த கோட் படத்தில் மறைந்த பவதாரிணி வாய்ஸ்...



இந்தி யன் 2வில் மறைந்த விவேக் , மனோபாலா வாய்ஸ்...கெத்து காட்டுகிறார் இந்த தமிழ் AI என்ஜினியர்!

சினிமாவில் இது AI காலம். எங்கும் எதிலும் ஏஐ தொழில்நுட்பம் கலக்க ஆரம்பிதுள்ளது. சமீபத்தில் விஜய் நடிக்கும் ‘த கோட்’ படத்துக்காக மறைந்த பாடகி பவதாரிணி குரலில் ஒரு பாடல் வெளியானது. 
அந்தப் பாடல் வெளிவருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சவுண்ட் என்ஜினியரும் ஏஐ தொழில்நுட்ப நிபுணருமான கிருஷ்ண சேத்தன்.
இவர் ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘லால்சலாம்’ படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்த பாடகர் ஷாகுல் அமீது குரலில் ஒரு பாடலை உருவாக்கியிருந்தார். ‘இந்தியன் - 2’ வேலைகளில் பிஸியாக இருந்த கிருஷ்ண சேத்தனிடம் பேசினோம்.

இசை மீது ஆர்வம் எப்படி வந்துச்சு?

சினிமாவில் நான் மூன்றாம் தலைமுறை. தாத்தா, அப்பா இசைக் கலைஞர்கள். என்னுடைய அப்பா ராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மான் சாரும் பிரபல இசையமைப்பாளர் ராஜ்கோட்டி சாரிடம் ஒன்றாக வேலை பார்த்தவர்கள்.சின்ன வயசுலேர்ந்து எனக்கு மியூசிக் மீது ஆர்வம். படிக்கும்போதே பியானோ கத்துக்கிட்டேன். ஸ்கூல் முடிஞ்சதும் ஆடியோ என்ஜினியரிங் சேர்ந்தேன்.

டி.ராஜேந்தர், எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோரிடம் கீ போர்ட் ப்ளேயராக ஒர்க் பண்ணினேன். 2005லிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடம் சவுண்ட் என்ஜினியராக ஒர்க் பண்ணுகிறேன்.

‘கடல்’, ‘ஜோதா அக்பர்’, ‘ரங்தே பசந்த்’, ‘பொன்னியின் செல்வன் - 2’ உட்பட பல படங்களில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சது. பல விருதுகளும் கிடைச்சது.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் என்ன கத்துக்கிட்டீங்க?

பல இசை நுட்பங்களை அவரிடமிருந்துதான் கத்துக்கிட்டேன். இசைக் கலைஞர்கள் இசைக் கருவிகள் வாசிச்சு முடிச்சபிறகு அதன் பின்னாடி இருக்கும் மிக்ஸிங், மாஸ்டரிங் என அத்தனை வேலைகளையும் சாரிடம் கத்துக்கிட்டேன். ஒருகட்டத்தில் ரஹ்மான் சார் மொத்தப் படத்துக்கான பின்னணி இசை வேலைகளை வழிநடத்தும் பொறுப்பை என்னிடம் கொடுக்க ஆரம்பிச்சார்.

எந்தக் கட்டத்தில் ஒரு பாடல் இறுதி வடிவம் பெறும்?

தற்போது அதிநவீன இசைக்கருவிகளின் பங்களிப்பு அதிகம். பாடல் பதிவான பிறகு மிக்சிங் வேலைகள் நடக்கும். ரஹ்மான் சாரின் இசை ஞானம் எல்லோரும் அறிந்தது.
பிராசஸ் சிஸ்டத்தை சரியாகச் செய்தாலே பாடல் குவாலிட்டியாக வந்துவிடும். எல்லாத்தையும் விட நம் காதுகளை வைத்து இசையின் தரத்தை உறுதி செய்ய முடியும். இசையை மீட்டர் வைத்து தரம் பிரிக்க முடியாது.

இசை என்பது நான்கு வழிப் பாதை மாதிரி. மியூசிக், ரிதம், வாய்ஸ், வரிகள் என பிரிக்கலாம். இந்த நான்கிலும் எது எந்த இடத்தில் முக்கியம் என்று ஜட்ஜ் பண்ண தெரிஞ்சிருக்கணும்.
வாய்ஸ், வரிகளில் க்ளியாரிட்டி இருக்கணும். வாய்ஸை மியூட் பண்ணிக் கேட்டாலும் பாடல் கேட்கும்படியாக இருக்கணும். அதுதான் என்னுடைய அணுகுமுறை.

