No மலிவு விலை...No தள்ளுபடி... உலகின் காஸ்ட்லி பிராண்ட் இதுதான்!



உலகின் மதிப்புமிக்க ஃபேஷன் பிராண்டுகளில் முதன்மையானது, ‘லூயி விட்டோன்’. ஹேண்ட் பேக்குகள்,  விதவிதமான தோல் பொருட்கள், டிரங்குகள், ஆடைகள், வாசனைத் திரவியங்கள், கைக்கடிகாரங்கள், நகைப் பொருட்கள், காலணிகள், சன் கிளாஸ், இயர்போன்... என இதன் தயாரிப்புப் பட்டியல் நீள்கிறது.  ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள், பிசினஸ்மேன்கள், அரசியல் பிரமுகர்கள், பெரும் செல்வந்தர்கள் என இதன் வாடிக்கையாளர்கள் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது.

‘லூயி விட்டோனி’ன் பிரத்யேகமான ஷோரூம்கள் மற்றும்  ஆன்லைனில் மட்டுமே இதன் தயாரிப்புகள்  கிடைக்கின்றன. 170 வருடங்களாக ஃபேஷன் உலகில் முதன்மையான இடத்தில் தன்னைத் தக்க வைத்திருப்பது ‘லூயி விட்டோனி’ன் பெருமை. 
இந்த பிராண்டை உருவாக்கியவர் லூயி விட்டோன், ஃபிரான்சிலுள்ள ஆஞ்சே  எனும் கிராமத்தில், 1821ம் வருடம்  பிறந்தார். கைவினைஞர்கள், தச்சர்கள், விவசாயிகள் என பலதரப்பட்ட ஆளுமைகளை உள்ளடக்கியது லூயியின் குடும்பம். அவருடைய அம்மா தொப்பிகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

லூயிக்கு பத்து வயதாக இருந்தபோது அம்மா இறந்துவிட்டார். அடுத்த சில வருடங்களில் அப்பாவும் இறந்துவிட, ஒரு வளர்ப்புத்தாயின் கவனிப்பில் வளர்ந்தார் லூயி. வளர்ப்புத் தாய்க்கும், லூயிக்கும் இடையில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டதால் வீட்டைவிட்டுவெளியேறினார் லூயி. அப்போது அவரது வயது 13.சிறுவன் லூயி விட்டோனுக்கு தங்குவதற்குக் கூட இடம் இல்லை. 
இன்னொரு பக்கம் ஃபிரான்சில் தொழிற்புரட்சி முக்கியமான கட்டத்தை எட்டியிருந்தது. வேலை தேடி பல ஊர்களுக்குக் கால்நடையாகவே பயணித்தார். வேலை கிடைத்த ஊரில் சில காலம் தங்கினார். பிறகு இன்னொரு ஊரை நோக்கிச் சென்றார். இப்படி இரண்டு வருடங்களில், 470 கிலோமீட்டர் தூரம் கால்நடையாகவே பயணித்து, தனது 15வது வயதில் பாரிஸ் நகரத்துக்கு வந்தடைந்தார் லூயி.

பாரிஸில் டிரங்கு பெட்டிகளைத் தயாரித்து வந்த மரேசல் என்பவரிடம் உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்தார் லூயி. டிரங்கு பெட்டி தயாரிக்கும் வேலை லூயிக்கு ரொம்பவே பிடித்துப்போனது.
சில நாட்களிலேயே தனியாக ஒரு டிரங்கு பெட்டியை உருவாக்கும் அளவுக்கு தொழில்நுட்பத்தை வேகமாகக் கற்றுக்கொண்டார். கலை நுட்பத்துடன் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் வடிவமைப்பில் டிரங்கு பெட்டிகளை உருவாக்கினார் லூயி.

அந்த நாட்களில் பெரும் பணக்காரர்கள்தான் அதிகமாக பயணம் மேற்கொண்டனர். பயணத்துக்குத் தேவையான பொருட்களை எல்லாம் பாதுகாப்பாக எடுத்துச்செல்ல டிரங்கு பெட்டிகள் அவசியமானதாக இருந்தன. 
அதனால் பாரிஸில் டிரங்கு பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவியது. டிரங்கு பெட்டிகளில் வித்தியாசம் காட்டினால் மட்டுமே வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார் லூயி. இத்தனைக்கும் அவர் இன்னொருவரிடம் வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லூயியின் தயாரிப்பை வாங்கிய பணக்காரர்கள் தங்களின் நண்பர்களுக்குச் சிபாரிசு செய்தனர். இந்த சிபாரிசு மூன்றாம் நெப்போலியனின் மனைவியும், ஃபிரான்ஸின் அரசியுமான யூஜினியையும் லூயியின் வாடிக்கையாளராக மாற்றியது. லூயி விட்டோனின் தனித்துவமான டிசைனில் ஈர்க்கப்பட்ட அரசி, அவரை தனிப்பட்ட முறையில் தனக்கான டிரங்கு பெட்டி வடிவமைப்பாளராக நியமித்தார். அதற்குப் பிறகு ஃபிரான்ஸில் உள்ள செல்வந்தர்கள் எல்லோரும் லூயியைத் தேடி வந்தனர். ஆர்டர்கள் குவிந்தன.

