சிறுகதை - உயிர் உருகும் ஓசை



கொட்டும் மேளச் சத்தமும் நாதஸ்வர இன்னிசையும் மண்டபத்தை நிறைத்திருந்தது. மணமேடையில் அமர்ந்திருந்த இன்னிசை, நெருப்பாற்றில் குளிப்பதைப் போல் உணர்ந்தாள். கட்டியிருந்த புது பட்டுச்சேலையும் அணிந்திருந்த ஆபரணங்களும் மணப்பெண் அலங்காரமும் கசந்தன. 
எல்லாவற்றையும் கலைத்து விட்டு எல்லோரையும் உதறிவிட்டு இந்தக் கணமே எழுந்து ஓடி விடலாமா என்ற நினைப்பை இரும்புச் சங்கிலியினால் கட்டி பூட்டுப் போட்டாள்.எங்கே வெடித்து அழுது விடுவோமோ என பயப்பட்டாள்.இதயம் தூள் தூளாய் நொறுங்கி கண்களின் வழியே கண்ணீராய் வெளிப்பட்டது.

கன்னக்கதுப்புகளில் கோடு கோடாய்  இறங்கிய கண்ணீரினால் மேக்கப் கலைந்திடுமோ... அம்மா பார்த்துவிட்டால் அதற்கும் திட்டு விழுமே என அஞ்சினாள். கல்யாண மண்டபத்தின் அத்தனை கூட்டத்திலும் உறவினர்களை வரவேற்று உபசரிக்கிற பரபரப்பிலும்அப்பாவின் கண்கள் அடிக்கடி இன்னிசை மீது படிந்து படிந்து விலகியது. கடைசி நேரத்தில் ஓடிப் போய்விடுவாளோ... காலை வாரி விடுவாளோ... குடும்ப மானத்தை கப்பல் ஏற்றி விடுவாளோ என்ற  பதைபதைப்பு போலும்.

வாழை மரத் தோரணங்கள் கட்டிய கல்யாண மண்டபத்தின் முகப்பில் தன் மனைவியோடு நின்று கைகளைக் குவித்து கும்பிட்டுக் கொண்டிருந்த அண்ணன் விக்ரம் அடிக்கடி உள்ளே வந்து மணமேடை மீது முறைப்பாய் ஒரு பார்வையை வீசிவிட்டுப் போனான்.குடும்பத்தில் யாருக்குமே இன்னிசை மீது நம்பிக்கை இல்லை. அவளுடைய கழுத்தில் தாலி ஏறி... இந்தக் கல்யாணம் முடிந்தால்தான் அவர்களுக்கு படபடப்பு குறையும்.

பிருதிவ்வை எந்த பெண்ணும் விட்டுக் கொடுக்க மாட்டாள். இந்தப் பிரபஞ்சத்தையே எழுதி வைத்தாலும் உதறி எறிய மாட்டாள். பிருதிவ்வின் முகம் மறக்கக்கூடிய முகம் கிடையாது. பிருதிவ்வை யாராலும் மறக்க முடியாது.அவனுக்கு அப்படி ஒரு அழகு முகம்... காதல் முகம்.. குறுகுறுப்பான முகம்.. வசீகரமான முகம்... நினைக்க நினைக்க இனிக்க வைக்கிற முகம்..
அழகன் என்ற சொல்லின் அடையாளமானவன்... இனிமை என்ற சொல்லின் பொருள் பொதிந்தவன்...

இன்னிசைக்கு தன் காதலை விட, தன் காதலன் பிருதிவ் மீது இருந்த ஆசையை விட... குடும்பம் முக்கியம். குடும்ப கவுரவம் முக்கியம். அதைவிட தன் அப்பா, அண்ணனின் உயிர் முக்கியம்.
‘‘நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னா... அவனை மறக்கலைன்னா நானும் உன் அண்ணனும் விஷத்தைக் குடிச்சிடுவோம். அதுக்குப் பிறகு நீ  எக்கேடோ கெட்டொழி!’’
இன்னிசையின் வீட்டார் பயன்படுத்திய கடைசி பேராயுதம் இதுதான். இன்னிசையை ஒரேடியாய் வீழ்த்திய ஆயுதமும் இதுதான்.

