ரொமான்ஸ்... காமெடி... க்ரைம்...



இது விஜய் சேதுபதியின் அதிரடி ஏஸ் கேம்

இந்திய அளவில் ஒரு பான் இந்தியா ப்ராஜெக்ட் எனில் பாலிவுட் உட்பட பரிசீலிக்கும் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதி.பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உட்பட விஜய் சேதுபதி படம் என்றால் கேள்வியே இல்லாமல் டிக் செய்கிறார்கள். 

அந்த அளவிற்கு வான்டட் ஆக இருக்கும் நடிகர்... அவர் நடித்தாலே நிச்சயம் அந்தப் படத்தில் ஏதோ ஒன்று இருக்கு... என்கிற ஆர்வமும் எதிர்பார்ப்பும் இந்திய அளவில் உருவாகிவிட்ட நிலையில் தற்போது தமிழில் ‘ஏஸ்’ திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தத் தயாராகி இருக்கிறார் விஜய் சேதுபதி.

அவருடன் ‘லாபம்’ படத்தின் தயாரிப்பு, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, மற்றும் ‘ஏஸ்’ என இரண்டு படங்களில் இயக்கம் மற்றும் தயாரிப்பு என தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பி.ஆறுமுககுமார். ‘‘எனக்கும் விஜய் சேதுபதிக்குமான நட்பு சினிமாவைத் தாண்டி ஆழமானது. பல வருஷமா என்னுடைய வளர்ச்சியை அவரும் அவர் வளர்ச்சியை நானும் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர்கள்...’’ நெகிழ்ச்சியும் இனிமையான நினைவுகளும் மனதில் ஓட ஆரம்பித்தார் இயக்குநர் ஆறுமுககுமார்.

‘ஏஸ்’ என்னும் தலைப்பு எதனால்?

கதைக்கு இந்தத் தலைப்பு ரொம்பப் பொருத்தமா இருந்துச்சு. மேலும் இப்போது தமிழில் மட்டும் மார்க்கெட் கிடையாது. எந்த படம் எடுத்தாலும் பன்மொழி படமாதான் எடுக்கறோம். அதற்கும் இந்தத் தலைப்பு பொதுவான தலைப்பாகவும் இருந்ததால் ‘ஏஸ்’  என்கிற தலைப்பு வச்சிருந்தோம்.  

கதை உருவானதிலிருந்தே இந்தத் தலைப்புதான் இறுதியான தலைப்பா இருந்துச்சு. விஜய் சேதுபதியைப் பொருத்தவரை இந்திய நடிகராக மாறிட்டார். அவருடைய படங்களுக்கு இந்தியா முழுக்கவே எதிர்பார்ப்புகள் இருக்கு. எனில் அதற்கேற்ற தலைப்பாகவும் இருக்கணும் இல்லையா... அதனால்தான் ‘ஏஸ்’.

என்ன கதைக்களம்..?

ரொமான்ஸ், காமெடி, க்ரைம்... இது மூன்றும் சேர்ந்ததுதான் இந்த ‘ஏஸ்’. படத்தின் முழுக் கதையும் மலேசியாவிலேயே ஆரம்பித்து அங்கேயே முடியும்படியான ஒரு திரைக்கதை. அதனால் படம் முழுக்கவே ஒரு ஸ்டைலிஷ் பார்க்கலாம். 

தனக்கு நடந்த ஒரு கசப்பான சம்பவம்... அதிலிருந்து வெளியே வர்றதுக்காக தன்னுடைய அடையாளத்தை முழுக்க மறைச்சிட்டு தன்னுடைய சூழலையே மாத்திக்க வேண்டி மலேசியாவிற்கு செல்கிற ஒரு இளைஞன்... அங்கே சுமுகமான வாழ்க்கை தேவைப்படும் பொழுது நட்பு, காதல் அத்தனையும் சாத்தியப்படுது.

எல்லாம் சரியாகப் போகுது என நினைக்கும் நிலையில் மீண்டும் ஒரு பிரச்னை தேடி வருது. அது என்ன பிரச்னை... அந்தப் பிரச்னை கதையின் நாயகனை என்ன செய்யுதுங்கறதுதான் கதைக்களம். மேலும் அவர் யார் என்கிறதுக்கான பதிலும் சேர்ந்ததுதான் ‘ஏஸ்’.

விஜய் சேதுபதியுடன் பணிபுரிந்த அனுபவம் மற்றும் அவருடைய கேரக்டர் பற்றி சொல்லுங்க..?

