சிறுகதை - அம்மா என்னும் அம்மா..!



திடீரென காலம் என்னையும் அம்மாவையும் நிரந்தரமாகப் பிரித்தது. அம்மா தற்கொலை செய்து கொண்டிருந்தாள். பணியிட மாறுதலுக்கான ஆணை வந்தது முதல் உள்ளோடிக் கொண்டிருக்கும் அசெளகரிய உணர்வு, கடத்த முடியாத ஒன்றாக இருந்தது. 
திருச்சியிலிருந்து மறுபடி சென்னை என்பது ஒரு கடுங் கனா. பழைய நினைவுகளில் இருந்து தப்பிக்க எத்தனை தூரம் ஓடவேண்டும் என்று எந்த விஞ்ஞானக் குறிப்பிலும் குறிப்பிடாதது கோபமாகக் கூட இருந்தது. 

மறுபடி சென்னைக்குச் செல்ல வேண்டும். எல்லார் முகங்களிலும் திரும்பவும் விழிக்க வேண்டும். மீண்டும் ஒரு 5 வருட வாழ்க்கையை ஓட்டிப்பார்க்க வேண்டும். அம்மாவை நினைத்தால் காலெழும்பவே மறுக்கும். 
அயர்வாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டேன். இரவு நேரத்தின் மொட்டை மாடியும் தனிமையும் இருளும் குளிரும் அழுத்தம் கூட்டின. 

எல்லோரது அம்மாவும் போல என் அம்மா இல்லை என்பது எப்போது எனக்குள் புதைக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், அவள் அப்படி இல்லாமலும் இருந்திருக்கக்கூடும். 

எத்தனை வீட்டின் அம்மாக்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் போல இவள் இல்லை என்றோ அல்லது அவர்களுமே இவளைப்போலத்தானோ என்னும் முடிவுக்கு வரும் வயதா அது?

எப்போதும் அவளோடு புரிந்த வாதங்கள் மட்டும் உள்ளுக்குள் ரீங்கரித்தபடி இருக்கின்றன. “ஏன் உன்னால மாற்றுப்பாலின நாட்டங்கொண்டவர்களை ஏற்க முடியவில்லை? ஏன் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை ஆதரிக்கிறாய்?’’ “பால் என்பது இரண்டுதான்...” “எதையும் முன்முடிவுகளுடன் அணுகாதே. சிந்தனையை அகலமாகத் திறந்து வைத்துக்கொள். முட்டுச்சந்திற்குள் பயணிக்க ஒன்றுமில்லையடா...”‘யாரேனும் 12ம் வகுப்பு பையனிடம் இதைப் பேசுவார்களா’ என திட்டுகூட வாங்கியிருக்கிறாள். ஆனாலும் பேசினாள்.

விளக்கேற்றாத, பெரிதாக பண்டிகைகளில் நாட்டமற்றிருந்த அம்மாவை ஏற்பது எனக்கும் சுதாவிற்கும் கடினமான ஒன்றாக இருந்தது. சிறுவயதில் எங்களது விளையாட்டுப் பொழுதுகளில் சுதா ஏற்க விரும்பாத பாத்திரம் அம்மாவினுடையதே. “என்னால் சீரியசா இருக்கறமாதிரி நடிக்க முடியாது ரகு. 

வேறு ரோல் சொல்லு...” என அடம் பிடிப்பாள்.எங்களோடு விளையாடாத, பெரும்பாலும் பல நேரங்களில் அழும் அம்மாவை, எங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆண் நாத்திகவாதியாக இருக்கும் சூழலை விட பெண் நாத்திகவாதியாக இருக்கும் சூழலை ஏற்க ஒரு குடும்பம் மிக கடினமாக உழைக்க வேண்டுமல்லவா? 

நாங்கள் உழைக்கவில்லை. அதைவிட உழைக்க விரும்பாமல் இருந்தோம் என்ற உணர்தலே இன்று வரை அவளைத் தவிர்க்க போதுமான காரணமாக இருக்கிறது.
பெண்ணியவாதிகளை ஏற்க மறுத்து அவளுடன் அத்தனை விதண்டாவாதம் செய்திருக்கிறேன். 

