யார் இந்த ஜூலியன் அசாஞ்சே?இன்று உலகம் முழுவதும் ஹாட் நியூஸே, ஜூலியன் அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டதுதான். 
அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் இவர். அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்தியவர்கள் எல்லோரும் ஜூலியனைக் கண்டு நடுங்கினார்கள். மக்களுக்கு எதிராக நடக்கின்ற சதித் திட்டங்களை எல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் இவர்.

உண்மையில் யார்தான் இந்த ஜூலியன் அசாஞ்சே?

ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் அமைந்துள்ள டவுன்ஸ்வில்லி நகரில் பிறந்தார் ஜூலியன் பால் ஹாக்கின்ஸ். இவருடைய தந்தை ஜான் சிப்டன், போருக்கு எதிரான போராளியாக இருந்தவர்; அம்மா கிறிஸ்டின் ஒரு விஷுவல் ஆர்ட்டிஸ்ட். 
ஜூலியன் பிறப்பதற்கு முன்பே பெற்றோர்கள் பிரிந்துவிட்டனர். ஜூலியனுக்கு ஒரு வயதாக இருந்தபோது, அவருடைய அம்மா பிரட் அசாஞ்சே என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். வளர்ப்புத் தந்தையின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டு ஜூலியன் அசாஞ்சேவாக மாறினார்.

ஜூலியனின் அம்மா பிரட்டையும் விவாகரத்து செய்துவிட்டு, இன்னொருவருடன் வாழத் தொடங்கினார். நிலையான திருமண வாழ்க்கையில் அம்மா இல்லாததால், ஜூலியனின் குழந்தைப்பருவமும் அலைக்கழிப்புக்கு உள்ளானது. 

பத்து வயதுக்குள்ளேயே முப்பது இடங்களுக்கு மேல் இடம்பெயர்ந்துகொண்டே இருந்தார் ஜூலியன். அத்துடன் பல பள்ளிகளில் படிக்க வேண்டிய நிலை. ஆனால், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தார். தொண்ணூறுகளில் மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமிங், கணிதம், இயற்பியல் குறித்து படித்தார்.

ஜூலியனுக்கு ஹேக்கிங் மீதுதான் தீவிர காதல். 16 வயதிலேயே ஆஸ்திரேலியாவின் பயங்கரமான ஹேக்கராக வலம் வர ஆரம்பித்தார். ஆனால், ஹேக்கிங்கிலும் ஒரு அறத்தைக் கடைப்பிடித்தார்.

ஆம்; ஹேக்கிங் செய்யும் தகவல்கள் மற்றும் சிஸ்டத்தை சேதப்படுத்தக்கூடாது என்பதுதான் அவரது ஹேக்கிங் அறம். இருபது வயதிலேயே அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையின் தலைமையகத்தில் உள்ள சிஸ்டங்களை ஹேக்கிங் செய்து உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். மட்டுமல்ல, மிகவும் பாதுகாப்பான நாசாவின் கம்ப்யூட்டர்களுக்குள் ஊடுருவி அதிர்ச்சியைக் கொடுத்தார்.

இப்படியான ஹேக்கிங் சம்பவங்களால் ஆஸ்திரேலியாவிலேயே ஜூலியன் மீது பல வழக்குகள் உள்ளன. இந்த ஹேக்கிங்கின் அடுத்த கட்டமாக 2006ல் ‘விக்கி லீக்ஸ்’ என்ற இணைய பத்திரிகையைத் தொடங்கினார் ஜூலியன்.முதல் செய்தியாக சோமாலியாவில் நடக்கும் அரசின் முறைகேடுகளை ஹேக்கிங் செய்து ‘விக்கிலீக்ஸில்’ வெளியிட்டு, அதிர்ச்சியைக் கிளப்பினார்.

அதாவது சோமாலியாவில் அரசு அதிகாரிகளைப் படுகொலை செய்ய கூலிப்படையினரை சோமாலியா தலைவர் ஒருவர் ஊக்குவித்திருக்கிறார்... என்பதுதான் ‘விக்கிலீக்ஸில்’ வெளியிடப்பட்ட முதல் தகவல்.

