இது கேப்டன் மில்லர் பொங்கல்!



தேடப்படும் நபராக வான்டட் பட்டியலில் ‘கேப்டன் மில்லர்’ ஓவியம்... தொடர்ந்து கைகளில் நாட்டுத் துப்பாக்கிகள் சகிதமாக புழுதி பறக்க பைக்கில் வரும் தனுஷ்... என இதுவரையிலும் கண்டிராத கெட்டப் மற்றும் லொகேஷனில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ டிரெய்லர், பாடல்கள் என மாஸ் காட்டுகின்றன. 
‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ என வித்யாசமான மேக்கிங், ராவான சூழல், லொகேஷன், குறியீடுகள் என முதல் இரண்டு படங்களிலேயே சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் அருண் மாதேஸ்வரன். இதோ தற்போது இன்னும் பிரம்மாண்டமாக, அதிரடி, ஆக்‌ஷன் பேக் மோடில் ‘கேப்டன் மில்லர்’ படத்துடன் தயாராக பொங்கல் ரிலீஸில் இணைந்திருக்கிறார்.

எதனால் ‘கேப்டன் மில்லர்’ என்னும் பெயர்?

இந்தக் கதைக்கு ஒரு வலிமையான கேரக்டர் பெயர் தேவைப்பட்டது. ‘சேவிங் பிரைவேட் ரையான்’ (1998) ஹாலிவுட் படத்தில் டாம் ஹேன்க்ஸ் கேரக்டர் பெயர் ஜான் ஹெச். மில்லர் (எ) கேப்டன் மில்லர். அந்தப் படம் மற்றும் அவருடைய கேரக்டர் பெயர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தக் கதையும் இரண்டாம் உலகப் போரின் உண்மையான சம்பவங்களை மையமா வெச்சு எடுக்கப்பட்ட பீரியாடிக் போர் படம். அந்த இன்ஸ்பிரேஷனில்தான் இந்தப் பெயர்.

படத்தின் கதைக்களம் என்ன?

1930 - 1940ல் நடக்கக் கூடிய கதை. ஆக்‌ஷன் அடிப்படையிலான கதைதான். பிரிட்டிஷ் காலத்தில் நடக்கக் கூடிய ஒரு சுதந்திரப் போராட்டத்தில் ஒரு சாதாரண அமைதியான மனிதன், போராட்டக்காரனாக மாறுகிறான். அவனுடைய முடிவு அவனை ஒரு கூட்டத்துக்கே எப்படித் தலைவனாக மாத்துது, அதன் பிறகு நடக்கக் கூடிய சம்பவங்கள் என்ன இதுதான் கதைக்களம்.

தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ ஆனது எப்படி?

முன்பே எழுதி வைத்திருந்த கதை. 2015ல் திரும்ப கதையை சீராக்கி எழுதினேன். எனக்கு ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்கள் கூட அப்ப வெளியாகலை. 2018ல் இந்தக் கதையை நான் முடிச்சிருந்தேன். அப்ப கதையை ஒன் லைன் குறிப்புகளா தனுஷுக்கு மெயில் செய்தப்ப படிச்சிருந்தார். அப்பவே என் மேல ஏதோ நம்பிக்கை வர ஒரு க்ரீன் சிக்னல் கிடைச்சது. திரும்ப 2019ல் அவரை சந்திக்கக் கூடிய வாய்ப்புகிடைச்சு கதை சொன்னேன். அவர் ஓகே சொன்னப்ப கூட எனக்கு ‘ராக்கி’ படம் வெளியாகலை.

தனுஷ் கேரக்டர் மற்றும் அவர் கூட பணியாற்றிய அனுபவம் பற்றி சொல்லுங்க?

