2 பேர்... 4 நிமிடங்கள்...ரூ.896 கோடி கொள்ளை!
கடந்த அக்டோபர் 19ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை. அன்று ஃபிரான்ஸ் நாட்டில் பாரிசில் இருக்கும் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகம் சரியாக காலை 9 மணிக்கு பார்வையாளர்களுக்காக திறந்துவிடப்பட்டது. ஆனால், 9.34 மணிக்கு கழிவுக் கால்வாய்களைத் தூர்வாரும் கிரேன் வைத்த ஒரு மினி லாரி அருங்காட்சியகத்தின் பக்கவாட்டுக்கு வந்தது. கிரேன் ஏணி அருங்காட்சிகத்தின் முதல் மாடியைத் தொட்டது. தொட்ட இடத்தில் ஒரு ஜன்னல்.  ஏணியில் ஏறிய இருவர் கட்டிங் பிளையரால் ஜன்னலைத் தகர்த்து உள்ளே நுழைந்தனர். உடனே அலாரம் ஒலித்தது. வந்தவர்கள் கொள்ளையர்கள். தாமதிக்காமல் தங்களிடமிருந்த துப்பாக்கியை எடுத்தனர்.செக்யூரிட்டிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கொள்ளையர்கள் நிதானமாக நடந்து காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 8 பொருட்களை எடுத்தனர். சரியாக 9.38க்கு மியூசியத்தை விட்டு வெளியேறினர். இவ்விரு கொள்ளையருக்கு உதவியாக வந்த இருவரை பாரிஸ் போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.896 கோடி. களவாடப்பட்ட 8 நகைகளுமே ஃபிரான்சை ஒருகாலத்தில் புகழுடன் ஆண்ட நெப்போலியன் குடும்பத்தைச் சார்ந்தது என்பதுதான் இந்த கொள்ளையை உலகம் முழுவதும் ஒரு பேசு பொருளாக மாற்றியிருக்கிறது.
 அருங்காட்சியகத்தின் வரலாறு
இந்த அருங்காட்சியகத்தின் கட்டடம் 12 - 13ம் நூற்றாண்டில் ஃபிரான்சை ஆண்ட இரண்டாம் பிலிப் எனும் மன்னனால் வெறும் ஒரு மாளிகையாக மட்டுமே ஆரம்பத்தில் கட்டப்பட்டது. 1546களில் அந்த மன்னர் பரம்பரையினரே இந்த மாளிகையை ஓர் அரண்மனையாக மாற்றினர். பிறகு 1682களில் 14ம் லூயி மன்னர் இந்த அரண்மனையை விடுத்து வெர்சாய்ல்ஸ் எனும் இடத்திலிருக்கும் அரண்மனைக்கு இடம்பெயர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து லூவர் மாளிகை கொஞ்சம் கொஞ்சமாக ஃபிரான்ஸ் தேசத்தின் பொக்கிஷங்களைச் சேகரிக்கும் இடமாக மாறியது. அதிலும் 19ம் நூற்றாண்டில் பெரும் புகழுடன் ஃபிரான்சை ஆண்ட நெப்போலியன் காலத்தில் இந்த லூவர் மாளிகை ஒரு முழுமையான சேகரிப்பு கட்டடமாக மாறியது.
காரணம், நெப்போலியன் நிகழ்த்திய போரில் கைப்பற்றப்பட்ட விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள் ஏராளமாகக் குவிந்ததுதான். என்றாலும் பார்வையாளர்கள் பார்க்கும் ஓர் அருங்காட்சியகமாக இது மாறியது 20ம் நூற்றாண்டில்தான். நெப்போலியனால் குவிந்த பொக்கிஷங்கள்
ஐரோப்பா, எகிப்து, சிரியாவில் தொடங்கி இந்திய துணைக்கண்டத்தின் எல்லை வரை நெப்போலியன் போர் செய்தார். இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான நகைகள், ஓவியங்கள், பழம்பொருட்கள், சிற்பங்கள் போன்றவற்றை அவரது போர்வீரர்கள் கொள்ளையடித்தார்கள்.
