5 ஆஸ்கர் வென்ற 93 வயது இசையமைப்பாளர்!



‘ஜுராசிக் பார்க்’ புகழ்  ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிக் கொண்டிருக்கும் புதுப்படத்தில் ஜான் வில்லியம்ஸ் இசையமைக்கப் போகிறார் என்பதுதான் ஹாலிவுட்டில் ஹாட் டாக். 
ஸ்டீவனும், ஜானும் இணையும் 30வது படம் இது. ஸ்டீவன் இயக்கிய படங்களில் இடம்பெற்றிருக்கும் சாதாரண காட்சிகள் கூட, உயிரோட்டமாக மாறியதற்கு ஜான் வில்லியம்ஸின் இசைதான் காரணம் என்றால் மிகையாகாது. 

இதுவரை நூற்றுக்கும் மேலான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜான். இதில் 29 படங்கள் ஸ்டீவன் இயக்கியது. இப்போது ஜானுடைய வயது 93 என்பதுதான் இதில் ஹைலைட்.  
மட்டுமல்ல, ஆஸ்கர் விருது வரலாற்றில் அனைத்துப் பிரிவையும் உள்ளடக்கி அதிக முறை இறுதிப்பட்டியலில் இடம் பிடித்தவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார், ஜான். பல காலமாக முதல் இடத்திலேயே இருந்து வருகிறார்(!), வால்ட் டிஸ்னி. 

இதுவரை சிறந்த இசைக்காக 54 முறை ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் ஜான். ‘ஷிண்ட்லர்’ஸ் லிஸ்ட்’, ‘ஈ.டி’, ‘ஸ்டார் வார்ஸ்: எபிசோட் IV - ஏ நியூ ஹோப்’, ‘ஜாஸ்’, ‘ஃபிடிலர் ஆன் த ரூஃப்’ ஆகிய படங்களில் சிறப்பாக இசையமைத்ததற்காக 5 முறை ஆஸ்கர் விருதுகளைத் தட்டியிருக்கிறார். மட்டுமல்ல, அதிக வயதில் ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்தவர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்திருக்கிறார் ஜான். 

ஆம்; ‘த ஃபேபல்மேன்ஸ்’ படத்துக்காக ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பிடிக்கும்போது ஜானுக்கு வயது 91. இந்தச் சாதனையை ஜானே தன் 92வது வயதில் ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் த டயல் ஆஃப் டெஸ்டினி’ படத்துக்காக முறியடித்தார். தவிர, 26 கிராமி விருதுகளையும், 7 பாஃப்டா விருதுகளையும், 3 எம்மி விருதுகளையும், 4 கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றிருக்கிறார். 

‘த பொசைடன் அட்வெஞ்சர்ஸ்’, ‘குளோஸ் என்கவுண்டர்ஸ் ஆஃப் த தேர்ட் கைண்ட்’, ‘சூப்பர்மேன்’, ‘ரைடர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க்’, ‘ஹோம் அலோன்’,  ‘சேவிங் பிரைவேட் ரயான்’ போன்ற புகழ்பெற்ற படங்களுக்கு இசையமைத்ததும் ஜான்தான். கடந்த வருடம் திரைப்பட வரலாற்றில் தலைசிறந்த 10 இசையமைப்பாளர்களின் பட்டியல் வெளியானது. இதில் ஜான் வில்லியம்ஸின் பெயரும் இடம்பிடித்திருந்தது. 

நியூயார்க்கில் வாழ்ந்து வந்த இசைக் குடும்பத்தில், 1932ம் வருடம் பிறந்தார், ஜான் டவுனெர் வில்லியம்ஸ். இவரது தந்தை ஜானி வில்லியம்ஸ் ஒரு புகழ்பெற்ற ஜாஸ் டிரம்மர். ஜானுக்கு ஒரு அக்காவும், இரண்டு தம்பிகளும் இருக்கின்றனர்.

ஜானுடைய தம்பிகள் அவரது இசைக்குழுவில் பணியாற்றுகின்றனர். சிறு வயதிலிருந்தே பள்ளியிலும், வீட்டிலும் இசையைக் கற்றுக்கொண்டார், ஜான். 1951ம் வருடம் அமெரிக்காவின் விமானப்படைக்குச் சொந்தமான இசைக்குழுவில் பியானோ வாசிப்பாளராகத் தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். 

