தாயின் திருமண புடவையை கட்டியபடி மகள் காதல் திருமணம்!
பாலிவுட்டில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம்வரும் சோனாக்ஷி சின்ஹாவுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. சல்மான் கானுக்கு ஜோடியாக 2010ம் ஆண்டு வெளியான ‘தபாங்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரம்மாண்டமாக அறிமுகமானார் சோனாக்ஷி சின்ஹா.  ‘தபாங்’ வெற்றியைத் தொடர்ந்து அதன் மற்ற இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார் சோனாக்ஷி சின்ஹா. தொடர்ந்து ‘ரௌடி ரத்தோர்’, ‘பாஸ்’, ‘ஆர்... ராஜ்குமார்’, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை தோபரா’ உள்ளிட்ட பல படங்களில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் நடித்து முக்கியத்துவம் வாய்ந்த இடம் பிடித்தார். 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த சஞ்சய் லீலா பன்சாலியின் ‘ஹீராமண்டி’ வெப்சீரீஸிலும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பிரபுதேவா இயக்கத்தில் ஷாகித் கபூருடன் இவர் நடித்த ‘ஆர்... ராஜ்குமார்’ படத்தின் ‘சாரீ கி ஃபால் சா...’ பாடல் பாலிவுட் கடந்து தென்னிந்தியாவிலும் ஹிட்டானதில் இந்தியா முழுக்க பிரபலமானார் சோனக்ஷி சின்ஹா.
நடிகர் மற்றும் முன்னாள் லோக் சபா எம்பி-யான சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் தமிழில் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தில் அப்பா ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார்.
அப்படிப்பட்ட சோனாக்ஷி சின்ஹாவுக்கு கடந்த 23ம் தேதி தனது காதலர் ஜாகீர் இக்பாலுடன் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் 2022ம் ஆண்டு வெளியான ‘டபுள் எக்ஸ்எல்’ திரைப்படத்தில் சேர்ந்து நடித்தபோது காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்பிருந்தே - அதாவது 2020ம் ஆண்டுக்கு முன்பிருந்தே - இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. படவிழாக்கள், பொது நிகழ்வுகள் என பல இடங்களில் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத்திருமணம் பாலிவுட் சினிமா உலகம் முழுவதும் கலந்துகொள்ள மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. தனது மனைவி சோனாக்ஷி சின்ஹாவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ஐ7 எலக்ட்ரிக் செடான் காரை இக்பால் பரிசாக அளித்துள்ளார்.
புதுமணத் தம்பதிகள் ஆடம்பரமான பிஎம்டபிள்யூ காரில் தங்களுடைய வரவேற்பு இரவுக்காக மும்பையின் லிங்க்கிங் சாலையில் உள்ள பாஸ்டியன் உணவகத்திற்கு வந்த நிகழ்வு இணையம் முழுக்க டிரெண்டிங்கில் உள்ளது. இந்தத் திருமணம் பாலிவுட்டின் முக்கியப் பிரபலங்கள் ஒன்றிணைய பெரும் பொருட் செலவுகள் ஏதுமின்றி மிக எளிமையாக நடந்து முடிந்திருப்பது ஆச்சர்யம்தான். சினிமாவில் தொடர்ந்து நடிக்கவிருப்பதாகவும், மேலும் நிறைய புதுப் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் சோனாக்ஷி சின்ஹா தெரிவித்திருக்கிறார்.
இவர்கள் திருமணமான ஜூன் 23ம் தேதிதான் இவர்களின் காதலையும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தெரிவித்துக் கொண்டார்களாம். எனவே, அதே நாளில் சட்டபூர்வமாக இணைந்த காதல் ஜோடி விரைவில் பிரம்மாண்டமான வரவேற்பு விழா வைக்கவிருக்கிறார்கள். பாலிவுட் உலகம் மட்டுமின்றி இந்திய சினிமா உலகைச் சேர்ந்த பலரும் அதில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.
இந்திய சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த், மம்மூட்டி, சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட அனைவருக்கும் தொழில் நிமித்தமாகவும் சத்ருஹன் சின்ஹா நல்ல நண்பர் என்பதால் சோனாக்ஷியின் வரவேற்பில் பல பிரபல முகங்கள் கலந்து கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. வெண்ணிறம் மற்றும் தங்க நிறம் கலந்த கை எம்பிராய்டரி புடவையில் ஜொலித்தார் சோனாக்ஷி சின்ஹா. அந்தப் புடவை 44 வருடங்களுக்கு முன்பு அவரது அம்மா பூனம் சின்ஹா தனது திருமணத்தில் உடுத்தியிருந்த புடவையாம். அம்மாவின் மீது அதீத அன்பு கொண்ட சோனாக்ஷி அவரின் புடவையையே தனது திருமண உடையாகவும் தேர்வு செய்திருக்கிறார். மேலும் நகைகளும் தன் அம்மாவின் நகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இரவு விருந்தில் சிவப்பு நிற கிளாசிக் ஸ்டைல் பட்டுச் சேலை, கழுத்தை ஒட்டிய ஒரு பீட்ஸ் நெக்லெஸ் மற்றும் கைகளில் வளையல்கள், பெரிய பொட்டு, கழுத்து, முதுகு என முழுவதும் மூடிய 70 - 80களின் ஸ்டல் பிளவுஸ், கொண்டை, அதில் சுற்றப்பட்ட மல்லிகைப் பூ என பலரையும் சோனாக்ஷி சின்ஹாவின் திருமண உடை கவர்ந்திருக்கிறது.
குறிப்பாக அவரது உடையில் அதீத தென்இந்திய கலாசாரம் கலந்திருப்பதாகவும் பலரும் கருத்துகள் கூறி பாராட்டி வருகிறார்கள். நிகழ்ச்சியில் சல்மான் கான், ஷாருக்கான், வித்யாபாலன், ரேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் குடும்பமாகவே கலந்துகொண்டனர்.
2012, 2017, மற்றும் 2019ஆகிய வருடங்களில் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் இந்தியப் பிரபலங்கள் 100 பட்டியலிலும் இடம் பிடித்தார். பீட்டாவின் நல்லெண்ணத் தூதரான சோனாக்ஷி சின்ஹா விலங்குகள் ஆர்வலராக விலங்குகள் பாதுகாப்பில் பல சேவைகள் செய்து வருகிறார். பல தெரு நாய்கள் மற்றும் பூனைகளைத் தத்தெடுத்து செல்லப்பிராணிகளுக்கான தங்குமிடம் அமைத்து பாதுகாத்து வருகிறார்.
சோனாக்ஷியின் காதல் கணவரான இக்பாலும் விலங்குகள் ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் நடிப்பு இன்னொரு பக்கம் சொந்தமாக நெயில் பாலிஷ் பிராண்ட் என பிஸினஸையும் கவனித்து வரும் சோனாக்ஷி மேலை நாடுகளிலும் நிறைய முதலீடு செய்து தொழில் புரிந்து வருகிறார்.l
ஷாலினி நியூட்டன்
|