சென்னைக்குள் சுற்றுச்சூழல் பூங்கா!
சுற்றிலும் நீர்நிலை. அதில் அடர்ந்த மரங்களும், செடி கொடிகளும் சூழ்ந்திருக்கின்றன. சூரிய ஒளி கிஞ்சித்தும் உட்புகாத அந்த இடம் அத்தனை குளுகுளுவென இருக்கிறது. பறவைகளும், பூச்சியினங்களும், நீர்வாழ்வினங்களும், நரி, கீரிப்பிள்ளை, காட்டுப்பூனை உள்ளிட்ட மற்ற உயிரினங்களும் அதனுள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. பரபரப்பான சென்னை பெருமாநகருக்குள் இப்படி ஓர் இடம் என்றால் யாருமே நம்பமாட்டார்கள். ஆனால், உண்மையில் ஓர் அடர்ந்த வனத்தின் பிரதிபலிப்பைத் தருகிறது ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தொல்காப்பிய பூங்கா.
 சென்னைக்குள் மெரினா, கிண்டி தேசிய பூங்கா, செம்மொழி பூங்கா என எத்தனையோ பொழுதுபோக்கு இடங்கள் இருந்தாலும்கூட சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வையும், அறிவையும் நமக்கு வழங்குவது தொல்காப்பிய பூங்கா மட்டுமே. சமீபத்தில் இந்தத் தொல்காப்பிய பூங்காவை 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதுப்பித்து மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த வாரம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
 சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் 58 ஏக்கர் பரப்பினைக் கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து இந்தத் தொல்காப்பிய பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய நுழைவு வாயில், நடைப்பயிற்சி பாதை, பார்வையாளர் மையம், திறந்தவெளி அரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, இணைப்புப் பாலம், ஸ்கைவாக், கண்காணிப்பு கோபுரம், சிற்றுண்டியகம், கழிப்பறை என வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்விச் சுற்றுலாவிற்காகவும், ஆர்வமுள்ள பொதுமக்களுக்காகவும் இந்தப் பூங்காவைச் சுற்றிக்காட்ட சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை பொருள் விளக்க அலுவலர்களையும் நியமித்துள்ளது. அவர்களில் ஒருவரான கோமதி நம்முடன் வந்தார்.சுமார் மூன்றரை கிலோமீட்டர் தொலைவுள்ள நடைப்பயிற்சிப் பாதையில் நடந்தோம். ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து சாந்தோம்-பட்டினப்பாக்கம் சிக்னலில் உள்ள ஸ்கைவாக் மேம்பாலம் வரை சென்று வரலாம். ‘‘இது கடல்சார் ஈரநிலம். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னாடி இது, புறம் தள்ளப்பட்ட இடமாக கிடந்தது. இதனை ஆங்கிலத்துல ‘டிகிரேட் வெட்லேண்ட்’னு சொல்வாங்க. அதாவது ஒரு வெட்லேண்ட் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் செய்ய இயலாமல், தன்னுடைய இயல்பு பண்பை இழந்து, குப்பை மேடாகவும் சாக்கடை நீராலும் கருவேல மரங்களால் சூழப்பட்டிருந்தது.
இதனை சீரமைப்பு செய்யணும்னு கடந்த 2007ம் ஆண்டு தமிழக அரசு திட்டப்பணிகளைத் தொடங்கியது. அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் இதற்கு அடிக்கல் நாட்டினார். அப்படியாக முதற்கட்டமாக 58 ஏக்கர் சுற்றளவில் அமைந்துள்ள அடையாறு உப்பங்கழியோடையை சீரமைப்பதற்கான திட்டம் தொடங்கப்பட்டது.
பின்னர் 2011ம் ஆண்டு முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்...’’ என நடந்தபடியே நம்மிடம் பேசிய கோமதி, அங்கிருந்த மரங்கள், செடிகொடிகள் பற்றி விளக்கங்கள் கொடுத்தார்.
