இந்தியப் பணக்காரர்கள் படையெடுக்கும் தேசம்!



ஒருகாலத்தில் இந்திய பணக்காரர்கள் குடும்பத்துடன் செட்டிலாகும் நாடுகளாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதலிடத்தைப் பிடித்திருந்தன.
ஆனால், அது எல்லாம் கடந்த காலம். இப்போதைக்கு இந்தியப் பணக்காரர்களின் நிரந்தர புகலிடமாக மாறியிருப்பது ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் (UNITED ARAB EMIRATES - UAE) எனப்படும் யுஏஇ-தான்.

அண்மைய ஒரு கணக்குப்படி இந்த வருட கடைசியில் மாத்திரம் சுமார் 4300 இந்திய லட்சாதிபதிகள் (மில்லியனர்கள்) எமிரேட்டில் டேரா போடத் தயாராக இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.

ஏன் எமிரேட்?

எமிரேட்டில் நம் நாட்டில் இருப்பது போன்று வருமான வரி எல்லாம் கிடையாது. அங்கே எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். அத்தோடு சொத்து வரியும்
அங்கே நஹி. எமிரேட்டின் தலைநகரம்தான் அபுதாபி. இத்தோடு புகழ்பெற்ற நகரம் துபாய். துபாயை ஒரு சொர்க்கபுரி என்றே பலரும் சொல்கிறார்கள். ஆடம்பரமான வாழ்க்கை என்றாலே அது துபாய் வாழ்க்கைதான் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

உதாரணமாக துபாயில் வீடு வைத்திருக்கும் நபர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று சொல்கிறது ஓர் ஆய்வு. அதேபோல அங்கே இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சுமார் 30 சதவீதம் இந்திய நிறுவனங்கள்தான் என்றும் சொல்கிறார்கள்.முன்பெல்லாம் எமிரேட்டில், துபாயில் செட்டில் ஆவது ரொம்ப சிரமம். காரணம், குறைந்த கால அளவில்தான் விசா கொடுப்பார்கள்.

ஆனால், 2022ம் ஆண்டு முதல் எமிரேட் கோல்டன் விசா எனும் பெயரில் 10 வருடத்துக்குக் கூட தங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்து அதற்கேற்ப விசாவும் வழங்கப்படுவதால் இந்தியர்களின் எமிரேட் படையெடுப்பு அதிகரித்திருக்கிறது. மொத்தத்தில் பிசினஸ் வாய்ப்பு, ஆடம்பர வாழ்க்கை மற்றும் பாதுகாப்பான அமைதியான வாழ்க்கைக்கு மற்ற நாடுகளைவிட இப்போதைக்கு எமிரேட்டே நம்பர் ஒன் தேசமாக ஜொலிக்கிறது.

டி.ரஞ்சித்