நேற்று இந்தியாவில் 3 ஆண்டுகள் தபாலில் கல்வி... இன்று அமெரிக்காவில் முழுநேர MS படிப்பு!



பொதுவாக நம்மூரில் பல்கலைக்கழகங்கள் வழங்கும் தொலைதூரக் கல்வியை பெரியளவில் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. ஒரு வேலைக்கோ, மேற்படிப்பிற்கோ செல்லவேண்டுமானால் கூட முழுநேரமாக கல்லூரியில் படித்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.
இந்தச் சூழ்நிலையில் தொலைதூரக் கல்வியில் பயின்று மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ஒருவர். அதிலும் குறிப்பாக ஆர்ட்ஸ் பிரிவில் மூன்றாண்டு பட்டப்படிப்பு முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் முதல் பெண் அநேகமாக இவராகவே இருக்கும்.

அவர் பெயர் அமுதசுரபி. மணிமேகலையின் அமுதசுரபி போல அள்ள அள்ளக் குறையாமல் தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார். ‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூர்ல. எங்களுக்குப் பூர்வீகம் வேலூர். அம்மா சைடு பெங்களூருக்கும், அப்பா சைடு சென்னைக்கும் இடம்பெயர்ந்திட்டாங்க. இப்ப அப்பா அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் ஐடி நிறுவனத்தில் சேல்ஸ் ஹெட்டாக பணிசெய்றார். அம்மா ப்ரியதர்ஷினியும் நானும் பெங்களூர்ல இருக்கோம்.

பள்ளிப் படிப்பு முடிச்சதும் எல்லோரையும் போல நானும் எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனா, பாதியில் அங்கிருந்து விலகிட்டு பிறகு இக்னோனு சொல்லப்படுற இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வியில் சேர்ந்திட்டேன். எனக்கு எஞ்சினியரிங்ல ஆர்வம் வரல. இது தெரியவே எனக்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகிடுச்சு. கம்ப்யூட்டர் கோர்ஸ்தான் எடுத்திருந்தேன். என்னுடைய விருப்பத்தில்தான் சேர்ந்து படிச்சேன்.

ஆனா, முதலாம் ஆண்டு முடியும்போதே எல்லோரும் படிக்கிறமாதிரி நாமும் படிக்கக்கூடாதுனு தோணுச்சு. என்னுடைய சிந்தனைக்கு எஞ்சினியரிங் செட்டாகல. அதனால், மூன்றாவது செமஸ்டருடன் எஞ்சினியரிங் கல்லூரியில் இருந்து வெளியேறினேன். அதுக்காக படிப்பையே விடணும்னு நினைக்கல. எனக்கு கிரியேட்டிவிட்டி ரொம்பப் பிடிக்கும். அதனால், அதுசார்ந்து படிப்பைத் தொடரணும்னு ஆசைப்பட்டேன்.

பிறகு, மானுடம் சார்ந்த, அதாவது மனித சமூகம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்டவை சார்ந்த படிப்பு சரியாக இருக்கும்னு பிஏ சைக்காலஜி அண்ட் இங்கிலீஷ் கோர்ஸை மேஜராக தேர்ந்தெடுத்து படிச்சேன்...’’ என்கிறவர், நிதானமாகத் தொடர்ந்தார்.  ‘‘இதுக்காக ஏன் இக்னோவை தேர்ந்தெடுத்தேன்னா, ஏற்கனவே அப்பா எஞ்சினியரிங் படிப்பிற்காக எனக்கு நிறைய செலவு பண்ணியிருந்தார். திரும்பவும் இந்த ஹூமானிட்டிஸ் கோர்ஸை பெங்களூர் ஆர்ட்ஸ் கல்லூரியில் சேர்ந்து படிச்சால் நிறைய செலவாகும்.

அதேநேரம் எனக்கும் இதுல எதிர்காலம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான கேரியர் அமையும் உள்ளிட்ட சில சந்தேகங்கள் இருந்தது. அதனால், திறந்தநிலை பல்கலைக்கழகம்தான் சரியாக இருக்கும்னு முடிவெடுத்தேன். முதல்ல படிப்போம். சரிவரலனா ரெகுலர் காலேஜுக்குப் போயிடலாம்னு இருந்தேன். 

