ஹாலிவுட்டில் விருது வாங்கியவர் இயக்கும் தமிழ்ப்படம்!



‘‘உண்மையா காதலிக்கிறவங்க ஒருவர் நன்மையை ஒருவர் விரும்புவாங்க. அந்தக் காதலில் சுயநலத்துக்கு இடமிருக்காது. காதலன் நல்லாயிருக்கணும்னு காதலியும், காதலி நல்லாயிருக்கணும்னு காதலனும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கிறவங்களாகவும், தியாகம் பண்ணக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். 
அதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும். மற்றவை போலியானவை. அந்த வகையில் காதலின் இன்னொரு பரிமாணத்தை சொல்லும் படம்தான் ‘சத்தமின்றி முத்தம் தா’. படம் பார்த்தா உங்களுக்கே இது புரியும்...’’ என்கிறார் இயக்குநர் ராஜ் தேவ்.  

காதலைச் சொல்ல உங்களுக்கும் த்ரில்லர் களம்தான் கிடைத்ததா?

சினிமா என்பது காட்சி அனுபவம் தரக்கூடிய இடம். அதை மனசுல வெச்சுதான் இப்படியொரு ஜானர்ல கதை பண்ணினேன். டைட்டில் கிளுகிளுப்பா வைக்க காரணம், யூத்  ஆடியன்ஸ்.
தியேட்டருக்கு அதிகம் படை எடுப்பது யூத் ஆடியன்ஸ். அவர்களை டார்கெட் பண்ணிதான் இப்படியொரு டைட்டில் செலக்ட் பண்ணினேன். அதுமட்டுமல்ல, படம் பார்க்கும்போது பொருத்தமான டைட்டில்னு ஆடியன்ஸே சொல்வாங்க.

இளம் வயதில் காதலர்கள் பிரிந்து போகும் சூழ்நிலை உருவாகிறது. ஒரு கட்டத்தில் காதலிக்கு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்திலிருந்து காதலியைக் காப்பாற்றுகிறார் காதலன். அம்னீஷியா பிரச்னையால் காதலிக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போகின்றன. காதலிக்கு நினைவுகள் திரும்பினாலும் மீண்டும் காதலனுடன் சேரமுடியாத சூழ்நிலை. 

விபத்துக்கான பின்னணியை ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை ரொமான்டிக் மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானர்ல சொல்லியிருக்கிறேன். சீட் நுனியில் அமர்ந்து பார்க்குமளவுக்கு த்ரில்லர் காட்சிகள் பிரமாதமா வந்திருக்கு. அது ரசிகர்களுக்கு பெரிய ஆர்வத்தைக் கொடுக்கும்.

காந்த் சாஃப்ட் இமேஜ் உள்ள ஹீரோ... அவரை எப்படி நெகடிவ் ரோலை பண்ண வச்சீங்க?

அந்த நெகடிவ் ஷேட்தான் அவரை கதைக்குள் கொண்டு வந்துச்சு. இதுவரை அவர் நெகடிவ் ஷேட் கேரக்டர் பண்ணலை. கதை எழுதி முடிச்சதும் அவர்தான் என் மைண்ட்ல ஃபிக்ஸ் ஆகியிருந்தார். அப்ரோச் பண்ணி கதை சொன்னேன். பவுண்ட் ஸ்கிரிப்ட்டையும் கேட்டு வாங்கி படிச்சார். கதை மீது அவருக்கு நம்பிக்கை இருந்ததால  உள்ளே வந்தார்.
அவருடைய கெட்டப், லுக் இதுல புதுசா இருக்கும்.

கேரக்டரும் ஃபிரெஷ் ஃபீல் கொடுக்கும். என்னுடைய ஹீரோனு சொல்லவில்லை... டைம் விஷயத்துல கரெக்ட்டா இருப்பார். செட்ல டைரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா முழுசா ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் முகத்துல தினமும் ஆர்வத்தை பார்க்க முடியும். சண்டைக் காட்சியில் ஃபுல் சப்போர்ட் பண்ணினார். உயரமான மாடியிலிருந்து குதிக்கிற மாதிரி ஒரு காட்சி. கயிறு நீளம் குறைவா இருந்ததால் இங்குமங்கும் தொங்கற நிலை ஏற்பட்டு கை, கால் என உடல் முழுசும் பல சிராய்ப்பு ஏற்பட்டுச்சு.

ஆனா, அவர் அதை பெரிசு பண்ணாம கயிறு இல்லாமலேயே குதிச்சார். அந்த ஷாட்டை எடுக்கும்போது யூனிட்ல இருந்த எல்லோரும் விபரீதம் எதுவும் நடக்கக்கூடாது என்ற பதட்டத்துல இருந்தாங்க. 

அவர் சேஃப்னு தெரிஞ்ச பிறகுதான் எல்லோருக்கும் போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருந்துச்சு.ஹீரோயின் ப்ரியங்கா திம்மேஷ் கன்னடத்துல லீடிங் ஸ்டார். ஆரம்பத்துல சில பெரிய ஹீரோயின்ஸ்கிட்ட பேசினோம். கால்ஷீட் சரிப்பட்டு வரல. நாங்களும் உடனே ஷூட் போகணும் என்ற நிலை இருந்துச்சு.