2008லிருந்து விஜய் சேதுபதியைத் தெரியும். எங்க நட்பு சினிமாவைக் கடந்து ஆழமானது. அப்போது நான் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆகவும் அவர் கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்தார். அப்போதிருந்து எங்க நட்பு தொடருது. ஒரு தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் நான் விரும்பும் நடிகர் அவர். ‘ஏஸ்’ஸில் விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயர் ‘போல்ட் கண்ணன்’. இந்த ‘போல்ட்’ என்கிற பட்டத்திற்கு கதை முழுக்க நிறைய காரணம் சொல்லிக்கிட்டே இருப்பார். ஓரிடத்தில் நட்டு, போல்ட்டு என்கிற காரணம் சொல்வார்; இன்னொரு இடத்தில் தைரியமான போல்ட் கேரக்டர்; இன்னும் ஓர் இடத்தில் மின்னலைக் குறிக்கிற போல்ட் அதையும் சொல்வார்.

கதைப்படி ஒரு சமையல்காரர் ஆகத்தான் அறிமுகமாவார். ஆனால், கதை போகிற போக்கில் அவருடைய கேரக்டரில் நிறைய மாற்றங்கள் இருக்கும். விஜய் சேதுபதியைப் பொருத்தவரை கேரக்டர் இதுதான் என சொன்னாலே போதும்... எந்த கேரக்டராக இருந்தாலும் அப்படியே அடாப்ட் செய்துக்குவார். 

நாம யோசிக்கிறதுக்கும் அவர் யோசிக்கிறதுக்கும் இன்னும் ஸ்பெஷலா அந்த கேரக்டருக்கு ஒரு சிறப்பு சேர்க்கற விதமா இருக்கும். அவர் யோசிக்கிறதே நாம் சொல்கிற கேரக்டராக மாறித்தான் யோசிக்கவே ஆரம்பிப்பார். பல வருடங்களா அவரைப் பார்க்கறேன். அப்போது இருந்தே அவருடைய டெடிகேஷன் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கேன். இந்தக் கதை எழுதும் பொழுது நிச்சயம் இது விஜய் சேதுபதிக்காகத்தான் அப்படின்னு முடிவு செய்துட்டுதான் எழுத ஆரம்பித்தேன்.

ரொம்பவே பிசியான ஒரு நடிகர்... இந்தியாவில் வாண்டட் லிஸ்டில் இருக்கிறார். ஆனால், அந்த அழுத்தத்தையோ அல்லது தனக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு என்கிற சூழலையோ நமக்குக் கொடுக்க மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட ரொம்ப கூலா, ஜாலியாதான் நான் பார்த்திருக்கேன்.

ருக்மிணி வசந்த் இந்தக் கதைக்குள் வந்தது எப்படி..?

ஒரு பக்கம் விஜய் சேதுபதி... இன்னொரு பக்கம் யோகி பாபு... என் கையில் படத்தின் பெண் கேரக்டர் இன்னும் வலிமையாகவும், கேரக்டரை புரிந்து நடிக்கக்கூடிய நடிகையாகவும் இருக்கணும். அந்தத் திறமை ருக்மிணி கிட்ட இருந்துச்சு. ருக்மிணியின் ஸ்க்ரீன் ப்ரசென்சும் ரொம்ப நல்லா இருந்துச்சு. அதேபோல நிறைய கேள்வி கேட்பாங்க. இயக்குநர் சொல்லிட்டார்... கண்மூடித்தனமாக நடிப்போம் என்கிற பேச்சுக்கெல்லாம் இடமே கிடையாது.

கேரக்டரை உள்வாங்கி கேட்டுப் புரிந்து சந்தேகம் இருந்தால் கூட அதையும் கேட்டுட்டுதான் நடிக்க ஆரம்பிப்பாங்க. இந்தக் கதை முழுக்க முழுக்க மூவரைச் சுற்றிதான் நடக்கும். அதில் இன்னொருவர் யோகி பாபு. காமெடி ஒரு பக்கம் மேலும் கதையிலும் நிறைய பயன்பட்டிருக்கார். இவர்கள் இல்லாமல் பப்லு பிருதிவிராஜ், கேஜிஎப் அவினாஷ், திவ்யா பிள்ளை இவங்க மூவரும் கவனம் பெறுவாங்க. பிரித்திவிராஜ் கிட்ட ஒரு வித்தியாசமான வில்லன் கேரக்டர் வாங்க முடியும். பழைய படங்களில் கூட நிறைய வில்லன் கேரக்டர் செய்திருப்பார். அப்படியான ஒரு வில்லனா மறுபடியும் காட்டணும்னு நினைச்சேன். அது இந்தப் படத்தில் சிறப்பா வந்திருக்கு.

