ஒலிம்பிக் தீபத்தை ஏந்தப்போகும் முதல் தமிழர்!



டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையைத் தொடர்ந்து உலக விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளைத்தான்.
33வது ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 26ம் தேதி பிரமாண்டமான கொண்டாட்டங்களுடன் ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் தொடங்கவுள்ளது.
16 நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டிகளுக்காக பாரிஸ் கடந்த ஒரு வருடமாகவே ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதே நேரத்தில் கால்பந்து, கைப்பந்து மற்றும் ரக்பி போன்ற விளையாட்டுகள் ஜூலை 24ம் தேதி முதலே நடைபெறும் என்பதால் இம்முறை ஒலிம்பிக்கை மொத்தம் 19 நாட்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளது பாரிஸ். இதில் 206 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்து ஐநூறு வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் தேசிய ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆகியவற்றிலிருந்து கலந்து கொள்ளவுள்ளனர். மொத்தம் 46 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளின் பெருமைமிகு சின்னமாக பழங்காலம் முதல் பின்பற்றப்பட்டு வரும் ஒலிம்பிக் ஜோதியை இம்முறை ஒரு தமிழரும் ஏந்தப் போகிறார் என்பதுதான் ஆச்சர்யமான தகவல். ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சல் (ரிலே) சுற்றுப்பயணம் ஃபிரான்ஸ் முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில் பாரிஸில் தீபத்தை ஏந்தும் நல்வாய்ப்பு இலங்கைத் தமிழர் தர்ஷன் செல்வராஜாவுக்குக் கிடைத்திருக்கிறது.

பாரிஸ் நகரில் கடந்த 2023ம் வருடம் சிறந்த நீண்ட ரொட்டி தயாரிக்கும் போட்டியில் (La meilleure baguette de Paris competition - 2023) முதலிடம் பெற்றார் தர்ஷன். 30வது முறையாக இடம்பெறும் இந்தப் போட்டிக்கு ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 126 பேர், அந்நாட்டின் பாரம்பரியம்மிக்க நீண்ட ரொட்டியைத் (baguette Or Franch Loaf) தயாரித்து அனுப்பியிருந்தனர்.

இதில், தர்ஷன் செல்வராஜா தயாரித்த லோஃப் ரொட்டியின் தரம் மற்றும் சுவை நடுவர்களைக் கவர்ந்து, முதலிடத்தைப் பிடித்தது. மேலும் வெற்றிப் பரிசாக 4,000 யூரோவை பணப்பரிசாகவும் பெற்றிருந்தார் தர்ஷன்.

இதன் மூலம் நாட்டின் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸி மாளிகைக்கு ரொட்டி தயாரித்து விநியோகிக்கின்ற பெருமையையும் தர்ஷன் செல்வராஜா பெற்றார்.
ஒவ்வொரு வருடமும் இப்படி நாடு முழுவதும் நடந்த போட்டிகள் பலவற்றில் வெற்றி பெற்றவர்கள் ஒன்றிணைந்துதான் ஒலிம்பிக் சுடரை பாரிஸ் நகரம் முழுக்க ஏந்தி ஓடுவர்.
ஆயிரத்தில் ஒருவராக இல்லாமல் பத்தாயிரத்தில் ஒருவராகபாரிஸில் ஒலிம்பிக் தீப்பந்தம் ஏந்தும் வாய்ப்பை தர்ஷன் பெற்றிருக்கிறார்.

ஒலிம்பிக் தீபத்தை 10,000 பேர் தங்களது கரங்களில் ஏந்தி ஓடுவர். மார்செய்ல் நகர் வழியாக சென்றடையும் தீப்பந்தத்தை ஃபிரான்ஸின் பெருநிலப்பரப்பிலும் கடல் கடந்த தீவுகளிலும் சுமார் 12 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சல் (Relay) ஓட்டமுறையில் மாறிமாறிச் சுமந்து செல்லவுள்ளனர். இந்த நீண்ட பயணத்தில் சுமார் 400 நகரங்கள் மற்றும் உல்லாசப் பயண மையங்கள் வழியாகத் தீப்பந்தம் எடுத்துச் செல்லப்படவுள்ளது. அதில் ஒருவராகத் தேர்வாகியுள்ளார் தர்ஷன் செல்வராஜா.

தர்ஷன் செல்வராஜாவின் பூர்வீகம் இலங்கை யாழ்ப்பாணம். 2006ல் இலங்கையிலிருந்து ஃபிரான்ஸ் வந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு தற்போது வயது 37. ஓராண்டு சட்டம் பயின்றபின் ஃபிரான்ஸின் இத்தாலிய உணவகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். தர்ஷன் வேலை செய்யும் உணவகத்துக்கு அருகிலுள்ள பேக்கரி ஒன்றின் உரிமையாளரான சேவியர் மௌலேவ், தினமும் தர்ஷன் வேலை செய்யும் உணவகத்துக்கு மதிய உணவு சாப்பிட வருவாராம்.

