1500 ஆண்டுக்கு முற்பட்ட இசையை கொண்டு வர சிரமப்பட்டோம்...



‘காந்தாரா சேப்டர் 1’ செம ஹிட் அடித்திருக்கிறது. இதில் ரிஷப் ஷெட்டி நடிப்பிலும் இயக்கத்திலும் அதகளம் செய்தாலும் படத்தை நிறைவடைய செய்திருப்பது இசைதான். 
ரசிகர்களை அந்தக் கால இசைக்குள் கொண்டு சென்று கட்டிப் போட்டுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத். ஏற்கனவே ‘காந்தாரா’, ‘கிரிக் பார்ட்டி’, ‘சர்க்காரி ஹாய்’, ‘பிரா-மேன்’, ‘ஷாலா காசர்கோடு’, ‘கொடுகே: ராமண்ணா ராய்’ என ரிஷப் ஷெட்டியுடன் கைகோர்த்து நடந்தவர். இப்போது ‘சேப்டர் 1’ல் கலக்கியிருக்கிறார். 

மியூசிக்கலா எப்படி டிராவலானீங்க?

‘காந்தாரா சேப்டர் 1’க்காக நிறைய ரிசர்ச் வொர்க் பண்ணினோம். பழங்குடியினர் இடத்துக்கே நேரடியாகப் போய் பார்த்துப் பேசி, அவங்க ளோடு பழகினோம். அவங்க எந்த இசைக் கருவியை வாசிக்கிறாங்க, அதை எதுக்காக யூஸ் பண்றாங்கனு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டோம்.அப்படியாக அவங்களோட நாட்டுப்புறப் பாடல்களைப் பண்ணினோம். அவங்க இசையின் ஓசையை பல தடவை எக்ஸ்பரிமெண்ட் செய்தோம். 

1,500 வருஷத்துக்கு முன்னாடி இசை எப்படியிருந்ததுனு யாருக்கும் தெரியாது. அது எங்களுக்கு பிளஸ். இருந்தும் ரொம்ப கவனமா பண்ணினோம். இதுதவிர, கர்நாடக மியூசிக் ஸ்காலர்ஸ்கிட்ட, அந்தக்கால மியூசிக்லாம் எப்படி இருந்தது எனக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டோம். ‘பிரம்மா கலசம்...’ பாடல் அப்படிக் கேட்டுப் போட்டதுதான். 

அப்புறம், இதுக்காக கோஸ்டல் கர்நாடகா பகுதிகளில் இருக்கிற சின்னச் சின்ன நாட்டுப்புறக் கலைஞர்களின் பழங்குடி இசையை அவங்க இடத்திற்குப் போய் ரிக்கார்டு செய்திட்டு வந்தோம். பழங்குடி மக்களின் வாழ்க்கையே தனிதான். அவங்க அடர்ந்த காடுகள்ல வாழ்ந்துகிட்டு இந்த இசைக்கருவிகளை எல்லாம் வாசிச்சிட்டு இருக்காங்க. 

இதிலிருந்த சவால்கள் என்ன?

எல்லாமே சவால்தான். குறிப்பா, 1500 வருஷத்துக்கு முன்னாடி இருந்த இசைக்கான ரெஃபரன்ஸை யாராலும் கொடுக்க முடியாது. நாங்கதான் எங்களின் கற்பனையில் பண்ண வேண்டியிருந்தது. 

அதுதான் பெரிய சவால்.அப்புறம் ஃபோக், கர்நாடிக், கிளாசிக்கல்னு எல்லா இசை யையும் இதில் கலந்து கொண்டு வந்தது இன்னொரு சவால். மொத்தமாக இந்தப் படத்திற்கு பேக்கிரவுண்ட் ஸ்கோர் மட்டுமே மூணு வருஷத்துக்கு மேல் வொர்க் பண்ணினோம். 

ரிஷப் ஷெட்டி சாமியாடும் காட்சியில் வரும் இசை ரொம்பவே தனித்துவமாக இருந்ததே..?

ஆமாம். தான் சாமியாடும்போது குழந்தைங்க பயப்படக் கூடாது, பக்தியுடன் ரசிக்கணும்னு ஆரம்பத்திலேயே ரிஷப் சொல்லியிருந்தார். அதாவது அந்தத் தோற்றம் ரொம்ப உக்கிரமா இருக்குனு யாரும் சொல்லிடக்கூடாது. 

அதைப் பார்க்கிற ஆடியன்ஸுக்கு கடவுள்னு மனசுல தோன்றணும். அந்த உணர்வைக் கடத்துகிற மாதிரி இசையைக் கொண்டு வந்தோம்.  

எங்கெல்லாம் உக்கிரமான ஆக்டிங் தெரியுதோ அங்கெல்லாம் பக்திப் பரவசமான மியூசிக்கை போட முயற்சி செய்தேன். இப்ப, அது சரியாகப் போய்ச் சேர்ந்து ரசிகர்கள்கிட்ட பாராட்டைப் பெற்றுத் தந்திருக்கு. 

‘சேப்டர் 2’ வரும்னு சொல்லப்படுதே..?

கண்டிப்பா அதுவும் இசைக்காகப் பேசப்படும். ‘சேப்டர் 2’ எந்தமாதிரியாக இருக்கும்னு இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது. அந்தக் கதை வளரும்போது அதற்கேற்ப எப்படி பண்ணலாம்னு ஒரு ஐடியா தோணும். 

அப்படி பண்ணுவேன். ‘காந்தாரா’வைவிட ‘சேப்டர் 1’க்குத்தான் நிறைய பாராட்டுகள் கிடைச்சிருக்கு. தேசிய, சர்வதேச அளவில் வரவேற்புகள் வந்திருக்கு. முன்னணி டைரக்டர்கள், ஹீரோ, ஹீரோயின்ஸ், டெக்னீஷியன்ஸ்னு பல தரப்பிலிருந்து வந்த பாராட்டுகள் நெகிழ வச்சிடுச்சு. 

நாங்க வொர்க் பண்ணியது மட்டும் எங்களுக்குத் தெரியும். வழக்கம்போல் எங்க வேலைகளைச் செய்தோம். அது இவ்வளவு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது சந்தோஷமா இருக்கு. 

இப்ப என்னென்ன படங்கள் பண்றீங்க? 

கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ்னு நான்கு மொழிகளிலும் பண்றேன். கன்னடத்தில் ‘மார்க்’னு சுதீப் சார் ஹீரோவாக நடிக்கிற படம் பண்றேன். அப்புறம், ‘டெவில்’னு தர்ஷன் நடிச்ச படமும், ‘லேண்ட் லார்டு’னு துனியா விஜய் நடிச்ச படமும் பண்றேன். மலையாளத்தில் ‘காட்டாளன்’னு ஆண்டனி வர்கீஸ் நடிக்கிற படம் பண்றேன். அப்புறம், தமிழில் ‘மகாராஜா 2’ பண்ணிட்டு இருக்கேன். ‘மகாராஜா’ படம் பண்ணினப்ப தமிழ் மக்கள் நல்ல வரவேற்பு தந்தாங்க. இதற்கும் அந்த வரவேற்பு கிடைக்கும்னு நம்புறேன்.

ஆர்.சந்திரசேகர்