வாராரு வாராரு கருப்பரு வாராரு..!
13. பஞ்ச பூதங்களும் கருப்பண்ணசாமியும்!
நம் கருப்பரின் ஒவ்வொரு ஆலயம் குறித்தும் பார்த்து வருகிறோம். இடையிடையே கருப்பண்ணசாமியின் புகழ் பற்றியும் அறிந்து வருகிறோம்.அந்த வகையில் இந்த அத்தியாயத்தில் முக்கியமான ஒன்றைக் குறித்து பார்க்கப் போகிறோம். அதுதான் பஞ்ச பூதங்களுக்கும் கருப்பண்ணசாமிக்கும் இருக்கும் தொடர்பு பற்றிய உண்மைகள்.பலமுறை சொன்னதுதான். திரும்பத் திரும்ப உணர்த்துவதில் தவறில்லை. தமிழக கிராமச் சமூகங்களில் வழிபடப்படும் கருப்பண்ணசாமி, பொதுவாக ஒரு ‘காவல் தெய்வம்’ என்ற அளவிலேயே புரிந்து கொள்ளப்பட்டுள்ளார்.  அவரை மனதார வணங்கும் பக்தர்களும் அப்படியே கருதுகிறார்கள்.ஆனால், உண்மை அதுவல்ல. ஆழமாக நோக்கினால் அவர் வெறும் நம்பிக்கையோ, புராண உருவமோ அல்ல. இயற்கை, காலநிலை, சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஆகியவற்றை மனித சமூகங்கள் புரிந்துகொண்ட விதத்தின் ஒரு சமூக பண்பாட்டு வடிவம் என்பது புரியும்.
காதில் பூ சுற்றவில்லை. அல்லது கலந்துகட்டி போகிறபோக்கில் அடித்துவிடவில்லை. உண்மையிலேயே நம் கருப்பர் இயற்கை, காலநிலை, சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஆகியவற்றை உணர்த்தும் அறிவியல் பரம்பொருள்.
மிகையில்லை. இன்றைய உலகில் காலநிலை மாற்றம் குறித்த அறிவை வழங்குவது Intergovernmental Panel on Climate Changes எனப்படும் IPCC போன்ற அறிவியல் அமைப்புகள்தான். அவை செயற்கைக்கோள் தரவுகள், கணினி மாதிரிகள், நீண்டகால புள்ளிவிவரங்கள் மூலம் உலகளாவிய காலநிலை மாற்றங்களை விளக்குகின்றன.
இதற்கு மாறாக நம் கருப்பண்ணசாமி வழிபாடு ஓர் உள்ளூர் காலநிலை அறிவு அமைப்பாகத் திரண்டு கண்முன் நிற்கிறது.இப்படிப் பாருங்கள். ஒரு கிராமத்தில் மழை தவறினால், வறட்சி ஏற்பட்டால், நோய் பரவினால் அல்லது விளைச்சல் குறைந்தால் என்ன நினைப்போம் அல்லது என்ன செய்வோம்?நம் கருப்பண்ணசாமியின் கோபமாகக் கருதுவோம்.
இது மூடநம்பிக்கை அல்ல. மாறாக, இயற்கை மாற்றங்களை சமூக நினைவாகப் பதியச் செய்த ஒரு வழிமுறை.IPCC உலகளாவிய தரவுகளைச் சொல்கிறது; பிரபஞ்ச மாற்றங்களைப் பட்டியலிடுகிறது.
அதேபோல்தான் நம் கருப்பண்ணசாமி செய்கிறார். ஆனால், உலகளாவிய தரவுகளை முன்வைக்காமல் கிராம அனுபவங்களைச் சொல்கிறார். மொத்தத்தில் ஐபிசிசி-யும் சரி, நம் கருப்பரும் சரி... இயற்கையைப் பற்றி, இயற்கையின் மாற்றங்கள் குறித்தே பேசுகின்றன; பேசுகிறார். என்ன... பேசும் மொழிதான் வேறு.
சுற்றுச்சூழலில் முக்கியமாக புழங்கும் வார்த்தை ‘Metabolic Rift’. அதாவது, மூலதன உற்பத்தி முறையால் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான சமநிலை உடைவதைக் குறிப்பிடும் சொல் இது. புரியாததைச் சொல்வதாக குழம்ப வேண்டாம்.
