அசத்திய இந்திய அணி!



வெற்றி... வெற்றியோ வெற்றி... இறுதிப்போட்டியில் வெற்றி. ஒன்றோ... இரண்டோ அல்ல. 17 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள மகத்தான வெற்றி. கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த ஐசிசியின் ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பையை அற்புதமாக வென்று மகுடம் சூட்டியுள்ளது இந்திய அணி.
கேப்டன் ரோகித் சர்மா தொடங்கி பாண்ட்யா, விராட் கோலி என அத்தனை வீரர்களின் கண்களிலும் உற்சாகத்துடன் கூடிய ஆனந்தக் கண்ணீர். ஏனெனில், கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த ஐசிசியின் ஆண்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் அசத்தலாக நுழைந்தது இந்திய அணி.

அப்போது பலம் வாய்ந்த இந்திய அணியே கோப்பையை வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஆஸ்திரேலியா அணியிடம் இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை பறிகொடுத்தனர்.
அது இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை வேறு. எப்போதும் இந்திய மண்ணில் அசைக்க முடியாத ஜாம்பவானாக வலம் வரும் இந்திய அணி. அப்படியொரு அணி இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், அப்போது இந்திய அணி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியது.

அதேபோல்தான் இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் எந்த அணியிடமும் தோற்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. அது பெரிய செய்தியானது.
ஆனால், இந்தமுறை கோப்பை கிட்டுமா... எனப் பல்வேறு மனஊடாட்டங்கள் அனைவரிடமும் காணப்பட்டது. அதுமட்டுமல்ல. 

டி20 உலகக் கோப்பையின் இந்திய அணி தேர்விலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. நான்கு ஸ்பின்னர்கள் எதற்கு என்றும், சுப்மன் கில், ரிங்கு சிங் உள்ளிட்ட சிறந்த வீரர்களை அணியில் எடுக்காமல்விட்டது தவறு என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அப்போது ரோகித் சர்மா தனக்கு நான்கு ஸ்பின்னர்கள் தேவை என்றும், அதற்கான காரணங்கள் பின்னர் உங்களுக்கே புரியும் என்றும் பதிலளித்தார். இது சிறந்த அணிதான் என்றும் தெரிவித்தார். இந்நிலையில்தான் அமெரிக்கா சென்றது இந்திய அணி. இன்று அந்த விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி கோப்பை வென்று காட்டியுள்ளது கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

கடந்த 2007ம் ஆண்டிலிருந்து ஐசிசியின் ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றன. அப்போது இதன்பெயர் ICC World Twenty20 என்றிருந்தது.இதன் முதல் சீசனை நடத்தியதே தென் ஆப்பிரிக்காதான். ஆனால், இப்போது வரை அந்த அணியினரின் கோப்பை கனவு கானல்நீராகவே இருந்து வருகிறது.
டி20 உலகக் கோப்பையும், இரு அணிகளும்...   

2007ல் தோனி தலைமையிலான இந்திய அணி முதல் டி20 உலகக் கோப்பையை முதல்முறையாக வென்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி சூப்பர் 8 சுற்றில் ரன்ரேட் அடிப்படையில் வெளியேறியது. 

இதில் தென் ஆப்பிரிக்கா விளையாடிய மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டும் தோற்றது. அது இந்தியாவுடனான போட்டிதான்.அப்போது ரோகித் சர்மா 50 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். அந்தப் போட்டியின் சிறந்த வீரர் விருதும் பெற்றார். நிறைவில் பாகிஸ்தானுடனான இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை வசப்படுத்தியது இந்திய அணி.

அடுத்து 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த இரண்டாவது டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றின் அனைத்து ஆட்டங்களிலும் தோற்று வெளியேறியது இந்திய அணி.
தென் ஆப்பிரிக்கா அணியோ அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால், அரையிறுதியில் பாகிஸ்தானுடன் தோற்று பரிதாபமாக வெளியேறியது. இந்த இரண்டாவது சீசனில் பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியது.

தொடர்ந்து 2010ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடந்தது மூன்றாவது டி20 உலகக் கோப்பை. இதில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் சூப்பர் 8 சுற்றில் கடைசி இடங்களைப் பிடித்து உலகக் கோப்பையிலிருந்தே வெளியேறின.இந்த மூன்றாவது சீசனில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையைக் கைப்பற்றியது. இதற்கு காரணமாக இருந்தவர் அந்த அணியின் விக்கெட் கீப்பரும், ஓபனிங் பேட்ஸ்மேனுமான கிரேய்க் கீஸ்வெட்டர்.

இவரே இறுதிப்போட்டியில் சிறந்த வீரருக்கான விருதினையும் வென்றார். ஆனால், இவரின் பூர்வீகம் தென் ஆப்பிரிக்கா. அங்கே வாய்ப்பு கிடைக்காததால் இங்கிலாந்து நோக்கி நகர்ந்து இங்கிலாந்து அணிக்காகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார்.இதன்பிறகு 2012ல் நான்காவது சீசன் லங்காவில் நடந்தது. இதில் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஒரே பிரிவில் இருந்தன. அப்போது இரு அணிகளுமே அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறின.

இந்த உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் ஸ்ரீலங்காவும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை முத்தமிட்டது.

தொடர்ந்து 2014ல் டி20 உலகக் கோப்பையின் ஐந்தாவது சீசன் பங்களாதேஷில் நடந்தது. இதில் ஒரு அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், இந்தியாவுமே மோதின.
அப்போது விராட் கோலி 72 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த வழிவகுத்தார். இதனால், அப்போதும் தென் ஆப்பிரிக்காவின் இறுதிப் போட்டிக் கனவு தகர்ந்துபோனது.

