வாராரு வாராரு கருப்பரு வாராரு!
7. மாரநாடு கருப்பண்ணசாமி!
அரண்மனை அந்தப்புரம். அரசி, இளவரசி, சேடியர் தவிர வேறு யாரும் உள்ளே நுழைய முடியாது. அவ்வளவு பாதுகாப்பு. யாரேனும் உள்ளே தெரிந்தால் உடனடியாகத் தூக்கிலிட்டுவிடுவார்கள். அவ்வளவு கடுமையான தண்டனை. இராமநாதபுர சமஸ்தானத்தின் இளவரசி பருவமடைந்து அந்தப்புரத்தில் இருந்தாள். அழகு என்றால் அவ்வளவு அழகு. இதனால், சமஸ்தான மன்னர்களுக்குள் கடும் போட்டி. இவளை மணந்துகொண்டால், இராமநாதபுர சமஸ்தானத்திற்கு மன்னனாகி விடலாம்; வீரம் விளையும் மண்ணுக்குச் சொந்தக்காரனாகி விடலாம்... என்ற எண்ணத்தில் பெண் கேட்டுத் தூது அனுப்பிக் கொண்டிருந்தனர்.  அரசனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. நல்லவனாக ஒருவனைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். ஆனால், விதி வேறுவகையாக வேலை செய்தது!
ஒருநாள் மாலை அமைச்சர்களுடன் ஆலோசனையில் இருந்த அரசனுக்கு, அவசரமாக அந்தப்புரத்தில் இருந்து அழைப்பு வந்தது.சென்றால், அதிர்ச்சி காத்திருந்தது. இளவரசியின் கழுத்தில் இருந்த ‘அரச முத்திரை’ மாலையைக் காணவில்லை.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அந்த மாலை யார் கழுத்தில் உள்ளதோ அவர்களே அந்நாட்டின் இளைய பட்டத்துக்கு உரியவர். மட்டுமல்ல; அந்த மாலையைக் கையில் வைத்திருப்பவரே இளவரசியை மணந்துகொள்ளும் அதிகாரம் பெற்றவர். மன்னனுக்கு மகளைப்பற்றிய கவலை அதிகரித்தது. மாலையை எவன் எடுத்திருந்தாலும், அவனே மாப்பிள்ளை. என்ன செய்வது? அந்தப்புரத்திற்குள் நுழைந்த அந்தக் களவாணி யார்?
ஆயிரத்தெட்டு விசாரணைகள். “யாரிடமும் நான் மாலை,யைக் கொடுக்கவும் இல்லை. யாரும் மாலையை எடுக்கவும் இல்லை...” என்று இளவரசி சத்தியம் செய்தாள்.
ஆளே புகமுடியாத அந்தப்புரத்தில் அரசமுத்திரை பதித்த நகை எப்படிக் காணாமல் போனது? அரண்மனையிலேயே களவு நடந்துள்ளதால், மக்களிடம் மரியாதை குறைந்து விடுமே? அஞ்சினார் மன்னர்.
அவையைக் கூட்டினார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். ஒன்றும் உருப்படியாக இல்லை. ‘‘முத்திரை மாலை கிடைக்கும்வரை அரண்மனைக் காவலர்கள் அனைவரையும் அடைத்து வையுங்கள்’’ என்று மன்னர் உத்தரவிட்டார்.
அரண்மனைக்கு உள்ளே யாரும் செல்ல முடியவில்லை. உள்ளேயிருந்து யாரும் வெளியே வரவும் முடியவில்லை. எல்லா இடமும் எல்லோரும் தேடியும் முத்திரை மாலை கிடைக்கவேயில்லை.
ஆலோசனை மேல் ஆலோசனை. அதில் ஒன்றுதான் குறிகேட்பது. இதைச் செயல்படுத்த குறிசொல்வோர் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்தார். குறிசொல்வோர் சொன்ன குறியெல்லாம் தவறாகிப் போனது.
