கடைக்குக் கடை உடைகளின் அளவுகளில் மாற்றங்கள் ஏன்..?



Size Chart Scam சொல்லும் சீக்ரெட்ஸ்

ஒவ்வொரு நாட்டிலும் மூன்று விதமான பிராண்டுகளில் அனைத்து பொருட்களும் உருவாக்கப்படுகின்றன. உள்ளூர் பிராண்டுகள், தேசிய பிராண்டுகள் மற்றும் சர்வதேச பிராண்டுகள். 
இவற்றுக்குத் தகுந்தபடி பொருட்களின் தரம் மற்றும் அதன் டிசைன்கள் மாறலாம். ஆனால், ஏன் அளவீடுகளில் மாற்றம் உண்டாகின்றன? குறிப்பாக உடைகள் மற்றும் காலணிகளில் ஏன் மிகப்பெரிய வித்தியாசங்களைக் காணமுடிகிறது?

சாதாரணமாக தனது ஏரியாவில் உடைகளை வாங்கிக் கொண்டிருந்த ஒருவர் தனக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக தேசிய பிராண்டுக்கு தன்னை மாற்றிக் கொள்கிறார். 
ஆனால், அதற்குக் காரணம் தரமான பொருட்கள் கிடைக்கின்றன... நல்ல டிசைன்கள் இருக்கின்றன... என்றுதான் சொல்கிறோமே தவிர யாரும் தன் உடலுக்குத் தகுந்த அளவில் இவர்கள் உடைகள் கொடுக்கிறார்கள் என்பதைப் பேசுவதே கிடையாது. 

நம் ஊரின் அண்ணாச்சி கடை துவங்கி ஏரியாவில் இருக்கும் சுற்றுவட்டாரத்தில் எங்கே உடைகள் எடுத்தாலும் அது சரியான அளவுகளில் கிடைக்காது. அதே சமயம் தேசிய பிராண்டுகளில் எடுக்கும் பொழுது ஒருவேளை நாம் ‘L’ சைஸ் எனில் அதற்கான அளவுகளில் உடைகள் சரியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.சர்வதேச பிராண்டுகளுக்கு செல்லும்பொழுது தேசிய பிராண்டுகளின் ‘L’ சைஸ், இங்கே ‘M’ சைஸ்தான். 

ஏன் இப்படி? ஒவ்வொரு பிராண்டிலும் சைஸ் சார்ட் ஏன் மாறுகிறது?

உலக அளவிலேயே மொத்தம் மூன்று அளவீடுகள்தான் இருக்கின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆசியா என இதைப் பிரித்திருக்கிறார்கள்.எனவே ஆசிய அளவுகளை இந்திய பிராண்டுகளில் கொண்டுவரும்போது பெரிதாக எவ்வித மாற்றங்களும் இருப்பதில்லை. ஆனால், ஏன் ஒரே நாட்டுக்குள் அளவீடுகளில் இவ்வளவு மாற்றங்கள்..? பல காரணங்களைச் சொல்கிறார்கள் ஃபேஷன் நிபுணர்களும் உள்ளூர் விற்பனையாளர்களும்.

‘‘இதை அரசியலாகப் பார்க்கலாம்...’’ என்று ஆரம்பித்தார் ஃபேஷன் டிசைனரான மீனா. ‘‘அதாவது உள்ளூர் பிராண்டிலேயே இருக்கும் ஒருவனை அவனுக்கே தெரியாமல், ‘இந்த உடை தனக்குச் சரியாக இல்லை’ என்னும் மனநிலையை உருவாக்கி முதலில் தேசிய பிராண்டுகளை நோக்கி நகர்த்துவது; தொடர்ந்து ‘நீ ஒன்றும் அவ்வளவு உடல் பருமனாக இல்லை’ என்னும் மனநிலையை உருவாக்கி சர்வதேச பிராண்டுகள் நோக்கி நகர்த்துவது.

இன்னொரு வகையில் தயாரிப்பு அளவீடுகளில் மாற்றம் என்கிற பிரச்னையும் இருக்கிறது. ‘M’ சைஸ் என்றால் எல்லா பிராண்டிலும் ஒரே அளவுதான் இருக்கும் என்று நினைக்கிறோம். 
ஆனால், உண்மையில் ஒவ்வொரு பிராண்டும் தங்கள் இலக்கு வாடிக்கையாளர்களை மனதில் வைத்து வேறுபட்ட அளவீட்டு முறைகளை உருவாக்குகிறார்கள். 

சில பிராண்டுகள் மேற்கத்திய அளவீட்டைப் பின்பற்றும் போது, அது இந்திய உடலமைப்பில் பொருந்திப் போவதில்லை. இதனால் ஒரே உடலமைப்புடைய ஒருவர், ஒரு பிராண்டில் ‘S’ அணிந்தால், மற்றொரு பிராண்டில் ‘L’ அணிய வேண்டிய சூழல் உருவாகிறது.

