட்டெறும்புகள்



“எப்படிப்பா இருக்கே?” என்று உள்ளே நுழைந்த அப்பாவைப் பார்த்ததும் அப்பாடா என்றிருந்தது. லேசாக கண்கள் கூடக் கலங்கியது குமாருக்கு.“உனக்கு எப்படிப்பா விஷயம் தெரியும்?” சிறிது வியப்பாகத்தான் கேட்டான் குமார்.“நம்ம மகேஷ்தான் சொன்னான்...”அவன் என்ன சொல்லியிருப்பான் என்று தெரியும்.“உங்களை வேண்டாம்னு தொரத்தி விட்டானே? இன்னைக்கு கை,கால் முறிஞ்சு கிடக்கான்...” என்றுதான் சொல்லியிருப்பான்.
இங்குதான் ஒவ்வொரு விஷயத்திற்கும், கர்மவினை, செய்த பாவங்கள், புண்ணியங்கள் என்று தொடர்பு படுத்திப் பேசுகிறார்களே... ஆனாலும் குமாருக்கே ஓர் உறுத்தல் இருந்தது, தான், செய்த பாவத்திற்கான தண்டனைதான் இந்த விபத்தோ என்று.இந்த அளவுக்கு அடிபடுவோம் என்று அவனே நினைக்கவில்லை.

எப்பவும் மிகக் கவனமாகத்தான் வண்டி ஓட்டுவான். ஆனால், விதி நாய் உருவத்தில் குறுக்கே வந்தது.நல்ல டிராபிக் நேரம். அலுவலகத்திற்கு நேரம் ஆகி விட்டது என்று சிறிதுதான் தன் பைக்கில் வேகமாக வந்தான். நான்கு முனை திருப்பத்தில் திடீரென்று நாய் குறுக்கே வர வண்டியைத் திருப்பினான். எதிரில் வந்த லாரியைப் பார்க்கவில்லை. தூக்கி வீசி எறியப்படுவது மட்டுமே ஞாபகத்தில் இருந்தது.

கண் விழிக்கும்போது கை, காலை அசைக்க முடியவில்லை. யார், யாரோ பேசும் சப்தம். சித்ராவின் அழுகை. மாமனார், மாமியார் முகங்கள். நடுவில் அம்மாவின் முகத்தைத் தேடும்போதே அவள்தான் இல்லையே என்ற உணர்வும் எழுந்தது. அம்மா இறந்து ஏழு வருஷம் ஆகி விட்டது.“கடவுளே! சித்ரா மாப்பிள்ளை கண் முழிச்சிட்டார்...” என்ற மாமியாரின்  உற்சாகக் குரலும், “என்னங்க...” என்ற சித்ராவின் குரலும் கேட்க, மீண்டும் கண்ணை மூடிக் கொண்ட போது மனது அப்பா எங்கே என்றது.“அப்பாதான் ஹோமில் இருக்காரே...” என்றது உள்ளுணர்வு.

அதன் பிறகு நடந்த எதுவும் அவனுக்கு நினைவில்லை.வலது காலிலும், இடது மணிக்கட்டிலும் ஆபரேஷன் நடந்து இரும்புத் தகடு வைத்து அவனை ஐசியூவில் மூன்று நாள் வைத்திருந்து இன்று ரூமுக்குக் கொண்டு வந்தார்கள்.

“அப்பாவுக்குத் தெரியுமா?” சித்ராவிடம் கேட்டான்.“அவருக்கு எதுக்குச் சொல்லணும்? திரும்பவும் வந்து ஒட்டிக்கவா?” நறுக்கென்று கேட்டாள்.அப்பா இருந்தால் நன்றாக இருக்கும் என்றிருந்தது.ஆபரேஷன் செய்திருந்ததால் நடக்க, பாத்ரூம் போகச் சிரமமாக இருந்தது. இடது கை மணிக்கட்டு என்பதால் மலம் கழித்துப் பின் சுத்தம் செய்வது மலைப்பாக இருந்தது. அவனைப் பிடித்து, அழைத்துச் செல்ல சித்ராவால் முடியவில்லை. ஆண் நர்ஸ் போடலாம் என்றால் யோசனையாக இருந்தது.“அப்பா வந்துட்டா நல்லாயிருக்கும்...” என்றாள் சித்ரா.

அவன் எதுவும் பேசவில்லை. வெளியில் போ என்றவரை எப்படி வா என்பது. ஆனால், அப்பாவைப் பார்த்ததும் மிகப் பெரிய பாரம் இறங்கியது போல் இருந்தது.
குமார் ஒரே பையன். அக்கா ஒருத்தி. வந்து பார்த்து விட்டுப் போய் விட்டாள். சித்ரா அக்காவை நெருங்க விட்டதில்லை. “பாசம், பிரியம்னு வந்து ஒட்டிக்கிட்டா, அப்புறம் சீர் கொண்டா, அதைக் கொண்டான்னு நச்சுவாங்க...” சித்ரா.

