உலகின் முதல் Miss AI அழகிப் போட்டி!எங்கும் எதிலும் ஏஐ, எனில் அழகிப் போட்டிகளை மட்டும் விட்டுவிடுமா ஏஐ யுகம்?

மிஸ் தமிழ்நாடு, மிஸ் இந்தியா, மிஸ் யூனிவர்ஸ், மிஸ் வோர்ல்ட்... இப்படி காலம் காலமாகப் போட்டிகள் நடப்பது வழக்கம். ஆனால், உலகிலேயே முதன்முறையாக மிஸ் ஏஐ அழகிப் போட்டி தற்போது நடக்கவிருக்கிறது. 
அதாவது செயற்கை நுண்ணறிவு அழகிகளுக்கான போட்டி நடைபெற இருக்கிறது. இதில் நம் இந்திய ஏஐ அழகி சாரா சதாவரி (Zara Shatavari, India) முதல் 10 இடங்களுக்குள் வந்து மாஸ் காட்டியுள்ளது கூடுதல் தகவல்.இந்தப் போட்டிகளில் பல்வேறு நாடுகளில் இருந்து 1500 ஏஐ மாடல்கள் போட்டியிட்டனர். அழகு, தொழில்நுட்ப அறிவு மற்றும் சமூக ஊடகங்களில் அவர்களுக்கு உள்ள ஆதரவுகள், பிரபலம் ஆகியவற்றின் அடிப்படையில் முதல் 10 பேரை ‘ஃபேன்வியூ’ அமைப்பு தேர்வு செய்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த ‘ஃபேன்வியூ’ அமைப்பு உலக அளவில் ஏஐ மெசேஜ் மற்றும் சாட்டிங் தளமாகவும், ஏஐ கிரியேட்டர்களுக்கான களமாகவும் இயங்கி வருகிறது. கடந்த ஒரு மாதமாக 1500 மாடல்களைக் கொண்டு இந்த அழகிப் போட்டி நடந்து வருகிறது. இதில் இரண்டுநடுவர்களும் மேலும் இரண்டு ஏஐ நடுவர்களும் போட்டி முடிவுகளை தேர்வு செய்வர்!ராகுல் சவுத்ரி என்பவரால் உருவாக்கப்பட்ட இந்திய ஏஐ மாடல்தான் சாரா சதாவரி.

‘இந்தியன் மொபைல் ஏட் ஏஜென்சி’ என்ற நிறுவனத்தின் துணை நிறுவனரான ராகுல் சவுத்ரி தங்கள் நிறுவன விளம்பர நோக்கங்களுக்காக சாரா சதாவரி என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு மாடலை உருவாக்கினார். தங்களது ஏஜென்சியின் டிஜிட்டல் மாடலாக சாராவை ராகுல் சவுத்ரி பயன்படுத்தி வருகிறார்.

சாராவுக்கென தனியாக சமூக வலைத்தள பக்கங்கள் உள்ளன. அதில் உடல் நலம், வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் ஃபேஷன் ஆகியவை குறித்து டிப்ஸ்களை வழங்கி வருகிறார் சாரா.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாரா சதாவரிக்கு 8000 ஃபாலோயர்கள் இருக்கின்றனர். யோகா, தீபாவளி கொண்டாட்டம், பாரம்பரிய இந்திய முறை பண்பாட்டு உடைகள், ஃபேஷன் ரீல்ஸ்... என சாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் பல புகைப்படங்களைப் பார்க்க முடியும். பார்ப்பதற்கு உண்மையான பெண் போலவே சாரா இருப்பார்.

‘‘உலகின் முதல் மிஸ் ஏஐ போட்டியின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஒருவராக சாரா இடம் பிடித்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது. இந்தியாவின் பிரதிநிதியாக சாரா கலந்து கொள்வது மற்றும் ஆசிய பிரதிநிதியாக இந்தப் போட்டியில் முதல் 10 இடங்களில் ஒன்றைப் பிடித்திருப்பது என்பது மிகவும் பெருமை...’’ புன்னகையுடன் சொல்கிறார் ராகுல் சவுத்ரி.

ஏப்ரல் மாதம் முதல் ‘ஃபேன்வியூ’ இந்தப் போட்டியை நடத்தி வருகிறது. போட்டியில் வெற்றி பெறுபவருக்கு விருதுகளும், பணப்பரிசுகளும், குறிப்பிட்ட தொகை கொண்ட ஏஐ பயிற்சிகளுக்கான கோர்ஸ்களும் இலவசமாக கொடுக்கப்பட உள்ளன.  

வெற்றி பெறுவோர் உலக செயற்கை நுண்ணறிவு கிரியேட்டர் விருது (World AI Creator Awards (WAICAs)) பெறுவர். இதன் வெற்றியாளர்களை இரண்டு நடுவர்கள் (மீடியா உரிமையாளர் மற்றும் தொழிலதிபர் ஆண்ட்ரூ பிளோச், அழகிப் போட்டிகளில் அனுபவசாலியான சாலி-ஆன் பாவக்கெட்) தேர்வு செய்ய உள்ளனர். 

இவர்களுடன் இரண்டு ஏஐ நடுவர்களான ஐதானா லோபஸ் மற்றும் எமிலி பெல்லிகிரினி இணைந்து வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள்.இந்தியாவைச் சேர்ந்த சாரா தவிர்த்து மேலும் 9 அழகிகள் இந்த இறுதிப் பட்டியலில் போட்டியிட இருக்கிறார்கள். அவர்களையும் தெரிந்து கொள்வோமா?!