தமிழி சினிமாவில் நவீன தொழில்நுட்பத்தின் பங்களிப்பு எப்படி உள்ளது?

ஹாலிவுட்டுக்கு நிகராக இங்கேயும் டெக்னிக்கலாக பல வசதிகள் வந்துவிட்டன. ஆனால், அங்குள்ள பட்ஜெட், நேரம், டெக்னீஷியன்கள் வேல்யூ வேறு, இங்குள்ள பட்ஜெட், நேரம், டெக்னீஷியன்கள் வேறு.ஹாலிவுட்டில் சில படங்களுக்கு நான் வேலை செய்துள்ளேன். அங்கு ஒன்றரை மணி நேரப் படத்துக்கு மூணு மாசம் டைம் தருகிறார்கள். 

இங்கு இரண்டரை மணி நேர படத்துக்கு இருபது மணி நேரம்தான் டைம் கொடுக்கிறார்கள். அப்படியிருந்தால் எப்படி குவாலிட்டி தரமுடியும்? அங்குள்ள பட்ஜெட்டில் பத்து சதவீதம் கூட இங்கு இருக்காது.

இது பெரிய படங்களுக்கும் பொருந்தும். டெக்னிக்கல் அம்சங்கள் ஒரே மாதிரி இருந்தாலும் டைம், கிரியேட்டிவிட்டி, ஃப்ரீடம் முக்கியம். அதுதான் ஒரு படத்தை வேற லெவலுக்கு கொண்டு போகும்.

ஷங்கர் சார், மணி சார் படங்களில் டைம், கிரியேட்டிவிட்டிக்கான ஸ்பேஸ் கிடைக்கும். அது கிடைச்சா குவாலிட்டி கிடைக்கும். இங்கு நான்கு பாடல்கள், பின்னணி இசையை அஞ்சு, பத்து லட்சத்துக்கு பண்றாங்க. டெக்னிக்கல் வசதி இருந்தாலும் அதுல என்ன குவாலிட்டி தரமுடியும்?

‘த கோட்’ படத்தில் பவதாரிணியை பாடவைக்க வேண்டும் என்ற ஐடியா எப்படி உருவானது?

என்ஜினியரிங் படிச்சதால டெக்னாலஜி சம்பந்தமா பல புது முயற்சிகள் பண்ணுவேன். ரஹ்மான் சார் எந்தவொரு இசைக் கருவியை வாங்கினாலும் அதை நோண்டிப் பார்க்கும் வேலையை என்னிடம்தான் கொடுப்பார்!எனக்கும் டெக்னிக்கல் ஆர்வம் அதிகம். கொரோனா காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்துல பல வாய்ஸ் குரல் ஆராய்ச்சி பண்ணினேன்.

எலக்ட்ரானிக் சிஸ்டத்தில் வாய்ஸ்ல ஆட்டோ டியூன் என்ற வசதி உள்ளது. பாடகர் தப்பா பாடினாலும் அது கரெக்ட் பண்ணிக் கொடுத்துவிடும்.  அப்படி நான் பண்ணிய கீ போர்ட் டிவைஸுக்கு பல அமெரிக்க விருதுகள் கிடைச்சது.அதன்படி ‘லால்சலாம்’ படத்தில் ஷாகுல் அமீது குரல் யூஸ் பண்ணினோம். அடுத்து பவதாரிணி குரல் யூஸ் பண்ணினோம். ‘இந்தியன் - 2’ படத்தில்  மனோபாலா, விவேக் சார் குரலை ஏஐ மூலம் கொண்டு வந்துள்ளோம்.

ஏஐ பாடலை சுலபமா பண்ண முடியாது. அதை உருவாக்க அதி நவீன ஸ்டூடியோ வசதி வேண்டும். யுவன் சாரிடமிருந்து பவதாரிணி மேடத்தின் ரிக்கார்டிங் டேட்டா வாங்கி ஒர்க் பண்ணினேன்.ஏஐ தொழில்நுட்பம் ஒரு குரலை லிரிக், ஸ்ருதி, வாய்ஸ் டெக்ச்சர் என மூணா பிரிக்கும். ஒவ்வொரு குரலின் ஸ்ருதியையுடம்  ஃபோட்டோ மாதிரி படம் பிடித்து வைத்துக்கொள்ளும்.அதாவது ஒரு புத்தகத்தை பத்தாயிரம், பதினைந்தாயிரம் முறை படிப்பதைப் போல மீண்டும் மீண்டும் ஒரு குரலை பல ஆயிரம் முறை அனலைஸ் பண்ணி ஒரு மாடலை ரெடி பண்ணித் தரும்.