தவறாகக் குறி சொன்னவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மன்னரின் கோபத்துக்கு அஞ்சி, நாட்டிலிருந்த குறிசொல்வோர் சிலர் அண்டைநாட்டுக்குள் அடைக்கலம் புகுந்தனர். குறிசொல்வோரில் ஒருவன் மட்டும் துணிந்து மன்னர் முன் நின்றான். “என்ன? சொல்!” மன்னர் கர்ஜித்தார்.“எனக்குச் சரியாகக் குறி சொல்லத் தெரியாது. ஆனால், சரியாகக் குறிசொல்பவனைத் தெரியும். அவன் ஒருவனை அழைத்து வந்தால், தேடும் பொருள் கிடைத்துவிடும்...” என்றான். ‘‘நீ சொல்வதுபோல் நடந்துவிட்டால் உங்கள் அனைவரையும் விடுதலை செய்து விடுகிறேன்... சரி... யார் அவன்?’’ என்று மன்னர் கேட்டார்.
“மாரநாடு கோடாங்கி!” சட்டென்று பதிலளித்தான். “அவன் கோடாங்கி எடுத்து அடித்தால், கருப்பண்ணசாமி வரும். மாரநாடு கருப்பண்ணசாமி வந்து குறி சொல்லும்...” அறிந்தவர், தெரிந்தவர், அரசு அதிகாரிகள் அனைவரும் இராமநாதபுரத்திலிருந்து, பரமக்குடி, மானாமதுரை, திருப்பாச்சேத்தி வழியாக மாரநாடு கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர். ஊரின் உள்ளே நுழையும் முன்பு, முகப்பு வாயிலிலேயே, கண்மாய்க்கரை ஓரமாகக் கருப்பண்ணசாமி கோயில் இருந்தது.
கருவறையில் சிலையோ, படங்களோ எதுவுமில்லை. வெறுமனே இருந்தது. கருவறை முன் மண்டபத்தில் சூலம் மட்டும் நடப்பட்டிருந்தது. அந்தச் சூலமே கருப்பண்ணசாமி. அத்தெய்வத்தை, கருப்பண்ணசாமியை, அரசு அதிகாரிகள் வணங்கினர். மனமுருகி பிரார்த்தனை செய்தனர். கருப்பண்ணசாமி வழிபாடு முடிந்ததும் கோயில் பூசாரியிடம், “கோடாங்கியைப் பார்த்துக் குறி கேட்க வந்திருக்கிறோம்...” என்றார் அமைச்சர்.‘‘இப்படி மண்டபத்தில் உட்காருங்கள்...’’ என்று சொல்லி, பிரசாதத் தட்டை கோயில் கருவறையில் வைத்து விட்டு, கோடாங்கியை அழைத்து வந்தார் பூசாரி.
‘‘என்ன விஷயம்? நான்தான் மாரநாடு கோடாங்கி. உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டார் கோடாங்கி. வந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். அதிர்ச்சி. ஆஜானுபாகுவான உடம்பைத் தேடிவந்தவர்களால் தங்கள் முன் நின்றிருந்த ஒல்லியான உருவத்தை ஏற்க முடியவில்லை.
தயங்கினார்கள்.‘‘சொல்லுங்கள்...’’ கோடாங்கியின் குரல் அழுத்தமாக ஒலித்தது.“நீங்கள் இராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து குறி சொல்ல வேண்டும். இது அரச உத்தரவு...” “நான் குறி சொல்வதில்லை. கண்கண்ட தெய்வமான இந்த கருப்பண்ணசாமிதான் வந்து குறி சொல்லுவார். உங்களுக்கு யார் வேண்டும்?”