இதன் பின்னணியில் உள்ள ஃபேஷன் அரசியல் கொஞ்சம் சாதுர்யமானது. பிராண்டுகள் தங்கள் வாடிக்கையாளர்களின் மனநிலையை ‘சைஸ் மனோவியல்’ மூலம் கையாள்கிறார்கள். 

இதற்கு ‘வேனிட்டி சைஸிங்’ எனப்படும் ஒரு தந்திரமும் உண்டு.அதாவது உண்மையான அளவைவிட சற்று குறைவான சைஸை குறிப்பிடுவது. ஒரு பெண் வழக்கமாக ‘M’ சைஸ் உடைகள் அணிபவர் எனில் , அவரேஒரு குறிப்பிட்ட பிராண்டில் ‘S’ அணிய முடிந்தால், அவர் மனதில், ‘தான் ஒன்றும் பருமனில்லை’ என்ற எண்ணம் உண்டாகி தொடர்ந்து அந்த பிராண்ட் ஆடைகளையே வாங்குவார்.  

இன்னொரு விஷயம். சில பிராண்டுகள் தங்களை ‘எக்ஸ்க்ளூசிவ்’ என்று காட்ட, சிறிய அளவுகளை மட்டுமே வடிவமைக்கின்றன. இது ‘உடல் அரசியல்’ என்கிற சமூக பிரச்னையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு காலத்தில் பெரிதான இடைப்பகுதி கொண்டவர்களே சினிமாவில் ஹீரோயினாக தேர்வானார்கள். இன்று சிறிய இடையே அழகுக்கான இலக்கணமாக கருதப்படுகிறது. 

எனவே, பெரிய இடுப்பைக் கொண்டவர்கள் அதை மறைக்க நீளமான மேக்சி, அனார்கலி சல்வார்கள் அல்லது எதற்கும் சரிப்பட்டு வரும் புடவைகள் என பெண்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். மட்டுமல்ல; இடைப்பகுதி பெரிதாக இருந்தால்தான் குழந்தைப்பேறு ஆரோக்கியமாக நிகழும் என்கிற உண்மை நிலை கூட இன்று ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

அதேபோல் சர்வதேச பிராண்டுகள், ஆசிய பெண்களின் உடலமைப்பை மேற்கத்திய அளவுடன் ஒப்பிட்டு வடிவமைக்கப்படு கின்றன. இதனால் ஃபிட் மாறு
படும். உதாரணத்துக்கு இன்று அதிகமாக கொரியன் கலாசார உடைகள் நமது ஃபேஷனில் கலக்கப்பட்டுள்ளன. 

பொதுவாக கொரிய மற்றும் சீன மக்கள் உடல் மெலிந்து கை கால்கள் அனைத்தும் குச்சி குச்சியாகக் காணப்படுவார்கள். அந்த அளவு நம் இந்திய உடலமைப்பிற்கு சரிவராது. அதுவே கொரியன் ஃபேஷனை இந்திய அளவீட்டுக்கு ஏற்ப மாற்றும்போது அளவுகள் சரியாக வரும். 

தற்சமயம் இந்தியாவில் பல உள்நாட்டு பிராண்டுகள் இப்போது இந்த நெறியை உடைக்க முயல்கிறார்கள். இன்க்ளூசிவ் சைஸிங் எனப்படும், எல்லா உடலமைப்புகளுக்கும் பொருந்தும் உடை முறை உருவாகிக் கொண்டிருக்கிறது.எனவே, சைஸ் சார்ட்டின் பின்னணியில் உள்ளது வெறும் அளவீடு அல்ல. அது அழகின் தரநிலையைக் கட்டுப்படுத்தும் ஃபேஷன் அரசியல், சமூக உளவியல், விற்பனை உத்தி ஆகிய மூன்றின் கலவை. 

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ‘XXXL’தான் அதிக பருமன். ஆனால், இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் ‘L’ சைஸ் தொட்டாலே பருமன் என்கிற மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஒரு தெருவுக்கு குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு பிளஸ் சைஸ் கடைகளைப் பார்க்கலாம். அல்லது எல்லா கடைகளிலும் பிளஸ் சைஸ் பிரிவு இருக்கும். 

ஆனால், இந்தியாவில்... ஏன் சென்னையில், பிளஸ் சைஸ் கடைகள் எத்தனை உண்டு? மொத்த நகரத்திலும் ஒன்று, இரண்டு கூட இருக்காது. அதிலும் தேசிய பிராண்டுகளுக்கு செல்லும்போது அதிகபட்சமான அளவீடு ‘XXL’ எனில் அதற்கு மேல் பருமனாக இருக்கும் நபர்கள் எங்கே சென்று உடைகள் வாங்குவது?

