ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்!



இன்றைய நிலவரப்படி தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் அதிகம் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
‘‘என் வாழ் நாளில் நான் பத்து படங்களை மட்டுமே இயக்குவேன். அதன் பிறகு டைரக்‌ஷன் செய்ய மாட்டேன்...’’ என்று முன்னறிவிப்பு செய்திருப்பவர் இப்பொழுது ரஜினியின் படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

ரஜினி படத்தை முடித்த உடன் இவர் கார்த்தியை வைத்து ‘கைதி 2’வை இயக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு அடுத்து இவரது பட வரிசை ‘விக்ரம் 2’, ‘லியோ 2’, அடுத்து ‘ரோலக்ஸ்’ என அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இயக்கும் படங்களை கை வசம் வைத்திருக்கிறார்.இவை தவிர தெலுங்கில் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் என அங்குள்ள ஹீரோக்களை வைத்து படமெடுக்கும் பேச்சுவார்த்தையும் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படியொரு சூழலில் சூர்யாவை வைத்து ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்குராவின் உதவி இயக்குநர் ஒருவர் இயக்கவிருக்கும் படத்தில் லோகேஷ் கனகராஜை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்தி கசிகிறது.உண்மையா என்பது விரைவில் தெரிய வரும்.

காம்ஸ் பாப்பா