‘குபேரா’, ‘டிராகன்’ல சில போர்ஷன்ஸ் ஐபோன்ல ஷூட் பண்ணினேன்!



ஜென் இசட் தலைமுறையினர் கொண்டாடும் படமாக அமைந்திருக்கிறது பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’. கலகலப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத இந்தப் படத்துக்கு, தன் ஒளி ஓவியத்தால் அழகு சேர்த்தவர் நிகேத் பொம்மி. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எங்கும் இவர் புகழ் ஓங்கி நிற்கிறது. ‘சூரரைப்போற்று’, ‘டிராகன்’, ‘டியூட்’ என வரிசையாக ஹிட் படங்களுக்கு வேலை செய்தவர்.

எலக்ட்ரானிக் ஸ்டூடண்ட் எப்படி ஒளிப்பதிவாளராக மாறினார்?

எங்கம்மாவுக்குதான் அந்த கிரெடிட் போய்ச் சேரும். அம்மாவுக்கு போட்டோகிராபி ஹாபி. கேனான் ஃபிலிம் கேமரா வீட்ல இருந்துச்சு. டைம் கிடைக்கும்போது என்னையும் என் அக்காவையும் போட்டோ எடுப்பாங்க. 
அங்கிருந்து ஆரம்பிச்ச ஆர்வம் ராஜீவ் மேனன் சார் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்குமளவுக்கு கொண்டு போனது. இந்த இடத்துல இன்ஸ்டிடியூட்டின் துறைத் தலைவர் ஞானசேகரன் சார் பற்றி சொல்லணும். அவர்தான் என்னால் ஒளிப்பதிவாளராக வரமுடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தார். 

தமிழில் முதல் படமே ‘சூரரைப்போற்று’... இப்படி மெகா பட்ஜெட் படம் அமையும் என்று எதிர்பார்த்தீங்களா?

அந்தப் பெருமை இயக்குநர் சுதா கொங்கரா மேடத்துக்குதான் போய்ச் சேரும். அதுவரை ‘யூ டர்ன்’, சில தெலுங்கு படங்கள் மட்டுமே செய்திருந்தேன். அப்போது என்னுடைய ஷோ ரீல்ஸை முகநூலில் போஸ்ட் பண்ணியிருந்தேன். அதைப்பார்த்துவிட்டு சுதா மேடம் ஆபீஸிலிருந்து அழைப்பு வந்துச்சு. 
மேடத்தை சந்திச்சதும் கையில் பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுத்து படிக்கச் சொன்னதோடு, ‘பிடிச்சிருந்தால் பண்ணலாம்’னு சொன்னார். ‘கதை பிடிச்சிருக்கு’னு சொன்னதும் தயாரிப்பு நிறுவனத்துக்கு அழைத்துச் சென்று சம்பளம் பேசி கமிட் பண்ணினார். 

இதெல்லாம் ஒரே நாளில் நடந்தது என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் சுதா மேடம். அவர்தான் பெரிய படம் பண்ண முடியும் என்ற நம்பிக்கை  கொடுத்தார்.

‘டிராகன்’, ‘டியூட்’ என தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் படம் செய்துள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படி?

இரண்டுமே வித்தியாசமான படங்கள். ‘டிராகன்’ என்டர்டெயின்மென்ட், காமெடி, மெசேஜ் என எல்லாம் கலந்திருக்கும். ‘டியூட்’ கொஞ்சம் ரிஸ்க் கலந்த கதை. ‘டியூட்’ செய்ய முக்கிய காரணம் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். 

அடுத்து பிரதீப். இருவரும் என்மீது நம்பிக்கை வைத்தார்கள். அனுபவமாக பார்க்கும்போது அஸ்வத், கீர்த்தீஸ்வரன் இருவரும் சிறந்த இயக்குநர்கள். கீர்த்தி ‘சூரரைப்போற்று’ படத்தில் வேலை செய்யும்போது பழக்கம். அப்போது எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது. கீர்த்தி ஸ்கிரிப்ட் படிக்கும் விதத்திலிருந்து அவருடைய திறமை தெரிஞ்சது.

‘சூரரைப்போற்று’ படத்தில் வேலை செய்யும்போது சுதா மேடம் இந்தியில் வெளிவந்த ‘லஞ்ச் பாக்ஸ்’ படத்தை ரெஃபரன்ஸாக சொன்னார். அந்தப் படம் நியூட்ரல் டோன்ல இருக்கும். அதுமாதிரி ‘சூரரைப்போற்று’ படம் ஷூட் பண்ண, பண்ணதான் காஸ்டியூம், சிவப்பு நிலப்பரப்பு, மஞ்சள், சிவப்பு கலந்த பொம்மி கேரக்டர் ஆடை என கலர் பேலட் அழகியலின் முழு வடிவமாக மாறுச்சு. 

