இந்தப் பாம்பின் விலை ரூ. 2 கோடி!
மும்பையில் நடந்த நகைகள் மற்றும் ஆக்ஸசரிஸ்களுக்கான கண்காட்சியில் இந்த வருடம் இந்தியர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது பாம்பு நகைகள்.
சமந்தா, கீர்த்தி சுரேஷ், பிரியங்கா சோப்ரா... என பல பிரபலங்கள் பாம்பு நெக்லஸில் காட்சி கொடுத்தனர். உலக கோடீஸ்வரர்களின் நகைப் பெட்டிகளையும் அவர்கள் கழுத்தையும் மட்டுமே அலங்கரித்த இந்த நகைகள் தற்போது இந்திய மார்க்கெட்டிலும் கால் பதித்துள்ளதுதான் ஹைலைட். இதென்ன பாம்பு நகைகள், யாருடைய டிசைன் எனத் தேடினால் வரலாறு நம்மை 18ம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்கிறது.  சோதிரியோஸ் வூல்காரிஸ்... 1857ம் ஆண்டு கிரீஸ் நாட்டின் பரமிதியா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை வெள்ளி ஆபரணங்கள் வடிவமைக்கும் பணியாளர். சிறுவயதிலிருந்தே சோதிரியோஸ் தந்தையுடன் சேர்ந்து நகை செய்வதைக் கற்றுக்கொண்டார். வெள்ளி வேலைகளில் சிறிய கைவினைப் பொருட்களை உருவாக்கி விற்பது அவரது வாழ்க்கையின் ஆரம்பம். அவருக்கு கலை, அழகு, வடிவமைப்பு இவற்றில் தீவிரமான ஆர்வம் இருந்தது.  திடீரென கிரீஸில் அரசியல் குழப்பங்களும் பொருளாதார சிக்கல்களும் ஏற்பட்டன. இதனால் சோதிரியோஸின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உறுதியுடன் அவர் தனது பிறந்த நாட்டை விட்டுவிட்டு புதிய வாய்ப்புகளைத் தேடி இத்தாலிக்குப் புறப்பட்டார்.
தன்னிடம் இருந்த சிறிய பணம், பெரிய கனவு ஆகியவைதான் அவரது மூலதனம்.1880களில் அவர் இத்தாலியின் ரோம் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு சிறிய கடையைத் தொடங்கி வெள்ளி ஆபரணங்களை விற்கத் தொடங்கினார்.
அவரது வேலைகளில் இருந்த நுணுக்கம் மற்றும் தனித்துவம் காரணமாக வாடிக்கையாளர்கள் விரைவாகவே அதிகரித்தனர். ரோமின் மக்கள் அவரது கைத்திறனை ரசித்து, அவரது ஆபரணங்களை பெருமையுடன் அணிந்தனர்.
இதன் மூலம் சோதிரியோஸுக்கு தன்னுடைய வாழ்நாள் கனவு எட்டிப் பிடிக்கும் தூரத்திற்கு வந்தது.1884ம் ஆண்டில் அவர் ரோம் நகரிலேயே தனது முதல் நகைக் கடையை நிறுவினார்.
தனது குடும்பப் பெயரான ‘Voulgaris’ என்பதிலிருந்து ‘Bulgari’ என்ற பெயரை உருவாக்கி பிரத்யேக ஆடம்பர நகை பிராண்டாக உருவாக்கினார். சோதிரியோஸ் வடிவமைத்த நகைகள் வித்தியாசமானவை.
மாணிக்கம், மரகதம், ரத்தினங்களை மிகச் சுலபமாக தனது நகைகளில் இணைத்து வடிவமைத்தார். அவர் நகைகளில் சேர்க்கும் விலையுயர்ந்த கற்களின் மதிப்பு, அதன் விலை என எதைப் பற்றியும் கவலைகொள்ளவில்லை.
ரோமானிய கலை மற்றும் நவீனம் இணைந்த அவரது வடிவமைப்புகள் ‘புல்காரி’யின் தனிச்சிறப்பாக மாறி அரச குடும்பங்களின் பாரம்பரிய நகைப் பட்டியலில் இணையத் துவங்கின.
அழகுக்கான நகையாக இருந்த ‘புல்காரி’ ஒரு கட்டத்தில் அந்தஸ்தின் அடையாளமாக மாறியது. காலப் போக்கில் இந்த நகை அணிந்தால் அவர் கோடீஸ்வரர் எனச் சொல்லும் நிலைக்கு ‘புல்காரி’ பிராண்ட் வளர்ச்சியடைந்தது. அவரது மகன்களும் பின்னர் இந்தத் தொழிலைத் தொடர்ந்தனர். அவர்கள் ‘புல்காரி’யை ஒரு சிறிய கடையிலிருந்து உலகப் புகழ் பரவிய பிராண்டாக மாற்றினர்.
‘புல்காரி’ தற்போது நகைகளுடன் கைக்கடிகாரங்கள், வாசனைத் திரவியங்கள், பைகள், மற்றும் சொகுசு ஹோட்டல்கள் வரை விரிந்துள்ளது.சோதிரியோஸ் வூல்காரிஸ் 1932ம் ஆண்டு மறைந்தார். ஆனால், அவர் உருவாக்கிய ‘புல்காரி’ நிறுவனம் இன்றும் அவர் பெயரை உலகம் முழுக்க எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது.
