எந்த சூழல்லயும் வாழ்க்கையை மீட்டெடுக்கலாம்!தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் பா.இரஞ்சித். ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’,‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ போன்ற படங்கள் மூலம் இயக்குநராகவும், ‘பரியேறும் பெருமாள்’, ‘குண்டு’, ‘புளூ ஸ்டார்’, ‘ஜெ.பேபி’ போன்ற படங்கள் மூலம் தயாரிப்பாளராகவும் தடம் பதித்தவர். 
இப்போது தன்னுடைய கல்லூரி நண்பரும், தன்னிடம் சினிமா பயின்றவருமான தினகரன் சிவலிங்கம் இயக்கும் ‘பாட்டல் ராதா’ படத்தை தயாரித்துள்ளார். குருசோமசுந்தரம், சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார்கள். போஸ்ட் புரொடக்‌ஷன் முடிந்து புரொமோஷன் வேலைகளில் பிசியாக இருந்த தினகரன் சிவலிங்கத்திடம் பேசினோம்.

பாட்டலுக்குள் குருசோமசுந்தரம் செம ஜாலியா இருக்கிறாரே?

இது எமோஷனல் கலந்த காமெடிப் படம். ‘Shawshank Redemption’ என்ற ஹாலிவுட் படத்தில் ஜெயிலுக்குப் போன ஹீரோ, சிறைவாசத்துக்குப் பிறகு தன் வாழ்க்கையை மீட்டெடுக்கப் போராடுவதுபோல் கதை அமைக்கப்பட்டிருக்கும்.அதுபோல் மதுப் பழக்கத்திலிருக்கும் ஹீரோ தனக்குத் தானே சிறையாக இருப்பதை அறிந்து, தன்னை விடுவித்துக்கொண்டு இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்கிறார்.

கதைப்படி ஹீரோ டைல்ஸ் ஒட்டும் கொத்தனார். அவருடைய வாழ்க்கையின் வெற்றியும் தோல்வியும்தான் படம். அதை காமெடி கலந்து சொல்லியுள்ளோம். எந்த சிச்சுவேஷனிலும் இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்க முடியும் என்பதுதான் படம் சொல்லும் மேசேஜ்.

ஹீரோ செலக்‌ஷன் எப்படி நடந்துச்சு?

குருசோமசுந்தரம் அண்ணன் இல்லையென்றால் வேலை செய்திருக்க முடியாது. பா.இரஞ்சித்திடம் கதையைச் சொன்னதும், ‘இது நடிக்கத் தெரிஞ்சவங்க மட்டுமே பண்ண முடியும்’ என்றார். அவர் சொன்ன ஆப்ஷன்ல குரு அண்ணனும் இருந்தார்.எண்ணங்களை காமெடியாக வெளிப்படுத்தக்கூடிய கேரக்டர். உடல் ரீதியாகவும் உணர்வுகளை காண்பிக்க வேண்டும். அதை சோமு அண்ணன் பிரமாதமா சுமந்து சென்றார்.

கதையின் இயல்புக்காக அமெச்சூர் ஆர்டிஸ்ட் நிறையப் பேரை நடிக்க வெச்சேன். அவர்களுடன் நடிக்கும்போது அதிக டேக் போகும். அந்தச் சமயத்தில் சோமு அண்ணன் டென்ஷன் அடையாம நிதானமா இருப்பார்.சோமு அண்ணனைப் பத்தி சொல்வதா இருந்தா அவரிடமிருந்து சிறந்த ஒத்துழைப்பு கிடைச்சது. எனக்கு திருப்தி தரும்வரை எத்தனை டேக் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருந்தார்.

நான் என்ன சொன்னாலும் அதைச் செய்ய தயாரா இருந்தார். ஒரு காட்சியில் குட்டி குட்டியா நிறைய சூட்சுமங்கள் இருந்தால் அதை புரிஞ்சு பண்ணுவார். கேரக்டருக்கு எப்படியெல்லாம் நியாயம் செய்ய முடியுமோ அதைச் செய்தார். நான் சொல்லிக் கொடுத்ததை செய்ததோடு அவருடைய இன்புட்ஸ்ஸையும் கொடுப்பார். சக ஆர்ட்டிஸ்ட்டுகளையும் அதற்குள் சேர்த்துக்கொள்வார்.

