டார்க்நெட்



30. முடிவல்ல... தொடரும்

இணையம் என்பது உருவாவதற்கு காரணமே அமெரிக்க ராணுவத்தினர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்.  1950 காலகட்டத்தில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் நடந்து வந்தது. அமெரிக்காவிற்கு நிகரான ராணுவ பலம் கொண்டிருந்த ரஷ்யா எந்நேரமும் அமெரிக்காவைத் தாக்கலாம் என்று பயத்துடன் எப்போதுமே அமெரிக்க ராணுவத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு  வந்தனர்.

அப்போது புதிதாக உருவாகி வந்த தொலைபேசி இணைப்புகளை அமெரிக்க ராணுவம் பெரிதும் நம்பி இருந்தது. ஒருவேளை இந்தத் தொலைத் தொடர்பு பெயர்களை ரஷ்ய ராணுவம் தாக்கினால் அமெரிக்க ராணுவத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்படலாம்... இதற்கு மாற்றாக எவ்வளவு தாக்குதலுக்கு உள்ளானாலும் வெவ்வேறு இணைப்புகளின் வழியே வெற்றிகரமாக தகவல் தொடர்பு மேற்கொள்ளும் ஓர் அமைப்பைப் பற்றி அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் ஆராயத் தொடங்கியது.அதன் விளைவாகத்தான் இணையும் எனும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.  

சாதாரண தகவல் தொடர்பு தொழில்நுட்ப கட்டமைப்பை விட இணைய கட்டமைப்பு என்பது மையப்படுத்தப்படாத அதாவது டீசென்ட்ரலைஸ்டு (Decentralized) கட்டமைப்பு என புரிந்து கொள்ளலாம்.இணையத்தில் வலைதளங்கள் வந்த காலத்தில் அவை சர்வர் கிளைண்ட் முறையில் இருந்தன. அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வலைதளத்தின் தகவல் சேமிக்கப்பட்டு இருக்கும். ஒரு வேளை அந்த சர்வரை முடக்கி விட்டால் அந்த வலைதளம் செயலிழந்து விடும்.  

இதற்கு மாற்றாக வலைதளத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளில் சேமித்து வைத்தால் ஒருவேளை ஒரு கணினியை அழித்தால் கூட பிற கணினிகள் உதவியுடன் நீங்கள் மீண்டும் அந்த வலைதளத்தை இயக்கி தகவல்களைப் பெற முடியும். இந்த மையப்படுத்தப்படாத  டீசென்ட்ரலைஸ்டு  அமைப்புதான் டார்க்நெட்டின் அடிப்படை.

இப்போது வெப்3  எனும் அடுத்த கட்ட இணையத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு இணைய கட்டமைப்பு என்பது முழுக்க முழுக்க டீசென்டரலைசைடு முறையில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிப்டோ கரன்சிகளின் ரகசியத் தன்மையை அரசுகள் கேள்விக்குறியாக்கியபோது டார்க் ஃபைனான்ஸ் எனும்  மையப்படுத்தப்படாத ஒரு கிரிப்டோ கரன்சி வலைப்பின்னலை உருவாக்கி விட்டார்கள்.

கருத்துச் சுதந்திர ஆர்வலர்களின் அடிப்படை என்பது அதிகாரமோ, தகவலோ, கட்டமைப்போ மையப்படுத்தப்பட்டதாக இருந்தால் அவை ஜனநாயகத்திற்கு எதிராகப் போக வாய்ப்புகள் உள்ளன... அதனால் மையப்படுத்தப்படாத, அனைவருக்கும் அதிகாரம் கொடுக்கக்கூடிய ஓர் அமைப்பை உருவாக்குவதுதான் அவர்களின் நோக்கம்.  அவ்வாறாக வரலாறு முழுவதும் மையப்படுத்தப்படாத தொழில்நுட்பம் மக்களிடம் சேரச் சேர மக்கள் முதன்முறையாக அவர்களின் வரலாறை எழுதத் தொடங்கினார்கள்.