காதலை முடிவு செய்வது கண்களும் இதயமும். ஆனால், கல்யாணம் என்று வருகிற பொழுது குடும்ப கவுரவமும் அந்தஸ்தும்தான் அதை முடிவு செய்கிறது.அண்ணன் விக்ரமுக்கு கல்யாணம் ஆகி மனைவி, குழந்தை இருக்கிறார்கள். தன்னால் அவர்கள் அனாதையாகி விடக்கூடாது என்பதில் இன்னிசை உறுதியாக இருந்தாள். அவர்கள் மிரட்டுவது உண்மையோ பொய்யோ அதைப் பற்றி இன்னிசை ஆராயவில்லை. மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் பிருதிவ்வை உதறினாள். மறந்தாள்.

பிருதிவ் எம் எஸ்சி ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருந்த அதே கல்லூரியில்தான் இன்னிசை மூன்றாம் வருடம் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தாள்.அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையில் நடந்த நடனப் போட்டியில் பிருதிவ்வுடன் சேர்ந்து ஆட வேண்டிய மாணவிக்கு கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லாமல் போகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டாள். 

பிருதிவ்வுக்கு இணையாக ஆடக்கூடிய நபர் அந்தக் கல்லூரியில் கிடைக்கவில்லை. ஓரளவுக்கு நடனம் தெரிந்த இன்னிசையை தோழிகள் வற்புறுத்தி அவனோடு மேடையில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்கள். அதற்கு முன்பு அவள் பிருதிவ்வைப் பார்த்ததும் இல்லை... பேசியதும் இல்லை... அவன் பெயரைக் கூட அவள் கேட்டதில்லை.

விரல்கள் தொடாமல், தேகம் தீண்டாமல் மிக மிக கண்ணியமாக அவளோடு சேர்ந்து அந்த நடனத்தை ஆடி முடித்தான் பிருதிவ்.நடனத்தை விட இருவருடைய ஜோடிப் பொருத்தம்தான் ஆடிட்டோரியத்தில் கூடியிருந்த அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் கவர்ந்திருந்தது. நடனம் முடிந்து வெகு நேரம் வரை கரவொலி அடங்கவே இல்லை. ஒன்ஸ்மோர் கூட கேட்டார்கள்.அடுத்தடுத்து வந்த விழாக்கள் அனைத்திலும் இன்னிசையும் பிருதிவ்வும்தான் ஆடிட்டோரிய மேடையை கலக்கினார்கள்.

அவன் அம்பிகாபதி என்றால் இவள் அமராவதி... அவன் ஷாஜகான் என்றால் இவள் நூர்ஜகான்... அவன் சலீம் என்றால் இவள் அனார்கலி... இப்படித்தான் இருவரும் வேஷம் கட்டிக் கட்டி நேசத்தை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். கண்களும் கண்களும் களவு போனது; இதயம் இதயமும் இடம் மாறியது; உயிரும் உயிரும் உருகி ஒன்றானது... இருவருடைய காதலும் வளர்ந்தது இப்படித்தான்.

வீட்டில் தெரிந்தால் பிரச்னை ஆகுமே... பூகம்பம் வெடிக்குமே... ரணகளமாகுமே... என்றெல்லாம் யோசிக்கவேயில்லை. இன்னிசையின் கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் பிருதிவ்வின் முகம் மட்டும்தான். பிருதிவ்வின் குரலைத் தவிர வேறு யார் எதைப் பேசினாலும் அவள் காதில் விழவே விழாது. 

பிருதிவ்வை ஒரு நாள் பார்க்காவிட்டாலும் ஒரு யுகம் ஆகிவிட்டது போல பதறித் துடித்து பரிதவிக்கிற இன்னிசைதான், ‘‘நான் சாகுற வரைக்கும் உன்னை பார்க்கவே கூடாது... நாம பிரிஞ்சிடலாம்... எல்லாத்தையும் மறந்துடலாம்...’’ என்ற வார்த்தைகளை பிருதிவ்விடம் உக்கிரமாய் உதிர்த்தாள்.‘‘நீ சொன்னதை எல்லாம் என்னோட முகத்தைப் பார்த்து சொல்ல முடியுமா? என்னோட கண்ண பாத்து சொல்ல முடியுமா?’’

