ரியல் டேட்டாவுக்கு டாட்டா! குற்ற ஆவணக் காப்பகத்தின் குளறுபடி
இந்தியாவில் நிகழும் பலவிதமான குற்றங்களை ஆவணப்படுத்தும் ஒன்றிய அரசின் அமைப்பாக இருக்கிறது ‘என்சிஆர்பி’ எனப்படும் ‘தேசிய குற்ற ஆவணக் காப்பகம்’.
இந்த அமைப்பு ஒவ்வொரு வருடமும் வெளியிடும் புள்ளிவிவர அறிக்கைதான் இந்திய நீதிமன்றம், அரசாங்கம், மக்களிடையே ஒரு நம்பகமான குற்ற ஆவணமாக இருக்கிறது. காரணம், அவ்வளவு பெரிய புள்ளிவிபரத்தை ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசமாக அறிந்து அதை ஒரு கட்டுக்கோப்பான அறிக்கையாக சமர்ப்பிப்பதுதான்.  ஆனால், இந்த முறை அது வெளியிட்டிருக்கும் 2023க்கான அறிக்கையில் பல குளறுபடிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இத்தனைக்கும் 2021, 2022ம் ஆண்டு அறிக்கைகள் எல்லாம் வராத நிலையில் 2023க்கான அறிக்கை திடீரென வெளியாகியிருக்கிறது. சரி... லேட்டஸ்டாக இருக்கும் எனப் பார்த்தால் அது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு சாமரம் வீசுவதாகவே இருப்பதாக சொல்கிறார்கள் ஆர்வலர்கள்.
 உதாரணமாக சிலவற்றைப் பார்ப்போம்.‘ஜம்மு காஷ்மீரில் ஒரு வழக்கைத் தவிர பிரிவினை வாதம், மத-சமூக மோதல் வழக்குகள் இல்லை’ என சொல்கிறது இந்த 2023ம் ஆண்டுக்கான அறிக்கை. இதை நம்புவதும் கேழ்வரகில் நெய் வடிவதை ஏற்பதும் ஒன்றுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஏனெனில் ஜம்மு காஷ்மீரில் இன்டர்நெட் இல்லை, பொது பாதுகாப்பு எனும் சட்டத்தில் கருத்தாளர்களை எல்லாம் சிறையில் அடைத்திருக்கிறது பாஜக அரசு. அப்படியிருக்க எப்படி பிரச்னைகள் தலைதூக்கும்? இதை வைத்து எப்படி அப்பிரதேசம் அமைதியாக இருப்பதாகக் கருத முடியும் என விலாசுகிறார்கள் ஆர்வலர்கள். அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர் இடையிலான மோதல் பல பத்தாண்டுகளாக நடந்து வருவது. அமைதி, மோதல், அமைதி என மாறி மாறி அம்மாநிலத்தில் நடைபெறுவது சர்வதேச அளவில் தெரிந்த விஷயம். அதிகம் வேண்டாம், கடந்த 30 ஆண்டுகால செய்தித் தாள்களை - பாஜக சார்பான பத்திரிகைகள் உட்பட - புரட்டிப் பார்த்தாலே இந்த உண்மை தெரிய வரும்.
அப்படியிருக்க ‘தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்’ சமீபத்திய அறிக்கை, மகாராஷ்டிராவில் ‘ஊபா’ எனும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்திலும், பிரிவினை வாதச் சட்டத்திலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்கிறது!இதற்கு மாறாக சுமார் 12 வழக்குகள் ஊபா சட்டத்தில் கைதானவர்கள் தொடர்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.
இந்தக் காப்பகம் 2017ம் ஆண்டு, புதிதாக ஒரு செயலில் இறங்கியது. அதாவது ‘ஹேட்’ க்ரைம் எனப்படும் வெறுப்பரசியல், ஆணவக் கொலை, கும்பல் கொலைக் குற்றங்கள் தொடர்பாக சர்வே எடுத்தது. அதுவரை இப்படிப்பட்ட பட்டியல் இக்காப்பகத்தின் முந்தைய அறிக்கைகளில் இடம்பெறவில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது.
உண்மையிலேயே இப்படியொரு சர்வே தேவை என்பதால் சமூக ஆர்வலர்கள் இதை வரவேற்றார்கள். ஆனால், 2023ம் ஆண்டுக்கான சமீபத்திய அறிக்கையில் இந்தப் பட்டியலே இடம்பெறவில்லை! தூக்கிவிட்டார்கள்.
உண்மையில் இந்த ஆண்டு ‘இந்தியா ஹேட் லேப்’ எனும் உலகளாவிய அமைப்பு உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்த்து இந்தியாவில் நிகழ்ந்த வெறுப்பு பிரசாரத்தின் அளவு 50 சதவீதம் என முகத்தில் அறைந்திருக்கிறது.
அதேபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 0.7 சதவீதம் மட்டுமே அதிகரித்திருப்பதாகவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 9.2 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் இந்த லேட்டஸ்ட் அறிக்கை சொல்கிறது.
பாஜக சார்பு ஊடகங்கள் இதை வைத்து ‘நாடே பாதுகாப்பாக’ இருப்பதாக நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.ஆனால், தனியார் அமைப்புகள் எடுத்த ஆய்வுகள் இதற்கு நேர்மாறாக அதிர்ச்சியூட்டுகின்றன. உதாரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக அவை சொல்கின்றன. அதாவது பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் சுமார் 31.4 சதவீதத்தை பங்குபோடும் குடும்ப வன்முறையை, ‘தேசிய குற்ற ஆவண காப்பகம்’ தனது சமீபத்திய அறிக்கையில் புறக்கணித்துள்ளதாக சமூகவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். அதே மாதிரி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அதிகமாக இடம்பெறும் ‘போக்சோ’ சட்ட குற்றங்கள் சுமார் 80 சதவீதம் என்றும் ஆர்வலர்கள் அச்சமூட்டுகிறார்கள்.
சைபர் க்ரைமை பொறுத்தளவில் மும்பைதான் முதலிடம். ஆனால், காப்பகம் மும்பையில் 11.2 சதவீதம் சைபர் க்ரைம் குறைந்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. ஆனால், ஆர்வலர்கள் சைபர் க்ரைமின் கீழ் வரும் வழக்குகளில் சுமார் 2 சதவீதம் மட்டுமே முதல் தகவல் அறிக்கையாக பதிவாகின்றன என்கிறார்கள்.
மொத்தத்தில் பாஜக ஆட்சியில் இந்தியாவில் எல்லாமே சரியாக இருக்கிறது... அமைதிப் பூங்காவாக நாடு இருக்கிறது என பிரசாரம் செய்யவே இந்த அறிக்கையை ஒன்றிய அரசு பயன்படுத்தியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
டி.ரஞ்சித்
|