முக்கியமான ஆர்டர்களைச் செய்து முடிக்கவே சில வருடங்கள் தேவைப்பட்டது. அதனால் மரேசிலிடமிருந்து விலகினார் லூயி. நூற்றுக்கணக்கான ஆர்டர்களுடன், 1854ம் வருடம் பாரிஸ் நகரின் மையத்தில் ஒரு கடையைத் திறந்தார். இதுதான் ‘லூயி விட்டோன்’ எனும் மாபெரும் பிராண்டின் முதல் கடை. லூயியின் பெயரே பிராண்டாக மாறியது. தனது பெயரையே பிரபலமான பிராண்டாக மாற்றிய முதல் நபர் லூயியாகத்தான் இருக்க வேண்டும். இதற்கிடையில் கிளமென்ஸ் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் லூயி.

கடை திறந்த நான்கு வருடங்களில் ஐரோப்பா முழுவதும் பிரபலமாகிவிட்டார் லூயி. ஃபிரான்சிலேயே முதல் முறையாக செவ்வக வடிவிலான டிரங்கு பெட்டியை அறிமுகப்
படுத்தினார் லூயி. அதற்கு முன்பு அங்கே விற்பனை செய்யப்பட்ட டிரங்கு பெட்டியின் மேற்பகுதி உருண்டையாக இருக்கும். மட்டுமல்ல, அப்போது விற்பனை செய்யப்பட்ட மற்ற எல்லா டிரங்கு பெட்டிகளையும் விட, லூயியின் தயாரிப்பு எடை குறைவாக இருந்தது. இதுதான் வாடிக்கையாளர்களைக் கவர மூல காரணம்.

இன்றும் கூட ‘லூயி விட்டோனி’ன் அனைத்து தயாரிப்புகளும் எடை குறைவானவை என்பது குறிப்பிடத்தக்கது. 1860களில் ஆர்டர்கள் குவியத் தொடங்கின. ஐம்பதுக்கும் அதிகமானோரை வேலைக்கு அமர்த்தி, டிரங்கு பெட்டிகளைத் தயாரிக்க பெரிய தொழிற்சாலையைத் திறந்தார் லூயி. அடுத்து உலகிலேயே முதல் முறையாக டிரங்கு பெட்டிகளின் பாதுகாப்பிற்காக பிக் - ப்ரூஃப் பூட்டை உருவாக்கினார். இந்தப் பூட்டை டிரங்கு பெட்டியின் உரிமையாளரிடம் இருக்கும் சாவியால் மட்டுமே திறக்க முடியும் என்பது இதன் சிறப்பு.

1871ல் ஃபிரான்ஸுக்கும் ஜெர்மனிக்கு இடையில் நடந்த போரின் போது டிரங்கு பெட்டிகளுக்கான தேவை குறைந்தது. அத்துடன் போரில் லூயி விட்டோனின் கடையும், தொழிற்சாலைகளும் சிதைவுற்றன. தொழிற்சாலையில் வேலை செய்தவர்களே அங்கிருந்த முக்கியமான பொருட்களை எல்லாம் திருடிக்கொண்டு போய்விட்டனர். 

துவண்டு போகாத லூயி, 1872ம் வருடம் பாரிஸ் நகரத்தின் முக்கிய பகுதியில் புதிய கடையைத் திறந்தார். மற்ற நிறுவனங்களும் லூயி விட்டோனின் ஸ்டைலையும், டிசைனையும் பின்பற்றி செவ்வக வடிவில் டிரங்கு பெட்டிகளைத் தயாரிக்க ஆரம்பித்தன.

ஆனால், தரத்திலும் , டிசைனிலும் லூயியை யாராலும் நெருங்க முடியவில்லை. 1885ல் லண்டனில் தனது கிளையைத் தொடங்கியது ‘லூயி விட்டோன்’. 1892ல் லூயி மரணமடைய, நிறுவனத்தின் பொறுப்பு அவரது மகன் ஜியார்ஜியஸ் விட்டோனிடம் வந்தது. ‘லூயி விட்டோனி’ன் அடையாளமான அதன் லோகோவை உருவாக்கி, பிசினஸை உலகளவில் விரிவடையச் செய்தார் ஜியார்ஜியஸ். மட்டுமல்ல, 1900களில் சிறிய அளவிலான பேக்குகளை அறிமுகப்படுத்தினார்.

