SIR... வேண்டாம்னு சொல்லலை... அவசரமா செய்ய வேண்டாம்னு சொல்றோம்!



வலியுறுத்தும் தமிழகக் கட்சிகள்

SIR எனும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (Special Intensive Revision) தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் களமிறங்கி உள்ளது. இந்நிலையில் இந்தச் சிறப்பு தீவிர திருத்தம் அவசரமாக செய்யப்படுவதாக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 
கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்கக் கோரியும், இதனை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.     
அப்போது பேசிய முதல்வர், ‘‘நேர்மையான தேர்தலுக்கு உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அதற்கு உரிய கால அவகாசத்தைக் கொடுக்கவேண்டும். பதற்றமில்லாத சூழலில் அதைச் செய்ய வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முழுமையான திருத்தப் பணிகள் செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரமாகும். 

மக்களின்வாக்குரிமையைப்பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீகாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்தன. அதுபோல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நடக்கவுள்ளது. இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது...’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.  

இதுகுறித்து தொடர்ந்து பேசிவரும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜிடம் பேசினோம்.‘‘முதல்ல இந்தச் சிறப்பு தீவிர திருத்தத்தை யாரும் எதிர்க்கல.  இவ்வளவு குறுகிய காலத்தில் இந்தத் தேர்தலுக்கு முன்னாடி பண்ண முடியாதுனுதான் சொல்றோம். இப்படிச்சொல்லும்போது சிலர் ‘அப்போ செத்துப் போனவர்களை என்ன செய்வது’னு கேட்குறாங்க. உண்மையில் இந்தச் சிறப்பு தீவிர திருத்தம் இல்லாமல் மூணு முறைகளில் வாக்காளர் திருத்தம் என்பது எப்போதும் நடக்குது.

முதலில், ஒருவருக்கு 18 வயது எப்போது வருகிறதோ அப்போதே ஆன்லைனில் விண்ணப்பித்து சேர்க்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்ல. ஆண்டு முழுவதும் எல்லா நாளும் பண்ணலாம். 

இரண்டாவது, தேர்தல் ஆணையம் ஜனவரி ஒன்றாம் தேதியை அடிப்படை நாளாகக் கொண்டு 18 வயது வந்தவர்களை சேர்க்கிறாங்க. அப்பவும் ஒரு வாக்காளர் திருத்தம் என்பது நடக்கும். 
மூன்றாவதாக, நாடாளுமன்றத் தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ வரும்போது சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும். இதை ஷார்ட் டைம் சம்மரி ரிவிஷன்னு சொல்வாங்க. அது ஒரு மாத காலம் நடக்கும்.

அப்படியிருக்க சிறப்பு தீவிர திருத்தம் மட்டுமே ஒரே வழினு அவசரகதியில் ஏன் மேற்கொள்றீங்க என்பதுதான் கேள்வி.இப்போ இந்தச் சிறப்பு தீவிர திருத்தமுறையைப் பொறுத்தமட்டில் ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியல் அப்படியே நிறுத்தி வைக்கப்படும். அதாவது இப்போ தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை ஃப்ரீஸ் பண்ணிட்டாங்க. அதனால், இப்போ நீங்களோ, நானோ வாக்காளர் கிடையாது. 

இனி அனைத்து வாக்காளர்களும் புதிதாக படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கணும். அப்படியாக வாக்காளர் வரைவு பட்டியல் தயார்செய்யப்படும். இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கும்போது அதனுடன் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்கணும்னு சொல்றாங்க. ஆனா, இதில் தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையோ, இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதார் அட்டையோ ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது.

மாறாக 2003ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவங்க அப்பா, அம்மாவின் பிறப்புச் சான்றிதழை இணைக்கணும். 1987ம் ஆண்டு முதல் 2003க்குள் பிறந்தவர்கள் பெற்றோரில் யாராவது ஒருவரின் பிறப்புச் சான்றிதழை இணைக்கணும்னு சொல்றாங்க. 

பொதுவாக கிராமங்களில் வீட்டில் பிரசவம் நடப்பதால் பெரும்பாலானவர்கள்பிறப்புச்சான்றிதழ் வாங்குறதில்ல. தமிழ்நாடு மாதிரி இடங்கள்ல 90 சதவீதத்தைத் தாண்டி எல்லா குழந்தைப் பிறப்புமே ஆஸ்பிட்டலில்தான் நடக்குது. அதனால் பிறப்பு சான்றிதழ் ஆட்டோமெட்டிக்காக 
வந்திடும்.

ஆனா, 2003ம் ஆண்டு பீகாரில் 70 சதவீதம் பேருக்கு மேல் வீட்டுலதான் குழந்தைப்பேறு நடந்திருக்கு. அப்ப வீட்டுல வச்சு நடக்குதுனா சான்றிதழ் இருக்காது. இவங்களை எல்லாம் என்ன பண்றது என்கிற கேள்வி இருக்கு.

இதனால் உச்சநீதிமன்றத்துல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகே ஆதாரும் ஓர் ஆவணம்னு ஏத்துக்கிட்டாங்க. பிறகு பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தாங்க. 