அவளுக்கு யாரையுமே நெருங்கப் பிடிக்காது. குமார் சொல்வது எதையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டாள். இத்தனைக்கும் அக்காதான், பாவம் ஏழைப் பெண் என்று, தன்னைப் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்தாள்.வந்து கொஞ்ச நாளிலேயே நாவில் தேள் கொடுக்கு வந்து உட்கார்ந்து விட்டது சித்ராவுக்கு.“என் புருஷன் ஒருத்தன் சம்பாதிக்கிறார். சும்மா சும்மா வந்து உட்கார்ந்தா எங்களால் சமாளிக்க முடியாது...” அடிக்கடி அம்மாவைப் பார்க்க வந்த அக்காவோடு சேர்த்து அம்மாவுக்கும் பேச்சு.

அம்மாவின் சமையலறை அதிகாரத்தை தன் கைக்கு மாற்றிக் கொண்டாள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டுப் பழகிய அம்மாவுக்கு சிக்கனம் என்று காபி கட் ஆனது. அவர்தான் வேலைக்குப் போறார். சூடா சாப்பிடணும். உங்களுக்கு என்ன என்று அப்பா, அம்மாவுக்கு, காலை டிபன் கட் ஆனது.அம்மாவுக்கு சுகர். அதனால் கிட்னி பிரச்னை.

“வயசாச்சி. எத்தனை வைத்தியம் பார்த்தாலும், வாயைக் கட்டினாத்தான் நல்லது...” என்று மாமியார் சொல்லி விட, “நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட், அவங்க ஆரோக்கியம் எனக்கு முக்கியம்...” என்று குமாரிடம் கொஞ்சினாள்.மோகத்தில் மூழ்கி இருந்த அவனும் அவளை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை.

“ஹோட்டலுக்குப் போனா உணவு பரிமாறும் சர்வருக்கு டிப்ஸ் தரீங்க. அப்பா உங்களை இந்த உலகுக்குக் கொண்டு வந்து, படிப்பு, வேலை, உடம்புன்னு தந்திருக்கார். அதுக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டாமா?” - அக்கா கணவர்.“நீங்க வேணா சொல்லுங்களேன்...” சித்ராவின் குரலில் குறுகிப் போய் போனவர்தான். இன்று வரை வீட்டுப் படி ஏறவில்லை.

குமாருமே பெற்றவர்களை இடையூறாக நினைத்தான். தன் மனைவி, குழந்தை என்ற வாழ்வில் அவர்கள் தேவையில்லாத பொருளாக அவனுக்குத் தோன்ற, அவர்களை உதாசீனம் செய்ய ஆரம்பித்தான்.

அப்பாவுக்கு நிரந்தர வேலை இல்லை. ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து பெண், பையனை வளர்த்து ஆளாக்கினார். வயதானதால் மருந்து, டாக்டர் செலவு, கண் ஆபரேஷன் என்பதெல்லாம் குமாருக்குச் சலிப்பாக இருந்தது.ஒருநாள் குமார் வீட்டுக்கு வந்த போது அம்மாவுக்கு யூரின் இன்ஃபெக்‌ஷனால் காய்ச்சல். இவனிடம் சொல்ல, ஆத்திரத்துடன் டிவி ரிமோட்டை எடுத்து எறிந்து விட்டு இதே தொந்தரவு என்று ரூமுக்குள் போய் விட்டான்.

அம்மா அன்று இரவு படுத்தவள் மறுநாள் எழுந்திருக்கவில்லை. அப்பாவையும் மெதுவாக நகர்த்தி, வாசல் திண்ணைக்குக் கொண்டு வந்தாள் சித்ரா. நேரத்துக்குச் சாப்பாடு, மாத்திரைகள் கட் ஆனது. குமார் இல்லாத நேரத்தில் சித்ரா அவரைத் தரக்குறைவாகப் பேச, ஒருநாள் அப்பா சொல்லாமல் கிளம்பி விட்டார்.“மனுஷனுக்கு தன்மானம் முக்கியம். நல்லாயிரு...” என்று ஒரு சின்னக் கடிதம். ஹோமில் இருக்கிறார் என்று கேள்விப் பட்டான்.

அதன் பிறகு இன்றுதான் பார்க்கிறான்.“எங்கப்பா இருக்கே?”“என் நண்பன் நடத்தற ஹோம்ல. அங்க அலுவலகத்துல கணக்கு எழுதற வேலை...”

