அழகரைப் பாடுவோர்!





கள்ளழகர் வைகையாற்றில் கால் பதிக்கும் சித்திரைத் திருவிழாவை அறிந்த அளவுக்கு, அழகரைப் பாடுவோர் பற்றி யாரும் அறிந்ததில்லை. திருவிழா முடிந்து மலைக்கு அழகர் திரும்பும் வரை அவருடனேயே நடையிடுகிறார்கள் இந்த வர்ணிப்பாளர்கள். எந்த இசைக்கருவிகளும் இன்றி, கதைப் பாடல்களால் கள்ளழகரைப் பாடியபடி இவர்கள் உடன் வரும் அழகு அலாதியானது.

மதுரை விழாக்களில் மகத்தானது சித்திரைப் பெருவிழா. மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிய பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் என ஒருபுறம் நகரம் மூச்சு முட்டும். மறுபுறம் அழகர்கோவில் துவங்கி 395 மண்டகப்படிகளில் அடுத்தடுத்து தங்கி, மதுரை நகரத்து வைகையாற்றில் இறங்கி, தங்கி இருப்பிடம் திரும்பும் வரை கள்ளழகர் பவனியால் ஒட்டுமொத்த மாவட்டமும் குதூகலத்தில் குளிக்கும். சைவத்துடன் வைணவத்தை ஐக்கியப்படுத்தும் இந்நிகழ்வைக் காண பத்து லட்சம் மக்கள் குவிய, மதுரையே கொண்டாட்ட கோலாகலத்தில் குளித்தெழுகிறது.
சித்திரைத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும், மதுரையின் கிராமங்களுக்குப் பயணிக்கிறார்கள் அழகரைப் பாடுவோர். முக்கிய சந்திப்புகளில் கள்ளழகர், அழகர்மலை புகழ் பாடல்களோடு ராமாயணம், மகாபாரதம், புட்டு உற்சவம், குண்டுமலை சிறப்பென பல்வேறு பழமைக் கதைப் பாடல்களை இவர்கள் நள்ளிரவு வரை பாடி கலகலக்க வைக்கின்றனர்.

ஒரு காலத்தில் இப்படி நூற்றுக்கணக்கானோர் இருந்தார்கள். இன்று இவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவர்கள் இணைந்து ‘வர்ணிப்பாளர் மகாசபை’ என்ற அமைப்பைத் துவக்கியுள்ளனர். அனைத்து சமூகத்தவரும் இதில் இருக்கிறார்கள்.

‘‘பழமையான ஓலைச்சுவடிகளில் இருந்த அத்தனை வர்ணிப்புகளையும் தொகுத்து, இன்றைக்கும் அழகர் புகழ்மாலைகளாக அவருடைய பயணத்தில் பாடி வருகிறோம். மற்ற காலங்களில் ஒவ்வொரு ஊர் பஜனைகளிலும் பாடுகிறோம். மதுரை வந்து திரும்பி மலையை அடையும் அழகரை தரிசிக்க அழகர்கோவிலில் இரு நாட்களுக்கு பெரும் பக்தர்கள் கூட்டமிருக்கும். இவர்களுக்கு பழங்காலத்தில் மதுரையை ஆண்ட மலையத்துவ மன்னன் அன்னதானம் வழங்கி இருக்கிறார். இப்பழக்கம் இடையில் கைவிட்டுப் போய் விட்டது. மதுரை வர்ணிப்பாளர் ஆறுமுகம் கனவில் தோன்றிய மன்னன், இந்த அன்னதானத்தை தொடரும்படி கட்டளையிட்டதால் 1965 முதல் 5 வேளை அன்னதானம் செய்து வருகிறோம். இதற்காக அழகர்கோவிலில் மண்டபம் கட்டி வைத்துள்ளோம்’’ என்கின்றனர் இதன் நிர்வாகிகள் பெரியசாமி, சிவராமகிருஷ்ணன்.

ஆயிரக்கணக்கான கதைப்பாடல்கள் ஓலைச்சுவடிகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் சிதறிக் கிடக்கின்றன. இவற்றை புத்தகமாக்கும் முயற்சியில் இருக்கும் இந்த அமைப்பினர், இளைய தலைமுறையினருக்கு ராகத்தோடு பழம்பாடல்கள் பாடும் பயிற்சிகளும் கொடுக்கிறார்கள். அழகரைப் பாடுவோருக்கு பஞ்சம் வந்துவிடக் கூடாதே!
- செ.அபுதாகிர்
படங்கள்: பொ.பாலமுத்து
கிருஷ்ணன்

நெற்றியில் பாதம்!
அழகர் திருவிழா துவங்கியதன் அடையாளம், மதுரை மாவட்ட கிராமங்களில் பக்தர்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளும் ‘அழகர் பாதம்’ நாமம். முகூர்த்தக்கால் நட்டு விழா துவங்கியதுமே, விரதமிருந்து இந்த நாமம் இட்டுக் கொள்கிறார்கள். வழக்கத்திலிருந்து வித்தியாசமாக, கடவுளின் இரு பாதங்களுமே நாமமாகி சிலிர்க்க வைக்கிறது.  
 ‘‘குச்சி வைத்து இதை வரைந்து கொள்கிறோம். அழகரின் மகாலட்சுமி தாயாரை நினைவுறுத்தும் விதத்தில் நடுவில் திரிசூரணம் இடுகிறோம். அழகர் திருவிழா துவங்கியது முதல், கள்ளழகர் மதுரை வந்து மலைக்குத் திரும்புவது வரை 20 நாட்கள் மட்டும்தான் இந்த நாமம். அழகர்மலை தீர்த்தத்தில் குளித்து, துளசி மாலையிட்டு விரதம் துவக்கினால், மலைக்கு அழகர் திரும்பும் வரை கடும் விரதம் இருப்போம். காலில் செருப்பு போடுவதில்லை. தலையணை, துண்டு இன்றி வெறும் தரையில்தான் தூக்கம். மதியம் ஒருவேளை உணவுடன், இரவில் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு பழம் உண்ணலாம். இந்த நாமம் இல்லாததைக் கண்டு, அழகர் திருவிழா நிறைவடைந்ததை மக்கள் தெரிந்து கொள்வார்கள்’’ என்கிறார் சிவராமகிருஷ்ணன்.