அவர் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. அப்படிப்பட்ட நடிகருக்குத் தீனி போடக்கூடிய கேரக்டராக இருக்கணும். மேலும் அவரே ஒரு இயக்குநர் என்கிறதால எனக்கு நிறைய காட்சிகள்ல விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படலை. 
அதே சமயம் அவர் இயக்குநர் என்கிற தலையிடலும் எங்கேயும் கிடையாது. சின்னச் சின்ன டீடெயிலிங் கூட அவரே பார்த்து சரி செய்துக்குவார். ஓர் இயக்குநருடைய கஷ்டம் அவருக்கு தெரியும். அதனால் டைமிங் துவங்கி அத்தனையிலும் மனிதர் பெர்ஃபெக்ட். எனக்கும் ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருந்துச்சு.

ஷிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான்... முதலிரண்டு படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தின் நடிகர்கள் பட்டியல் நீளமாக இருக்கிறதே?

ஒரு வலிமையான கெஸ்ட் ரோல்... அந்தக் கேரக்டருக்கு ஏற்கனவே ரெண்டு பேரை நான் யோசிச்சு வெச்சிருந்தேன். அப்ப ஷிவாண்ணாவுடைய ‘மஃப்டி’ படம் பார்த்தப்ப இந்தக் கேரக்டருக்கு அவர் பொருத்தமா இருப்பார்னு தோணுச்சு. அவ்வளவு பெரிய ஸ்டார், ஆனா, அவர்கிட்ட அந்த பந்தாவே இருக்காது. ரொம்ப ஃபிரெண்ட்லியா பேசுவார். சந்தீப் கிஷானுக்கும் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோல்தான். அவருடைய கேரக்டரும் நல்லாவே வந்திருக்கு. பிரியங்கா அருள் மோகன், ஜான் கொக்கைன், நிவேதிதா சதீஷ், நாசர் சார்... அத்தனை பேருக்குமே ராவான கேரக்டர்கள்தான்.

போராளி, புரட்சி என்றாலே நந்திதா தாஸ், தபு போன்ற நாயகிகளைத்தான் பெரும்பாலும் இந்திய சினிமா தேர்வு செய்யும். ஆனா, உங்க தேர்வு கீர்த்தி சுரேஷ், பிரியங்கா... என டால்களாகவே இருக்கிறார்களே?

இந்த நடிகைதான் இந்தக் கேரக்டர் செய்யணும், இவங்கதான் கமர்ஷியல் நாயகி என்கிற இந்த டெம்ப்ளேட் மேல எனக்கு உடன்பாடு கிடையாது. குறிப்பா பெண்களை வெறும் கிளாமர் அடையாளமா காட்சிப்படுத்தியே பழகிட்டோம். அதெல்லாம் இல்லாமல் பெண்கள் போராட களம் இறங்கினா என்ன ஆகும்னு காட்டணும். மேலும் எதிர்த்து நிற்கக் கூடிய துணிச்சல் எல்லா பெண்களுக்குள்ளேயும் இருக்கணும்னுதான் நான் கதை எழுதுவேன்.

பிரியங்கா, நிவேதிதா, விஜி மேம் கேரக்டர் எல்லாம் நேரடியாக நீங்க படத்தில் பார்க்கும் போது அந்தக் கேரக்டர்களுடைய வலிமை உங்களுக்கே புரியும். மேலும் காட்சிகளுக்காக திணிக்கப்பட்ட கேரக்டர்களாவும் இருக்கக் கூடாது என்கிறதிலே கவனமா இருந்தேன்.

படத்தின் கலரிங் டோன் மற்றும் விஷுவலுக்கான மெனக்கெடல் அதிகமாகவே தெரியுதே..?  

அந்த கிரெடிட் சித்தார்த்தாவுக்குத்தான் சேரும். இதற்கு முன்பு கன்னட ‘லூசியா’, ‘யு-டர்ன்’, தமிழில் ‘வெந்துதணிந்தது காடு’ உள்ளிட்ட படங்களுக்கு சினிமாட்டோகிராபி செய்தவர் சித்தார்த். இந்தப் படத்திலே செயற்கை லைட்டுகள் ரொம்ப கம்மி. எல்லாமே நேச்சுரல் லைட்டிங் மற்றும் தீப்பந்தங்கள்தான் அதிகம் பயன்படுத்தியிருப்போம்.