இந்தப் பொருட்கள்தான் லூவர் மியூசியத்தை ஓர் உலகளாவிய அருங்காட்சியகமாக மாற்றியது. உதாரணமாக, இத்தாலியின் லியானார்டோ டாவின்சி என்ற புகழ்பெற்ற ஓவியர் வரைந்த சர்வதேச அளவில் கொண்டாடப்படும் மோனாலிசா ஓவியம், இந்த அருங்காட்சியகத்தில்தான் இருக்கிறது. இது இங்கே வந்த ஆண்டு 1797. லூவர் அருங்காட்சியகத்தை நோட்டம் விட்டு திருடுவது என்பது பல ஆண்டுகளாகவே நடப்பதுதான். குறிப்பாக மோனாலிசா ஓவியம் இங்கு வைக்கப்பட்டது முதலே கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கியதாக வரலாறு சொல்கிறது.
திருட்டு
புன்னகைக்கிறாளா, சோகமாக இருக்கிறாளா, நக்கல் செய்கிறாளா என்ற இனம்புரியாத மர்மப் புன்னைகையின் குறியீடாக இருந்து ஓவிய ரசிகர்களை காலம் காலமாக வசீகரித்து வரும் ஓவியம்தான் மோனாலிசா ஓவியம். இதை இத்தாலி நாட்டின் டாவின்சி என்ற புகழ்பெற்ற ஓவியர் தீட்டினார்.
இந்த ஓவியம் ஃபிரான்சின் லூவர் அருங்காட்சியகத்துக்கு வந்தது தனிக்கதை. ஆனால், வந்த நாளில் இந்த ஓவியத்தின் புகழ் உலகில் பரவாத காலம். இந்நிலையில் 1911ம் ஆண்டு லூவரில் நடந்த ஒரு திருட்டுதான் இந்த ஓவியத்தை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தியது. லூவர் மியூசியத்தில் வேலை செய்தவர் வின்சென்ஸோ பெருகியா என்பவர். இவர் இத்தாலி தேசத்தவர். ஃபிரான்சில் ஒரு புலம்பெயர் தொழிலாளியாக வாழ்ந்து வந்தவர். ஆசை யாரை விட்டது? ஒருநாள் லூவர் மியூசியம் வழக்கம்போல் இரவில் மூடப்பட்டது. ஆனால், பெருகியா உள்ளேயே தங்கிவிட்டார். மோனாலிசா ஓவியத்தை மறைவான ஓர் இடத்தில் பதுக்கினார்.
மறுநாள் மியூசியம் திறக்கப்பட்டதும் அந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். தன் சொந்த நாடான இத்தாலிக்கு பயணப்பட்டார்.தங்கள் நாட்டைச் சேர்ந்த ஓவியம், தங்களிடமே வந்துவிட்டதாக இத்தாலியர்கள் குதூகலித்தார்கள். பெருகியா ஒரு தேசபக்தர் என்று புகழாரம் சூட்டப்பட்டது.
ஆனால், பெருகியா அந்த ஓவியத்தை விற்க முயன்றார். அப்பொழுது ஃபிரான்ஸ் போலீசிடம் மாட்டிக்கொண்டார். பிறகு ஃபிரான்சின் வேண்டுகோளை அடுத்து மீண்டும் லூவர் மியூசியத்துக்கு மோனாலிசா ஓவியத்தை இத்தாலி வழங்கியது. இப்படி மீண்டும் லூவர் மியூசியத்துக்கு அந்த ஓவியம் வந்து சேர மூன்று ஆண்டுகளானது.
இதற்கிடையில் ஓவியம் காணாமல்போனதும் இன்னொரு கூத்தும் நடந்தது. அப்போது ஃபிரான்சின் புகழ்பெற்ற ஓவியராக விளங்கியவர் இன்னொரு புகழ்பெற்ற ஓவியரான பிக்காசோ.
மோனாலிசா ஓவியம் காணாமல்போனதும் ஃபிரான்ஸ் போலீஸ் செய்த முதல் வேலை பிக்காசோவை விசாரித்ததுதான். ‘ஐயா, திருட்டு எல்லாம் நமக்கு ஆகாத செயல்...’ என அழாத குறையாக மன்றாடினார்.