நிலம், நீர், காடு ஆகியவையெல்லாம் சமூகத்துக்கு வாழ்வாதாரமாக கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டு இருக்கிறதல்லவா? அந்நிலை மூலதன உற்பத்தி முறையால் மாறுகிறது. இயற்கைப் பொருட்கள் சமூகத்துக்கானவை என்பது மாறி தனிப்பட்ட ஒரு மனிதர் அல்லது நிறுவனத்துக்கு சொந்தமானது என மாறுவது.
உதாரணமாக, தண்ணீரை பணம் கொடுத்து வாங்குகிறோம். காடுகளை நிறுவனங்கள் நூறாண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு எடுத்து தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்கின்றன. இதனால் அந்தக் காடுகளுக்குச் செல்ல; நுழைய சாதாரண மக்களுக்கு அனுமதியில்லை.
இவையிரண்டும் ‘Metabolic Rift’ - அதாவது, மூலதன உற்பத்தி முறையால் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான சமநிலை உடைவதை நாம் புரிந்து கொள்வதற்கான எடுத்துக்காட்டுகள்.
இந்த இடத்தில்தான் நம் கருப்பர் கம்பீரமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.கருப்பண்ணசாமி வழிபாடு என்ன சொல்கிறது அல்லது என்ன உணர்த்துகிறது? நிலத்தைச் சுரண்டினால் கருப்பர் கோபப்படுவார்; நீர்நிலைகளை மாசுபடுத்தினால் கருப்பர் தண்டனை வழங்குவார்...
இதன் பொருள் என்ன? இயற்கையை மீறிச் செயல்பட்டால் சமூகத்துக்கு தீய விளைவுகள் ஏற்படும் என்பதுதானே? கருப்பர் இதைத்தான்... இதை மட்டும்தான் உணர்த்துகிறார்; தெரியப்படுத்துகிறார். ஆகவேதான் கருப்பண்ணசாமி ‘காவல் தெய்வம்’. அதாவது சுற்றுச்சூழல் ஒழுக்கக் காவலர். இதை மனதில் வைத்துதான் மானுடவியல் அறிஞர்கள், நம் கருப்பரை தமிழின் முதல் காலநிலை மாற்ற அறிஞர் எனக் கொண்டாடுகிறார்கள்.
மனித சமூகங்களும் காலநிலையும் எப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன என்பதை ஆய்வு செய்யும் துறையே க்ளைமேட் ஆந்த்ரோபாலஜி. இந்தத் துறை சமீபத்திய வரவு. அறிவியல் புரட்சி நிகழ்ந்த பிறகு ஜனித்த குழந்தை.ஆனால், எழுத்து, தரவு, வரைபடங்கள் வழியாக விஞ்ஞானபூர்வமான முடிவுகளை எடுக்காத காலத்தில், தமிழக கிராமங்கள் காலநிலை மாற்றங்களை எவ்வாறு பதிவு செய்தன? எப்படி சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொண்டன? சந்தேகமே வேண்டாம். நம் கருப்பரின் வழியாகத்தான்!
கிராமங்கள்தோறும் மக்கள் மத்தியில் இன்றும் புழங்கும் கருப்பண்ணசாமி கதைகளே இதற்கான விடை. மழை வராத ஆண்டுகள், பஞ்ச காலங்கள், தொற்றுநோய் பரவல்கள், காடு அழிக்கப்பட்ட காலங்கள்... இவையெல்லாம் கருப்பரின் கதைகளில் எதிரொலிப்பதைக் காணலாம். இதன் வழியாக வாய்மொழிக் கதைகளாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு காலநிலை மாற்றங்கள் குறித்த அறிவைக் கடத்தினார்கள். ஆம். நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம். நம் கருப்பர் காலநிலை வரலாற்றை பாதுகாத்தார்; பாதுகாக்கிறார்; பாதுகாப்பார்.
கலர் கலராக ரீல் சுற்றவில்லை. அல்லது செவியே மறையும் அளவுக்கு பூக்களை நிரப்பவில்லை. அன்றாட வாழ்க்கையில் இருக்கும் விஷயங்களையே - காணும் காட்சிகளையே எடுத்துக் கொள்ளலாம். வறட்சிக் காலங்களில் நம் மக்கள் என்ன சொல்கிறார்கள்? ‘கருப்பர் கோபமா இருக்காரு... அவர் கோபம் தணியணும்னா தண்ணீரை சிக்கனமா செலவழிக்கணும்...’ யோசித்துப் பாருங்கள். நீர் சேமிப்பு, மிதமான பயிரிடல் போன்ற ஒழுக்கங்களை அல்லவா நம் கருப்பர் கற்றுத் தருகிறார்?