சிஜி கூட ரொம்ப குறைவு. அந்த நேச்சுரல் டோனில் அவருடைய விஷுவல் அருமையா வந்திருக்கு. டி.ராமலிங்கம் ஆர்ட் டைரக்‌ஷன். ஒருசில செட்ஸ்... எல்லாம் பார்த்து நடிகர்களே உண்மையான லொகேஷன்னு நினைச்சாங்க. அந்த அளவுக்கு தத்ரூபமா செய்திருந்தார்.

குறிப்பா ஒரு கோயில் செட் எல்லாம் ஏற்கனவே இருந்த கோயிலை நாங்க பயன்படுத்தியிருக்கறதாதான் எல்லோரும் நம்பினாங்க. ஷாட் முடிஞ்சு செட்டிலே மாற்றங்கள் செய்யும்போதுதான் அவங்களுக்கே இது செட்னு புரிஞ்சு ஆச்சர்யப்பட்டாங்க. தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமி இந்தப் படத்துக்கு காஸ்டியூம். என்னுடைய முந்தைய படங்கள்ல வேலை செய்த எடிட்டர் நாகூரான் ராமச்சந்திரன்தான் இந்தப் படத்துக்கும் எடிட்டர்.

ஜி.வி.பிரகாஷ் மியூசிக். தனுஷ் - ஜி.வி.பி காம்போ பெற்ற வெற்றிகள் எல்லாம் தமிழ் சினிமா மறக்க முடியாதவை. இந்தப் படத்துக்கும் அவருடைய பேக்ரவுண்ட், ரௌத்திரம் தெறிக்கும் பாடல்கள் எல்லாம் பேசப்படும்.தயாரிப்பு சத்யஜோதி ஃபிலிம்ஸ். எத்தனையோ பெரும் கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த தயாரிப்புக் குழு. இந்தப் படத்துக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தயாரிப்பு செலவுகளை கவனிச்சிக்கிட்டாங்க.

ஃபிரேம் ஒர்க்... குறியீடுகள் இந்தப் படத்தில் உண்டா?

கதைக்கான ஜியோகிரபியை நிச்சயம் நான் ஒர்க் செய்துதான் ஸ்பாட்டுக்கு போவேன். இதற்கு முன்பு என்னுடைய படங்கள்ல கூட கடற்கரை, மணல்தான் காட்சியிலே அதிகம் காண்பிச்சிருப்பேன். ஆனா, இந்தப் படம் முழுக்க மலை, பாறைகளுக்கு இடையே ஒரு சின்ன கிராமம்... எனக்கே புதிதான லொகேஷன், நிறையவே ஃபிரேம் ஒர்க் செய்திருக்கோம்.

அடுத்த படம் குறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் உண்டா..?

அடுத்த படமும் தனுஷுடன்தான். கதை உருவாகிட்டு இருக்கு. விரைவில் அறிவிப்புகள் வரும். ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இன்னொரு படம் ஒப்பந்தம் ஆகியிருக்கேன். 15 வருடங்கள் காத்திருப்புக்கு பலன் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. சந்தோஷமா இருக்கு.

பொங்கல் ரேசில் ‘கேப்டன் மில்லர்’..?

முந்தைய இரண்டு படங்கள்ல காண்பிச்ச வன்முறை இந்தப் படத்திலே இருக்காது. முழுமையான ஆக்‌ஷன் படமாகத்தான் உருவாக்கியிருக்கோம். மேலும் படத்துக்கு யு/ஏ, அதனால் குடும்பங்களுடன் குழந்தைகளும் பார்க்கலாம். நம் முன்னோர்களுடைய வாழ்வியல் சார்ந்த கதை. நாம இன்னைக்கு சந்தோஷமா இருக்க நமக்கு முன்பிருந்தவங்க எப்படி எல்லாம் போராடியிருக்காங்க என்கிற கதையை அடுத்த தலைமுறைகளுக்கு உணர்த்த வேண்டிய கடமை நமக்கிருக்கு. அப்படியான கதைதான் ‘கேப்டன் மில்லர்’.

ஷாலினி நியூட்டன்