‘மாயவன்’ல சொன்னதை எலான் மஸ்க் செய்தார்...
அப்படி ‘XY’யில் இருப்பதும் நடக்கும்!
‘அட்டக்கத்தி’,‘சூதுகவ்வும்’, ‘பீட்சா’ உட்பட ஏராளமான படங்கள் கொடுத்தவர் தயாரிப்பாளர் சி.வி.குமார். இப்போது பிரபலமாக உள்ள நடிகர்களான பாபி சிம்ஹா, தினேஷ், அசோக்செல்வன்; இயக்குநர்களான பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன்குமரசாமி, ‘அயலான்’ ரவி, ‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார்; இசையமைப்பாளர்களான சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன், ஹிப்ஹாப் ஆதி, நிவாஸ் கே.பிரசன்னா; நடிகைகளான நந்திதா, சஞ்சிதா ஷெட்டி உட்பட பலரை அறிமுகம் செய்த பெருமை இவருக்கு உண்டு.
 சில வருடங்களுக்கு முன் இவர் இயக்கிய ‘மாயவன்’ ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இப்போது ‘XY’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ‘‘‘மாயவன்’ செய்யும்போது நான்கைந்து கதைகளாக எழுதினோம். அதில் ஒரு கதை இது. ‘மாயவன்’ படத்தில் ஒரு சூப்பர் வில்லன் பல அச்சீவ்மெண்ட் செய்கிறவனாகவும், அழிக்க முடியாத சக்தியாகவும் காண்பித்தோம். அதன் அடுத்த வெர்ஷன் இது.
 இது பியூர் சயின்ஸ் ஃபிக்ஷன் கதை. இப்போதுள்ள சமூகத்தில் மருத்துவ உலகம், மனிதர்களின் பரிமாணம் எதை நோக்கிச் செல்கிறது என்பதை கருவாக எடுத்துக் கொண்டுள்ளோம். மற்றபடி, இது கருத்து சொல்லும் படம் கிடையாது. விஞ்ஞான ரீதியாக நாம் எவ்வளவு பரிமாணங்கள் அடைந்து வருகிறோம் என்பதுதான் ஹைலைட்டாக இருக்கும்.
 ‘மாயவன்’ படத்தில் நம்முடைய மெமரியை கம்ப்யூட்டரில் காபி பண்ண முடியும் என்று சொல்லியிருந்தோம். 2020ல் எலான் மஸ்க் தன்னுடைய மெமரியை காபி செய்து அதிலிருந்து பேசி வருவதாகச் சொல்லியிருந்தார். அதுமாதிரி இந்தப் படத்தில் சொல்வதும் நடக்கும்...’’ புன்னகைக்கும் சி.வி.குமார், இதில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் கிடையாது என்கிறார். ‘‘எல்லோரும் கதையோடு கலந்த கேரக்டர்ஸ். ரத்திகா ரவீந்தர், அனீஸ் பிரபாகரன், வர்ஷினி வெங்கட் மெயின் லீட் செய்துள்ளார்கள். மற்ற வேடங்களில் பிரனா, ‘தேநீர் இடைவேளை’ பிரகதீஷ், ஸ்ரீதர், ரௌடி பேபி வர்ஷு, சேரன் அகாடமி ஹுசைன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ஹரிஹரன் ஆனந்தராஜா. இசை ஸ்ரீ காந்த் கிருஷ்ணா. ‘பொன்னியின் செல்வன்’, ‘சாவா’ படங்களில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் மியூசிக் அரேஞ்சராக வேலை செய்தவர். ‘டிவைன் டைட்ஸ்’ என்ற ஆல்பத்துக்காக கிராமி விருது வென்றவர்.
எடிட்டர் பிகே.ஆர்ட் பிரேம். ‘இப்படியொரு உலகத்தில் இருக்கிறோமா’ என்ற சிந்தனை புதுசாக இருக்கும். ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தைக் கொடுக்கும். அதுமட்டுமல்ல, ரசிகர்களின் மனசுக்குள்ள இப்படியெல்லாம் நமக்கு நடக்கிறதா என்ற பயம் வரும். நிச்சயம் மொழிகள் கடந்து எல்லோரையும் ‘XY’ ஈர்க்கும்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் சி.வி.குமார்.
எஸ்.ராஜா
|