ஆபத்து பாக்கெட்டுகளில் மறைந்திருக்கிறது!



இந்தியாவில் விற்கப்படும் பாக்கெட் பொருட்களின் பின்புறத்தில் அந்தப் பொருள் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தேதி (date of packaged), அதிகபட்சமாக விற்கப்படக்கூடிய விலை (எம்ஆர்பி), அது உணவுப் பொருள் என்றால் எந்த தேதிக்கு முன் பயன்படுத்தப்படவேண்டும் (best before use), மருத்துவப் பொருட்கள் என்றால் காலாவதி தேதி (எக்ஸ்பயரி தேதி)... போன்றவை மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.

பொதுவாக இந்தியாவிலும், ஏன் உலகெங்கிலும் விற்கப்படும் பாக்கெட் பொருட்களில் பெரும்பான்மையாக விற்கப்படுவது உணவுப் பொருட்களே. அதுவும் இந்தியாவில் விற்கப்படும் பாக்கெட் உணவுப் பொருட்கள் மற்ற நாடுகளைவிட சுகாதாரத்துக்குக் கேடு என்று பல்வேறு ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. இந்த பாக்கெட் உணவுகளை ஜங் ஃபுட் - அதாவது குப்பையில் போடக்கூடிய உணவுகள் - என ‘செல்லமாக’ அழைக்கின்றனர்.  

உதாரணமாக, இந்தியாவில் இருக்கும் ஐந்து வயதுக்கும் குறைந்த குழந்தைகளில் சுமார் 6 சதவீதம் பேர், அதாவது 43 லட்சம் குழந்தைகள் குண்டுப் பையன்களாக (உடல்பருமன்) இருக்கிறார்கள் என்று சொல்கிறது ஓர் ஆய்வு. அதேபோல் இந்தியாவில் இருக்கும் நான்கு பேரில் ஒருவர் உடல் பருமன் அல்லது சர்க்கரை நோயால் அவதிப்படுவதாகச் சொல்கிறது இன்னொரு ஆய்வு.
2019ம் ஆண்டின் ஆக்ஸ்ஃபோர்ட் ஆய்வு, இந்தியாவில் 23 சதவீதம் பேர் இறப்பதற்குக் காரணம் இதயநோய்கள் என்றும் அந்த இதயநோய்களுக்குக் காரணம் இரத்தக் கொதிப்பு என்றும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த இரத்தக் கொதிப்பும் உப்பால் ஏற்படுகிறது. இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம் ஜங் ஃபுட் எனப்படும் பாக்கெட் உணவுகளே. உதாரணமாக பாக்கெட் உணவுகளில்தான் உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோலையும் தாண்டி இந்தியாவில் செல்வாக்கு செலுத்துகிறது. 

இந்தப் பிரச்னைகளை சமாளிக்க இந்தியாவின் பல நுகர்வோர் அமைப்புகள் பலகாலமாக போராடி வந்தாலும் சிக்கல் தீரவில்லை. இச்சூழலில், கடந்த புத்தாண்டு அன்று அரசு அறிவித்திருக்கும் ஒரு சிறு திருத்தம் பாக்கெட் பொருட்களின் சுகாதார ஆபத்துக்களைக் குறைக்காவிட்டாலும் சில மாற்றங்களைக் கொண்டு வருகிறது.

உதாரணமாக, ஏற்கனவே பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படும் தகவல்களையும் தாண்டி ஒரு பாக்கெட் பொருளின் உற்பத்தி தேதி (date of manufacture) மற்றும் ஓர் ஒற்றைப் பொருளின் விலை (unit sale price) போன்றவற்றை கட்டாயம் பாக்கெட் பொருட்கள் தயாரிப்பாளர்கள் குறிப்பிடவேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தியிருக்கிறது. 

இந்த மாற்றங்கள் பெரும்பான்மையாக விற்கும் பாக்கெட் உணவுகளில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று விளக்க ஆரம்பித்தார் சென்னையில் பலகாலமாக இயங்கிவரும் கன்ஸ்யூமர் ஆக்‌ஷன் க்ரூப்பின் நிர்வாகிகளில் ஒருவரான சரோஜா.

‘‘உற்பத்தி தேதி என்று குறிப்பிட்டுத்தான் வந்தார்கள். ஆனால், என்ன பிரச்னை என்றால் உற்பத்தியான ஆண்டைத்தான் (year of  manufacture) இதுவரை குறிப்பிட்டு வந்தார்கள். ஜனவரியில் உற்பத்தியானதை டிசம்பரில் பாக்கெட் செய்து விற்பனை செய்தால் எப்படி இருக்கும்..?