‘‘எங்களுக்குக் குறி சொல்ல வேண்டும். கருப்பண்ணசாமிதான் குறிசொல்லும் என்றால், சாமியைத்தான் அழைத்துச் செல்ல வேண்டும்...’’ என்றனர்.‘‘கருப்பண்ணசாமி வருவது என்றால் சும்மாவா? ஒட்டு மச்சம்கூட இல்லாத வெள்ளைக் குதிரையில்தான் கருப்பண்ணசாமி வருவார்.
முடிந்தால் அந்த மாதிரிக் குதிரையுடன் வாருங்கள். அல்லது வரும் மாசி மாதம் மகாசிவராத்திரி அன்று பச்சைஇலை பரப்பி சாமி கும்பிட்ட பின்னர் திருவிழா பற்றிப் பேசி முடிவு செய்வார்கள். பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். சாமி புறப்பாடு இருக்கும். அப்போது வந்து குறி கேளுங்கள்...’’ என்றார் கோடாங்கி. இந்த வாக்கியங்களை அப்படியே மன்னரைச் சந்தித்து சொல் மாறாமல் சொன்னார்கள்.மன்னருக்கு இது மானப் பிரச்னை அல்லவா?‘‘உடனடியாகக் கோடாங்கி கூறியது போல் குதிரை ஒன்றை அனுப்பி வைத்து அழைத்து வாருங்கள்...’’ என்று கட்டளையிட்டார்.அனைவரும் தயங்கி நின்றனர். மன்னனுக்குக் கோபம் வந்தது! “ஏன் நிற்கின்றீர்கள்?’’
உமிழ்நீரை விழுங்கியபடி அமைச்சர் தயக்கத்துடன், “மன்னா! கோடாங்கி சொல்லியபடி ஒட்டுமச்சம் கூட இல்லாமல் வெள்ளை நிற குதிரை ஒன்றே ஒன்றுதான் உள்ளது...’’ என்று இழுத்தார்.
‘‘ஒன்று இருக்கிறதல்லவா? அந்தக் குதிரையைக் கூட்டிச் செல்வதற்கு ஏன் இத்தனை தயக்கம் அமைச்சரே?’’‘‘மன்னா! அது பட்டத்துக் குதிரை...’’சொன்ன அமைச்சரை மன்னர் வெறித்தார்.
‘‘பட்டத்துக் குதிரையில் யார் ஏறி வருகிறாரோ அவரே அந்நாட்டின் மன்னராவார் என்பது தாங்கள் அறியாததல்ல...’’‘‘...’’‘‘அப்படிப்பட்ட வாகனத்தில் கோடாங்கி ஏறிவிட்டால்..?’’ அமைச்சர் தடுமாறினார். ஒரு கணம் மட்டுமே மன்னர் யோசித்தார்.
கண்களை மூடித் திறந்தார். ‘‘பட்டத்துக் குதிரையுடன் மாரநாடு சென்று கோடாங்கியை அழைத்து வாருங்கள்...’’பட்டத்துக் குதிரை மாரநாடு கருப்பண்ணசாமி கோயில் வந்து சேர்ந்தது. பட்டத்துக் குதிரைக்கு கோடாங்கி மாலை அணிவித்தார். மரியாதை செய்தார். உடுக்கையையும் விபூதிப் பையையும் எடுத்துக்கொண்டார். கோயிலை வலம் வந்தார். கீழே விழுந்து கருப்பண்ணசாமியை வணங்கினார். அனைவரும் பட்டத்துக் குதிரையுடன் மாரநாட்டிலிருந்து இராமநாதபுரத்துக்குப் புறப்பட்டனர். ஆனால், கோடாங்கி குதிரையில் ஏறவில்லை! “குதிரையில் ஏறவில்லையே?’’ அமைச்சர் கேட்டார்.‘‘பட்டத்துக் குதிரையில் கருப்பண்ணசாமிதான் ஏறி வருவார். நான் சாமியுடன் ஓடி வருவேன்...’’ கோடாங்கியின் பதில் அமைச்சரைத் திகைக்க வைத்தது. ‘‘மற்றொரு குதிரையை ஏற்பாடு செய்கிறேன். அதில் ஏறி வாருங்கள்...’’‘‘தேவையில்லை...’’ கோடாங்கி மறுத்து விட்டார்.