சிரித்தபடி “நீ மறுத்தால் அது இல்லையென்றாகுமா? உன்னால் தடுத்துவிட முடியுமா? இல்லை உலகம் உன் அங்கீகாரத்திற்கு ஏங்கி நிற்கிறதென நம்பிக்கொண்டிருக்கிறாயா? காலத்தோடு மேலேறி வாடா...” என்றபடி கடந்திருக்கிறாள். “நிறையப் படி. நிறைய மக்களை சந்திக்கப்பார், அவர்களை உணரு, புலன்களை திறந்து வை...” என எப்போதும் உபதேசித்தபடி அவள் இருந்தது அலுப்பாக இருந்தது. 

இதோ இன்று நான் பார்க்கும் பணிகூட ஒருவகையில் அவளது உபத்திரவம்தான். கடுமையான சூழலில் அவளைத் திட்டுவதும் கூட நடந்திருக்கிறது. எனக்காக அம்மா ஏன் யோசிக்கவில்லை? அவளொரு சுயநலவாதி என்பாள் சுதா. அவளது எண்ணங்களில் இருந்தே அம்மாவை நீக்கியிருந்தாள் அவள். அல்லது நான் அப்படி அவளைப் புரிந்து கொண்டிருக்கிறேன். 

அம்மாவைப் புரியவே வெகுகாலமானது போல் இவளையும் என்றாவது புரியக்கூடும். அவளது கேமராவுடன் காடுகளுக்குள் புகுந்துவிட்டவள் அவள். எல்லோருமே ஏனோ எதைக் கண்டோ ஓடினோம். ஆனால், என்னால் அம்மாவை விட்டு வெளியில் வர முடியவில்லை. அம்மா உடல்தானம் செய்திருந்தாள். 

கொள்ளியிடக்கூட என்னை அனுமதிக்காதது போலிருந்தது. அவளுக்கு எங்கள் மேலிருந்த கோபத்திற்கு பழிவாங்கினாள் என நினைத்தேன். சிரித்தபடியே எங்களுக்கு அடிகொடுத்தாளோ என யோசித்திருக்கிறேன். ‘நான்  பிடி சாம்பலாகும் ஆகிருதி இல்லையடா அற்பர்களே’ என்று சொல்லாமல் சொல்லிச் சென்றிருந்தாள். 

அனைத்தையும் விட்டு ஒதுங்கி நானுண்டு படிப்புண்டு என்றிருக்க முயன்றேன். ஆனால், அவளை நான் நீங்கியதாகவே தோன்றவில்லை. சொல்லவொண்ணாத் தனிமையும் என் இறுக்கமுமே அவள் எனக்களித்த தண்டனை போலத்தான் இருந்தது. படிப்பு ஒருபுறம் தொடர அவள் வார்த்தைகள் வேறு ரூபமாய் தொடர்ந்தபடி இருந்தது. 

மூளை ரசாயனங்கள், மன அழுத்தம் எல்லோருக்கும் ஒன்றுபோல் அமைவதில்லை எனப் பாடங்கள் பேராசிரியரின் குரல் வழி போய்க்கொண்டிருக்கும். அம்மாவின் குரல் பின்தொடரும்.

“என் டீச்சர் மகன் இறந்துட்டார்மா. அவங்களுக்கும் டிப்ரஷன். அவங்க எப்பவும் சிரிச்சபடிதான் இருப்பாங்க. நீ ஏன் அழற? அவங்களை விடவா உனக்கு கஷ்டம்?’’ அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. 

“என் மூளை ரசாயனம் இப்படித்தான் அமைஞ்சிருக்கு. என் யோசனைகளையும் உளவியலையும் புரிஞ்சிக்கற வயசு இல்லை உனக்கு...’’ என்றாள் இரண்டு நாள் கழித்து கண்கள் கலங்கியபடி மென்மையாக. 

பாலினங்கள் குறித்து பாடங்கள் நடக்கும்போது பாலினம் இரண்டொழிய வேறில்லை தத்துவம் சிதறி தூள் தூளாய்ப் போன நாளில் “சொன்னேன்ல கழுதை...” என காதைத் திருகினாள்.‘‘உனக்கு உழைப்பது தாண்டியும் எனக்குன்னு ஒரு உலகம் இருக்கு ரகு...’’ என்ற மனைவியின் வார்த்தைகளில் “இதைத்தானடா நானும் சொன்னேன்...” என்னும் அம்மாவின் குரலுமே சேர்ந்தொலித்தது. 