இன்றும் சமூக வலைதளங்களை எடுத்துக் கொள்ளுங்கள்... அது சாதாரண மக்களின் குரலை பலருக்கு கேட்க உதவும் ஒரு தொழில்நுட்பமாகத்தான் இருக்கிறது. அதன் பாதகங்களை நாம் குறைத்து மதிப்பிடவில்லை என்றாலும் அதன் பாசிடிவ் அம்சங்களையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.டார்க்நெட் பலவகையில் சாதாரண மக்களின் கருத்துச் சுதந்திரத்தைக் காக்கும் மிகச்சிறந்த தொழில்நுட்பம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், கண்காணிக்கப்படாத ஒரு தொழில்நுட்பத்தை மனிதனிடம் கொடுத்தால் அந்த மனிதனின் இருட்டுப் பக்கம் வெளியே வந்து விடுகிறது.  இத்தகைய தீய குணம் படைத்த மக்கள்தான் டார்க்நெட் போன்ற தொழில்நுட்பத்தை முழுவதும் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.

சேவை செய்ய வேண்டிய இந்தத் தொழில்நுட்பம் தவறான நபர்களின் ஆதிக்கத்தால் மக்கள் உள்ளே வரவே பயப்படக்கூடிய ஒரு தொழில்நுட்பமாக மாறிவிட்டது.கருத்துச் சுதந்திர ஆர்வலர்கள் முன்வைப்பது போல் மக்களின் விடுதலைக்காகத்தான் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தைரியமாக உள்ளே நுழைந்து தவறான மனிதர்களைக் கட்டுப்படுத்தி இந்தத் தொழில்நுட்பத்தை தங்களுக்குச் சாதகமான தொழில்நுட்பமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

வரலாறு முழுவதும் எத்தகைய சக்கரவர்த்திகள், சர்வாதிகாரிகள், கொடுங்கோலர்கள் தங்களின் அதிகாரத்தைக் கொண்டு மக்களை ஒடுக்க நினைத்தாலும் மக்களின் எழுச்சி என்பது இவர்களைப் புரட்டிப் போட்டுக் கொண்டேதான் இருக்கும்.  இத்தகைய ஒவ்வொரு மக்களின் புரட்சிக்குப் பின்பும் அப்போதைய தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மிகப்பெரிய பணியை ஆற்றி வருகிறது என்பது வரலாறு.

வருங்காலத்தில் ஜனநாயகம் செழிக்கவும் மக்களின் கருத்துக்கள் முக்கிய விவாதங்களாக மாறவும் டார்க்நெட் போன்ற தொழில்நுட்பங்கள் மக்களின் கருத்துச் சுதந்திரத்தைக் காக்க உதவும் என்ற கனவு எல்லோருக்கும் உள்ளது. ஆனால், அதை மக்கள்தான் மீட்டெடுக்க வேண்டும். கடந்த 30 அத்தியாயங்களாக டார்க்நெட்-டின் மறுபக்கத்தைப் பற்றி பல தகவல்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

டார்க்நெட் பற்றிய தவறான எண்ணத்தைப்  போக்கவும், அதே நேரம் டார்க் நெட் என்பது முழுவதுமாக போலீசாருக்குத் தெரியாத களமும் அல்ல... அங்கு தவறு செய்தால் நிச்சயம் ஒரு நாள் மாட்டிக் கொண்டு தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும் என்பதையும் அழுத்தமாக வரலாற்று ஆதாரங்களுடன் அனைவருக்கும் புரிய வைக்க முயற்சித்துள்ளோம்.  டார்க்நெட் பற்றிய இந்தத் தொடர் தற்காலிகமாகத்தான் முடிவடைந்துள்ளது. ஏனென்றால் டார்க்நெட் போன்ற தொழில்நுட்பங்களுக்கு என்றும் முடிவே இல்லை.

(முற்றும்)

வினோத் ஆறுமுகம்