நாங்க எதிர்பார்த்ததைவிட பெர்ஃபார்மன்ஸ்ல கலக்கிட்டார். தமிழ் தெரியும் என்பதால் கேரக்டரை புரிஞ்சு பண்ணினார். கதைப்படி, காதலன் யார், நிகழ்காலத்தில் நடந்தவை என அனைத்தையும் மறந்தவராக இருப்பார். காதலன் யார் என்பது தெரிஞ்சதும் உணர்ச்சிவசப்படணும். அந்த சந்தோஷத்தை கண்ணிலேயே காட்டணும். அதை வெகு சிறப்பா பண்ணினார்.

முரட்டு வில்லனா பார்த்துப் பழகிய ஹரீஷ் பேரடிக்கு இதுல போலீஸ் கேரகடர். அவரும் இதுவரை அப்படியொரு கேரக்டர் பண்ணியதில்லையாம். அதனாலேயே மனுஷன் போலீஸா வாழ்ந்து காட்டினார்.

‘திரௌபதி’, ‘ருத்ரதாண்டவம்’ உட்பட சமீபத்தில் பல ஹிட் கொடுத்த ஜுபின் இசை. ஆண்ட்ரியா ஒரு பாடல் பாடியிருக்கிறார். பாடல் பாடியதும்,  ஹிட்டாகும்னு நம்பிக்கையோடு எடுங்க, பாடல் பேசப்படும்னு விஷ் பண்ணினார். ‘செம்பரம்பாக்கம் ஏரியிலே...’ என்ற அந்தப் பாடல் ஏற்கனவே இணையத்தில் வைரலாகியிருக்கு. 

பாடல்கள் விவேகா. யுவராஜ் கேமரா ஹேண்டில் பண்ணியிருக்கிறார். ‘தீங்கிரை’ படத்துல அவர் ஒர்க் பேசப்பட்டிருக்கும். த்ரில்லர் கதைக்கான லைட்டிங், கேமரா கோணம் என அனைத்தையும் ஸ்கெட்ச் போட்டு ஒர்க் பண்ணினார். தயாரிப்பு ‘செலிபிரைட் புரொடக்‌ஷன்ஸ்’ கார்த்திகேயன்.

சினிமா நண்பர்கள் பலர், படத்துல எத்தனை முத்தக் காட்சிகள்னு ஆர்வத்தோடு கேட்கிறாங்க. காமம் மூன்றெழுத்து. காதல் மூன்றெழுத்து. காதலுக்கும் காமத்துக்கும் என்ன வித்தியாசம் என்றால் காமத்தால் வரும் காதல் தப்பு, காதலால் வரும் காமம் இயற்கையானது. அப்படி இயற்கையா வர்ற காதல்தான் சரினு சொல்லியிருக்கிறேன். மத்தபடி சென்சார் கட் கொடுக்காதளவுக்குதான் காட்சிகள் இருக்கும். சென்சார் டீமும் படம் பார்த்துட்டு நீட் ஃபிலிம்னு பாராட்டினாங்க.

நீங்க ஹாலிவுட்ல அவார்ட் வாங்கினவர்னு சொல்றாங்க..?

எனக்கு சொந்த ஊர் திருச்சி. அரசு வேலைக்காக சென்னை வந்தேன். ஒரு ரசிகனா சினிமா பார்க்க பிடிக்கும். அதிலும் ஹாலிவுட் படங்களைத்தான் அதிகமா பார்ப்பேன். தமிழில் மணிரத்னம், கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் பிடிக்கும். படம் பார்ப்பதோடு என் வேலையை நிறுத்திக்காம சொந்தமா கதையும் எழுத ஆரம்பிச்சேன்.

சினிமாவுல முழுசா ஈடுபடலாம்னு விருப்ப ஓய்வு கொடுத்துட்டேன். ஷூட்டிங் போய் நான் சினிமாவை கத்துக்கல. நிறைய டிஸ்கஷன்ல கலந்துக்குவேன். இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா, ஷாஜி கைலாஷ், மோகன் பாபு ஆகியோருடன் பலமுறை டிஸ்கஷன்ல இருந்திருக்கிறேன்.  

சென்னை சிவன் பூங்காதான் என்னுடைய போதி மரம். நடைப்பயிற்சி முடிஞ்சதும் அங்கேயே உட்கார்ந்து மனசுல தோன்ற விஷயங்களை சிறுகதைகளாக எழுத ஆரம்பிச்சுடுவேன். அப்படி நான் எழுதிய சிறுகதைகள் பல இதழ்களில் பிரசுரமாகியிருக்கு. குறும்படங்கள் மூலமாகவும் சினிமா கொஞ்சம் கொஞ்சமா பழக்கமாச்சு. ‘Dooms day’ என்ற குறும்படத்துக்கு பத்து விருதுகள் கிடைச்சது.

அமெரிக்காவில் நடைபெற்ற திரைக்கதைப் போட்டியில் அனைத்து நாடுகளும் கலந்துகொண்ட நிலையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எழுதிய ‘KISS DEATH’, ‘A STRANGER IS WALKING BY’ என்ற இரண்டு கதைகள் பரிசு வாங்கியிருக்கு. அத்துடன், அமெரிக்காவில் உள்ள இதழ்களில் அச்சிடப்பட்டு வெளியாகியிருக்கு. கிண்டில் பக்கம் போனீங்கனா என்னுடைய படைப்பை படிக்கலாம்.

எஸ்.ராஜா