மூன்று பேரும் ஒரு வெற்றிக் கோப்பையும்!



முதல் முறையாக பெண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது, இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி. நாலாப்பக்கமிருந்தும் இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்திய அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த மூன்று பேரைப் பற்றிப் பார்ப்போம்.  

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

சமீபத்தில் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி செய்தி சேனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக இடம்பிடித்த ஒரு பெயர், ஜெமிமா ரோட்ரிக்ஸ். 

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல மூல காரணமாக இருந்தவர் ஜெமிமா என்றால் மிகையாகாது. 
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதியது. ஆஸ்திரேலியா 338 ரன்களைக் குவித்தது. ஒரு நாள் போட்டியில், அதுவும் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் உலகக் கோப்பை அரையிறுதியில் 338 ரன்கள் என்பது பெரும் சவாலை முன்வைக்கக்கூடிய, இமாலய ஸ்கோர். 

இந்த ரன்களைத் துரத்திக்கொண்டு வந்து, 341 ரன்களைக் குவித்து  இந்தியா வெற்றி பெற்றது சாதாரண விஷயம் இல்லை. இப்போட்டுயில் ஆட்டமிழக்காமல், 127 ரன்கள் அடித்து இறுதிப்போட்டியில் இந்தியா நுழைவதற்கு காரணமாக இருந்தார் ஜெமிமா. 

மும்பையைச் சேர்ந்த ஜெமிமா 4 வயதிலேயே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டார். தந்தை இவான் ரோட்ரிக்ஸ்தான் ஜெமிமாவின் ஆரம்ப கால பயிற்சியாளர். 

கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஹாக்கியையும் சிறப்பாக விளையாடக்கூடியவர். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகாராஷ்டிராவின் பெண்கள் ஹாக்கி அணியில் தேர்வு செய்யப்பட்டவர் ஜெமிமா என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஜெமிமாவுக்கு வயது 25தான். இன்னும் குறைந்தபட்சம் 10 வருடங்கள் விளையாடுவார். பெண்கள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை ஜெமிமா முறியடிப்பார். 

அமோல் மஜூம்தார்

ஒருவரிடம் உண்மையாகவே திறமையிருந்தால், அது எல்லா தடைகளையும் உடைத்துக்கொண்டு வெளிவந்துவிடும் என்பதற்கு உதாரணம், அமோல் மஜூம்தாரின் வாழ்க்கை. 

மும்பையில் பிறந்து, வளர்ந்தவர் அமோல். தெண்டுல்கரின் ஆரம்பகால பயிற்சியாளரான ராமகாந்த் அச்ரேக்கர்தான் அமோலுக்கும் பயிற்சியாளர். 1993-94 சீசனுக்கான ரஞ்சிக்கோப்பை போட்டியில் மும்பை அணியின் சார்பாக களமிறங்கினார் அமோல்.

 இதுதான் அவர் அறிமுகமான முதல் ரஞ்சிக் கோப்பை போட்டி. முதல் போட்டியிலேயே 260 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் அறிமுகமான முதல்தரப் போட்டியில் இவ்வளவு ரன்களை அடித்ததில்லை. இச்சாதனை 2018ல்தான் முறியடிக்கப்பட்டது. 

1994ம் வருடம் இங்கிலாந்துக்குச் சென்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் அமோல். ‘புது தெண்டுலகர்’ என்று அமோலைப் புகழ்ந்தனர். இந்திய ‘ஏ’ அணியில் ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலியுடன் சேர்ந்து விளையாடினார். 

171 முதல் தரப் போட்டிகளில் விளையாடி, 11,167 ரன்கள் குவித்தார். இதில் 30 சதங்களும், 60 அரைச் சதங்களும் அடங்கும். ஆனால், இந்திய தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பே அமோலுக்குக் கிடைக்கவில்லை.

 அவருடைய காலத்தில் விளையாடிய  தெண்டுல்கர், டிராவிட், கங்குலிக்கு எல்லாம் இந்திய அணியில் இடம் கிடைத்து, அவர்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடினார்கள். இதைப் பார்த்த அமோலுக்கு ஏக்கம் மட்டுமே மிஞ்சியது. இந்திய தேசிய அணியில் அமோலுக்கு இடம் கிடைக்காததைப் பற்றி தேர்வுக் கமிட்டி மீது விமர்சனங்கள் கூட வைக்கப்பட்டன. கடைசி வரை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய தேசிய அணியில் அமோலுக்கு இடம் கிடைக்கவேயில்லை. 