இந்நேரம் கோவிட் வந்திடுச்சு. எல்லோருமே என்னைப் போல வீட்டுல இருந்து படிக்கிறமாதிரி ஆகிடுச்சு. அந்நேரத்துல நான் நிறைய இன்டர்ன்ஷிப் பண்ணினேன். எனக்கு எந்தக் கேரியர் பொருத்தமாக இருக்கும்னு தெரிய மார்க்கெட்டிங், புரொடக்ட் டிசைன்ல எல்லாம் அந்த இன்டர்ன்ஷிப்பை செய்தேன்.

அப்புறம், அப்பாவின் பிசினஸ் வொர்க்ல உதவி பண்ணினேன். பிறகு, யூடியூப் வழியாகப் பேக்கிங் கத்துக்கிட்டேன். அதை சிறிய தொழிலாகவும் செய்தேன். அப்ப ஃபேஸ்புக் வழியாகத் தெரிஞ்சவங்களும் வாங்கினாங்க. ரெகுலர் காலேஜ் போனதைவிட தொலைதூரக் கல்வியில் படிச்சது எனக்கு சுயமாக சில விஷயங்களைச் செய்ய ஊக்கம் அளிச்சது.
எனக்கு கிரியேட்டிவிட்டி என்பது அப்பாவைப் பார்த்து வந்தது. 

அப்பா நிறைய படிப்பார். விவாதிப்பார். 2004ம் ஆண்டு காலகட்டத்தில் பிளாக்கில் நிறைய எழுதிட்டு இருந்தார். அவரைப் பார்த்து நான் நிறைய கத்துக்கிட்டேன். தவிர, சின்ன வயசுலயே எனக்கு ஓவியம் வரைவதில் ரொம்ப ஈடுபாடு இருந்தது. அப்புறம், கர்நாடிக் இசையும் கத்துக்கிட்டேன். இதெல்லாம் கலை சம்பந்தமான படிப்பு எடுக்க ஒரு உந்துதல் கொடுத்தது.

ஆனா, எஞ்சினியரிங் படிப்பை விடுகிற வரைக்கும் எனக்கு மானுடம், கலை சம்பந்தமான படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்னு தெரியாது. ரொம்ப அறியாமையில் இருந்தேன்.
என்னைப் பொறுத்தவரை புரோகிராமிங் சம்பந்தப்பட்ட படிப்புகள்தான் நிறைய வாய்ப்புகள் வழங்கும்னு நினைச்சேன். ஆனா, எஞ்சினியரிங் போனப்ப படிப்பு ரொம்ப மெக்கானிக்கலாக மாறிடுச்சு. அதுதான் வேண்டாம்னு இந்தப்பக்கம் வந்தேன்.

ஆனா, நான் எஞ்சினியரிங் படிக்கிறப்ப தொழில்நுட்பம் சார்ந்து வேலைக்குப் போகணும்னு இலக்கு வச்சிருந்தேன். இப்ப எஞ்சினியரிங்ல இருந்து விலகிட்டேன். இருந்தும் என்னுடைய கலை சார்ந்த ஆர்வத்தினை எப்படி தொழில்நுட்பத் துறைக்குள் கொண்டுபோகலாம்னு யோசிச்சேன். அதனால் சைடு பை சைடு நான் புரொடக்ட் டிசைன் கோர்ஸ் எல்லாம் கத்துக்கிட்டே வந்தேன்.

அதாவது எழுத்து, ஓவியம் உள்ளிட்டவற்றை தொழில் சார்ந்த திறனாக மாற்றினேன். அதுக்காக போட்டோஷாப், கோரல் டிரானு எல்லாத்தையும் படிச்சு என்னை முழுமையாக தகுதிப் படுத்திக்கிட்டேன்.

பிறகு, 2022ல் பிஏ முடிச்சேன். ஏற்கனவே கோர்ஸ் எல்லாம் படிச்சிருந்ததால உடனடியாக ஒரு டெக் சம்பந்தமான ஸ்டார்ட் அப்ல புரொடக்ட் டிசைனராக வேலை கிடைச்சது. என்னுடைய ஆர்ட்டிஸ்ட் மைண்ட் ப்ளஸ் பி.ஏ சைக்காலஜி பேக்ரவுண்ட் இந்த ரெண்டும் இதுக்கு உதவியாக இருந்தது...’’ என்கிறவரிடம் அமெரிக்காவில் எம்எஸ் படிப்பு பற்றிக் கேட்டோம்.
‘‘இந்நேரம் நான் மேற்படிப்பிற்காக அமெரிக்கா போகணும்னு முடிவெடுத்தேன். ஏன்னா, வெளிநாடு போய் படிக்கிறப்ப இன்னும் எக்ஸ்போஷர் கிடைக்கும், நம்ம சிந்தனைகளும் மாறும்னு தோணுச்சு.

