Solo Dating... இது இந்தியாவில்தான் மாமு!



பெரிய உணவகங்களுக்குச் சென்று தனியாக உணவருந்துவது, புகழ்பெற்ற சுற்றுலா பகுதிகளுக்குத் தனியாகச் செல்வது, தனியாக திரைப்படம் பார்ப்பது என்று மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்லும் எல்லா இடங்களுக்கும் தனியாகச் செல்லும் ‘சோலோ டேட்டிங்’ இந்திய இளசுகளின் மத்தியில் அதிகரித்து வருவதாக கண்சிமிட்டுகிறது சமீபத்திய ஆய்வு.

இதனால் புகழ்பெற்ற பல உணவகங்கள் தனியாக வருபவர்களுக்காக ஒற்றை இருக்கை டேபிள்களைக் கூட ஏற்படுத்தியிருக்கின்றன. 
இதுபோக பயணச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் தனி நபர்களுக்காக சிறப்பான வசதிகளை மலிவு விலையில் உருவாக்கியிருக்கின்றன. வரும் நாட்களில் சோலோ டேட்டிங் செல்பவர்களுக்காகவே பிரத்யேகமான வசதிகள் உருவாகலாம் என்கின்றனர். 

அதென்ன சோலோ டேட்டிங்? 

‘‘நம்முடைய நேரத்தை  யாருடைய துணையுமில்லாமல் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் தனியாகவே செலவிடுவதுதான் சோலோ டேட்டிங்...’’ என்று வரையறுக்கிறார் கேஸி எக்ஸ்ட்ரோம். பால்திமோர் தெரபி குரூப்பில் தெரபிஸ்ட்டாக இருக்கிறார் கேஸி. நண்பர்கள், காதலி, காதலன் இல்லாமல் நாம் செய்வதை முழு மனதுடன் அனுபவித்து செய்வதையும் சோலோ டேட்டிங் என்கின்றனர். 
இங்கே தனிமையிருந்தாலும், அது துக்கம் தரும் தனிமையாக இல்லாமல் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் தனிமையாக இருக்கிறது என்கின்றனர். மனதளவில் நம்மை வளப்படுத்துவது, நம்முடன் நமக்கிருக்கும் உறவை மேம்படுத்துவது, தன்னம்பிக்கையையும், நம் மீதான அக்கறையையும் வலுப்படுத்துவதுதான் சோலோ டேட்டிங்கின் முதன்மையான நோக்கங்கள். 

சோலோ டேட்டிங்கால் உளவியல் ரீதியாக நிறைய நன்மைகள் இருக்கின்றன. தனியாகவே நேரம் செலவிடுதால் நமக்கு என்ன தேவை? நமக்கு என்ன தேவையில்லை? நமக்கு எது மகிழ்ச்சியைத் தரும்? எது மகிழ்ச்சியைத் தராது? நம்முடைய எல்லைகள் என்ன... என்பன போன்று நம்மைப்பற்றி அதிகமாக அறிந்துகொள்ள சோலோ டேட்டிங் உதவுகிறது. 

நம்மைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ளும்போது, நம்மை மனரீதியாகக் காயப்படுத்தும் பலவற்றை அனுமதிக்க மாட்டோம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். 
நல்ல வசதியான சூழலிலிருந்து வெளியேறி, தனியாகத்தான் சோலோ டேட்டிங் செல்கிறோம். அப்படி தனியாகச் செல்வதன் மூலம் நமக்குப் பிடித்ததை மட்டுமே செய்வதற்கான சுதந்திரம் கிடைக்கிறது. 

நண்பர்கள் அல்லது காதலி, காதலன், மனைவி கூடச் செல்லும்போது நமக்குப் பிடித்ததை மட்டுமே தேர்வு செய்ய முடியாது. மட்டுமல்ல; பொருளாதார ரீதியாகவும் சோலோ டேட்டிங்கில் சில நன்மைகள் இருக்கின்றன. ஆம்; காதலி, காதலன், மனைவி கூட செல்லும்போது ஒருவரே  செலவு செய்ய வேண்டியிருக்கும். 

உணவகங்களுக்குச் செல்வது என்றால் கூட செலவு அதிகமாக வைக்கும் உணவகங்களுக்குத்தான் செல்லவேண்டும். ஹோட்டலில் தங்குவதற்குக் கூட அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 

இந்தச் செலவுகள் எல்லாம் உடன் வருபவர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தில்தான் இருக்கும். ஆனால், சோலோ டேட்டிங்கில் தள்ளுவண்டிக்கடையில்கூட சாப்பிடலாம்; மலிவான விடுதியில் கூட தங்கிக்கொள்ளலாம். 

யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மொத்தத்தில் மகிழ்ச்சியான தனிமை சாத்தியமாகிறது. இது சமூகம் தருகின்ற அழுத்தங்களிலிருந்தும், தினசரி சலிப்புகளிலிருந்தும் நம்மைப் புதுப்பிக்கிறது. அதாவது, மன அழுத்தத்தைக் குறைத்து, ஆசுவாசத்தை அளிக்கிறது சோலோ டேட்டிங். 

தவிர, சோலோ டேட்டிங் செல்பவர்களுக்குப் புதுப்புது விஷயங்களில் ஈடுபடுவதற்கான நேரமும், வாய்ப்புகளும் கிடைக்கின்றன. நண்பர்களுடன் அல்லது காதலி, காதலர்களுடன் வெளியில் செல்பவர்களைவிட, சோலோ டேட்டிங் செல்பவர்கள்தான் புதுமையான பல விஷயங்களை அனுபவிப்பதாகச் சொல்கின்றனர். இது அவர்களின் ஆளுமையை மேம்படுத்துகிறது. 

சோலோ டேட்டிங் நம்மை முழுமையாக உணர வைப்பதால், முன்பைவிட மற்றவர்களுடனான உறவை வலுப்படுத்த முடியும் என்கின்றனர். முக்கியமாக யாரையும் சார்ந்திருக்காத மன வலிமையைத் தருகிறது.

இயற்கை சூழந்த பகுதியில் தனியாக நடந்து செல்வது சோலோ டேட்டிங்கின் முக்கிய அம்சம்.வீட்டைவிட்டு வெளியே, அதுவும் மரங்கள் சூழந்த பகுதிகளில் தனியாக நடைப்பயிற்சி மேற்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

இன்றைய டிஜிட்டல் காலத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவதற்கும், எங்கேயாவது வெளியில் செல்வதற்கும் சரியான நேரம் கிடைப்பதில்லை. இந்த நேரமின்மைதான் சோலோ டேட்டிங்கிற்கு மூலகாரணம் என்கின்றனர். அடுத்து, காதலி, காதலன், நண்பர்கள் இல்லாமல் தனிமையில் வாடுபவர்கள் விருப்பமின்றி சோலோ டேட்டிங்கில் ஈடுபடுகின்றனர். 

நாளடைவில் இந்த சோலோ டேட்டிங் அவர்களை மகிழ்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறது. டேட்டிங் செல்வதற்கு துணை இருந்தாலுமேகூட, வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறையாவது சோலோ டேட்டிங் செல்வது மன நலத்துக்கு மிகவும் நல்லது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

த.சக்திவேல்