ஒன்று உள்ளூர் பிராண்டுகளுக்கு வரவேண்டும் அல்லது அதிகம் செலவழித்து சர்வதேச பிராண்டுகளுக்கு செல்ல வேண்டும். இதுதான் விற்பனை ரகசியம்.
உள்ளூர் கடைகள் அப்படித்தான் செய்கின்றன. ‘5XL’ வரை உடைகள் கிடைக்கும். வாங்கி தேவைப்படும் அளவில் மாற்றிக்கொள்ளலாம். அல்லது கடையிலேயே ஆல்டரேஷன் செய்துகொள்ளலாம். வியாபாரத் தந்திரம்தான்...’’ என மீனா முடிக்க, தொடர்ந்தார் ரீடெயில் விற்பனையாளரான சந்திரசேகரன். 

“‘Size Chart Scam’ என்ற வார்த்தை ஒரு பெரிய குற்றம் போலத் தோன்றினாலும், பரவலாக நடக்கும் ஒரு வணிக உத்தி இதுதான். இது நம்முடைய உடலமைப்பைப் பற்றிய நம்பிக்கையைத் திசைதிருப்பி, பிராண்டின் விற்பனையை உயர்த்தும் தந்திரம்.ஆன்லைனில் ஆடை வாங்கும்போது, ஒவ்வொரு பிராண்டும் தங்களுக்கான தனித்துவமான சைஸ் சார்ட் கொடுக்கும். பெரும்பாலும் அந்த சார்ட்டுகள் உண்மையான அளவுகளுடன் பொருந்தாது. ஒரு பிராண்டின் ‘M’ மற்றொரு பிராண்டின் ‘L’ ஆக இருக்கலாம். இதை ‘சைஸ் சார்ட் மாயை’ என்று அழைக்கிறார்கள். 

உள்ளூர் கடைகள் இந்த மாயைக்குள் தங்களைப் பொருத்திக் கொள்வதில்லை. ஏரியாவில் இருக்கும் மக்களின் மனநிலைக்கு ஏற்ப தங்கள் கடைகளில் ஆடைகளை விற்பார்கள். அந்தந்த ஏரியாவில் இருக்கும் ஒவ்வொரு கடைக்கும் ஒரு ஸ்டைல் டீம் உண்டு. இவர்கள்தான் டேட்டாஸை கலெக்ட் செய்வார்கள். இதற்கேற்பவே கொள்முதல் நடக்கும்.வாங்கும் பணத்துக்கு சரியான அளவில் உடை கொடுத்தால் என்ன என்கிற கேள்வி எழும். ஆனால், உண்மையாகவே பொதுவான அளவு என்று ஒன்று கிடையவே கிடையாது. 

உதாரணத்துக்கு ஆப்பிரிக்க மக்களின் உடல் அளவு எந்த நாட்டு மக்களின் உடல் எடையுடனும் பொருந்தாது. இந்தியாவைப் பொறுத்தவரை ‘L’ சைஸ் என்றால் பெண்ணுக்கு 38, ஆணுக்கு 40. ஆனால், ஆப்பிரிக்க பெண்களுக்கு 42 +, ஆண்களுக்கு 44 வரை செல்லும். இடைப்பகுதியோ 34 அளவில் இருக்கும். ஆண்கள் சாதாரணமாகவே 6 அடி தொடுவர். 

அதைப்போல் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலமே உயரம் மாறுபடும். ஆந்திர ஆண்களும் பெண்களும் பொதுவாகவே கொஞ்சம் உயரமானவர்கள். அதே சமயம் வடகிழக்கு இந்திய மக்கள் பொதுவாகவே உயரம் குறைந்தவர்கள். கேரள, தமிழ்நாடு பெண்கள் மணல்கடிகார உடலமைப்பு கொண்டவர்கள். இதனால்தான் அளவீடுகளில் இவ்வளவு மாறுபாடு.
மூன்று விதமான ஃபிட்ஸ் உண்டு. ரெகுலர் ஃபிட், ஸ்லிம் ஃபிட், லூஸ் ஃபிட். ஆண்களின் உடைகள் இந்த மூன்று ஃபிட்ஸ் அடிப்படையில்தான் பிரிக்கப்படுகின்றன. 

ஆனால், இதுபோல் பெண்களுக்கு இன்னமும் பிரிக்கப்படவில்லை. பெண்களுக்கான உடை தயாரிப்பு ஆண்களுக்கான உடை தயாரிப்பைவிட பன்மடங்கு அதிகம். இதனாலேயே தேசிய அளவில் ஒரு அளவீட்டையோ அல்லது ஒரு சரியான ஃபிட் சைஸ் சார்ட் கொடுப்பதிலோ குழப்பங்கள் நிலவுகின்றன...’’ என்கிறார் சந்திரசேகரன்.

ஷாலினி நியூட்டன்