சரி. மலைப்பகுதிகளில் இருக்கும் கருப்பர்? அவர் காடு, நிலச்சரிவு, விலங்குகளின் தாக்குதல் போன்ற ஆபத்துகளுடன் இணைக்கப்படுகிறார். மலைக்கிராமங்களில் ஒலிக்கும் கருப்பரின் கதைகள் காடுகளை எல்லையின்றி அழிக்கக் கூடாது என்று எச்சரித்தபடியே இருக்கின்றன. வனங்களை எல்லைக்கு மேல் அழிப்பது தெய்வ தண்டனை - கருப்பரை அவமதிக்கும் செயல் என்பதை தலைமுறை தலைமுறையாக மக்கள் மனதில் பதிய வைத்தார்கள்.
இதைத்தான் இன்றைய அறிவியல், Biodiversity என்கிறது. ஆக, நம் கருப்பர்... நம் கருப்பண்ணசாமி இயற்கைப் பாதுகாப்பின் ஒரு பண்பாட்டு வடிவம். ஒவ்வொரு கிராமத்திலும் வீற்றிருக்கும் கருப்பரும், அவரைக் குறித்து அக்கிராமத்தில் பேசப்படும் கதையும், கட்டுக்கதை அல்ல. மாறாக, அக்கிராமத்தின் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த கையேடு. இந்தப் புரிதலுடன் பஞ்ச பூதங்களுக்கும் நம் கருப்பண்ணசாமிக்கும் இருக்கும் தொடர்பைப் பார்க்கலாம்.
இந்திய தத்துவத்தில் உலகம் பஞ்சபூதங்களாலானது என்ற கருத்தே மையமாக இருக்கிறது. அறிவியலும் இதை ஒப்புக் கொள்கிறது.பிருத்வி என்னும் மண், திடத்தன்மை, நிலைத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. அப்பு / ஜலம் என்னும் நீர், ஓட்டம், உயிர்ப்பைத் தாங்குதல் ஆகியவற்றை உணர்த்துகின்றது. தேஜஸ் / அக்னி என்னும் நெருப்பு, வெப்பம், மாற்றம், சக்தி ஆகியவற்றின் பிரதிபலிப்புகள்.
அதேபோல் இயக்கம், சுவாசம் ஆகியவற்றை வாயு என்னும் காற்றும்; இடம், விரிவுத்தன்மை போன்றவற்றை ஆகாசம் என்னும் வெளியும் குறிக்கின்றன.இவை வெறும் இயற்கைக் கூறுகள் மட்டுமல்ல; மனித உடல், சமூக ஒழுங்கு, சிந்தனை, நம்பிக்கை... ஆகிய அனைத்தையும் கட்டமைக்கும் தத்துவ அடித்தளம்.எனவேதான், சிவபெருமானுக்கு பஞ்ச பூத ஸ்தலங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இன்றும் சிவபக்தர்கள் பஞ்சபூத ஸ்தலங்களுக்கு செல்வதை தங்கள் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலை நிலத்துக்கு அடையாளமாகவும், திருச்சி திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரரை நீருக்கு அதிபதியாகவும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரை நெருப்பின் தலைவராகவும், காளகஸ்தி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை வாயுவுக்கு அரசராகவும், சிதம்பரம் நடராஜரை ஆகாயத்துக்கு அடையாளமாகவும் போற்றுகிறார்கள்; செல்கிறார்கள்; வணங்குகிறார்கள். நம் கருப்பரும்... நம் கருப்பண்ணசாமியும் அப்படித்தான்.
ஆம். அவர் ஒரு ‘பஞ்சபூத தெய்வம்’.அடித்துச் சொல்லலாம். கருப்பண்ணசாமி, ஆகம சாஸ்திரத்தில் உருவான விண்ணுலகக் கடவுளல்ல. அவர் நிலத்திலிருந்து (மண்), காற்றிலிருந்து (வாயு), தீயிலிருந்து (தேஜஸ்) உருவான கிராமச் சமூகத்தின் பாதுகாப்பு சக்தி. உடனே சிவபெருமானைக் குறைத்து மதிப்பிடுவதாகவோ, சொல்வதாகவோ நினைக்க வேண்டாம். ஈசன் எந்தளவுக்கு உயர்ந்த, பெரிய கடவுளோ அதே அளவுக்கு நம் கருப்பரும் பெரிய, உயர்ந்த கடவுள் என்பதைக் குறிப்பிடவே இதைச் சொல்கிறோம்.அதையும் மிகைப்படுத்தியோ இட்டுக்கட்டியோ கூறவில்லை. காரண காரியங்களுடன்தான் நம் கருப்பரை ‘பஞ்சபூத தெய்வம்’ என்கிறோம்.