அதை வெச்சு வேறு ஒரு பாடகரை பாட வெச்சு, இதுதான் புது டியூன் என அதை ஏஐ தொழில்நுட்பத்துக்கு உட்படுத்த வேண்டும்.மீண்டும் அது புதிய பாடலில் உள்ள குரல், ஸ்ருதியை அனலைஸ் பண்ணும். அதிலிருந்து புதிய வாய்ஸ் டெக்சரை தூக்கிவிட்டு பவதாரிணி அல்லது வேறு யார் குரல் வேண்டுமோ அதை சிந்தசைஸ் பண்ணிக் கொடுக்கும்.
அப்படி ‘லால் சலாம்’ படத்துக்காக பண்ணிய பாடல் சக்சஸ் ஆச்சு. அந்தப் பாடலில் என்னுடைய பங்களிப்பைக் குறித்து ரஹ்மான் சார் பல பேட்டிகளில் சொல்லியிருந்தார்.

ஏஐ தொழில்நுட்பம் சினிமாவில் வேறென்ன பங்களிப்பைக் கொடுக்க முடியும்?

உள்ளூரில் இருக்கும் ஹீரோ, சர்வதேச அளவில் சென்றடைய முடியும். தமிழ் நடிகரின் படத்தை தெலுங்கு, மலையாளம், ஜப்பான், சைனீஸ்... என உலகின் பல மொழிகளில் அவர்களின் மொழி அடையாளத்துடன் டப் பண்ணி அந்த மொழிக்கான ரசிகர்களைச் சென்றடைய முடியும்.இது தமிழ் ஹீரோ தெலுங்கு பேசுவது மாதிரியான டப்பிங் கிடையாது. தமிழ் ஹீரோவுக்கு தெலுங்கு மொழி தெரிந்தால் எப்படி பேசுவாரோ அதுபோன்ற இம்பேக்ட் கொடுக்கும்.

ஏஐ தொழில் நுட்பத்தால் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேலை பறி போகும் அபாயம் இருக்குமா?

‘த கோட்’ படத்தில் பவதாரிணி மேடம் பாடிய பாடலாக இருந்தாலும் அந்தப் பாடலை ஒரு பாடகியை வைத்துதான் ரிக்கார்டிங் பண்ணினோம். அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.
அதே மாதிரிதான் டப்பிங் வேலைகளும் நடக்கும். விஜய் சார் படம் இந்தியில் டப் செய்யப்படுகிறது என்றால் இந்தி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை வெச்சு டப் செய்யப்படும். பிறகு அவர் பேசிய அந்த டெக்சரை விஜய் சார் குரலுக்கு மாத்த முடியும். அதனால் எல்லோருக்கும் வேலை உண்டு. வேலையில்லாத நிலை ஏற்படவே வாய்ப்பு இல்லை.

ஏஐ தொழில்நுட்பத்தால் பலன் நிறைய உண்டு. பொதுவா பெரிய நடிகர் படம் என்றால் ஹீரோவுக்கு எந்தக் குரல் பொருந்தும் என்று நாலைந்து பாடகர்களை வெச்சு டெஸ்ட் எடுக்கப்படும். ஏஐ தொழில் நுட்பத்தில் முன்கூட்டியே எந்தக் குரல் பொருத்தமாக இருக்க முடியும் என்பதைக் கணிக்க முடியும்.ஏஐ சினிமாவில் எல்லா துறைகளிலும் வந்துவிடும். எல்லா வேலைகளையும் வேகமாக செய்யமுடியும். ஆனால், மனித உழைப்பு இல்லாமல் சாத்தியப்படுத்த முடியாது.

ஏஐ என்றால் என்ன?

அது குழந்தை மூளை மாதிரி. குழந்தைகள் தப்பு பண்ணும்போது, அதை நாம் திருத்தும்போது, குழந்தைகள் எப்படி கற்றுக் கொள்கிறார்களோ அதுபோல ஏஐ தொழில்நுட்பம்.
அடிப்படையில அது ஒரு வேலை செய்யும். அது கரெக்ட்டா, இல்லையா என அதுவே சொல்லும். இறுதியாக நாம் கரெக்ட் என்று சொன்னதும் அதை ஃபைனல் செய்து கொள்ளும்.l

எஸ்.ராஜா