2002ல் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கிவிடலாம் என்று முடிவு செய்தார். ஆனால், அவரால் இயலவில்லை. 2006 - 2007  சீசனுக்கான ரஞ்சிக் கோப்பை போட்டியில் பங்குபெற்ற மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் அமோல். ரஞ்சிக் கோப்பையை வென்று கொடுத்ததோடு, மும்பை அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையையும் தன்வசமாக்கினார், அமோல். 

ஆனால், 2009ல் முஸ்தாக் அலி டி20 கோப்பைக்கான மும்பை அணியில் அமோலுக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் அசாம் அணிக்காக விளையாடினார். 2012ல் ஆந்திரப் பிரதேச அணிக்காக விளையாட இரண்டு வருடங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், இளைஞர்களுக்கு வழிவிட்டு, இடையிலேயே விலகிக் கொண்டார். பயிற்சியாளராக புது அவதாரம் எடுத்தார் அமோல். 19 மற்றும் 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய தேசிய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் அமோல். 

2013ல் நெதர்லாந்து தேசிய அணியில் பேட்டிங் ஆலோசகராகவும் தேர்வு செய்யப்பட்டார். அவரது பயிற்சியாளர் திறமையை அங்கீகரிக்கும் விதமாக 2018ம் வருடம் ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவி தேடி வந்தது. 

கடந்த 2023ம் வருடம் அக்டோபர் மாதம் இந்தியப் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக அமோலை நியமித்தது பிசிசிஐ. அமோலின் திறமையான பயிற்சியால் இந்தியப் பெண்கள் அணி முதல் முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது. 

ஹர்மான்பிரீத் கவுர்

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியை வெற்றியை நோக்கி வழி நடத்திய கேப்டன், ஹர்மான்பிரீத் கவுர். ஆல்ரவுண்டராக வலம் வரும் ஹர்மான்பிரீத், பஞ்சாப்பில் உள்ள மோகா நகரில் பிறந்து, வளர்ந்தவர். 

சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை, சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே இந்திய வீராங்கனை, பெண்களுக்கான ஒரு நாள் போட்டிகளில் 3000 ரன்களுக்கு மேல் அடித்த மூன்று இந்திய வீராங்கனைகளில் ஒருவர், 150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர்... இப்படி எண்ணற்ற பெருமைக்கு சொந்தக்காரர்தான் ஹர்மான்பிரீத் கவுர்.

ஆண் கிரிக்கெட் வீரர்கள் கூட இவ்வளவுசர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியதில்லை என்பதுதான் ஹைலைட். மட்டுமல்ல, ஹர்மான்பிரீத்தின் தலைமையில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி பல சர்வதேசப் போட்டிகளில் வென்றிருக்கிறது. உலகக் கோப்பையை இந்தியப் பெண்கள் அணி கைப்பற்ற ஹர்மான்பீரித்தின் தலைமையும், அரை இறுதியில் அவர் காட்டிய அதிரடியும் ஒரு காரணம். 

ஏழு முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாதான் அரையிறுதியில் வெற்றி பெறும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூட கணித்திருந்தனர். அதற்கேற்றாற் போல் ஆஸ்திரேலியாவும் அதிரடியாக ஆடி 338 ரன்கள் குவித்தது. 

அரையிறுதி மாதிரியான நாக் அவுட் போட்டியில்தான் தனது தலைமைப் பண்பையும், சிறப்பான ஆட்டத்தையும் ஒரு கேப்டன் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் ஹர்மான்பிரீத். 

ஆம்; இளம் வீராங்கனை ஜெமிமாவுடன் நல்ல கூட்டணியை அமைத்ததோடு, அதிரடியாக விளையாடி 89 ரன்களைக் குவித்தார். ஹர்மான்பிரீத் - ஜெமிமா கூட்டணி 167 ரன்களைக் குவித்து, வெற்றியை இலகுவாக்கியது. இதுவரை நடந்த பெண்களுக்கான ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன் சேஸிங் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.  

த.சக்திவேல்