ஆம்பள கஷ்டம் யாருக்குப் புரியுது?



2030ம் ஆண்டுக்குப் பிறகு சிங்கிள் பெண்கள் அதிகமாக இருப்பார்கள்... இன்னும் 1000 வருடங்களில் ஆண் இனமே இருக்காது... இப்படியான செய்திகள் நம்மை அவ்வப்போது அதிர்ச்சிக்குள்ளாக்கும்.
ஆனால், சமீபத்திய சர்வே ஒன்று ஆண்களுக்கு மேலும் ஒரு அபாய மணி அடித்திருக்கிறது. அதாவது உறவில் பிரிந்த அல்லது திருமண உறவில் விவாகரத்தான, தனியான ஆண்கள் மூன்றில் ஒருவருக்கு தற்கொலை எண்ணம் வருவதாகவும், அதில் பலர் தற்கொலை செய்து கொள்வதாகவும் ஆஸ்திரேலிய சுகாதார இன்ஸ்டிடியூட் சர்வே தெரிவித்துள்ளது. 

அதாவது 22 முதல் 44 வயதுக்குள் இருக்கும் ஆண்களில் காதல் / கல்யாண உறவுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அல்லது கசப்புகாரணமாகப் பிரிந்த நிலையில் மூன்றில் ஓர் ஆண் வீதம் தற்கொலை செய்ய நினைக்கிறார்கள்... அதில் பலர் தற்கொலை செய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. 

இதில் நாட்டுக்கு நாடு ஓரிரு சதவீத வித்யாசமே என்றாலும் பெண்களை விடவும் ஆண்கள் அதிகம் இதில் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். ஏன்? இதன் பின்னணி என்ன?‘‘பழமைவாத பழக்கம்தான் மிக முக்கியக் காரணம்...’’ என்கிறார் சைக்காலஜிஸ்டும் ஹிப்னோதெரப்பிஸ்டுமான டாக்டர் அபிலாஷா. 

 ‘‘அதாவது வலி... அதற்கு உதவி கேட்கணும் என்பதே உயிர்களின் அடிப்படை தேவை என்பது ஆணுக்கு மட்டும் வேறுபாடமாக இருக்கிறது. ஆணுக்கு வலி இருக்கக் கூடாது, அவன் அழக் கூடாது, ஆண் உதவுவதற்காகவே பிறந்தவன், உதவி கேட்க பிறந்தவன் அல்ல என்கிற பழக்கமும் எண்ணமும்தான் காரணம். 

அவனும் ஒரு மனுஷன், அவனுக்கும் உதவி தேவை, வலி, மன அழுத்தம் இதெல்லாம் ஆணுக்கும் இருக்கும் என்கிற மாற்றமே இப்போதான் கொஞ்சம் அதிகரிக்க ஆரம்பிச்சிருக்கு. 
Coping Mechanism... அதாவது எதையும் சமாளிக்கும் மனநிலை ஆண்களுக்கு அடிப்படையிலேயே ஒரு குழப்பமான பிரச்னைதான். ஆண் பலமானவன், அவனுக்கு எப்படி சமாளிக்கும் திறன் இல்லாமல் இருக்கும் என்கிற கேள்வி கூட வரும். 

ஆனால், உண்மை அதுதான். எந்தப் பிரச்னையானாலும் பெண்கள் அழுது, புலம்பி, கொட்டித் தீர்த்துடுவாங்க. ஆனால், பிரச்னையிலிருந்து மீள பெரும்பாலும் ஆண்கள் முதலில் கையில் எடுப்பதே குடி, புகை, போதைதான். அது தற்காலிக தீர்வு மட்டுமே. அடிப்படையில் போதைப் பழக்கங்கள் மூளையை செயல்படவிடாமல் இன்னும் பிரச்னையைக் கண்டு ஓட வைத்து குழப்பும், சுற்றலில் விடும். முடிவு... தற்கொலை. 

பொதுவாக மத்திம வயது பிரச்னைகள் என்கிற ஒரு பிரிவே மனோவியல் துறையில் உண்டு. அதாவது 35 வயதுக்கு மேல் வருகிற தனிமை, உடல் பிரச்னைகள்... இதெல்லாம் சேர்ந்து ஒரு மனிதனை மேலும் அழுத்தும். இதில் திருமண வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மனைவி, குழந்தைகள் என எதோ ஒரு பொறுப்பு யோசிக்க விடாமல் ஓட வைத்துவிடும். 

அதுவே விவாகரத்தான அல்லது உறவில் பிரிந்த ஆணை தனிமையில் சிந்தனையில் ஆழ்த்திவிடும். பொதுவாக பெண்களுக்கு பிரச்னை என்றால் ஆயிரம் கைகள் ஓடி வரும் இதே சமூகத்தில் ஓர் ஆண் தனக்கு உதவி தேவை எனக் கேட்பதே கையாலாகாத தனமாக... ஆண்மைத் தன்மை இல்லாத மனிதனாக நினைக்க வைத்திருக்கிறது. 

இப்படி இருந்தால் எப்படி அவன் பிரச்னையில் இருந்து வெளியே வருவான்? இதில் திருமண முறிவில் ஜீவானாம்சம் என்கிற பொருளாதார நெருக்கடி அடுத்த பிரச்னை. 
தன் வருமானத்துக்கு மீறி ஜீவனாம்சம் கொடுக்கும் எத்தனையோ ஆண்கள் உள்ளனர். இதில் அதீத பணம் இருந்தும், சாப்பிட்டாயா என அன்புடன் கேட்க யாருமில்லை என்கிற தனிமையில் இன்னும் சில சிங்கிள் ஆண்கள் அல்லாடுகிறார்கள். 

நான் தனிமையில் இருக்கிறேன்... எனக்கு உதவி வேண்டும், எனக்கு வலிக்கிறது எனச் சொல்லக்கூட சமூகம் ஆணுக்கு இடம் கொடுப்பதில்லை. இதன் காரணமாகவே ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்திருக்கிறது.முன்பை விட இன்று அதிகமாகவே பெண்கள் தங்கள் வாழ்க்கைக்காகக் கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர். 

ஆனால், ஆண் யாரிடம் கேட்பான்? மேலும் காதல்/கல்யாண பிரிவு வாழ்க்கையில் பொருளாதார அழுத்தம், யாருக்காக நான் ஓடுகிறேன், எதற்காக இந்த வாழ்க்கை என்கிற கேள்விகள் அவனைத் துரத்த... தற்கொலை எண்ணங்கள் அவனுக்குள் அதிகரிக்கின்றன...’’ என்ற டாக்டர் அபிலாஷா, இதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறார். 

‘‘ஆரோக்கியமான சமூகம்,நல்ல நண்பர்கள், நல்ல உறவுகள் தேவை. நமக்கென, நம்மை குணத்தின் அடிப்படையில் கேள்வி கேட்காத சுற்றம் அவசியம். ‘எனக்கு யாராவது தோள் கொடுங்களேன்’ என நெருங்கியவர்களிடம், புரிந்தவர்களிடம் மனம் விட்டு ஆண்கள் பேச வேண்டும். குறைந்தபட்சம் தன் மன அமைதிக்கு ஒரு நிபுணரிடம் ஆலோசனையாவது பெறவேண்டும். மன அமைதிக்கு மருத்துவர்தான் தேவை என்றில்லை. ஆன்மீகம், யோகா, தியானம், நல்ல நண்பர்களுடன் நேரம் செலவிடுதல் கூட நல்ல தீர்வுதான்...’’ என்கிறார் டாக்டர் அபிலாஷா.

ஷாலினி நியூட்டன்