15 வருஷங்களா தமிழ், தெலுங்குப் படங்கள்ல நடிக்கறேன்... என்னைத் தெரியுதா?



‘கருங்காலி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. தொடர்ந்து தெலுங்கில் ‘மந்த்ரா 2’, ‘ராஜு காரி கதி’, ‘பெலிக்கி முந்து பிரேமகதா’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
‘‘சினிமாவைப் பொறுத்தவரை என்னதான் திறமை இருந்தாலும் சாதிக்க இன்னமும் ஏதோ ஒண்ணு தேவை. அது அதிர்ஷ்டமா இல்லை பின்புலமானு தெரியலை...’’ என்று சொல்லும் சேந்தன் சீனு, இப்போது ‘வள்ளுவன்’ கொடுக்க தயாராக இருக்கிறார்.

‘வள்ளுவன்’..?

‘கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்’... இந்தக் குரலை மையமாக வைத்துதான் இந்த மொத்த திரைக்கதையும் இயக்குநர் சங்கர் சாரதி எழுதியிருக்கார். 

பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களை நோக்கி ஸ்கிரிப்ட் நகரும்.எதார்த்தமான இளைஞனா நடிச்சிருக்கேன். வேலை கிடைக்காமல் டெலிவரி பாய் மாதிரி இருப்பாங்க இல்லையா... அப்படியான ஓர் இளைஞன். அப்படிப்பட்டவன் வாழ்க்கைல ஒரு பிரச்னை வருது. இதைச் சுற்றிதான் படம். 

எனக்கு ஜோடியா ஆஸ்னா ஜாவேரி நடிச்சிருக்காங்க. அவங்களும் என்னைப் போலவே தொடர்ந்து நடிச்சிட்டு இருக்காங்க. இன்னும் பெரிய அங்கீகாரம் கிடைக்காதவங்க. மும்பைதான் அவங்களுக்கு சொந்த ஊர். பிரேம்குமார் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கார். எப்படி நானும் ஒரு அங்கீகாரத்திற்காக பல வருடமாக போராடிக்கிட்டு இருக்கேனோ அதேபோல அவரும் பல வருடமா தனக்கான அடையாளத்துக்காக ஓடிக்கிட்டு இருக்கார்.

இயக்குநர் சங்கர் பாரதியும் அப்படித்தான். பல வருடங்களா உதவி, துணை இயக்குநரா இருப்பவர். அவருடைய விஷன் ரொம்ப பெருசா இருக்கு. எங்க எல்லாருக்குமே காத்திருப்புக்கு பலன் கிடைக்கும்னு நம்பறேன். 

சினிமா பயணம் எப்படி இருக்கு?

நீங்களே பாக்கறீங்களே... கடந்த 15 வருடங்களா ஓடிக்கிட்டு இருக்கேன். ஆனாலும் இன்னமும் சரியான இடம் கிடைக்கலை. ஏன்னு தெரியலை. தமிழிலும் தெலுங்கிலும் நல்ல கதைகள்ல நடிச்சுட்டுதான் இருக்கேன். இங்க எத்தனையோ கம்பெனிகள்ல ஏறி இறங்கியாச்சு. ‘நீங்க ரொம்ப சிவப்பா இருக்கீங்க... தமிழ்க் கதைகளுக்கு பொருந்த மாட்டீங்க’னு சொன்னாங்க. 

என் கரியர் மேல எனக்கு பயமே வந்துடுச்சு. ஆனா, அதையும் மீறி இதோ இப்ப ‘ஜென்டில்மேன் 2’, ‘வள்ளுவன்’னு ரெண்டு படங்கள் ரிலீஸ் ஆகப் போகுது. எனக்கான இடத்தை தமிழ் ரசிகர்கள் தருவாங்கனு நம்பறேன். 

ஷாலினி நியூட்டன்