1913ம் வருடம் பாரிஸில் ஒரு பெரிய ‘லூயி விட்டோன்’ ஷோரூமைத் திறந்தார் ஜியார்ஜியஸ். அப்போது உலகிலேயே மிகப்பெரிய பயணப் பொருட்கள் விற்கும் கடை அதுதான். முப்பதுகளில் கீபால் பேக், ஸ்பீடி பேக் என்று புதுவிதமான பேக்குகளை அறிமுகப்படுத்தியது ‘லுயி விட்டோன்’. 

1936ல் ஜியார்ஜியஸ் மரணமடைய, அவரது மகன் கேஸ்டோன் கைக்கு நிறுவனம் வந்தது. 1945க்குப் பிறகு பர்ஸ், ஹேண்ட் பேக்குகள், அலுவலக பேக்குகள், காலணிகள் என பலவிதமான தோல் பொருட்களையும் தயாரிக்க ஆரம்பித்தது ‘லூயி விட்டோன்’.  

1987ல் பெர்னார்ட் அர்னால்ட் என்கிற பிசினஸ்மேன் ‘லூயி விட்டோனை’க் கையகப்படுத்தி ‘எல்விஎம்ஹெச்’ எனும் பெரும் நிறுவனத்தை உருவாக்கினார். பெர்னார்டின் கைக்கு ‘லூயி விட்டோன்’ வந்த பிறகு அதன் பிசினஸ் விரிவடைந்ததோடு, அந்த பிராண்டின் கீழ் வெளிவந்த தயாரிப்புகளும் விரிவாகிவிட்டன. 

இப்போது ‘லூயி விட்டோன்’ பிராண்டில் இயர்போன் கூட கிடைக்கின்றது. மட்டுமல்ல, உலகின் இரண்டாவது பெரும் பணக்காரரே பெர்னார்ட் அர்னால்ட்தான். இன்று ‘லூயி விட்டோனு’க்கு என்று 50 நாடுகளில் 460க்கும் மேலான  பிரத்யேக ஷோரூம்கள் இருக்கின்றன.

*சிறப்புகள்

ஒரு போதும் ‘லூயி விட்டோனி’ன் தயாரிப்புகளுக்குத் தள்ளுபடி கிடையாது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ‘லூயி விட்டோனி’ன் ஷோரூமில் பழைய தயாரிப்புகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு வைப்பார்கள்.

விற்பனையாகாத பழைய தயாரிப்புகளை ஃபிரான்ஸில் இயங்கிவரும் ‘லூயி விட்டோனி’ன் தொழிற்சாலைக்குத் திருப்பி அனுப்பிவிடுவார்கள். அந்தப் பழைய தயாரிப்புகளைத் துண்டு துண்டாக வெட்டியோ அல்லது நெருப்பில் இட்டோ அழித்துவிடுவார்கள். மலிவு விலை அல்லது தள்ளுபடியில் விற்பனை செய்தால் பிராண்டின் மதிப்பு குறைந்துவிடும் என்பதால் இந்த ஏற்பாடு.

இன்னொரு பக்கம்  ‘லூயி விட்டோனி’ன் பழைய தயாரிப்புகளுக்குச் சந்தையில் மவுசு அதிகம். உதாரணத்துக்கு, 100 வருடங்கள் பழமையான ‘லூயி விட்டோன்’ டிரங்கு பெட்டிகள் பல லட்சங்களுக்கு ஏலம் போகின்றன. ‘லூயி விட்டோனி’ன் அனைத்து வகையான ஹேண்ட் பேக்குகளும் தேர்ந்த கலைஞர்களால் கைகளாலேயே தயாரிக்கப்படுகின்றன. 

ஒரு ஹேண்ட் பேக்கைத் தயாரிக்க ஒரு வாரமாகிறது. இந்த பேக்குகளில் தண்ணீர் புகாது; தீப்பிடிக்காது. அதனால்தான் விலை அதிகம். மட்டுமல்ல, பேக்குகளின் வண்ணமும் மங்காது. எவ்வளவு வருடங்களானாலும் புதிது போலவே பளிச்சென்று இருக்கும்.

இதுபோலத்தான் அதன் அனைத்து தயாரிப்புகளும் மெனக்கெட்டு உருவாக்கப்படுகின்றன. தவிர, 2006ம் வருடத்திலிருந்து 2012ம் வருடம் வரை தொடர்ந்து உலகின் மிகுந்த மதிப்புமிக்க ஆடம்பர பிராண்ட் என்ற சிறப்பைத் தன்வசம் வைத்திருந்தது ‘லூயி விட்டோன்’.

த.சக்திவேல்