விளையாட்டாய் சீண்டுகிறாள் என்றுதான் நினைத்தான். கிண்டலாய் கேலியாய் கன்னத்தில் குழி விழ சிரித்தான்.இன்னிசையால் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. குற்ற உணர்வு குறுகுறுத்தது.

‘‘அதையெல்லாம் பார்த்துதான் சொல்லணும்ங்கற அவசியம் எனக்கு இல்லை. சொன்னா புரிஞ்சுக்குங்க. போய்கிட்டே இருங்க...’’‘‘பொய்தானே பேசுற?’’‘‘ப்ளீஸ் பிருதிவ்... என்னைக் கொல்லாதீங்க...’’ கைகளைக் குவித்து கும்பிட்டாள்; தன் ஹேண்ட்பேக்கில் இருந்த கல்யாண அழைப்பிதழை எடுத்து விரல்கள் நடுங்க நீட்டினாள்.

‘இன்னிசை வெட்ஸ் கணேஷ்’ பொன்னிற எழுத்துக்கள் மின்னிய கல்யாண அழைப்பிதழ் அவனுக்கு சகலத்தையும் புரிய வைத்தது.‘‘நீ இல்லாத வாழ்க்கையை என்னால கற்பனை கூட பண்ணி பாக்க முடியாதுன்னு அடிக்கடி சொல்லுவியே இன்னிசை!’’‘‘ஒரு பேச்சுக்கு சொன்னதை எல்லாம் நம்பிடறதா?’’‘‘நீ கெடைக்காட்டி செத்துடுவேன்னு சொல்லுவியே!’’‘‘பொய்யா சொன்னதையெல்லாம் பிடிச்சுகிட்டு தொங்காத பிருதிவ்...’’‘‘புரியுது இன்னிசை. உன் கையில இருக்கிற இன்விடேஷன் மட்டும் காஸ்ட்லி கிடையாது.

மாப்பிள்ளையும் ரொம்ப காஸ்ட்லியோ? அதனால்தான் இப்படி எல்லாம் பேசுறியோ?’’‘‘எப்படி வேணாலும் வச்சுக்க! அது என் இஷ்டம். இனி எக்காரணம் முன்னிட்டும் என் வழியில வராத!’’
‘‘இன்னிசை நீயா இதை பேசல... உன் சூழ்நிலையும் சந்தர்ப்பமும்தான் இப்படி பேச வைக்குதுன்னு நெனைக்கிறேன். இப்பவும் ஒன்னும் மோசம் ஆயிடலை. வந்துடு இன்னிசை. நாம எங்காவது போயிடலாம். சந்தோஷமா வாழலாம்...’’

‘‘நான் வாழறதுக்கு ஆசைப்படறேன். நீ சாகறதுக்கு வழி சொல்றியே! உன்னை நம்பி வந்தா என் கதி என்னாகுறது... உன்னை கட்டிக்கிட்டா நானும் அப்புறம் உங்க அம்மா மாதிரியே ரோட்டோரத்துல இட்லி கடை போட்டுதான் வியாபாரம் பண்ணணும். ஏதோ கொஞ்சம் ஹேண்ட்சமா இருக்கேன்னு நம்பி ஏமாந்து பழகிட்டேன்... இப்ப... தப்பிச்சிட்டேன்...’’
பிருதிவ்வுக்கு கோபமும் வெறுப்பும் வரவேண்டும், அவன் தன்னை அடியோடு வெறுக்க வேண்டும், தன் பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது... இதுதான் இன்னிசையின் நோக்கம். அவள் வாயிலிருந்து வந்து விழுந்த எந்த வார்த்தையும் உண்மை இல்லை.

பிருதிவ் உறைந்து போனான். முகத்தில் இறுக்கம் படர்ந்தது. ஏனோ தெரியவில்லை அவனுக்கு அவள் மீது துளி கூட கோபம் வரவில்லை.பிருதிவ்வுக்கு அந்தஸ்து கிடையாது. உறவு கூட்டம் கிடையாது. அப்பாவும் இல்லை. அம்மா மட்டும்தான். பிருதிவ் ஒரே பிள்ளை. இன்னிசை சொன்னது மாதிரி அவனுடைய அம்மா ரோட்டோரத்தில் இட்லி கடை போட்டு விற்கிறாள். அதில் வருகிற வருமானத்தில்தான் குடும்பம் நடத்துகிறாள்.