இதனால்தான் இந்த புதிய விதி உற்பத்தியான மாதத்தையும் குறிப்பிடும்படி சொல்கிறது. இதன் மூலம் ஒரு பொருள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டதை நம்பி ஏமாறாமல், உற்பத்தியான மாதம், தேதியையும் பார்த்து வாங்கும் சூழல் ஏற்படுகிறது.மொத்த வியாபாரிகள் பாக்கெட் பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்யும்போது அந்தப் பொருட்கள் பலவும் பெரிய பெரிய அட்டைப் பெட்டிகளில்தான் வந்து இறங்கும். விலையும் ஒரு கிலோ எவ்வளவு, இரண்டு கிலோ எவ்வளவு என்று மட்டுமே இருக்கும்.

ஆனால், அட்டைப் பெட்டிகளில் இருக்கும் ஒவ்வொரு தனி பொருளுக்கும் விலை குறிப்பிடப்பட்டிருக்காது. இதை வைத்துதான் கடைக்காரர்கள் மொத்தமாக விற்காமல் தனித்தனியாக விற்கிறார்கள். அப்பொழுதுதான் கடைக்காரர்கள் நிர்ணயிக்கும் விலையை நுகர்வோரின் தலையில் கட்ட முடியும்.

இதைத் தடுக்கும் நோக்கத்தில்தான் ஒவ்வொரு தனித்த பொருளுக்கும் விலை குறிப்பிடவேண்டும் என்று அரசு இப்போது கட்டளையிட்டிருக்கிறது. இத்தோடு, ஒவ்வொரு தனிப் பொருளுக்கும் விலை இருந்தால் மற்ற பிராண்டு பொருட்களோடு ஒப்பிட்டு நுகர்வோர் தங்கள் நுகர்வை அமைத்துக் கொள்ளலாம் என்பதால் இந்த விதியும் நுகர்வோருக்கு லாபகரமானதுதான்...’’ என்று சொல்லும் சரோஜா, பாக்கெட் உணவுகளைக் குறித்து அரசு அக்கறை கொள்வதுபோல் உணவுத் தயாரிப்பாளர்கள் அக்கறைப்படுவதில்லை என்கிறார்.

‘‘கடந்த வருடம்கூட சினிமாக்களைப் போல பாக்கெட் உணவுகளுக்கு ஸ்டார் முறையை அறிமுகப்படுத்த தயாரிப்பு நிறுவனங்கள் முயன்றன. சில காலமாக ஒரு பாக்கெட் உணவில் என்ன என்ன பொருட்கள் எல்லாம் இருக்கிறது என்று கட்டாயம் குறிப்பிடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள் இல்லையா... அதை தயாரிப்பாளர்கள் செய்தார்கள்தான். ஆனால், அந்த உணவுப் பொருட்களில் குறிப்பிடப்படும் சத்துக்கள் (nutrients), மற்ற ஆபத்தான மூலப் பொருட்களையும் பதப்படுத்தும் முறைகளையும் மறைத்துவிடுகிறது.

ஆக, பாக்கெட் உணவுகளில் இருக்கும் மூன்று வகையான ஆபத்தான பொருட்கள்தான் இந்தியாவில் பல உடல் சம்பந்தமான பிரச்னைகளைக் கொண்டு வருகின்றன. அவை- உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு. ஆனால், பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாதாம், விட்டமின் மற்றும் இன்னபிற சத்துக்கள் இந்த மூன்று குற்றவாளிகளை அப்படியே மறைத்து விடுகின்றன். இந்த ஆபத்தைக் கருத்தில்கொண்டுதான் படித்தவர்கள், படிக்காதவர்கள், மொழி தெரிந்தவர்கள், மொழி தெரியாதவர்களையும் தாண்டி எச்சரிக்கை படங்களை (warning labels) பாக்கெட் பொருட்களின் லேபிள்களில் முன்பக்கத்தில் குறிப்பிடவேண்டும் என்று போராடி வந்தோம்.

அதைவிட்டுவிட்டுத்தான் ஸ்டார் முறையைக் கொண்டு வர தயாரிப்பாளர்கள் முயற்சித்தார்கள். எந்தவித சத்துக்களும் இல்லாத சர்க்கரைத் தண்ணீர் கலந்த குளிர்பானங்களுக்குக் கூட 3 ஸ்டார், 4 ஸ்டார் வழங்க கம்பெனிகள் முயற்சித்தன. ஆனால், பல போராட்டங்களுக்குப் பின் அது கைவிடப்பட்டது. எனவே, எச்சரிக்கை படங்களைக் கொண்டுவந்தால்தான் பாக்கெட் உணவுப் பிரச்னை தீரும். இதற்காகத்தான் தொடர்ந்து போராடி வருகிறோம்...’’ என்கிறார் சரோஜா.

டி.ரஞ்சித்