ஒரு பியானோ இசைக்கலைஞராக வேண்டும் என்பதுதான் அவரது கனவு. ஐம்பதுகளில் அமெரிக்காவிலிருந்த பல ஜாஸ் மியூசிக் கிளப்களில் பியானோ வாசிப்பவராக வலம் வந்தார். பிறகு லாஸ் ஏஞ்சல் ஸுக்கு இடம்பெயர்ந்த ஜான், அங்கிருந்த ஃபிலிம் ஸ்டூடியோக்களில் இசைக்கலைஞராக வேலை செய்ய ஆரம்பித்தார். அப்போது ஃப்ரான்ஸ் வேக்ஸ்மேன் , பெர்னார்ட் ஹெர்மான், ஆல்ஃபிரட் நியூமென் போன்ற புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளர்களிடம் பணிபுரிய ஜானுக்கு வாய்ப்பு கிடைத்தது. 

திரைப்படத்துக்கு இசைமைப்பது அவரை வெகுவாகக் கவர்ந்தது. தனது இசைப்பயணத்தை திரைப்படம் நோக்கித் திருப்பினார் ஜான். முதற்கட்டமாக 1954ல் வெளியான ‘யூ ஆர் வெல்கம்’ என்ற 21 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படத்துக்கு இசையமைத்தார். இது யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. நான்கு வருடங்கள் கழித்து அடுத்த வாய்ப்பு கிடைத்தது. 1958ல் ‘ப்ளேஹவுஸ் 90’ என்ற தொலைக்காட்சித் தொடருக்கு இசையமைத்தார் ஜான். 

இதே வருடத்தில் ‘டாடி -ஓ’ என்ற படத்துக்கு இசையமைத்தார். இதுதான் ஜான் இசையமைத்த முதல் முழு நீளத் திரைப்படம். ஆனால், இந்தப் படம் சரியாகப் போகவில்லை. ஆனாலும் ஜானுடைய இசை பலரது கவனத்தை ஈர்த்தது.

பிறகு ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்தார். ‘நன் பட் த பிரேவ்’, ‘வாலி ஆஃப் த டால்ஸ்’, ‘குட்பாய் மிஸ்டர். சிப்ஸ்’, ‘இமேஜஸ்’, ‘த கவ்பாய்ஸ்’, ‘த லாங் குட்பாய்: ‘த டவரிங் இன்பர்னோ’ போன்ற படங்களில் இசையமைத்ததின் மூலமாக ஹாலிவுட்டில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்தார். 

1974-ம் வருடம் ஸ்டீவன் இயக்கிய ‘த சுகர்லேண்ட் எக்ஸ்பிரஸ்’ படத்துக்கு ஜான் இசையமைத்தார். அன்று ஆரம்பித்த இந்த ஜோடியின் பயணம், இன்றும் தொடர்கிறது.  சயின்ஸ் ஃபிக்‌ஷன், திரில்லிங், அட்வெஞ்சர்ஸ் வகைமைப் படங்களுக்கு ஜானைப் போல இசையமைத்தவர்கள் யாருமே இல்லை. அவரது இசை அப்படியே நம்மை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும். அந்த அளவுக்கு இசையில் மேஜிக்கை நிகழ்த்தியிருப்பார். 

அதே நேரத்தில் சுறா மீனிடம் மாட்டிக்கொண்ட பய உணர்வையும் அவரது இசை நமக்குத் தரும். ஒரு படத்தின் கதையோட்டத்தை இசை எப்படி சுவாரஸ்யமாக்குகிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், ஜான் இசையமைத்த திரைப்படங்கள்தான். 93 வயதிலும் கூட முப்பது வயதில் வேலை செய்த மாதிரி உழைக்கிறார் ஜான். 

ஆம்; ஸ்டீவனின் புதுப்படத்துக்கான இசையைத் தயார் செய்வதற்காக தினமும் 10 மணி நேரம் வேலை செய்து வருகிறார். இந்தப் படமும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்பதால் நிச்சயமாக ஜானுடைய மேஜிக்  இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். திரைப்படங்களுக்காக இசையமைத்ததின் மூலமாக, தான் ஈட்டிய வருமானத்தில் ஒரு பகுதியை நலிவுற்ற  இசைக்கலைஞர்களுக்காகவும், இசைக்கச்சேரி அரங்கம் அமைப்பதற்காகவும் கொடையாக வழங்கியிருக்கிறார் ஜான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

த.சக்திவேல்