அதுமட்டுமில்லாமல் நான் புரொடக்ட் டிசைன்ல மாஸ்டர் டிகிரி பண்ணணும்னு நினைச்சேன். ஆனா, அது ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள்லதான் இருக்கு. ஆனா, அங்க சில கட்டுப்பாடுகள் வச்சிருக்காங்க. அங்க மூன்றாண்டு கோர்ஸுக்கு மதிப்பு கிடையாது. நீங்க மூன்றாண்டு டிகிரியுடன் ஒரு மாஸ்டர் டிகிரியும் ரெண்டு ஆண்டுகள் படிச்சிருக்கணும். அப்பதான் அந்தக் கோர்ஸைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்தியாவுல பிஏ தொழில்முறை கல்வி கிடையாது. அதனால், பிஏ படிச்சவங்க மாஸ்டர்ஸ்ல தொழில்முறை கல்வியை பண்ண முடியாது. பிஏ-வுக்குப் பிறகு எம்ஏ-வோ அல்லது எம்எஸ்சி சைக்காலஜியோ பண்ணலாம். அவ்வளவுதான். தொழில்நுட்பமாகப் போகமுடியாது.  அதனால், அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்தேன். 

ஆனாலும், அங்கேயும் எனக்கு சந்தேகங்கள் இருந்தது. கரஸ்பாண்டன்ட் கோர்ஸ்ல படிக்கிறதால நம்ம டிகிரி அங்க மதிப்புள்ளதாக இருக்குமா, சீட் கிடைக்குமானு யோசிச்சேன். காரணம், நான்காண்டு டிகிரிக்குத்தான் அமெரிக்க பல்கலைக்கழகங்கள்லயும் எளிதாக சீட் கிடைக்கும். அதனால, இதற்கு மாற்று என்னனு பார்த்தேன். அப்பதான் ஆன்லைன்ல சில தகவல்கள் படிச்சேன்.

அதாவது, ஒரு பல்கலைக்கழகம் NAACனு சொல்லப்படுற தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் கவுன்சில் வழங்கும் A+ அல்லது A++ அல்லது அதுக்கு மேல் கிரேடு வச்சிருந்தால், அந்தப் பல்கலைக்கழகம் வழங்கும் மூன்றாண்டு டிகிரி அங்கே நான்காண்டு டிகிரியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்னு தெரிஞ்சது. ஆனா, இதை நிரூபிக்கணும். இந்த சான்றிதழ் அங்கீகாரம் உள்ளதுதான்னு சொல்லணும். இதுக்கு வோர்ல்டு எஜுகேஷன் சர்வீஸஸ்னு ஒரு நிறுவனம் இருக்கு. இது மதிப்பாய்வு செய்யும் நிறுவனம்.

அதாவது கனடா, யுஎஸ் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு, வளர்ந்து வரும் நாடுகள்ல இருந்து மேல்படிப்புக்காகப் போகிறவர்களின் சான்றிதழ்களை இவங்க மதிப்பாய்வு செய்து கொடுப்பாங்க. இதுல ஒவ்வொரு கோர்ஸுக்கும் ஒரு கிரெடிட் இருக்கும். 

அதை இந்திய விதிமுறையிலிருந்து யுஎஸ் விதிமுறைக்கு மாற்றுவாங்க. நான் இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் விதிமுறை, நாக் கமிட்டி அங்கீகாரம் உள்ளிட்ட பிரதிகளை எல்லாம் அனுப்பினேன். அவங்க சரிபார்த்துட்டு மூன்றாண்டு டிகிரி அமெரிக்காவின் நான்காண்டு டிகிரிக்கு சமம்தான்னு பதில் தந்தாங்க.

இந்த நாக் அங்கீகாரத்தை இந்திராகாந்தி பல்கலைக்கழகம் 2020ல் வாங்கியிருந்தாங்க. அதனால், எனக்கு முதல் தடை கிளியர் ஆனது. என்னைப் போலவே சிலபேர் இங்கிருந்து ஜாப் ஓரியண்ட் மாஸ்டர் கோர்ஸுக்காக இப்படி யு.எஸ். போயிருக்காங்க. ஆனா, அவங்க நிறைய பணி அனுபவங்களுடன் போவாங்க. அதனால, அவங்க சேர்கிற அந்தப் பல்கலைக்கழகங்களும், அனுபவங்களைக் கணக்கிட்டு தங்கள் தேவைகளைக் குறைச்சுப்பாங்க.