அது வெறும் நகை விற்பனை நிறுவனமாக அல்லாமல், கலை, அழகு, பாரம்பரியம் ஆகியவற்றின் சின்னமாகவும், பணத்தின் அடையாளமாகவும் மாறியது. ஒரு கிராமத்து சிறுவன் தனது கைவினைத் திறமையையும் கனவையும் கொண்டு உலகப் புகழ் பெற்ற பிராண்டை உருவாக்கிய கதை இது. அப்படிப்பட்ட பிராண்ட் உருவாக்கிய பிரத்யேக டிசைன்தான் பாம்புகளை மையமாகக் கொண்ட நகைகள், வாட்ச்கள். இதற்கு ‘செர்பன்டி கலெக்ஷன்’ எனப் பெயரிட்டுள்ளது புல்காரி.
‘Serpenti’ என்றால் லத்தீன் மொழியில் பாம்பு. ‘புல்காரி’, பாம்பை வெறும் ஓர் உயிரினமாக பார்க்காமல் மாற்றம், புதுப்பிப்பு, மற்றும் நிரந்தர அழகு என்பவற்றின் சின்னமாகப் பார்க்கிறது. பொதுவாக மற்ற விலங்குகளை அதன் தோற்றத்தை வைத்து அதன் வயதைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், பாம்புகளை குறிப்பிட்ட நிபுணர்கள் தவிர மர்றவர்களால் வயதான பாம்பு இது என அடையாளம் காண முடியாது. எனவேதான் பாம்பை நிரந்தர அழகுக்கு ஒப்பிடுவர்.
பாம்பு, தன் தோலை மாற்றுவது போல, மனிதனும் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருக்கிறான் என்ற எண்ணமே இந்த வடிவமைப்பின் அடிப்படைச் சிந்தனை.
‘செர்பன்டி’ நகைகள் 1940களில் அறிமுகமானது.
‘புல்காரி’ பிராண்ட் பாம்பின் வடிவத்தை நகைகளில் கலைநயத்துடன் வடிவமைத்தது. தங்கம், வைரம், எமரால்ட், ரூபி போன்ற விலைமதிப்புள்ள கற்கள் சேர்த்து, பாம்பின் நெளிவைப் போன்ற வளையல்கள், சங்கிலிகள், கடிகாரங்கள் உருவாக்கப்பட்டன.
இவற்றில் ‘செர்பன்டி வாட்ச்’ (Serpenti Watch) உலகப் புகழ் பெற்றது. பாம்பின் உடல் வடிவில் சுருண்டிருக்கும் இக்கடிகாரம் ஃபேஷன் விரும்பிகளுக்கு பிரியத்துக்குரிய உடல் உறுப்பாக மாறின.
‘செர்பன்டி நகைகள்’, பெண்களின் தன்னம்பிக்கையையும் தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. பாம்புகளை நகைகளாக அணியும் வழக்கம் அக்காலத்தில் எகிப்திய அரசி கிளியோபாட்ராவிடம் மட்டுமே இருந்தது. எனவேதான் அவர் இன்றும் உலகின் தலைசிறந்த பெண்ணாகக் கொண்டாடப்படுகிறார்.
நம் வீடுகளில் பாம்பு வடிவ சின்ன மோதிரம் அணிந்தாலே ‘இது வீட்டுக்கு நல்லதல்ல’ என்கிற மூட நம்பிக்கை இருக்கும். ஆனால், மேலை நாட்டவர்கள் இந்தப் பாம்புகளைத் தன்னம்பிக்கையின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.
இது ஒரு நகை மட்டுமல்ல - ‘தான் யார் என்பதைக் காட்டும் கலை வடிவம்’ என்கின்றனர் ‘புல்காரி’ வடிவமைப்பாளர்கள்.
இன்றும் ‘புல்காரி’யின் ‘செர்பன்டி கலெக்ஷன்’ உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. பிரபல நடிகைகள், பாப் பாடகர்கள் சென்டாயா, பிரியங்கா சோப்ரா, ஆன்னி ஹாத்வே போன்றோர் இந்நகைகளை விரும்பி அணிகிறார்கள்.
இந்தப் பாம்புகளை சொந்தமாக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் ஓர் எளிமையான வடிவ மோதிரத்திற்கு க் கூட ரூ. 2,00,000 செலவிட வேண்டும். இதில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் அணிந்திருக்கும் நகைகள் ரூ.2 கோடி மதிப்புடையவை. தற்போது இந்த நகைகள்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முன்பு இந்த நகை வாங்க வேண்டுமானால் இத்தாலி அல்லது ரோம் உள்ளிட்ட பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டும். இனி இங்கேயே வாங்கலாம். தனது கிளையை இந்தியாவில் திறந்திருக்கிறது ‘புல்காரி’ நிறுவனம். என்ன... வாங்க ரெடியா?!
ஷாலினி நியூட்டன்
|