Brain Storage



‘கண் போன போக்கிலே கால் போகலாமா? மனம் போன போக்கிலே நாவல் எழுதலாமா?’ எழுதலாம். அப்படி இடையூறின்றி ஓடும் மன ஓட்டங்களை இலக்கியமாகக் கொடுக்கும் முறைக்கு நனவோடை உத்தி (stream of consciousness) என்று பெயர். இலக்கிய உலகின் மாபெரும் நனவோடை நாவலாக ஜேம்ஸ் ஜாயிஸ் எழுதிய ‘Ulysses’  கருதப்படுகிறது.

பிரிட்டிஷ் நாடுதான் முதன் முதலில் தபால் தலைகளை வெளியிட்டது; அந்த சமயத்தில் (1840) வேறு எந்த நாடும் வெளியிட்டிருக்கவில்லை. ஆகவே, அப்போது அந்த நாட்டின்பெயர் தபால் தலைகளில் இருக்காது; அரசியின் முக உருவம் மட்டுமே இருக்கும்; அந்த வரலாற்றைக் கருத்தில் கொண்டு, UPU - Universal Postal Union - விதிமுறைகள்படி இன்றளவும் நாட்டின் பெயர் இல்லாமல் வெளியிடப்படுகின்றன யுகே நாட்டின் தபால் தலைகள்.

உலகப் பொது மொழியாக, செயற்கையாக உருவாக்கப்பட்ட மொழி எஸ்பிரான்டோ( Esperanto). எளிமையான இலக்கணத்துடன், சுலபமாகக் கற்கும் வகையில் 19ம் நூற்றாண்டின் இறுதியில் போலந்து நாட்டு மருத்துவ அறிஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. இன்றளவும் பல லட்சம் மக்களால் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தப்படும் மொழியாக அது இருக்கிறது.

கிரிப்டோ கரன்சிகளில் முதலிடம் வகிக்கும் பிட் காயினை உருவாக்கியவரின் பெயர் Satoshi Nakamoto. அது ஒரு தனி நபரா அல்லது ஒரு குழுவா, அவர்(கள்) யார் என்பது இன்றுவரை ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது. பிட் காயின் ஒரு பெரும் புரட்சியை செய்துள்ளது என்ற போதிலும், ஒரு நெகடிவ் பிம்பமும் அதற்கு உண்டு. உலகின் பெரும் மோசடிக்காரர்களும், ஆயுத மற்றும் போதை மருந்து விற்கும் குழுக்களும் தமது பணப்பரிவர்த்தனைகளை பிட் காயின்கள் மூலமாகவே இப்போதெல்லாம் செய்கிறார்கள்.l

ராஜேஷ் சுப்ரமணியன்