சூரியன் தரிசிக்கும் கோயில்!



மதுரை மகத்தான ஆன்மிக பூமி!

ஆலயங்கள் தோறும் ஆயிரக்கணக்கில் பழம்பெருமைகளும், அதிசய, ஆச்சர்யங்களும் நிரம்பி வழிகின்றன. அவ்வகையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருக்கும் ‘முத்தீஸ்வரர் கோயில்’ தனக்குள் மேலும் ஆச்சர்யத்தை அள்ளிவைத்து அசர வைக்கிறது.
‘மரகதவள்ளி அம்பிகை உடனுறை முக்தீஸ்வரர் கோயில்’ எனும் இக்கோயில், மீனாட்சியம்மன் கோயிலின் உபகோயில் எனும் பெருமைக்குரியது. மேலும் இந்தக் கோயிலானது  ஆந்திர மாநிலம் காளகஸ்தி கோயிலுக்கு இணையான ஆன்மிகப் பெருமைக்குரியது.

திருமலை நாயக்கரின் தம்பி முத்துவீர நாயக்கரால் 1609 முதல் 1623க்குள் கட்டி முடிக்கப்பட்டு, அழகு பேசும் கலைப்பொக்கிஷப் பெருமைக்குரியதாகவும் இருக்கிறது. இத்துடன், சூரியக் கதிர்கள் சிவனை தரிசிக்கும் அதிசயம் இங்கு ஆண்டுக்கு இருமுறை நடக்கிறது. ‘‘வழிபட்டால் முக்தி தரும் பெருமைக்குரியதாக ‘முக்தீஸ்வரர் கோயில்’ இருக்கிறது. 
சூரியக்கதிர்கள் சுவாமி சன்னதி மண்டபத்தின் துவாரம் வழியாக கோயிலின் நந்தியில் பட்டு எதிரொளித்து மூலஸ்தானத்தில் உள்ள லிங்க வடிவிலான சிவனை தரிசிக்கும் அதிசயம் தொடர்கிறது. இந்த நிகழ்வுக்கென ஒரு பழங்கதையும் இருக்கிறது.

துர்வாச முனிவர் சாபத்தில் இந்திரனின் ஐராவத யானை பூலோகம் வந்தது. மதுரையின் இக்கோயிலில் சிவனை வழிபட்டதால் சாபம் நீங்கியது. ஆனால், யானையோ தன்னை மறந்து இங்கேயே தங்கி விடுகிறது. தன் யானையைத் தேடி அழைத்து வரும்படி இந்திரன், கதிரவனை அனுப்பி வைக்கிறார். இக்கோயிலை கதிரவன் தேடி வந்து, இந்திரனின் யானையை அழைத்துச் சென்றதாம்.

இதனாலேயே ஆண்டில் மார்ச், செப்டம்பர் மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில் சூரியக் கதிர்கள் இக்கோயிலின் நந்தியில் பட்டு எதிரொளித்து மூலஸ்தானத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவனை தரிசிக்கும் அதிசயம் தொடர்கிறது.

குறிப்பாக மார்ச் மாதத்தில் 11, 12, 22, 23 ஆகிய தேதிகளில் காலை 6.35 மணி முதல் 6.45 மணி வரையும்; காலை 7 மணி முதல் 7.15 மணி வரையும் சூரியக் கதிர்கள் சிவனை தரிசிப்பதும் -
செப்டம்பரில் 19ம் தேதி துவங்கி 30ம் தேதி வரையிலும் காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரையும் மற்றும் 6.40 மணி முதல் 6.50மணி வரையும் இந்த தரிசன அதிசயம் நடப்பதும் காலம் காலமாக இருந்து வருகிறது.

இந்நேரத்தில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடத்தப்படுகிறது. வழிபடுவதற்கான பக்தர்கள் கூட்டமும் இந்நாட்களில் அதிகம் இருக்கிறது...’’ என்கிறார்கள் பக்தர்கள்.
இந்த கோயிலின் சிவபெருமானை இன்றும் பக்தர்கள் ‘ஐராவதரேஸ்வரர்’ என்கின்றனர். இந்திரனின் ஐராவத யானை இப்பகுதிக்கு வந்ததால் ‘ஐராவதநல்லூர்’ எனும் சிற்றூர் இக்கோயிலுக்கு அருகில் இருப்பது இந்த ஆன்மிக பழங்கதைக்கு ஆதாரம் காட்டி நிற்கிறது.

செய்தி: செ.அபுதாகிர்

படங்கள்: வெற்றி