இதில் உயிருடன் இருந்த பலர் செத்துபோனவர்கள்னு நீக்கப்பட்டிருந்தாங்க. இந்நிலையில் செத்துப்போனதாக சொல்லப்பட்ட சிலரை யோகேந்திர யாதவ் நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்தினார்.

 ‘இவர்களைத்தான் நீங்க செத்துப்போனவர்கள்னு சொல்றீங்க’னு சொன்னார்.இந்தக் குளறுபடிகளால்தான் அவசரகதியில் செய்ய வேண்டாம்னு சொல்றோம். ஆரம்பத்துல வெளிநாட்டினர் ஏராளமாக இருக்காங்கன்னு சொன்னாங்க. ஆனா, ஒருத்தரைக்கூட நீக்கினதா சொல்லல. வெளிநாட்டுக்காரர்னு கண்டுபிடிச்சதாகக்கூட சொல்லல. 

ஒருவேளை வெளிநாட்டுக்காரர்னு கண்டுபிடிச்சிருந்தால் அவங்கள ரிப்போர்ட் பண்ணியிருக்கணும். அவங்கள முகாமிற்குக் கொண்டு வந்திருக்கணும். ஆனா, அப்படி எதுவும் நடக்கல.

இந்தத் தேர்தல் கமிஷனின் நியமன முறை மாற்றத்தில் தொடங்கி இப்ப நடக்கிற விஷயங்களை எல்லாம் பார்க்கும்போது அது நேர்மையாக செயல்படலனு புரிஞ்சுக்கலாம். அதனால்தான் இப்படி வேகமாக பண்றாங்க.கடந்த பீகார் தேர்தல்ல என்டிஏ கூட்டணி வாங்கின மொத்த ஓட்டுக்கள் 37.26 சதவீதம். எதிரில் நின்றவர்கள் 37.23 சதவீதம் பெற்றாங்க. வித்தியாசம் என்பது வெறும் 0.03 சதவீதம்தான். இப்படி ஒரு வித்தியாசம் இருக்கிற போது இந்தமாதிரி சின்னச் சின்ன தேவையற்ற நீக்கம்கூட பாதிப்பை ஏற்படுத்தும். 

தமிழ்நாட்டுக்கு வருவோம். ‘இந்த சிறப்பு திருத்தத்தை தமிழகத்தில் நம்மூர் அதிகாரிகள்தான் செய்யப்போறாங்க, அப்புறம் ஏன் பிரச்னை’னு சிலர் கேட்கறாங்க. இந்தமாதிரியான விஷயங்களில் உள்ளூர் அதிகாரிகள் எதையும் தீர்மானிக்கமுடியாது. 

மேலிருந்து போடும் உத்தரவைத்தான் இவர்கள் கேட்க வேண்டியிருக்கும்.இப்போது ஒருமாத காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிச்சிருக்கு. அதனால் தினமும் அதிகாரிகள் வீட்டுக்கு வருவாங்கனு சொல்றாங்க. இதில் நான் வெளியூருக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ போயிருந்தால் என்ன பண்றது என்கிற கேள்வி இருக்கு.

இன்னைக்கு பலர் வெளிநாடுகளில் வேலை நிமித்தமாக இருக்காங்க. அவங்க பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பார்க்க மூணு மாதம், ஆறு மாதம்னு விசா எடுத்து போறாங்க. இதுக்கு அவங்க ஆன்லைன்ல அப்ளை செய்தால் போதும்னு சொல்றாங்க.

ஆனா, உறுதிப்படுத்துகிற அன்னைக்கு அவர் வெளிநாட்டில் இருக்கார்னு வைப்போம். அவருக்கு ஓர் ஆவணம் வாங்கணும்னா பக்கத்து வீட்டுக்காரரோ அல்லது உறவினரோ வாங்கித் தருவார்னு சொல்லமுடியாது. அப்போ ஆவணங்கள் கொடுக்க முடியாமல் போகும்.

தவிர, புலம்பெயர்ந்து வேறு மாநிலங்களுக்கு வேலைநிமித்தமாக போனவர்களும் இருக்காங்க. அவங்களாலும் குறுகிய காலத்தில் ஆவணங்கள் எடுக்கமுடியாது. அப்போ வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாமல் போயிடும். இந்தக் காரணத்தினால்தான் சொல்றோமே ஒழிய சிறப்பு தீவிர திருத்தம் வேண்டாம் என்பது நோக்கம் கிடையாது. இந்தத் தேர்தலுக்கு முன்னால் இவ்வளவு வேகமாக செய்யமுடியாது என்பதுதான்.

கடந்த காலங்களில், அதாவது 1951 முதல் 2004ம் ஆண்டு வரை எட்டு முறை இந்தச் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டிருக்கு. அப்போதெல்லாம் இரண்டு ஆண்டுகள் வரை எடுத்துக்கொண்டுதான் செய்யப்பட்டது. இப்போ, அவசரகதியில் செய்வது பீகாரைப் போல குளறுபடிகளைத்தான் உருவாக்கும்...’’ என்கிறார் க.கனகராஜ்.

பேராச்சி கண்ணன்