‘‘இங்க ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்திருக்கோம். குறிப்பாக வறண்ட பசுமை மாறா காடுகள்ல இருக்கக்கூடிய 177 வகையான தாவரங்களை நடவு செய்திருக்கோம். உதாரணத்திற்கு கருங்காலி மரம், காட்டு எலுமிச்சை, காட்டு புன்னை, நீர்மருது, நீர் அடம்பைனு ரொம்ப தனித்துவமான மரங்களை வச்சிருக்கோம்.
இதுதவிர புங்கம், மகிழம் உள்ளிட்ட மரங்களும் இருக்குது. அப்புறம் மாங்குரோவ் காடுகளை உருவாக்கியிருக்கோம். இதில் மாங்குரோவ் வாக்னு ஒரு பகுதியும் இருக்கு...’’ என்றவர், அங்கிருந்த ஓய்வு குடிலில் நம்மை அமர வைத்தார்.
‘‘பொதுமக்களும், மாணவர்களும் இளைப்பாற இந்தக் குடில்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டிருக்கு. அப்புறம், மாணவர்களைக் கவர பூச்சிகள், மரங்கள் பற்றின குறிப்புகளையும் ஆங்காங்கே தந்திருக்கோம்.
ஆரம்ப காலத்துல பொதுமக்களுக்கு இங்க அனுமதியில்ல. காரணம் என்னன்னா இது சீரமைக்கப்பட்ட பூங்கா. பல வகையான அரிய தாவரங்களும், விலங்குகளும் இருப்பதால் அதன் வளர்ச்சி பாதிக்கும்னு அனுமதி கொடுக்கல. இப்ப நாம் சீரமைப்பு பண்ணி தக்கவைப்பதில் வெற்றியும் பெற்றிருக்கோம். அதனால் முதல்ல 2011ல் இருந்து 2014ம் ஆண்டு வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் காலையிலயும் மதியமும் அனுமதி வழங்கப்பட்டது. 2015ல் இருந்து பொதுமக்கள்கிட்ட இருந்து நிறைய கோரிக்கை வரவும் கொஞ்சம் பேர்களுக்கு அனுமதி வழங்கி இப்ப 100 பேர் வரைக்கும் அனுமதிக்கிறோம். நிறைய எண்ணிக்கையில் வந்தாங்கனா இந்த இயற்கை சார்ந்த சூழல் பாதிக்கப்படும். பறவைகளோ, மற்ற உயிரினங்களோ இந்த இடத்தைவிட்டுப் போயிடும். நம்மளுடைய நோக்கமே சூழலையும் பாதுகாக்கணும் என்பதுதான்.
அப்புறம் இப்போ பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி மையமாகவும் ஆராய்ச்சி மையமாகவும் இந்தப் பூங்கா செயல்பட்டு வருது. ஆராய்ச்சி என்பது நாம் நேரடியா எந்த ஆராய்ச்சியும் செய்ய மாட்டோம்.இப்போ, தண்ணீரின் பண்பு எப்படியிருக்கு என்பதை கண்காணிப்போம். செடிகள்ல ஏதாவது பிரச்சனைகள் இருக்கா, நோய்கள் தாக்குதா, பூச்சி ஏதாவது இருக்குதா, என்னென்ன உயிரினங்கள் இங்க வந்து தங்குது இப்படியான விஷயங்களை கண்காணிப்போம்.
இங்க 45 வகையான மீன்கள், இறால் இனங்கள், வாத்துகள், கொக்குகள், நாரைகள், நண்டு இனங்கள் இருக்குது. இதுதவிர நரி, கீரிப்பிள்ளை, காட்டுப்பூனை இப்படியான விலங்கினங்களும் வாழுது. பறவைகள்ல கூழைக்கடா, மஞ்சள்மூக்கு நாரை, பெரிய கொக்கு, நடுத்தர கொக்கு, சிறிய கொக்கு, நீர்க்காகம், ஊசிவால் சிறவினு நிறைய வருது.
இதெல்லாம் கடந்த 15 ஆண்டுகள் சீரமைப்பு மூலமே வந்திருக்கு.