எல்லாம் தெரிந்துதான் அவனை விரும்பினாள். இப்பொழுது அதையே காரணமாக வைத்து தூக்கி எறிகிறாள். பிருதிவ்வுக்கு தன் இயலாமை மீதுதான் கோபம் வந்தது. அழுகை வந்தது. வெறுப்பு வந்தது.அதற்கு மேல் அவன் அங்கே நிற்கவில்லை. எதுவும் பேசவில்லை. மௌனமாய் திரும்பி வேறு பக்கம் நடந்தான்.

முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அக்னி குண்டத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. புரோகிதர் நெய்யை ஊற்றியபடியே இருந்தார்.திருமாங்கல்ய கயிறு வைக்கப்பட்டிருந்த மஞ்சள் பூசிய தேங்காயை ஒரு தாம்பாளத்தில் வைத்து சுமங்கலி பெண்ணொருத்தி அதை மண்டபத்தில் இருப்பவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தாள்.

இன்னொரு பக்கம் அட்சதை வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. தாலி ஏற சில நிமிடங்களே இருந்தன. மாப்பிள்ளையை பட்டு வேஷ்டி கட்டி சட்டை அணிவித்து அழைத்து வந்தால் கல்யாணம் தான்... தாலி கட்டிவிட வேண்டியதுதான்...மணமேடைக்கு எதிரே முன் வரிசையில் பிருதிவ்வின் சாயலில் யாரோ ஓர் இளைஞன் அமர்ந்திருந்தான். தூக்கி வாரிப் போட்டது. கண்களை அகலமாய் விரித்துப் பார்த்தாள். அவன் பிருதிவ் இல்லை என்றதும்தான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

‘நான் ஏன் அவனை நினைக்கிறேன்? பாவம் என்னால் அவன் கத்தியால் குத்துப்பட்டது மாதிரி காயம்பட்டு கிடப்பான்... அநியாயத்திற்கு நான் அவனை ரணமாக்கிவிட்டேன். பிருதிவ்... என்னை மன்னித்துவிடு...’‘‘சீக்கிரமா மாப்பிள்ளையை கூட்டி வாங்கோ... முகூர்த்த நேரம் நெருங்கிண்டே இருக்கு...’’ புரோகிதர் அவசரப்படுத்தினார். யாரோ மாப்பிள்ளையை கூட்டி வர ஓடினார்கள்.

மணமகனின் அறைக்கதவு தட்டப்பட்டது. உட்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்த காரணத்தினால் திறக்கப்படவேயில்லை.கல்யாண மண்டபத்தை பரபரப்பு தொற்றிக் கொண்டது.‘‘டேய் முகுந்த்... கதவைத் தொறடா...’’ மாப்பிள்ளையின் தாய் கெஞ்சினாள்.‘‘என்னாச்சு... மாப்பிள்ளைக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா? வழக்கமா கல்யாணப் பொண்ணுங்கதான் கடைசி நேரத்துல கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கிட்டு பிரச்னை பண்ணுவாங்க... இங்கே தலைகீழா நடக்குதே...’’ யாரோ ஒரு பெரியவர் வாய்விட்டு புலம்பினார்.

மணமகனின் அறைக்கு வெளியே உறவுகளின் கூட்டம் சூழ்ந்தது. வேறுவழியின்றி இன்னிசையின் அண்ணன் விக்ரம்தான் கதவை உடைத்து உள்ளே போனான்.அறைக்குள் மல்லாந்து கிடந்தான் மாப்பிள்ளை கணேஷ்.