பட்டத்துக் குதிரையில் ஒரு மனிதன் வராமல் ஒரு தெய்வம் ஏறி வருவது அமைச்சருக்கு பெருமையாக இருந்தது. கோடாங்கி அணிவித்த மாலையுடன் பட்டத்துக் குதிரை முன்னே சென்றது. குதிரைக்கு சமமாக கோடாங்கியும் ஓடத் தொடங்கினார்.மாரநாட்டு மக்கள் வழிநெடுக காத்திருந்து குதிரையை வணங்கினர். மாலைகளைத் தூவினர்.
திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி வழியாக இராமநாதபுரம் அரண்மனை வந்து சேர்ந்தது பட்டத்துக் குதிரை. குதிரையின் பின் நாடே ஒன்று திரண்டு ஓடிவந்து சேர்ந்தது. ஏறத்தாழ எழுபதுகல் தூரம். மார நாட்டுக் கோயிலில் துவங்கிய ஓட்டம் இராமநாதபுரம் அரண்மனை வாயிலில் வந்துதான் நின்றது.
அரண்மனை வாயிலுக்கு வந்து வரவேற்றார் மன்னர். உள்ளே சென்ற கோடாங்கி, சாணம் கரைத்துத் தெளித்து அதில் மாக்கோலம் போடும்படி கூறினார். அப்படியே செய்யப்பட்டது. மாக்கோலத்தின் நடுவே கோடாங்கி உட்கார்ந்தார். சிம்மாசனத்தில் அமராமல் கோடாங்கிக்கு எதிரே மன்னர் அமர்ந்தார்.
கண்களை மூடி பிரார்த்தனை செய்த கோடாங்கி, உடுக்கையை எடுத்து அடித்து கருப்பண்ணசாமியை வரவழைத்தார். “என்னை எதுக்கு இங்கே அழைக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” மன்னரிடம் கேட்டது வேறுயாருமல்ல... கருப்பண்ணசாமிதான்.
“சாமி... மன்னனான எனக்கு ஒரு மானப்பிரச்னை. பிரச்னைக்குரிய பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும்...’’ பயபக்தியுடன் மன்னர் சொன்னார்.
“மன்னன் கேட்டால் மறுக்கக்கூடாது! உன்னைக் காத்தருளுவோம். இரண்டு குறிக்கு மேல் கேட்கக் கூடாது. கேள். சொல்கிறேன்...” “வந்திருப்பது கருப்பண்ணசாமிதான் என்று எப்படி இந்த மன்னனும் இங்குள்ள மக்களும் நம்புவது?” அரசர் கேட்டார்.“முதற்குறி கேட்டுள்ளாய்! கருப்பன் வந்த குதிரையில் மற்றொருவன் ஏறக்கூடாது. எனவே நான் வந்த வெள்ளைக்குதிரை நின்றபடியே இறந்திருக்கும் பார்!” எல்லோரும் ஓடிச் சென்று பார்த்தனர். குதிரை சடலமாகக் கிடந்தது.
“சாமி என் பிழையைப் பொறுத்தருள வேண்டும். குறி சொல்வது மாரநாடு கருப்பண்ணசாமி என்றறியாமல் நான் செய்த பிழையை மன்னித்து என் மகள் கழுத்தில் அணிந்திருந்த அரச முத்திரை மாலை எங்கிருக்கிறது என்று சொல்ல வேண்டும்...’’ மன்னரின் குரல் தழுதழுத்தது. “மன்னனே! காணாமல் போன அரசமுத்திரைமாலை, அரண்மனை அந்தப்புரத்தில் இளவரசி குளிக்கும் அறையில், தண்ணீர் வெளியேறும் தூம்பினுள் கிடக்கிறது...” கருப்பண்ணசாமியின் குரல் ஓங்கி ஒலித்தது.