எப்படி விஜய் சேதுபதி இந்திய நடிகரோ அதேபோல் ஜஸ்டின் பிரபாகரன் இந்திய இசையமைப்பாளராக நிறைய ஹிட் கொடுத்துக்கிட்டு இருக்கார். அவரும் தற்சமயம் பிசியான ஓர் இசையமைப்பாளர். என்னுடைய ஃபேவரிட். மொத்தம் அஞ்சு பாடல்கள். இந்தப் படத்துக்கு அவருடைய பாடல்கள் ரொம்ப பலமா இருக்கும். 

பேக்ரவுண்ட் ஸ்கோர் கூட நல்லா வந்திருக்கு.ஆமிர்கானின் ‘கஜினி’, சல்மான் கானின் ‘அந்திம்: த பைனல் ட்ரூத்’ உள்ளிட்ட பல இந்திப் படங்களில் வேலை செய்த கரண் பி.ராவத் இந்தப் படத்துக்குசினிமாட்டோகிராபி.‘96’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’, ‘துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட படங்களில் வேலை செய்த கோவிந்தராஜ், இந்தப் படத்துக்கு எடிட்டிங்.

மலேசியாவின் சினிமா கவுன்சிலில் நீங்கள் உறுப்பினராக இருந்தீர்களே..?

முன்பு இருந்தேன். கொரோனா காலத்தில் பெரிதாக என்னால் செயல்பட இயலாமல் போனதால் அந்த உறுப்பினர் அவகாசம் முடிஞ்சிடுச்சு. ஆட்சி மாற்றமும் நடந்ததால் மீண்டும் உறுப்பினர் ஆவதற்கு அல்லது திரும்பவும் நடைமுறைப்படுத்தவும் சூழல் இன்னமும் அமையலை. இந்தக் கதையைப் பொருத்தவரை இடம் விட்டு இடம் பெயர்ந்து ஒரு வாழ்வியலை அமைத்த தமிழர்கள் அப்படின்னு கணக்கெடுத்தால் அதில் மலேசியா, சிங்கப்பூர், மற்றும் இலங்கை இந்த மூன்று நாடுகளும் வரும்.

பூர்வ குடிகளா தன்னுடைய வாழ்வியலை இன்னொரு நாட்டில் உருவாக்கின தமிழர்கள் இங்கேதான் இருப்பாங்க. மற்ற நாடுகளில் வேலைக்காக போய் செட்டில் ஆனவர்களாகத்தான் இருப்பார்கள். அதனால் இந்தியாவில் இருந்து செல்லும் ஒரு தமிழர் அப்படின்னு படம் எடுக்கும் பொழுது இந்த மூன்று நாடுகளும் கச்சிதமா பொருந்தும். அதனால்தான் இந்தக் கதைக்கு மலேசியா பின்னணி தேவைப்பட்டது.

‘ஏஸ்’ எப்படிப்பட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும்?

என்னைப் பொருத்தவரை ஒரு சினிமா கலைஞனாக பார்வையாளனுக்கு பொழுதுபோக்குதான் பிரதானம். அதைத்தான் முதன்மையா வச்சு கதை செய்வேன். படம் பார்க்கும் பார்வையாளனுக்கு என்ன கஷ்டம் இருந்தாலும் அதை மறந்து சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து, கதையின் உணர்வுடன் கனெக்ட் ஆகி கொஞ்ச நேரம் தன்னுடைய கஷ்டங்களை மறக்கணும்... அதற்கு இந்தப் படம் கேரண்டி.

படத்துல மெசேஜ் இருக்கு. ஆனாலும் அதை அறிவுரையாகவோ பிரசாரமாகவோ மக்கள் கிட்ட சேர்க்கணும்னு நான் மெனக்கெடவே இல்லை. கதைகள் எழுதறதை என்னைக்கும் நிறுத்த மாட்டேன். ஆனால், இந்தப் பட வெளியீட்டுக்குப் பிறகுதான் அடுத்த படத்தின் திட்டம் எல்லாம் யோசிப்பேன்.

ஷாலினி நியூட்டன்