இதுபோல, பல நாட்டு அரசுகளின் ரகசியங்களை ஹேக்கிங் மூலமாகப் பெற்று, ‘விக்கிலீக்ஸில்’ அவர் வெளியிட்டார். கியூபாவில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தின் குவாண்டனாமோ சிறை தொடர்பான முக்கிய விவரங்களை ‘விக்கிலீக்ஸில்’ அவர் வெளியிட்டு அதிரவைத்தார்.‘விக்கிலீக்ஸி’ல் கூட ‘அறத்தைக் கடைப்பிடிக்கும் மிகவும் பிரபலமான கம்ப்யூட்டர் ஹேக்கர்’ என்றுதான் அவரைப் பற்றி இருக்கிறது. உலகின் முக்கிய ரகசியங்களைக் கொட்டும் ஓர் இணையதளமாக ‘விக்கிலீக்ஸ்’ மாறியது.

2010ல் ஈராக், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் சம்பந்தமான ரகசியங்களை ஹேக்கிங் செய்து ‘விக்கி லீக்ஸி’ல் வெளியிட்டார் ஜூலியன். ஆம். அமெரிக்காவின் ரகசியங்கள் நிறைந்த 250,000 ஆவணங்கள் ‘விக்கிலீக்ஸில்’ கசிந்தன. குறிப்பாக, ஈரான் நாட்டை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்கா திரைமறையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் எல்லாம் ‘விக்கிலீக்ஸில்’ கசிந்தன.

உலகம் முழுவதிலுமிருந்து அமெரிக்கா மீது கண்டனங்கள் குவிந்தன. இதனால் அமெரிக்காவின் கடும் கோபத்துக்கு அசாஞ்சே ஆளானார். ‘அமெரிக்க தேசத்தின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக’ அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறினார். ஆனாலும், ‘விக்கிலீக்ஸில்’ அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள் கசிந்தபடியே இருந்தன.
அமெரிக்காவின் ‘ரகசிய அரசியல் நடவடிக்கைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்காக’ சர்வதேச அளவில் அசாஞ்சே பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்தல் மற்றும் உளவு பார்த்தல் ஆகிய ‘குற்றங்களுக்காக’ வழக்கு சுமத்தப்பட்டு, அமெரிக்க நீதித்துறையால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் ஜூலியன். இன்னொரு பக்கம் இதே வருடத்தில் ஸ்வீடனில் ஒரு பாலியல் வன்முறை வழக்கு ஜூலியன் மீது சுமத்தப்பட்டது. பாலியல் வழக்காலும், அமெரிக்கா கொடுத்த நெருக்கடியாலும் தவித்த ஜூலியன், லண்டனில் ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். ஜூலியனுக்கு ஆதரவாக லேடி காகா உட்பட உலகப் பிரபலங்களும், சமூக வலைத்தள பயனாளிகளும் ஆதரவுக்குரலை எழுப்பினார்கள்.

ஈக்வடார் தூதரகமும் ஜூலியனைக் கைவிட, 2019ம் வருடம் கைது செய்யப்பட்டு, லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். வருடங்கள் ஓடிவிட்டதால் பாலியல் வழக்கை ஸ்வீடன் கைவிட்டது. ஆனால், அமெரிக்கா ஜூலியனை விடுவதாக இல்லை. ஆம்; ஜூலியனை அமெரிக்காவுக்குக் கொண்டு வர, அந்நாட்டு அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த வழக்கு மூன்று வருடங்கள் தொடர்ந்தன.

2022ம் வருடம் ஜூலியனை நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜூலியனும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கு நடந்து வந்தது.
இந்நிலையில்தான் இங்கிலாந்து சிறையிலிருந்த ஜூலியன், அமெரிக்க நீதித்துறையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். அதாவது அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களை ‘விக்கிலீக்ஸில்’ வெளியிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார் ஜூலியன்.

இந்த உளவு பார்த்தல் குற்றத்துக்காக அமெரிக்காவில் 5 ஆண்டு சிறைத்தண்டனையை அசாஞ்சே ஏற்கவேண்டும். ஆனால், ஏற்கனவே இங்கிலாந்தில் 5 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். ஒருவேளை அசாஞ்சே இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளவில்லை என்றால் 150 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும். அதாவது இறக்கும் வரை அவர் சிறையில்தான் இருந்திருக்க வேண்டும்.இப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது குடும்பத்துடன் இணைந்துவிட்டார். ஜூலியனின் விடுதலை அவரது குடும்பத்தை அளவில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

த.சக்திவேல்