“நீ நெகடிவ் பர்சன்ம்மா. எப்பவும் கடினமா இருக்க...”“You people are so judgmental da...” என வருத்தத்தோடு அவள் சொல்லி நகர்ந்த நாள் இன்று போல இருக்கிறது. 

அவளைப் புரிந்துகொண்டாலும் ஏதோ தவற விட்ட குற்றவுணர்வும், அதிலிருந்து தப்பிக்க நினைக்கும் மனநிலையும் என்னை மறுபடி ஊர் போக அனுமதிக்கவே இல்லை. அவளிடம் நான் மனமார மன்னிப்புக் கேட்கவில்லையோ என்னும் உணர்வு எப்போதும் இயலாமையையும் தேறிவர முடியாத ஏக்கத்தையும் தரும். 

இப்போது யோசித்தால் அவளது சித்தாந்தங்களின் கடுமையை அவளது பிம்பமாக நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். பலமுறை  ‘‘அம்மா எல்லாம் புரிகிறது. சாரி...” என சொல்லிவிட முயன்று தோற்றிருக்கிறேன். என் எந்தவித முன்னெடுப்பும் எனக்கு நிறைவைத் தந்ததில்லை. 

அவளது வண்ணக்கலவைகள், தூரிகைகள், புத்தகங்கள், புடவைகள் என எல்லாவற்றிலும் அவளது துண்டுகளைத் தேடியிருக்கிறேன். எப்போதும் அவளுடன் பேசிக்கொண்டே இருந்தவனுக்கு அவளது தற்கொலை திகைப்பை மட்டுமல்ல, ஓயாத அலைக்கழிப்புகளை விட்டுவிட்டுச் சென்றது.

இப்போதும் அவள்மீது கோப மில்லை. அவளை என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஒருமுறை அவளிடம் மனதார இதைச் சொல்லத்துடிக்கும் வெறி, அது முடியாத சூழல்... ஊர், வீடு, வாசல் என எல்லாம்தாண்டி ஓட வைத்த உணர்வு... என்ன வகை உளவியல் இது? பல இரவுகளைப் பலி வாங்கிய உளவியல். 

சுதா திட்டுவாள். “எல்லாரைப் போலவும் விபத்திலோ, நோயிலோ இந்த அம்மா போயிருக்கக் கூடாதாடா? இதிலும் நமக்கு கில்ட் வரணும்னே தற்கொலை பண்ணிக்கிட்டா...” அவளுக்கு எப்போதும் அம்மா என்னிடம்தான் நெருக்கம் என்ற எண்ணம். டிரான்ஸ்ஃபரைப் பற்றிக் கூறியபோதுகூட “போகாதடா... மாத்த முடியாட்டி லீவில் போ, நீ நிம்மதியா இருக்க மாட்ட...” என்று முடித்துக் கொண்டாள்.

எனக்குத்தான் அலுப்பாக இருந்தது. எங்கு ஓடினாலும் எதுவும் மாறப்போவதில்லை. அம்மாவின் தற்கொலையை விட்டு நான் வெளிவரப்போவதில்லை. ஓடுவதை நிறுத்தி என்ன நேர்கிறதோ அதை ஏற்பது என்னும் முடிவுக்கு வந்திருந்தேன். 

சென்னைக்கு வந்தாயிற்று. வேலைக்கும் கிளம்பியாயிற்று. கொஞ்சம் கவலையாக மனைவி என்னைப் பார்ப்பது போல எனக்குத்தான் தோன்றுகிறதா? எல்லார் கண்களும் என்னையே பார்ப்பது போலக்கூட இருந்தது. கற்பனைதான் நிஜத்தை விடக் கொடூரமானது. சகல விதத்திலும் தாக்கும். 

அலுவலக ஃபார்மாலிட்டிகள் முடிந்து எனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் வர 10.30 மணிக்கும் மேலாகிவிட்டது. “சார்... இன்னிக்கு கிளாசிருக்கு. எடுக்கறிங்களா இல்லை அடுத்தவாரம் துவங்கிக்கலாமா...’’ தயங்கியபடியே கேட்ட உதவியாளருக்கு பதில் தரக் குரல் எழும்பவில்லை. சிறு நடுக்கத்தைத் தொடர்ந்து சொல்லிவிட்டேன். “இல்லேல்ல. வர்றேன். நீங்க ரெடி பண்ணுங்க...” என்று உபகரண அறை நோக்கி நடக்கத்துவங்கினேன். சிறு காரிடார் பிரபஞ்ச தூரமாகப்பட்டது. 