முன்பே பார்த்தபடி பிருத்வி என்றால் மண். நம் கருப்பர் யார்? நிலத்துடன் இணைந்த தெய்வம். மலையடிவாரம், கரிசல் நிலம், வயல் எல்லை, காடு - கிராமச் சந்திப்பு ஆகிய இடங்களில்தான் கருப்பண்ணசாமியின் ஆலயம் இன்றும் இருக்கிறது. இதன் அர்த்தம் என்ன? கருப்பர் ‘நிலத்தைக் காக்கும் காவல் தெய்வம்’!
அடுத்து கண்மாய், ஓடை, ஊரணி, ஏரிக்கரை... ஆகிய இடங்களில் கருப்பரின் சிலைகளைக் காணலாம். இது அப்பு என்னும் நீருக்கும் கருப்பண்ணசாமிக்கும் இருக்கும் மறைமுக உறவையே உணர்த்துகிறது. கிராமப் பொருளாதாரத்தின் ஆணிவேர் நீர்தான். அதைத்தான் கருப்பர் சுட்டிக்காட்டுகிறார். நீரைக் காப்பாற்றச் சொல்லி வலியுறுத்துகிறார்.
பிறகு... சொல்லவே தேவையில்லை. கருப்பர் கோபமான தெய்வம்... அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுவார்... என்பது மக்கள் நம்பிக்கை; எதார்த்தமும் அதுவேதான். கோபம் என்பது நெருப்பை / அக்னியை குறிப்பால் உணர்த்துவது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்படியாக தீயவர்களுக்கு தண்டனை வழங்குபவர், தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பயம் காட்டுபவர் என்ற வகையில் அக்னியின் சொரூபமாக கருப்பர் காட்சியளிக்கிறார்.
வாயு என்னும் காற்றை நாம் யாருமே பார்த்ததில்லை. ஆனால், உணர்கிறோம். அப்படி கண்ணுக்குத் தெரியாத சக்திதான் கருப்பர். இதைத்தான் மக்கள் காலம் காலமாக ‘கருப்பண்ணசாமி காற்றாக வந்தார்’ என்கிறார்கள். கதை கதையாகச் சொல்கிறார்கள். திடீர் காற்று, இரவு நேர அசைவு, குரல், ஓசை, நடுக்கம்... இவையெல்லாம் கண்ணுக்குத் தெரியாதவை. ஆனால், தாக்கத்தை ஏற்படுத்துபவை. நம் கருப்பரைப் போல்!
இறுதியாக ஆகாசம் என்னும் வெளி. கருப்பரின் இருப்பே இதுதானே! அவருக்கு கருவறை கிடையாது. பெரும்பாலும் திறந்த வெளியில்தான் வாழ்கிறார். மொத்தத்தில் பஞ்ச பூதங்களின் மொத்த உருவம் நம் கருப்பண்ணசாமிதானே!சட்டம் எழுதாத சமூகத்தில் நீதி, ஒழுங்கு, பயம், பாதுகாப்பு ஆகியவற்றை பஞ்சபூதங்களின் வழியாக நிறுவியது சாட்சாத் கருப்பர்தான்; கருப்பண்ணசாமியின் இருப்புதான்.
மண் - நில உரிமை; நீர் - வாழ்வாதாரம்; தீ - தண்டனை; காற்று - கண்காணிப்பு; ஆகாசம் - எல்லைகளற்றவர்... இந்த மொத்த தத்துவத்தின் ஒரே வடிவம், உருவம் நம் கருப்பர். அவர் ‘மாயக் கடவுள்’ அல்ல. ஒரு ‘புராண உருவம்’ அல்ல. அவர், இயற்கையோடு மனிதன் செய்த ஒப்பந்தம்... பஞ்சபூதங்களை சமூகமாக ஒழுங்குபடுத்திய உயிர்ப்புச் சின்னம்... அரசுக்கு முன் இருந்த கிராம நீதி அமைப்பின் காவலர்.கருப்பரை வணங்குவது வழிபடுவது என்பது இயற்கைக்கு தலைவணங்குவது என்றே பொருள்.
ஓம் கருப்பண்ணசாமியே நமஹ: (கருப்பர் வருவார்)
- கே.என்.சிவராமன்
|