Must Watch



காதல் த கோர்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அதிர்வுகளைக் கிளப்பிய மலையாளப் படம், ‘காதல் - த கோர்’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. கிராமத்திலேயே எல்லோராலும் மதித்து வணங்குகிற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் மேத்யூ. அவருடைய மனைவி ஓமனா. இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறாள். மேத்யூவின் அப்பா அரசியலில் செல்வாக்குடன் இருந்தவர். அவர் இருந்த கட்சியில்தான் மேத்யூவும் இருக்கிறார்.

உள்ளூர் தேர்தலில் மேத்யூவை நிற்க வைக்கிறது அந்த கட்சி. மேத்யூவிற்கு பெரிதாக எந்த எதிர்ப்புகளும் இல்லை. இந்நிலையில் அவரது மனைவி மேத்யூவிற்கு எதிராக விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஓமனா எதற்காக மேத்யூவிடம் விவாகரத்து கேட்கிறார் என்பதை முதிர்ச்சியாக அணுகியிருக்கிறது திரைக்கதை.

யாருமே ஏற்று நடிக்கத் தயங்குகிற ஒரு கதாபாத்திரம் மேத்யூ. ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்துகொண்டு மேத்யூவாக நடித்து, படத்தையும் தயாரித்திருக்கிறார் மம்முட்டி.  
ஓமனாவாக நடித்த ஜோதிகா உட்பட எல்லோருமே சிறப்பாக தங்களது பணியைச் செய்திருக்கின்றனர். நல்லதொரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜியோ பேபி.

த.சக்திவேல்