மன்னரின் ஆணைக்கிணங்கி காவலர்கள் விரைந்து சென்று தூம்பாக்குழியைத் தோண்டி எடுத்தனர். உள்ளே அரச முத்திரைமாலை!கோடாங்கியின் உருவில் இருந்த கருப்பண்ணசாமியின் கால்களில் விழ மன்னர் முயன்றார்.
கோடாங்கி தடுத்துவிட்டார். “இரண்டாவது குறியை சொன்னதும் கருப்பண்ணசாமி மலையேறி விட்டார். இப்பொழுது இங்கிருப்பது வெறும் கோடாங்கிதான். மன்னர் என் காலில் விழக்கூடாது!’’நெகிழ்ந்த மன்னர், பொற்காசு மூட்டையை அப்படியே கோடாங்கியிடம் கொடுத்தார்.
‘‘மன்னிக்கவேண்டும் மன்னா! மானம் காத்த கருப்பண்ணசாமிக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யுங்கள். அதுபோதும். ஓம் கருப்பண்ணசாமியே துணை...” கோடாங்கி மன்னரை வணங்கினார்.சிறை வைக்கப்பட்டிருந்த மற்ற குறி சொல்பவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மன்னருடன் அமர்ந்து கோடாங்கி உணவருந்தினார்.
ஒரேயொரு வேட்டியையும் துண்டையும் மட்டும் பரிசாகப் பெற்றுக்கொண்டு மாரநாடு புறப்பட்டார். இது நடந்து இருநூற்றைம்பது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இன்றும் ஒருகுறையும் இல்லாமல், மரபு மாறாமல் கருப்பண்ணசாமிக்கு மாலை மரியாதை செய்து வருகின்றனர் மன்னர் குடும்பத்தினர்.
பங்குனித் திருவிழாவில் கருப்பண்ணசாமி புறப்பாடு ஆரம்பித்தவுடன், முதல் மரியாதையாகக் கருப்பண்ணசாமிக்கு இராமநாதபுரம் அரண்மனை மாலை அணிவிக்கப்படுகிறது. அரண்மனை மாலையைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் சாமிக்கு மாலை அணிவித்து வணங்கி வழிபட்டு வாழ்க்கையில் ஏற்றமடைகின்றனர்.
இரவு முழுவதும் கருப்பண்ணசாமி ஆட்டம். மலை போல் குவியும் மாலைகள். சூரிய உதயத்துக்கு முன் கருப்பண்ணசாமி ஆடி குறிசொல்லி முடித்துவிடுவார். விடிந்தால், சாமியும் இருக்காது.
மலைபோல் குவிந்த மாலைகளும் இருக்காது. கருப்பண்ணசாமி கோயிலுக்குள் சென்ற மறுவினாடியே அத்தனை மாலைகளையும் அடியார்கள் பிரசாதமாக எண்ணி எடுத்துச் சென்று விடுவர்.
ஒவ்வொரு வருடமும், மாசி மாதம் ஒரு வெள்ளிக்கிழமை இரவு மாரநாடு கருப்பண்ணசாமி கோயிலில் திருவிழா நடைபெறும். பக்தர்களுக்கு அருள் கிடைக்கும்.
(கருப்பர் வருவார்)
மாரநாடு கருப்பண்ணசாமி கோயில்
மதுரை - இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 35 கிமீ தொலைவில் திருப்பாச்சேத்தி உள்ளது. திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே 5 கிமீ தொலைவில் மாரநாடு உள்ளது. கண்மாய் கரையோரம் கோயில் உள்ளது. சாலை நேராகக் கோயில் வாயிலுக்குச் செல்லும்.
- கே.என்.சிவராமன்
|