அவருடைய நண்பர் சாந்தகுமார். ஆக்டிங் டிரைனர். அவர் எல்லா நடிகர்களுக்கும் பயிற்சி கொடுத்தார். அந்த ஒர்க்‌ஷாப்புல சோமு அண்ணன் கூடவே இருந்தார்.
‘ஜோக்கர்’ அவருக்கு அடையாளத்தைக் கொடுத்தது. 

அதுபோல் இந்தப் படத்துல அவருடைய இன்னொரு பரிமாணத்தைப் பார்க்க முடியும். அநேக வீடுகளிலும், தெருக்களிலும் நாம் பார்த்து கடந்தவந்த மனிதர்களை அப்படியே தன்னுடைய கதாபாத்திரத்தின் வழியாக காட்சிப்படுத்தியிருப்பார். இந்தப் படத்துக்காக அவருக்கு விருதுகள் அறிவிக்கப்படலாம்.

ஹீரோயின் யார்?

சஞ்சனா நடராஜன். ‘சார்பட்டா பரம்பரை’, ‘ஜெகமே தந்திரம்’, ‘போர்’ போன்ற படங்களில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியவர். அற்புதமான ஆர்ட்டிஸ்ட்.
பத்து வயசு பையனுக்கு அம்மாவாக, அதே சமயம் தமிழ் முகமா இருக்கணும். நம்முடைய குடும்பங்களில் அத்தை, பெரியம்மாக்கள் குடும்பத் தலைவியாக பல அழுத்தங்களை அதிகமா சந்திச்சவங்களாகவும், அதேசமயம் பிரச்னைகளை கண்டு பின்வாங்காம, தைரியமா இருப்பதையும் பார்த்திருப்போம். தமிழ்ச் சமூகத்துல இருக்கிற 60 சதவீத பெண்கள் அத்தகைய இடத்துலதான் இருப்பாங்க. அவர்களை நகல் எடுத்தமாதிரி சஞ்சனாவுடைய கேரக்டர் இருக்கும். லவ், எமோஷன் என எல்லாத்தையும் சிறப்பா வெளிப்படுத்தினாங்க.

முக்கியமான கேரக்டர்ல ஜான் விஜய் வர்றார். இதுவரை பண்ணாதளவுக்கு நிதானமா, பொலைட்டா அன்பைப் பத்தி பேசக்கூடிய கேரக்டர். தனிப்பட்ட வாழ்க்கையில் அதுதான் அவருடைய கேரக்டர். படத்தில்தான் அவர் வில்லன். வீட்ல அவரை சந்திக்கும்போது அன்பை பிழிஞ்சுகொட்டுவார். இதுல பெர்ஃபாமன்ஸ் மிரட்டலா வந்திருக்கு. எத்தனை டேக் கேட்டாலும் தயாராக இருப்பார்.

காமெடியனா மாறன் சாரின் பங்களிப்பு முக்கியமா இருக்கும். காமெடியில் அவருக்கும் இது முக்கியமான படமா இருக்கும். ‘ஜெ.பேபி’யில் சீரியஸ் முகத்தோட வந்தவர் இதுல எல்லா இடத்திலும் சிரிக்க வைப்பார். ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி கேரக்டரும் பேசப்படும். அடிப்படையில் நான் ஓவியர் என்பதால் முக்கியமான காட்சிகளை டிராயிங் போட்டு காட்டினேன். அது நடிகர்களுக்கு ஈஸியா இருந்துச்சு. ஆக்டிங் என்று வரும்போது தன்னிச்சையா பண்ண ஆரம்பிச்சாங்க. எல்லா ஆர்ட்டிஸ்ட்டும் என் மேல நம்பிக்கை வெச்சு சப்போர்ட் பண்ணினாங்க.

பாடல்கள் எப்படி வந்திருக்கு?