உண்மையிலேயே பிக்காசோவிடம் மோனாலிசா ஓவியம் இல்லை. ஆனால், அதே லூவர் மியூசியத்தைச் சேர்ந்த களவாடப்பட்ட வேறு இரு பொக்கிஷங்கள் பிக்காசோவிடம் இருந்தன. இதை ஃபிரான்ஸ் போலீசார் மீட்டுச் சென்றது லூவர் அருங்காட்சியக திருட்டின் காமெடி வரலாறு.
ஏன் லூவர் பிரபலம்?
லூவரில் 5 லட்சம் பழம்
பொருட்கள் இருப்பதாக ஒரு கணக்கு சொல்கிறது. இத்தோடு சுமார் 35 ஆயிரம் ஓவியங்கள் இருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு. இத்தோடு அகழ்வாராய்ச்சி பொருட்கள், சிலைகள், நகைகள் என எண்ணற்ற பொருட்கள் இந்த மியூசியத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
2018ம் ஆண்டு ஒரு கோடிப் பேர் இந்த மியூசியத்தைக் கண்டுகளித்தார்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்த இனி நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவித்தார்கள்.
திருட்டுக்கு திருட்டு
இவையெல்லாம் பழைய திருட்டு வரலாறு. இந்த லேட்டஸ்ட் கொள்ளைச் சரித்திரம் குறித்து உலகம் என்ன சொல்கிறது?
லூவர் மியூசியம் மிகவும் பழமையான ஒரு காட்சியகம். பாதுகாப்பு, கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள் எல்லாம் இங்கு பலவீனமாக இருப்பதாக முன்பே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதேபோல் பணியாளர்களின் பற்றாக்குறையும் இருப்பதாகச் சொல்கிறார்கள். மியூசியத்தில் ஆட்டையைப் போடும் பல படங்கள் ஹாலிவுட்டில் வந்திருக்கின்றன. எல்லாப் படங்களிலுமே ஹீரோக்கள் கஷ்டப்பட்டு திருடுவது மாதிரி கதையம்சம் இருக்கும்.
ஆனால், லூவரில் இந்தமுறை நிகழ்ந்த திருட்டு எவ்வித சிரமமும் இன்றி வெறும் நான்கே நிமிடங்களில் அரங்கேறியிருக்கிறது. கட்டடத்திற்கு மேற்பூச்சு பூசுவது அல்லது பராமரிக்கும் மேஸ்திரிகள் போல் சர்வசாதாரணமாக ஏணியில் ஏறி முதல் மாடிக்குச் சென்று குதித்துள்ளனர். 8 பொக்கிஷங்களை எடுத்துக் கொண்டு எந்தவிதமான ஆக்ஷனும் இன்றி வெளியேறியுள்ளனர்.
இவையெல்லாம் இப்பொழுதும் லூவர் மியூசியம் பாதுகாப்புக் குறைபாட்டுடன் இருப்பதையே வெளிச்சமிட்டுக் காட்டியிருப்பதாக உலகம் கருதுகிறது.
அத்துடன் இந்த திருட்டை நியாயப்படுத்தும் கட்டுரைகளும் குவிகின்றன. உதாரணமாக ‘லூவர் மியூசியமே ஆப்பிரிக்கா, ஐரோப்பா, எகிப்து, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கும் இடம்தான்... ஃபிரான்சின் பொக்கிஷம் களவாடப்படவில்லை. ஃபிரான்ஸ் திருடி எடுத்து வந்த பொருட்களே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதிலென்ன தவறு இருக்கிறது...’ என பல கட்டுரைகள் எழுதப்பட்டு வலம் வருகின்றன.இந்தச் சம்பவம் ஃபிரான்ஸ் தேசத்துக்கு கவுரவக் குறைவாக இருப்பதால், திருடப்பட்ட 8 பொக்கிஷங்களை மீட்கும் நடவடிக்கையிலும், கொள்ளையர்களைப் பிடித்து நாட்டின் பெருமையை நிலைநிறுத்தவும் ஃபிரான்ஸ் போலீசார் மும்முரமாக இருக்கின்றனர். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
டி.ரஞ்சித்
|