அந்தமுறை இறுதிப் போட்டிக்குள் நுைழந்த இந்திய அணி, ஸ்ரீலங்காவிடம் ேதாற்றது. லங்கா அணி முதல்முறையாக டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.
பின்னர் 2016, ஆறாவது டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. இதில் சூப்பர் 10ல் இந்திய அணி முதலிரண்டு இடங்களுக்குள் வந்து அரையிறுதியை எட்டியது. தென் ஆப்பிரிக்க அணியோ அந்த குரூப்பில் மூன்றாவது இடம் பெற்று வெளியேறியது.

இதில் அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் தோற்றது இந்திய அணி. இதனால், இறுதிப்போட்டி கனவு இந்திய அணிக்கு கலைந்தது. அதில் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது.இதனையடுத்து 2018ல் நடக்க வேண்டிய ஏழாவது சீசன் சற்று தள்ளிப்போனது. இதனால் 2020ல் நடத்தலாம் என்றிருந்த நிலையில் கோவிட் தொற்று இன்னும் ஓராண்டு தாமதமாக்கியது.

இந்நிலையில் 2021ல் ஏழாவது டி20 உலகக் கோப்பையை ஓமனும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இணைந்து நடத்தின. இதிலிருந்துதான் ICC World Twenty20 என்கிற பெயர் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை என மாற்றப்பட்டது.இதில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் சூப்பர் 12 சுற்றுடனே வெளியேறின. இந்த உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பையை முதல்முறையாக வென்றது.

பின்னர் எட்டாவது டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா நடத்தியது. இதிலும் குரூப் போட்டிகள் மூலம் நான்கு அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறின.சூப்பர் 12ன் குரூப் 2ல் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இடம்பிடித்தன. 

இதில் இந்தியா ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கில் வென்றது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோற்றது. அது தென் ஆப்பிரிக்காவுடனான போட்டி.இருந்தும் குரூப் 2ல் முதலிடம் பிடித்தது இந்திய அணி. தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தான் அணியுடனும், நெதர்லாந்து உடனும் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இருந்தும் ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெறும் தருணத்தில் மழை குறுக்கிட அரையிறுதி வாய்ப்பு கைநழுவிப் போனது.

இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் தோற்றது. பின்னர் நடந்த இறுதிப்போட்டியில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும் மோதின. இதில் இங்கிலாந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.இந்நிலையில் ஒன்பதாவது டி20 உலகக் கோப்பையை அமெரிக்காவும், மேற்கிந்திய தீவுகளும் இணைந்து நடத்தின. இதில் 20 அணிகள் கலந்துகொண்டன.

இந்திய அணி குரூப் போட்டிகள், சூப்பர் 8, அரையிறுதி என எல்லாவற்றிலும் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவும் அனைத்து போட்டிகளிலும் வாகை சூடியது. இரண்டு அணிகளும் எந்த ஒரு அணியுடனும் தோற்கவில்லை. இது மாபெரும் வரலாற்று சாதனை.

இந்நிலையில்தான் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது இந்தியா. ஒருகட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் கிளாசன் வெற்றியை தங்கள் பக்கம் வசப்படுத்த வைத்தார். ஆனால், பாண்ட்யாவின் பந்தில் அவர் ஆட்டமிழக்க, போட்டி இந்தியாவிடம் திரும்பியது. இதனுடன் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் எல்லைக் கோடு அருகே அற்புதமாக பிடித்தது இன்னொரு மேஜிக் தருணம்.நிறைவில் 2024ம் ஆண்டின் டி20 உலகக் கோப்பையை வென்று, கனவை மெய்ப்படுத்தியது இந்திய அணி!l

தொடரும் தென் ஆப்பிரிக்கா அரையிறுதி சோகம்...

நிறவெறி பிரச்னைக்குப் பிறகு 1991ல்தான் மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணி கிரிக்கெட் உலகிற்குள் வந்தது. 1992ல் நடந்த ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின் அரையிறுதியில் மழை குறுக்கிட இறுதிப்போட்டிக் கனவு கலைந்துபோனது.1999ல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் போட்டி சமமாக, நெட் ரன்ரேட் படி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அப்போதும் கண்ணீருடன் விடைபெற்றது தென் ஆப்பிரிக்கா அணி.

2007ல் ஆஸ்திரேலியாவுடனும், 2015ல் நியூசிலாந்துடனும், 2023ம் ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலியாவுடனும் அரையிறுதியில் தோற்றது  இந்தமுறைதான் அந்த அணிக்கு ஐசிசியின் டி20 இறுதிப்போட்டி கைகூடியது. அதுவும் இந்திய அணியினரின் அட்டகாசமான ஆட்டத்தால் கலைந்துபோனது.

இந்திய அணியின் வெற்றி

இந்த உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கோப்பையுடன் 20.42 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. சிறந்த வீரர் விருதினை விராட் கோலியும், தொடரின் சிறந்த வீரர் விருதினை பும்ராவும் பெற்றனர். 1983, 2011 என இரண்டு முறை ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி. 2002, 2013 என இரண்டு முறை ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி தன்வசப்படுத்தியுள்ளது.

இப்போது 2007, 2024 என இரண்டு முறை ஐசிசியின் டி20 உலகக் கோப்பையையும் வென்றுள்ளது.  இந்த டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ரவீந்திரா ஜடேஜாவும் அறிவித்துள்ளனர். இதனுடன் ராகுல் டிராவிட்டும் இந்திய அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து விடைபெற்றுள்ளார்.

பேராச்சி கண்ணன்