ஷான் ரோல்டன் மியூசிக் பண்றார். ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜெய்பீம்’ என அவருடைய எல்லா படங்களின் பாடல்களும் எனக்கு பிடிக்கும். அவருடைய முக்கியமான மூணு, நாலு ஆல்பங்கள் என்று பட்டியல் போட்டால் இந்தப் படத்தையும் சேர்த்துக்கலாம். அந்தளவுக்கு சிறப்பா பண்ணினார்.பாடல்களை தனிக்கொடி, உமாதேவி, ரமேஷ் வைத்யா, அறிவு, பாக்யம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளார்கள். வழக்காட்டு சொல்லை யூஸ் பண்ணி எழுதப்பட்ட பாடல்கள் என்பதால் பாடல்கள் கவனிக்கப்படும்.

பேக்ரவுண்ட் மியூசிக்ல அவருடைய இசை ஞானம் வெளிப்பட்டிருக்கும். எந்த இடத்திலும் கதையோட மூட் டிஸ்டர்ப் ஆகி இருக்காது. சவுண்ட் அண்ட் சைலண்ட் என்பதுபோல் எங்கே தேவை இருக்கிறதோ அங்கே மியூசிக் இருக்கும். ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்கிறார். சத்யஜித் ரே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்சவர். வடகிழக்கு மொழிகளில் அதிகம் ஒர்க் பண்ணியவர். முதன்முறையா தமிழுக்கு வர்றார். அவருடைய ஸ்பெஷல் கலர்ஸ்.

அடிப்படையில் நான் அனிமேஷன் பேக்ரவுண்ட்ல இருந்து வந்ததால் கலர் பேலட் எப்படியிருக்கணும்னு ஃபிக்ஸ் பண்ணியிருந்தேன். அந்த புரிதல் இருந்ததால லைட்ஸ், ஷாட், கேமரா என பிரமாதமா ஒர்க் பண்ணினார்.ஸ்ரீகர் பிரசாத் சார் உதவியாளர் சங்கத்தமிழன் எடிட்டிங் செய்கிறார். நாங்கள் இருவரும் ‘காலா’ படத்துல சேர்ந்து ஒர்க் பண்ணினோம். ஸ்ரீகர் சார் போலவே நித்தானத்துடன் வேலை செய்தார். தேவையில்லை என்றால் காட்சியை தூக்குவாரே தவிர ஃபிலிமை நெருக்கி பண்ணமாட்டார். ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ பா.இரஞ்சித், ‘பலூன் புரொடக்‌ஷன்ஸ்’ அருண்பாலாஜி தயாரித்துள்ளார்கள்.

என்ன சொல்கிறார் உங்கள் நண்பர் பா.இரஞ்சித்?

என்னுடைய சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள அகரம்தூளி. நெசவுக்குடும்பம். பெயிண்டிங்ல ஆர்வம். ஓவியக் கல்லூரியில் பா.இரஞ்சித், ‘புளூஸ்டார்’ ஜெயகுமார், இந்தப் படத்தோட ஆர்ட் டைரக்டர் ராஜா, பிரபல ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் எல்லோரும் வகுப்புத் தோழர்கள்.

காலேஜ் முடிஞ்சதும் நான் அனிமேஷன் ஃபீல்டுல இருந்தேன். நம்முடைய வாழ்க்கையைப் பேசணும்னு சினிமா பக்கம் வந்தேன். ‘கபாலி’, ‘காலா’வுல பா.இரஞ்சித்துடன் ஒர்க் பண்ணினேன். படம் பண்ணும் வாய்ப்பை இரஞ்சித் ஏற்படுத்திக் கொடுத்தார். இரஞ்சித் படம் பார்த்துவிட்டு, ‘முக்கியமான ஃபிலிம் மேக்கரா வருவேன்’னு சொன்னார்.

தர்மசாலா சர்வதேச ஃபிலிம் பெஸ்டிவலில் படத்தை பார்த்தவர்கள், எழுந்து நின்னு கைதட்டினாங்க. எமோஷன், காமெடி கனெக்ட் பண்ணியதா சொன்னாங்க. அது நம் ரசிகர்களை அதிகம் கனெக்ட் பண்ணும்னு நினைக்கிறேன். அழுத்தமான படத்தை காமெடியில் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.l

எஸ்.ராஜா