பட்டு வேஷ்டி சட்டையெல்லாம் அவிழ்ந்து அலங்கோலமாய் கிடந்தான். பக்கத்திலேயே பெரிய சைஸ் மது பாட்டில் திறந்தநிலையில்... கட்டை போல மட்டையாகிக் கிடந்தான்.‘‘தாலி கட்டற வரைக்குமாச்சும் உம் புள்ளையால பொறுமையா இருக்க முடியாதா? எல்லாத்தையும் கெடுத்துட்டானே!’’ மனைவியிடம் கோபமாய்க் கத்திவிட்டு தலையிலேயே அடித்துக் கொண்டார் மாப்பிள்ளையின் அப்பா.

‘‘கணேஷ்... எழுந்திரிடா... மானம் போகுது...’’ கீழே குனிந்து கன்னத்தில் அடித்தாள் அம்மா.பாத்ரூமுக்குள் கணேஷின் நண்பர்களும் கோணலாய் மல்லாந்திருந்தார்கள்.
‘‘எல்லாம் இவனுங்களால. அப்பாவி புள்ளையை  பழக்கப்படுத்திவிட்டுட்டானுங்க...’’ மாப்பிள்ளையின் அம்மா சமாளிக்க முயன்றாள்.‘‘போதும்... அதான் உங்க லட்சணம் தெரிஞ்சிடுச்சே...’’ இன்னிசையின் அப்பா குதிகுதியென்று குதிக்க... 

மேளச் சத்தம் நிறுத்தப்பட்டது.விக்ரம் மணமேடையை நெருங்கினான். ‘‘இன்னிசை எழுந்திரி... இந்தக் கல்யாணம் நடக்காது...’’‘‘இல்லண்ணே! நான் ஏத்துக்கறேன். மாப்பிள்ளைக்கு போதை தெளியறவரைக்கும் காத்திருக்கேன்... இது நீயும் அப்பாவும் அவசர அவசரமா சரியா விசாரிக்காம தேடித் தந்திருக்கற வாழ்க்கை... நான் அவரைத் திருத்திக்கறேன்...’’

விக்ரமிற்கு கன்னத்தில் அறைபட்டது போல வலித்தது. அதை விட அம்மாவும் அப்பாவும் முகம் கறுத்து வெட்கப்பட்டுப் போனார்கள்.‘‘இனிமே உன் கல்யாணம் நடந்தா அது உன்னோட விருப்பப்படிதான் நடக்கும்...’’ அம்மா தழுதழுத்தாள்.‘‘அந்தப் பையனுக்கு போன் போடு இன்னிசை...’’ என்றார் அப்பா.இன்னிசை மினுக்கென நிமிர்ந்தாள். விக்ரமிடம் போனை வாங்கி பிருதிவ்வின் எண்களை அழுத்தினாள்.சுவிட்ச் ஆப் என்று பதில் வந்ததுபத்து தினங்களாக பிருதிவ்வைத் தேடுகிறாள் இன்னிசை.

கண்களில் படவேயில்லை. செல்போனிலும் பிடிக்க முடியவில்லை‘பிருதிவ்...எங்க வீட்ல நம்ம காதலை ஏத்துக்கிட்டாங்க... இந்த சந்தோஷத்தைக் கொண்டாடலாம்னு பார்த்தா எங்கடா தொலைஞ்சே? தாடி மீசையோட சோகமா திரிஞ்சுகிட்டிருக்கியா? நான் உன்னைப் பார்க்கணும்டா... காலத்துக்கும் உம் மொகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்டா!’தவியாய்த் தவித்தாள் இன்னிசை. ஊர் முழுக்க தேடி பிருதிவ் கிடைக்காமல் ஏமாந்து சிக்னலில் காத்திருந்தபோதுதான்...

யதேச்சையாய் கவனித்தாள். சற்றுத் தள்ளி அதே சிக்னலில் பைக்கில் அமர்ந்த நிலையில் ரொம்ப ஸ்டைலாய் கால்களை ஊன்றியபடி காத்திருந்த பிருதிவ்வைப் பார்த்ததும் துள்ளலாய் நிமிர்ந்தவளின் முகத்தில் கருமை படர்ந்தது.பிருதிவ்வின் முதுகில் சாய்ந்தபடி அவன் இடுப்பைக் கட்டிக் கொண்டு... சேலையில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தாள். அவள் கழுத்தில் புது தாலிக் கயிறு.

 - மகேஷ்வரன்