அதுமட்டுமில்லாமல் அவங்க யுஜி மற்றும் பிஜி முடிச்சிட்டு இக்னோவில் தொழில்நுட்ப கோர்ஸும் பண்ணிட்டுதான் போவாங்க. ஆனா, இக்னோவுல இருக்கிற காமர்ஸ் கோர்ஸ் அல்லது ஹூமானிட்டிஸ் சம்பந்தப்பட்ட கோர்ஸ் முடிச்சிட்டு இதுவரை யாரும் யு.எஸ் போனதாகத் தெரியல. 

அதிலும், மூன்றாண்டு டிகிரி முடிச்சிட்டு ஃப்ரஷ்ஷராக இந்தமுறையில் போறது அநேகமாக நான்தான் முதல்னு நினைக்கிறேன்...’’ என்கிறவருக்கு இப்போது அமெரிக்காவின் பால்டிமோர் கவுன்டியில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மேரிலேண்டில் எம்.எஸ் படிக்க இடம் கிடைத்திருக்கிறது.

‘‘இந்தப் பல்கலைக்கழகத்துக்கு அப்ளை செய்ததும் யுஜி மதிப்பெண் சதவீதத்தைக் கணக்கீடு செய்தாங்க. அது 70 சதவீதம் வச்சிருக்கணும். எனக்கு சரியாக 70 சதவீதம் இருந்தது. அப்புறம், ஸ்டேட்மெண்ட் ஆஃப் பர்பஸ்னு சொல்வாங்க. நம்மைப் பற்றி அகடமியாகவும், பெர்ஸனலாகவும் ஒரு கட்டுரை எழுதி அனுப்பணும். இது ரொம்ப முக்கியம். இதைப் பார்த்துதான் அவங்க நம்மை அனுமானிப்பாங்க.

அப்புறம், IELTS அல்லது TOEFL டெஸ்ட் எழுதணும். இதுல நான் IELTS தேர்வு எழுதினேன். என் பல்கலைக்கழகத்திற்கு 6.5 மார்க் எடுக்கணும்னு கட்ஆஃப் இருந்தது. நான் 7.5 மார்க் வாங்கினேன். இப்ப அங்க மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் இன் ஹியூமன் சென்டர்டு கம்ப்யூட்டிங் கோர்ஸ் எடுத்திருக்கேன். இது சைக்காலஜி அண்ட் டிசைன் கோட்பாடுகளைப் பயன்படுத்தி டெக் புரொடக்ட்ஸை உருவாக்குற துறை.

அதாவது மனிதர்கள் தகவல் தொழில்நுட்பங்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்றாங்க என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்தத் தகவலைப் பயன்படுத்துவதே இந்த கோர்ஸின் அடிப்படை நோக்கம். இது ரெண்டு ஆண்டு கோர்ஸ். இது முடிந்தபிறகு இதை அடிப்படையாகக் கொண்டு பி.ஹெச்டி படிக்கலாம்னு நினைச்சிருக்கேன். இதுல எதிர்காலம் ரொம்ப நல்லாயிருக்கு.

இப்ப இந்தியாவுல ஸ்டார்ட் அப் கல்ச்சர் பெருகி வருது. அதனால, நிறைய புரொடக்ட் வெளியே வரும். யு.எஸ்லயும் ஸ்டார்ட் அப் கல்ச்சர் வேற லெவல்ல இருக்கு. எங்கெல்லாம் புரொடக்ட் அடிப்படையிலான நிறுவனங்களுக்கு மதிப்பு கொடுக்கறாங்களோ அங்கெல்லாம் புரொடக்ட் டிசைனர், யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் டிசைனர் வேலைகள் உருவாகும். சென்னையில்கூட நிறைய நிறுவனங்கள் இந்த புரொடக்ட் டிசைன் மேல் முதலீடு செய்றாங்க. இது நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்திட்டுப் போக உதவும்...’’ என உற்சாகமாகச் சொல்கிறார் அமுதசுரபி.

பேராச்சி கண்ணன்