அப்பா... மகள்... லண்டன் & ஆக்‌ஷன்!



பொங்கல் ரேஸில் ‘மிஷன்: சாப்டர்1’ படமும் இடம்பிடித்திருப்பதில் ஹீரோ அருண் விஜய் உற்சாகமாக இருக்கிறார்.

‘மிஷன் சாப்டர் 1’ என்ன கதை?

தந்தை - மகள் கதை. ஒரு முக்கிய வேலைக்காக ஒரு அப்பாவும் மகளும் லண்டனுக்குப் போகவேண்டிய சூழல். அங்கே சில பிரச்னைகள் தேடி வருது. அதிலே அப்பாவும் மகளும் சிக்கிக் கொள்ள... தொடர்ந்து கதை நகரும். அதற்கிடையிலே ஏன் ஆக்‌ஷன், என்ன சூழல் இதெல்லாம் சேர்ந்துதான் கதைக்களம். ‘அச்சம் என்பது இல்லையே’ தலைப்புதான் படத்துக்கு முதலில் வைத்தோம்.
ஆனால், படம் தமிழ் மட்டுமில்லாம மற்ற மொழிகளிலும் டப்பிங் ஆகுது. எல்லா மொழிக்கும் பொதுவான பெயராகவும் இருக்கணும், மேலும் ஒரு மிஷன் படத்திலே பூர்த்தி ஆகவேண்டிய சூழல் இருக்கு. அதனால் இந்தப் பெயர் ரொம்பப் பொருத்தமா இருந்துச்சு. அதனால் ‘மிஷன் சாப்டர் 1’ என வைச்சு ‘அச்சம் என்பது இல்லையே’ என்பதை சப் டைட்டிலா இணைச்சிட்டோம்.

படப்பிடிப்பின்போது உங்களுக்கு விபத்து எனத் தகவல்கள் வெளியானதே?

லண்டனில் ஒரு பஸ் ஆக்‌ஷன் சீக்வென்ஸ்... அந்தத் தெருவும் சரி, பஸ்ஸும் சரி பார்க்க பெரிதாதான் தெரியும். ஆனால், சின்ன பஸ். அதற்குள் ஸ்டண்ட். அப்பதான் காலில் சரியான அடி. அப்படியே பெரிதா வீங்கிடுச்சு. 
தசைநார் கிழிஞ்சு அடிபட்டிருந்தது. ஒரு மாதத்துக்கு மேல ஓய்வெடுத்து மறுபடியும் ஷூட் ஆரம்பிக்க வேண்டிய சூழல். ஒவ்வொரு காட்சி முடிஞ்ச பிறகும் அப்படியே முட்டி புஸ்ன்னு வீங்கி நிற்கும். உடனே ஐஸ், வாட்டர் பேக்னு வைச்சு அந்த வீக்கத்தை சரி செய்துதான் நடிச்சேன்.

இதிலே ஒரு காட்சியிலே கப்பல் ஆன்கர் செயினை கையில் சுத்திக்கிட்டு அடிக்கணும். எங்களுக்கு டம்மி செய்து வந்த செயின் சின்னதா இருக்க, கடைசியிலே உண்மையான செயினையே கொடுங்கன்னு நானும் கொஞ்சம் தில்லா ஓகேன்னு வாங்கினா பயங்கர வெயிட். கையிலே வேற சுத்திக்கிட்டு அடிச்சப்போ இரத்தமே வந்திடுச்சு. இயக்குநர் விஜய் அவ்வளவு கவனமா பார்த்துக்கிட்டார். எனக்கு எப்போதெல்லாம் பிரேக் தேவையோ அதெல்லாம் கொடுத்து எனக்காகவே டைமிங் எல்லாம் காம்ப்ரமைஸ் செய்துக்கிட்டார்.

எமி ஜாக்சன், நிமிஷா சஜயன்... படத்தின் மற்ற நடிகர்கள் பற்றி சொல்லுங்க?

லண்டன் ஜெயிலில் ஒரு லேடி ஜெயிலர்  கேரக்டர் தேவைப்பட்டது. எமி ரொம்பப் பொருத்தமா இருந்தாங்க. நிமிஷா சஜயன் இந்தப் படம் மூலமாகத்தான் தமிழில் அறிமுகம். ஆனால், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எல்’ படம் ரிலீஸ் ஆகிடுச்சு. இந்தப் படத்தில் அவங்களுக்கு ஒரு நர்ஸ் கேரக்டர். பொதுவாகவே வெளிநாடுகளில் நீங்க எந்த ஹாஸ்பிடல் போனாலும் அங்கே ஒரு மலையாள நர்ஸ் இருப்பாங்க. அப்படியான ஒரு கேரக்டர்தான் நிமிஷாவுக்கு.

நர்ஸ்ன்னா நர்ஸ்தான். அப்படியான பொருத்தம் நிமிஷா கேரக்டர். கன்னட ஹீரோ பரத் போபண்ணா இந்தப் படத்தில் வில்லன். நாசர் சார் மகன் அபி ஹாசனுக்கு ஒரு முக்கியமான ரோல். ‘லியோ’ படத்துல விஜய் சார் மகளாக நடித்த பேபி இயல் இந்தப் படத்தில் எனக்கு மகளாக நடிச்சிருக்காங்க. சின்னச் சின்ன ரியாக்‌ஷன்கள் எல்லாம் ரொம்ப அற்புதமா செய்திருக்காங்க.

