இது தமிழ் சினிமாவின் காந்தாரா



‘‘தஞ்சாவூர் பகுதியில் உள்ள யாளீஸ்வரன் என்ற சாமி பற்றிய கதைதான் ‘மகா சேனா’. உள்ளூர் தெய்வத்தை வைத்து வெளியான ‘காந்தாரா’ பெரிய ஹிட். அந்தப் படம்போல் எங்கள் படம் பிரம்மாண்டமாக இல்லையென்றாலும் கன்டென்ட்டாக இன்னொரு ‘காந்தாரா’ படம்போல் இருக்கும்...’’ பொறுமையாகப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன்.

‘மகா சேனா’ எதைப் பற்றி பேசுகிறது?

இது ஜங்கிள் ஆக்‌ஷன் த்ரில்லர். 80 சதவிகித கதை காட்டில் நடப்பதுபோல் திரைக்கதை எழுதியிருக்கிறேன். குரங்கனி என்ற மலைக் கிராமத்தில் ஒரு கோயில் உள்ளது. அந்த கோயிலை மையமாக வெச்சு ஒருவித அச்சுறுத்தல் உருவாகிறது. 
அந்தக் கோயிலின் சிறப்பு அங்குள்ள சக்தி வாய்ந்த சிலை. அது சாதாரணமாக எல்லோருடைய கண்களுக்கும் தெரியாது. குறிப்பிட்ட நாளில் மட்டுமே சிலை தெரியும். அந்த நாளில் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்று ஊர் மக்கள் நம்புவதோடு, திருவிழா ஏற்பாடு செய்து கொண்டாடுகிறார்கள். 

இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் ஒரு குழுவாக மலையேற்றம் செய்கிறார்கள். அவர்கள் அந்தச் சிலையை அறிவியலாக நம்புகிறார்கள். ஏனெனில், அந்தக் கல் பூமியைச் சேர்ந்த கல் கிடையாது. 

பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வேற்று கிரகத்தில் இருந்து வந்த கல் என்று சொல்கிறார்கள். ஆனால், ஊர் மக்கள் அந்தக் கல் சக்தி வாய்ந்ததாக நம்புகிறார்கள். அந்தச் சூழ்நிலையில் கடவுள் மீதுள்ள நம்பிக்கை உண்மையா, அறிவியல் சொல்வது உண்மையா என்று இருதரப்புக்கு நடுவே விவாதம் ஏற்படுகிறது. 

இதற்கிடையே அந்தச் சிலையை கடத்துவதற்கு ஒரு கும்பல் காட்டுக்குள் நுழைகிறது. இந்தப் போராட்டத்தில் மக்கள் கோயிலைக் காப்பாற்று கிறார்களா, கடவுள் மக்களைக் காப்பாற்றுகிறதா என்பதை விறுவிறு திரைக்கதையில் சொல்லியுள்ளோம்.

விமல் லுக் முழுவதுமாக மாறியிருக்கே..?

இது ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் கதை. மக்களுக்குப் பரிச்சயமான ஹீரோ தேவைப்பட்டார். விமல் சார் எங்கள் முதல் சாய்ஸாக இருந்ததோடு கதைக்குப் பொருத்தமாக இருந்தார். 

விமல் சார் இதுவரை பல நேட்டிவிட்டி படங்கள் செய்திருந்தாலும் யானையுடன் சேர்ந்து நடித்ததில்லை. அந்த காம்பினேஷன் வித்தியாசமாக இருக்கும்.செங்குட்டுவன் என்ற கேரக்டரில் அடர்த்தியான தலைமுடி, தாடி, மீசை என அவருடைய லுக் ஃபிரஷ்ஷாக இருக்கும். 

கூடலூர் மலைப் பகுதியில் லைவ்வாக படப்பிடிப்பு நடத்தினோம். யானை, கரடி என வன விலங்குகள் அச்சுறுத்தல் உள்ள பகுதி அது. முறைப்படி அனுமதி வாங்கி படப்
பிடிப்பு நடத்தினோம். இருநூறு பேர் கொண்ட குழுவைப் பாதுகாப்பாக அழைத்து வருவதும், மீண்டும் இருப்பிடம் திரும்புவதும் பெரிய சவாலாக இருந்துச்சு.

சிருஷ்டி டாங்கே ஹீரோயின். பொம்மி என்ற அம்மா ரோலில் வர்றார். சில நடிகைகளிடம் கதை சொல்லும்போது விமலுக்கு ஜோடியாக நடிக்கிறேன், அம்மாவாக ‘முடியாது’ என்று தயங்கினார்கள். சிருஷ்டியிடம் டீன் ஏஜ் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கணும்னு சொன்னபோது அவருக்கும் தயக்கம் இருந்துச்சு. 

ஹீரோயின் கெட்டப் பற்றி ஷோ ரீல் எடுத்து வைத்திருந்தோம். அதைப் பார்த்ததும் ஓகே சொன்னார். படத்தில் அவருக்கு சில ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றன. அதை ரிஸ்க் எடுத்து செய்தார். 

யோகிபாபுவுக்கு கதையோடு கலந்த கேரக்டர். ஜான் விஜய் ஃபாரஸ்ட் ஆபீசராக வர்றார். சிறப்பான வில்லன் கதாபாத்திரம். க்ளைமாக்ஸ் காட்சியில் மாஸ் பண்ணினார். ‘மார்கோ’வில் வில்லனாக வந்த கபீர் துகான் சிங் கேமியோ பண்ணியிருக்கிறார்.

மகிமா குப்தா என்ற மராத்திய நடிகை முக்கியமான கதாபாத்திரத்துல வர்றார். பழங்குடி மக்கள் குழுத் தலைவியாக வரும் அவருக்கு ஜோடியாக ‘யாத்திசை’ விஜய் சேயோன் நடிக்கிறார். இவர்களுடன் யானைக்கு முக்கியமான கதாபாத்திரம். ஒளிப்பதிவு மானஸ் பாபு. என்னுடைய ‘இராக்கதன்’ படம் செய்தவர். 

என்னுடன்  ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். திறமையான டெக்னீஷியன். இசை அருணகிரி, பிரவீன் குமார். பின்னணி இசை உதயபிரகாஷ். வைக்கம் விஜயலக்‌ஷ்மி, மகாலிங்கம் ஆகியோர் பாடிய பாடல்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும். தயாரிப்பு மருதம் புரொடக்‌ஷன்ஸ்.

யார் இந்த தினேஷ் கலைச்செல்வன்?

சொந்த ஊர் தஞ்சாவூர். படிச்சது என்ஜினியரிங். சில காலம் துபாயில் வேலை. சினிமா ஆர்வம் காரணமாக சென்னைக்கு வந்தேன். தனியார் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் டைரக்‌ஷன் படிச்சேன். என்னுடைய இயக்குநர் கனவுக்கு ஊக்கம், ஆக்கம் கொடுத்தது என்னுடைய அம்மா. என்னுடைய முதல் சினிமா ‘இராக்கதன்’. அந்தப் படத்துக்கு பாசிடிவ் விமர்சனங்கள் வந்துச்சு. ஓடிடியில் இருக்கிறது. டைம் கிடைச்சா பாருங்க.

எஸ்.ராஜா