ஒரு கட்டத்தில் உணவகம் விற்பனை செய்யப்பட தர்ஷன் தனது வேலையை இழந்துள்ளார். அவ்வேளை தன் பேக்கரிக்கு வேலைக்கு வந்துவிடுமாறு தர்ஷனை அழைத்துள்ளார் சேவியர்.
அங்கு பாரம்பரிய பிரென்ச் லோஃப் (French Loaf) அல்லது, நீண்ட ரொட்டி, அல்லது பேக்வெட்(baguette), அல்லது பாண் தயாரிப்புதான் பிரதானம். தனது முதலாளியிடம் முறைப்படி பாண் தயாரிப்பைக் கற்றுக்கொண்ட தர்ஷன், ஒரு கட்டத்தில் முதலாளியின் வயது மூப்புக் காரணமாக முழு பேக்கரியையும் நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்றார்.

தொடர்ந்து பாரிஸில் பிரபல baguette தயாரிக்கும் போட்டியில் முதல் பரிசும் வென்றுள்ளார். தற்போது சொந்தமாக பேக்கரி நடத்தும் தர்ஷன் மனைவி, இரு குழந்தைகள் சகிதமாக பாரீஸில் நிரந்தரமாக குடிபெயர்ந்துவிட்டார். கூடிய விரைவில் ஃபிரான்ஸ் குடிமகன் அடையாளமும் கிடைக்கும் எனப் பெருமையுடன் சொல்கிறார் தர்ஷன்.

‘‘ஃபிரான்ஸ் வந்த புதிதில் எனக்கு மொழி ஒரு பிரச்னையாக இருந்த காரணத்தால் பல இடங்களில் வேலை கிடைக்கவில்லை. மொழிப் பிரச்னை காரணமாகவே ஹோட்டல் வேலை தவிர்த்து வேறு வேலைகள் செய்வது கடினம். அப்படி வாழ்வாதாரமே இல்லாமல் இங்கே வந்து சேர்ந்த எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

பாரிஸில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் முதலாவது இலங்கைத் தமிழராக நான் தேர்வாகியிருக்கிறேன். என் நாடும், என் குடும்பமும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை ஒரு பாக்கியமாக நான் கருதுகிறேன். என்னைத் தேர்ந்தெடுத்த ஃபிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் (அமேலி ஒளடியா கெஸ்டீரா) மற்றும் தேர்வுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்...’’ என பெருமையுடன் கூறுகிறார் தர்ஷன் செல்வராஜா.

ஒலிம்பிக் ஜோதி அல்லது ஒலிம்பிக் தீபம்

பண்டைய கிரேக்கத்தில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் போது போட்டிக்காலம் முழுவதும் இந்தத் தீ அணையாமல் எரிந்து கொண்டிருக்குமாம். இது கிரேக்கக் கடவுள் புரோமெதியஸ் (நெருப்புக் கடவுள்) மனித நேயத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்த ஜோதியாகவும் அதைக் கொண்டாடும் விதமாக இப்போது வரை கடைப்பிடிக்கப்பட்டுவருவதாகவும் பழங்காலப் பதிவுகள் கூறுகின்றன.

1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த போட்டிகளில்தான் முதன்முதலாக இந்த ஒலிம்பிக் தீபம் அறிமுகமானதாக நம்பப்பட்டாலும் தெளிவான சான்றுகள் ஏதும் இல்லை. தற்கால ஒலிம்பிக் விளையாட்டுகளின் மற்றோர் அங்கமாக விளங்கும் ‘ஒலிம்பிக் தீப ஓட்டம்’ பண்டைய கிரேக்க விளையாட்டுகளில் இடம்பெற்றதற்கு போதுமான சான்றுகள் இல்லை.

எனினும் ஜோதி எரிவது நல்லதே என பல நாடுகளும் அங்கீகாரம் கொடுக்க தற்போது இந்த ஒலிம்பிக் ஜோதி இன்னும் பிரம்மாண்டமாகவே ஏற்றப்பட்டு போட்டிகள் முடியும்வரை அணையாமல் பாதுகாக்கப்படுகிறது.

இந்தத் தீபத்தை ஏற்ற ஒரு ரிலே மாரத்தான் ஓட்டத்துடன் நடத்தும் வழக்கம் 1936ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு ஒருசில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. காரணம், ஏற்கனவே சில குளிர் பிரதேசங்களில் தீபத்தை அணையாமல் பார்த்துக்கொள்வதே மிகப்பெரும் சவால் எனும்போது, இந்தத் தீபத்தை ஏந்தியவாறு ஓடிவந்து ஒருவர் மாற்றி ஒருவர் பல்லாயிரம் மைல்கள் கடந்து கொண்டு வருவது இன்னும் சவாலாக இருக்கும் என எதிர்ப்புகள் வந்தன.

ஆனாலும் பெருவாரியான ஆதரவுகள் கிடைக்க, இந்த ஒலிம்பிக் நீண்ட ரிலே ஓட்டம் தற்போது இன்னும் பிரம்மாண்ட கொண்ட்டாட்டம், இசை, வாணவேடிக்கைகளுடன் ஏற்றப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஷாலினி நியூட்டன்