கென்ஸா லேலி (Kenza Layli, Morocco)

சுமார் 2 லட்சம் ஃபாலோயர்களை தனது  இன்ஸ்டாகிராமில் கொண்டிருக்கிறார் கென்ஸா. இஸ்லாமிய பெண்ணாக தனது தின நடவடிக்கைகள் மற்றும் தத்துவங்கள் அடிப்படையில்  இயங்குவார்.

ஒலிவியா சி (Olivia C, Portugal)

12000 ஃபாலோயர்களை கொண்டிருக்கும் ஒலிவியாவின் இன்ஸ்டா பக்கம் கிட்டத்தட்ட உண்மையான ஒரு பெண்ணின் கணக்கு போலவே தத்ரூபமாக இருக்கும். ஒலிவியாவின் பக்கத்தை ஃபாலோ செய்யும் பலரும் கூட இப்போதும் இவர் நிஜமானவரா அல்லது ஏஐ-ஆ... என்பதில் சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். பயண விரும்பியான ஒலிவியா, பல நாடுகளின் இயற்கைச் சூழல் மிகுந்த பகுதிகளிலிருந்து புகைப்படங்கள் பதிவிடுவது வாடிக்கை.

அன்னி கெர்டி  (Anne Kerdi, France)

பத்தாயிரம் இன்ஸ்டா ஃபாலோயர்களைக் கொண்டிருக்கும் அன்னி, ஒரு பெண் தொழில் முனைவோர் போல் தினமும் தனது தொழில் சார்ந்த நடவடிக்கைகளை பதிவு செய்வார்.
சந்திப்புகள், தொழில் நிமித்தமான சுற்றுலாக்கள், குதிரை ஏற்றம், சந்திப்புகளில் அருந்தும் உணவுகள் குறித்த தகவல்கள் என பலவும் பகிர்வதுடன் அவரை உருவாக்கிய டிஜிட்டல் ஏஜென்சியின் படிப்புகள் குறித்த விளம்பரங்களுக்கும் அவ்வப்போது பணியாற்றுவார்.

அயனா ரெயின்போ (Aiyana Rainbow, Romania)

3000 ஃபாலோயர்களைக் கொண்டுள்ள அயனா, இரவு நேர டிஜே மற்றும் பைக் ரைடராக போஸ்ட்கள் பதிவிடுவார். டிரெண்டிங் கேர்ளான அயனா எப்போதும் பார்ட்டி ஸ்டைலில்தான் இருப்பார்.

லாலினா (Lalina, France)

ஒரு லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள லாலினா ஒரு சுற்றுலா விரும்பி. எப்போதும் டிராவல் குறித்த தகவல்கள் என பகிர்ந்து கொண்டே இருப்பார். இவருடைய கணக்கும் கிட்டத்தட்ட ஒரு உண்மையான பெண்ணின் சமூக வலைத்தள கணக்கு போலவே இருக்கும்.

செரின் அய் (Seren Ay, Turkey)

21,000 ஃபாலோயர்களைக் கொண்டிருக்கும் செரின் ஒரு கல்லூரி மாணவியாகவும், மாடல் மற்றும் அம்பாசிடராகவும் தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிடுவார்.

அசினா லிக் (Asena Ilik, Turkey)

27 ஆயிரம் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள அசினா ஒரு கார் பந்தய வீராங்கனையாகவும், விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் உள்ளவராகவும் பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவார். இவருடைய சில வீடியோக்கள் அச்சு அசலாக ஒரு பெண் அமர்ந்து பேசுவது போலவே இருக்கும்.

எலிசா கான் (Eliza Khan, Bangladesh)

13000 ஃபாலோயர்களைக் கொண்டுள்ள எலிசா தத்துவம் மற்றும் மனித உரிமை ஆர்வலராகத் தனது பதிவுகளைப்பகிர்வார்.

ஐல்யா லாவோ (Ailya Lou, Brazil)

பதினோராயிரம் `ஃபாலோயர்களைக் கொண்ட ஐல்யா ஒரு ஃபேஷன் விரும்பியாக மாடலிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகம் பதிவிடுவார்.

ரைட். பரிசுத் தொகை?

முதல் மூன்று மிஸ் AI பட்டம் பெற்ற AI படைப்பாளிக்கு 5,000 டாலர் ரொக்கப் பரிசும், 3,000 டாலர்கள் மதிப்புள்ள இமேஜின் எஜுகேஷன்ஸ் மென்டர்ஷிப் திட்டத்திற்கான படிப்பு மற்றும் 5,000 டாலருக்கு மேல் மதிப்புள்ள விளம்பர உதவிகளையும் பெறுவார். இரண்டாம் இடத்தைப் பெறுபவர் 500 டாலர் மதிப்புள்ள இமேஜின் எஜுகேஷன் படிப்புக்கான இலவச பாடங்களைப் பெறுவார். அத்துடன் 2,000 டாலர் விளம்பரத் தொகுப்பு மற்றும் 2,500க்கு மேல் மதிப்புள்ள PR விளம்பர உதவிகளைப் பெறுவார்.

மூன்றாவது இடத்தைப் பிடித்த போட்டியாளர் 500 டாலர் மதிப்புள்ள இமேஜின் எஜுகேஷன், 500 டாலர் விளம்பரத் தொகுப்பு மற்றும் 1,000 டாலருக்கு மேல் மதிப்புள்ள PR ஆதரவுடன் இலவச ஆலோசனை அழைப்பைப் பெறுவார்.ஆல் த பெஸ்ட் பியூட்டீஸ்! l

ஷாலினி நியூட்டன்