இப்போ, நாம் சிறப்பாக சீரமைப்பு செய்திட்டு வர்றோம். இதனால் இன்னும் உயிரினங்கள் பல்கிப்பெருகிட்டு இருக்குது. போதிய உணவு, போதிய பாதுகாப்பு, அதுங்களுக்கான சூழல் எல்லாமே இங்கே இருப்பதாலேயே பல்கிப்பெருகுது...’’ என்கிறவர், தண்ணீருக்கு நடுவே இருந்த சிறிய பாலத்தின் வழியே அழைத்துச் சென்றார். அதன் அழகை ரசித்துவிட்டு அங்கிருந்து மீண்டும் நடக்கத் தொடங்கினோம். அங்கிருந்து ஒரு வியூ பாயிண்ட்டிற்குச் சென்றோம். அடையாறு நீர்நிலை பகுதிகள் அத்தனை அழகாய் இருந்தது. அதில் வாத்துகள் சில நீந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். ‘‘நம் மனித சமூகம் சந்தோஷமாகவும் மகிழ்வாகவும் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொடுப்பதே இந்த மாதிரியான சுற்றுச்சூழல் சார்ந்த இடங்களும், அங்கு வாழக்கூடிய உயிரினங்களும்தான். மக்களுக்கு நல்ல காற்றையும், சுவாசத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பது இப்படியான இடங்களே.
அதனால்தான் தொல்காப்பிய பூங்கா பராமரிக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம்னு சொல்றோம்...’’ என கோமதி நெகிழ, கண்காணிப்பு கோபுரம் வந்தது.இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த வாட்ச் டவரிலிருந்து அடையாறு உப்பங்கழியை இருபுறமும் ரசிக்கலாம். இதில் ஒரு பைனாகுலர் டெலஸ்கோப்பும் வைத்துள்ளனர்.
அது இன்னும் நெருக்கமாகக் காட்டுகிறது.இதன்வழியே உப்பங்கழியில் திரியும் பறவைகளையும், மாங்குரோவ் காடுகளில் ஒளிந்திருக்கும் பறவையினங்களையும் ரசிக்கலாம். நிறைவாக அதன் அருகில் இருக்கும் சாந்தோம் ஸ்கைவாக் மேம்பாலத்தில் ஏறி பார்த்திட்டு திரும்ப இரவாகியிருந்தது நேரம். வாக்கிங் செல்ல மந்த்லி பாஸ்!
இந்தப் பூங்கா வியாழக்கிழமை தவிர்த்து திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படுகிறது. வியாழக்கிழமை மட்டும் பராமரிப்பிற்காக விடுமுறை விடப்படுகிறது. இதில் தினமும் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் நூறு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
இதிலும் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வெள்ளிக்கிழமையும், தனியார் பள்ளிகளும், மற்ற அனைத்து கல்லூரிகளும் திங்கள், புதன், ஞாயிறு ஆகிய கிழமைகளிலும் வந்து பார்வையிடலாம். தினமும் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இதிலும் நூறு பேர்களுக்கு மட்டுமே அனுமதி. இவர்களும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
நடைப்பயிற்சியாளர்களுக்கு பொதுவிடுமுறை உட்பட அனைத்து நாட்களும் திறந்திருக்கும். அவர்கள் காலை 6.30 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையும் பயிற்சி செய்யலாம். இதிலும் அதிகபட்சம் நூறு பேர்களுக்குதான் அனுமதி. இவர்களும் இணையதளம் வழியே பதிவு செய்ய வேண்டும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கட்டணம் பத்து ரூபாயும், பொதுமக்களுக்கு 20 ரூபாயும், நடைப்பயிற்சியாளர்கள் ஒருமுறை நுழைவு கட்டணம் 20 ரூபாயும் வைக்கப்பட்டுள்ளது. நடைப்பயிற்சியாளர்களுக்கு மாதம், மூன்று மாதம், ஆறுமாதம், ஓராண்டு என பாஸ் முறையும் உள்ளது. நுழைவுச்சீட்டு முன்பதிவு மற்றம் பிறவிவரங்களுக்கு www.crrt.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|