படத்தின் ஜெயில் செட், விஷுவல் எல்லாம் டிரெய்லரில் பிரம்மாண்டமாக இருக்கே..?

என்னுடைய காயம்... மேலும் மழை, புயல்னு ஒரு மாதம் பிரேக் எடுத்துக்கிட்டோம். எல்லாம் முடிஞ்சு ஷூட் ஆரம்பிக்கலாம்னு முடிவு செய்தோம். ஒரு நாள் காலையிலே டைரக்டர் விஜய் என்னைக் கூப்பிட்டார். புயல் காரணமாக மொத்த செட்டும் காலி. செட்டைப் பார்த்தவுடனேயெ எங்களுக்கு அதிர்ச்சி. ஆனாலும் ஆர்ட் டைரக்டர் சரவணன் வசந்த் சளைக்காம திரும்ப வேலை செய்து கொடுத்தார். அந்த செட்தான் படத்தின் பெரிய பட்ஜெட். சினிமாட்டோகிராபி சந்தீப் கே விஜய். இந்தப் படத்துக்கு மிகப்பெரிய தூண் அவருடைய விஷுவலும், லைட்டிங்கும்தான். எடிட்டிங், அந்தோனி.

முதல் முறையா வெளில கதை, திரைக்கதை வாங்கி இயக்குநர் விஜய் இப்படத்தை டைரக்ட் செய்திருக்கார். எனக்கும் இது வித்யாசமான ஒரு முயற்சிதான்.
மியூசிக் ஜிவி.பிரகாஷ் குமார். சில காட்சிகளில் இந்த இடம் ஜிவி பார்த்துப்பார்னு அவர்கிட்டே பொறுப்பை ஒப்படைச்சிருவார் விஜய். அந்த அளவுக்கு ஜிவி - விஜய் கெமிஸ்ட்ரி இதற்கு முன்பு ஒர்க்கவுட் ஆகியிருக்கு.

இந்தப் படத்தில் மூன்று பாடல்கள். பாடல்கள் வைக்க பெரிதா இடம் செட்டாகலை. ஆனால், பேக்ரவுண்ட் தெறிக்க விட்டிருக்கார். சில்வா மாஸ்டர் சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமா வந்திருக்கு. இந்தப் படம் புரொடக்‌ஷன் ரீதியாகவும் நிறைய சவால்களைக் கொடுத்திருச்சு. ஆனா, எங்க புரொடக்‌ஷன் டீம் அவ்ளோ சப்போர்ட். கதைக்கு என்ன தேவையோ செய்யுங்கன்னு சொன்னாங்க. செட் மட்டுமே ரூ.5.5 கோடி. இதிலே 200க்கும் மேல வெளிநாட்டவர்கள் வேலை செய்திருக்காங்க. லைகா உள்ளே வந்தபிறகு படம் இப்ப நான்கு மொழிப் படமாக மாறியிருக்கு.

ஆக்‌ஷன் அதிரடியிலேயே ஆபத்தான ரிஸ்க்குகளும் எடுக்கறீங்களே? வீட்டில் என்ன சொல்கிறார்கள்?

ரொம்ப பயப்படுறாங்க. ஆனால், இதுதான் சரியான நேரம். வித்யாசமான கதைகள், ரிஸ்க் எல்லாம் இப்பதான் எடுக்க முடியும். ஒவ்வொரு இயக்குநர் கூடவும் வேலை செய்யணும்ங்கறதுதானே கனவு... ஒவ்வொண்ணா இப்போதான் நிறைவேறிட்டு இருக்கு. ‘யானை‘ மாதிரியான ஜாலியான கமர்ஷியல் படங்களும் இடையிலே செய்யறேன். ஆனால், அதுவும் ஒரு வகையான பயிற்சி ஸ்கூல்தான். பாலா சார் படம் ஒரு வகையான ஸ்கூல். ஒவ்வொரு படமும் ஒரு பாடம்தான்.     

‘மிஷன் சாப்டர் 1’?

டைரக்டர் விஜய் இயக்கம் பற்றி நான் சொல்லவேண்டியதே இல்லை. என்னவிதமான கதையானாலும் அவர் எமோஷனலுக்குத்தான் முதலிடம் கொடுப்பார். அப்பா - மகள், குட்டிப் பொண்ணு இதெல்லாம் இருந்த காரணம்தான் இந்தக் கதையை விஜய் ஓகே செய்திருப்பார்னு நினைக்கிறேன். ஆக்‌ஷன் இருக்கு. அதைத் தாண்டி நல்ல எமோஷனல் கதையும் இருக்கும். லண்டனில் இருக்கும் ஜெயில் எப்படி இருக்கும்னு பார்த்துப் பார்த்து 4.5 ஏக்கரில் செட் அமைச்சிருக்கோம். நானும் இதுவரையில் இப்படி ஒரு ஆக்‌ஷன் படம் செய்ததில்லை. நிச்சயம் நல்ல தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்.

உங்க அடுத்தடுத்த படங்கள்..?

பாலா சார் இயக்கத்திலே ‘வணங்கான்’ ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு. அறிவழகன் சார் டைரக்‌ஷன்ல ‘பார்டர்’ ரிலீஸுக்கு காத்திருக்கு.

ஷாலினி நியூட்டன்