அறையின் நடுவில் Dissection Table பூதம் ஒன்றைப்போல் கிடந்தது. சுற்றி நிற்கும் மாணவர்கள் முகத்தில் என்னைப் புதிதாகப் பார்க்கும் ஆர்வம் தெறித்தது. அவர்களைக் கடந்து முன் 
நகர்ந்தேன். அம்மாவை Table-இல் கிடத்தியிருந்தார்கள். 

மூச்சை மெல்லப் பிடித்தபடி பாடத்தைத் துவங்கினேன். அதனைத் தொடர்ந்து வகுப்பு நடந்ததும் பின் அது முடிந்ததும் தன்னிச்சையானது. ஒரு ஸ்டூலை இழுத்து அம்மாவிற்கருகில் போட்டு அமர்ந்தேன். மெல்ல அறுத்துக்கூறு போட்டிருந்த அவளது கைகளை எடுத்துக் கொண்டேன். 

ஒரு பாடம் செய்யப்பட்ட மானைத் தொடுவது போலுணர்ந்தேன். அவளுக்கு கேட்குமளவு மெல்லச் சொல்லத்துவங்கினேன்.

“ Ma... you are not a negative person. I’m sorry. ரொம்ப சாரி. இப்போ உன்னை ரொம்ப புரிஞ்சுக்கிட்டு இருக்கேன்ம்மா. ரொம்ப முட்டாள்தனம் பண்ணி உன்னைக் காயப்படுத்திருக்கேன். உன்ன பாக்கறத தவிர்த்ததுகூட என் கில்ட்ம்மா... 

ரொம்ப சாரி...” 
அந்த வறண்ட ஃபார்மலின் ஊறிய கைகளைப் பிடித்தபடி மெல்ல சொல்லிக் கொண்டிருந்தேன். அது என்னை இறுகப்பற்றியபடி கடைத்தெருவிற்குள் சுற்றிய அதே கைகள்தான். 

“சார். க்ளோஸ் பண்ணிடலாமா? பாவம் சார் அநாதைப்பிணம்...” என்ற ஊழியரிடம்  ஒப்படைத்து வெளியே வந்தேன். படபடப்பாக இருந்தது. வியர்த்திருந்தது. கொடுங்கனா ஒன்றிலிருந்து வெளிப்பட்டது போலிருந்தது. நேராக தேநீர்க்கடைக்கு கால்கள் தானாக நடந்தது.

“ ஒரு டீ...” ‘ஒரு டீ...’ என கடையில் கேட்பது ஒரு துன்பமிகு வார்த்தை. ஸ்னேகிதத்தோடு பருகுவதுதான் தேநீர் என்னும் அம்மாவின் குரல் காதிற்குள் கேட்டது. அம்மாவிற்கு கொள்ளியிடுவதை விட அவளைப் பாடமாக சொல்லித் தந்ததையே அவள் விரும்பியிருப்பாள். அது ஏன் உறைக்காமல் போனது என வெட்கமாக இருந்தது. “சார்தான் திருச்சிலருந்து வந்திருக்கற புது அனாடமி புரொஃபசர். நல்லா பாடமெடுத்தாரு...” என எனக்கு வணக்கம் சொல்லி கடந்த ஊழியர்களைப் பார்த்துத் தலையசைத்தேன்.   

டீ வந்தது. சூடான டீ ஒரு மிடறு போனதும் உறைத்தது. அம்மாவும் இப்படி படபடப்பில் தேநீர் குடிப்பாள் என்பது. டீ எனக்குள் இறங்க இறங்க அவளே என்னுள் பரவுவது போல 
இருந்தது. அவளின் துண்டு எங்கிருக்கிறது என தெரிந்தது. இந்த தேநீர்ச்சூட்டில் அவள் இருக்கிறாள். என் தனிமையுணர்வு பட்டென அறுந்தது. வெகு காலத்திற்குப் பிறகு மனதிலிருந்து புன்னகைக்க முடிந்தது! அவள் என்னை விட்டு அகலப்போவதில்லை.  

- ஷோபனா நாராயணன்