கிரேடிங் பண்ணும்போது சிறியளவில்தான் ஒர்க் பண்ணினோம். மற்றபடி எல்லாமே நேச்சுரலாக படமாக்கப்பட்டது. என்னுடைய படங்களில் போஸ்ட் ப்ரொடக்‌ஷனில் செயற்கையாக நிறைய ஒர்க் பண்ணமாட்டேன். என்ன படமாக்கப்பட்டதோ அதையே கொடுக்க முயற்சிப்பேன்.

நீங்கள் விரும்பும் கேமரா மற்றும் லென்ஸ் செட்டப்புகள் எவை? 

விருப்பமான கேமரா என்று எதுவும் கிடையாது. தொழில்நுட்பத்துக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்வேன். அதேசமயம் பழைய கேமராவை யூஸ் பண்ணவும் தயங்கமாட்டேன். 
‘டியூட்’ படத்தை ரெட் எபிக் டிராகன் கேமராவில் எடுத்தேன். சில படங்களை சோனி வெனிஸ்-2 கேமராவில் எடுத்துள்ளேன். சொன்னா  நம்பமாட்டீங்க, ‘டிராகன்’ல ஏர்போர்ட் ஷாட்டை ஐபோன்ல எடுத்தேன். ‘குபேரா’ பெரிய பட்ஜெட் படம். அதுல சில காட்சிகளை ஐபோன்ல எடுத்தேன்.

குறைந்த பட்ஜெட் படங்களில் அழகான ‘விஷுவல்’ உருவாக்கும் வழிகள் குறித்து சொல்ல முடியுமா?

லோ பட்ஜெட் படங்கள் என்று வரும்போது ஆர்ட் டிபார்ட்மெண்ட், காஸ்டியூம்ஸ் பங்களிப்பு அவசியம். அது இல்லாதபோது அட்வான்ஸ்ட் கேமரா யூஸ் பண்ணினாலும், நிறைய லைட்டிங் பண்ணினாலும் அதன் அழகு வேறுவிதமாகதான் இருக்கும். சமீபத்தில் ‘35 சின்ன கத காது’ என்ற படம் செய்தேன். 

சோனி வெனீஸ் 2, அட்லஸ் சினிமா பிக்ஸ் காம்பினேஷன்ல படமாக்கினேன். கேமரா, லைட்ஸ் என ஒரு நாள் வாடகை முப்பதாயிரம் இருக்கும். ஆனால், அதன் விஷு வல்ஸ் அருமையாக இருக்கும். கேமராமேனாக எனக்கு பிடிச்ச படம் அது. மொத்தப் படமும் நாற்பது நாட்களில் மூன்றரை கோடியில் எடுக்கப்பட்டது.

தொழில்நுட்பத்தைவிட கதை சொல்லல் முக்கியம் என்றால், அது ஒளிப்பதிவில் எப்படி வெளிப்பட வேண்டும்? 

இதற்கு உதாரணம் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படம். அந்தப் படத்தில் கதை, டெக்னிக்கல் அம்சங்கள் எல்லாமே ஸ்ட்ராங்காக இருக்கும். பொதுவாக யாரும் டெக்னிக்கல் பற்றி பேசமாட்டார்கள். கதை பற்றிதான் பேசுவார்கள். அதுதான் முறை. அதுதான் ஜெயிக்கும். அப்படி டெக்னிக்கல் அம்சங்கள் கதையோடு கலந்திருக்க வேண்டும். தனியாக யாரும் கேமரா ஒர்க்கை பாராட்டமாட்டார்கள். எப்போதும் கதை முக்கியம். 

பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம், ராஜீவ்மேனன் போன்ற ஆளுமைகளின் ஒளிப்பதிவு தனித்துவமாக இருக்கும். இப்போது இந்த பிராசஸ் மாறியுள்ளதா? ஒளிப்பதிவுக்கு 
முக்கியத்துவம் தரப்படுகிறதா?

அன்று போல் இன்றும் எல்லோரும் சிறப்பாக தங்கள் வேலையை செய்கிறார்கள். ‘மண்டேலா’ படத்தில் பிரேம் கம்போஸிங் சூப்பராக இருக்கும். ஒரு காட்சியில் யோகி பாபு மரத்தின் மீது தூங்கிக் கொண்டிருப்பார். 

அந்த டாப் ஷாட் பிரமாதமாக இருந்துச்சு. அதுமாதிரி நிறைய படங்கள் ஒளிப்பதிவுக்காக பேசப்படும் படங்களாக வந்துள்ளன. ஜி.கே.விஷ்ணு ‘கருப்பு’ டீசர்ல மிரட்டியிருந்தார். இப்போது டெக்னிக்கல் அம்சங்கள் அதிகம். அதை எங்கு, எப்போது யூஸ் பண்ணணும் என்ற நுட்பம் தெரிஞ்சிருக்கணும்.

எஸ்.ராஜா