“சௌகரியமா இருக்கா மாமா?” என்று கேட்ட சித்ராவுக்குப் பதில் சொல்லவில்லை.“நீங்க இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சோம் மாமா...”ஒரு புன்னகையுடன் “அதான் வந்துட்டேன்...” என்றார்.வேறு எதுவும் யாரிடமும் பேசவில்லை. ஓடி வந்த மாமியார் “இதான் சாக்குன்னு இங்கேயே தங்கிடப் போறார்...” என்றாள்.

அப்பா எதையும், யாரையும் பொருட்படுத்தவில்லை. அவர், தன்னியல்பாக குமாரைக் கவனித்துக் கொண்டார். பதினஞ்சு நாள் அவன் அருகில் இருந்து, அவன் தேவைகளை நிறைவேற்றி, உடம்பு துடைத்து, கழிவறைக்குச் சென்றால் சுத்தம் செய்து, ஆபரேஷன் செய்த கட்டு நனையாமல் பார்த்து, சாப்பாடு ஊட்டி விட்டு, அவனைக் குழந்தையாகக் கவனித்துக் கொண்டார்.“உனக்கு சிரமம்பா...”“என்ன சிரமம். நீ குழந்தையாக இருந்தபோது செய்யலையா?”

அவருக்குப் பதில் சொல்ல முடியவில்லை. வயதானவர்கள் குழந்தைக்குச் சமம். அவர்களைத்தான் அவமானப் படுத்தி துரத்தி விட்டோமே என்று குத்தியது மனசு.
ஹாஸ்பிடலில் அப்பா அவன் அருகில் மௌனமாக அமர்ந்திருப்பார். சித்ரா வந்தால் எழுந்து போய் விடுவார். காபி, டிபன் என்று தந்தால் மறுத்து விடுவார். 

அவன் தூங்கும் நேரம், வெளியில் சேரில் அமர்ந்திருப்பார். இரவில் குமார்  லேசாக அசைந்தால் கூட, ‘‘என்னப்பா? பாத்ரூம் போகணுமா...’’ என்று கேட்டு உதவுவார்பிசியோதெரபி செய்து, வாக்கர் வைத்து அவன் நடக்க ஆரம்பித்து, டிஸ்சார்ஜ் செய்யும் அன்று, அப்பாவும் கிளம்பி விட்டார். “மாமா ஹோமுக்கெல்லாம் போக வேண்டாம். வீட்டுக்கு வாங்க...” என்ற சித்ராவின் முகம் பார்த்து முதல் முறையாகப் பேசினார் அப்பா.

“இன்னைக்கு உனக்குத் தேவைங்கறதால வீட்டுக்கு வான்னு கூப்பிடறே. நாளைக்கு இதே வாய் வெளியில் போன்னு சொல்லும். செய்த அவமானங்களை மறக்க முடியாதும்மா. உன் கையால் ஒரு டம்ளர் தண்ணீர் நான் குடித்தாலும் அது விஷத்துக்குச் சமம். வேண்டாம்மா. நான் அங்கேயே தன்மானத்தோட இருக்கேன். 

நன்றி...”நிமிர முடியாமல் தலை குனிந்திருந்தான் குமார். இங்கு ஹாஸ்பிடலில் அப்பா இருந்த நாட்களில் சித்ராவிடம் ஒரு வார்த்தை பேசாதது மட்டுமல்ல, அவள் கையால் ஒரு டம்ளர் தண்ணீர் கூட அவர் குடிக்கவில்லை என்பது உரைத்தது. சாப்பாடு, தண்ணீர் பாட்டில் எல்லாம் தினசரி அவர் நண்பர் கொண்டு வந்து தந்தார். பூமிக்குள் புதைந்தது போல் இருந்தது குமாருக்கு. அவமானத்தில் தலை குனிந்து இருந்தான்..அப்பா அருகில் வந்து அவன் தோளைத் தட்டித் தந்தார்.

“குமார்... பெத்தவங்க எப்பவும் கட்டெறும்பு மாதிரி. நீங்க அடிச்சி, அடிச்சி தொரத்தினாலும் நாங்க உங்க காலைத்தான் சுத்தி வருவோம். நீங்க நல்லா இருந்தாத்தான் எங்களுக்கு மகிழ்ச்சி. உங்ககிட்ட எதிர்பார்க்கிறது அன்பு மட்டும்தான். நாளை நீ உன் பிள்ளை முன் நிக்கும்போது உனக்குப் புரியும். வரட்டா. ஏதானும் உதவி தேவைன்னா கேளு. வந்து செய்யறேன்...”
சிரித்தபடி அவர் இறங்கிப் போக, அவன் மட்டும் அழுது கொண்டிருந்தான்.

 - ஜி.ஏ.பிரபா