பட வாய்ப்பு வருவதில்லையா என்று நேரடியாகவே கேளுங்க... நான் கோச்சுக்க மாட்டேன்!



மிஷ்கின் அறிமுகமாக ‘யுத்தம் செய்’ மூலம் சினிமாவுக்கு வந்தவர் சிருஷ்டி டாங்கே. பெரிய படங்களில், இல்லையென்றால் ஓடும் படங்களில் இவரைப் பார்க்கலாம். 
அனுபம்கெர் நடிப்புப் பள்ளியில் பயின்ற மாணவி என்பதால் ‘மேகா’, விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’, ‘கத்துக்குட்டி’ என பல படங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியவர். மராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட சிருஷ்டி, சொந்த ஆர்வத்தால் தமிழ் கற்றுக்கொண்டவர். விமலுடன் இவர் நடித்துள்ள ‘மகாசேனா’ சமீபத்தில் வெளியான நிலையில் சிருஷ்டி டாங்கேயிடம் பேசினோம்.  

‘மகாசேனா’ அனுபவம் எப்படி ?

ரொம்ப நல்ல அனுபவம். சொல்லப்போனால் கொஞ்சம் புது அனுபவம்னு சொல்லலாம். கேரக்டரை பொறுத்தவரை இதுவரை நான் செய்யாத ரோல். மலைவாழ் பெண்ணாக இதுவரை நடித்ததில்லை. அவர்களின் சமூக கட்டமைப்பு, அன்றாட வாழ்க்கை முறை என பல விஷயங்களை இந்தப் படத்துக்காக கத்துக்கிட்டேன். 
விமல்?

அற்புதமான நடிகர். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவர் புகழ் பெற்ற நடிகர். தேசிய விருது பெற்ற ‘வாகை சூட வா’ படத்தில் நடித்தவர். அவருடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வழங்கியவர். அந்த வகையில் அவருடைய நடிப்புக்கு நான் ரசிகை. அப்படி நான் ஆச்சர்யத்துடன் பார்த்த ஒரு நடிகருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துச்சு.

தமிழில் அடிக்கடி காணாமல் போவது ஏன்?

பட வாய்ப்பு வருவதில்லையா என்று நேரடியாகவே கேளுங்க. நான் கோபிக்கமாட்டேன். படங்களை கவனமாக தேர்வு செய்வதால் அப்படியொரு தோற்றம் 
இருக்கலாம். கதை, கேரக்டர் என அனைத்து அம்சங்களும் திருப்தி அளித்தால் மட்டுமே படம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய மனநிலை. பிசியாக வைத்துகொள்ள வேண்டும் என்று வரும் வாய்ப்புகளை கமிட் பண்ணமாட்டேன். 

தமிழில் என்னுடைய  முதல் படம் ‘யுத்தம் செய்’ தொடங்கி தற்போது வரை சிறந்த படங்களை மட்டுமே செய்துள்ளேன். தமிழில் நல்ல படங்கள் செய்யவேண்டும் என்ற சென்டிமென்ட் என்னோடு கலந்துவிட்டதாக நினைக்கிறேன். 

ஏனெனில், மும்பை என்னுடைய ஜென்ம பூமி என்றால் சென்னை என்னுடைய கர்ம பூமி நீங்கள் செய்த படங்களில் சவாலான படம் எது?
என்னுடைய படத்தை புரொமோட் செய்வதற்காக சொல்லவில்லை. நான் சிட்டியில் வளர்ந்த பெண். பெரும்பாலான படங்களில் மாடர்ன் ரோல் செய்துள்ளேன். 
ஆனால், ‘மகாசேனா’ படத்தில் பழங்குடிப் பெண்ணாக நடித்தேன். பழங்குடி மக்களின் வாழ்க்கை என்பது வெகுஜன மக்களின் வாழ்க்கையிலிருந்து சற்று விலகிய வாழ்க்கை என்று சொல்லலாம். 

பழங்குடிப் பெண்ணாக நடிக்க வேண்டும் என்றால் மற்ற கேரக்டர்கள்போல் ரெஃபரன்ஸ் எடுத்து பண்ண முடியாது. அவர்கள் வாழ்க்கையை ஸ்டடி பண்ண வேண்டும். உண்மைய சொல்வதாக இருந்தால் பழங்குடிப் பெண் கேரக்டரில் நடிக்க போராடினேன். பாடிலேங்வேஜ் சுத்தமாக வரவில்லை. ஷூட்டிங் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்புதான் படம் கமிட் செய்தேன். இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் சாரிடம் கொஞ்சம் டைம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். 

ஆனால், அவர்தான் உங்களால் பண்ணமுடியும் என்று உற்சாகப்படுத்தினார். படம் பார்த்துவிட்டு பலர் பாராட்டினார்கள். அது அனைத்தும் இயக்குநருக்கு சேரவேண்டிய பாராட்டு.
கேரக்டருக்காக எப்படி உங்களைத் தயார் செய்துகொள்கிறீர்கள்?

பொதுவாக என்னுடைய இயக்குநர்கள் ரெஃபரன்ஸ் கொடுத்துவிடுவார்கள். சில படங்களில் துறுதுறு பெண்ணாக நடித்திருப்பேன். அந்த மாதிரி படங்களுக்கு பெரியளவில் ஹோம் ஒர்க் தேவைப்படாது. ‘மகா சேனா’, ‘தர்மதுரை’, ‘முப்பரிமாணம்’, ‘கத்துக்குட்டி’, ‘காலக்கூத்து’ போன்ற படங்களுக்காக ஹோம் ஒர்க் பண்ணியிருக்கிறேன். அந்தப் படங்களில் கிராமத்து பெண் வேடம் என்பதால் பாடிலேங்வேஜ், வட்டார மொழி என கேரக்டருக்காக நிறையவே மாற வேண்டிய கட்டாயம் இருக்கும். அதுமட்டுல்ல, ஒரு நடிகையாக, இயக்குநர் கொடுக்கும் கேரக்டரை சவாலாக எடுத்து பண்ண வேண்டியது என்னுடைய வேலை.

வருங்காலங்களில் நீங்கள் நடிக்க விரும்பும் கேரக்டர் எது?

இதுவரை காமெடி படங்கள் செய்ததில்லை. நயன்தாரா மேடம் நடித்த ‘கோலமாவு கோகிலா’ படம் எனக்குப் பிடிக்கும். அந்த மாதிரி ப்ளாக் காமெடி கதையில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இயக்குநர் நெல்சன் சார் ப்ளாக் காமெடி கதையில் ஒவ்வொரு கேரக்டரையும் மிக அழகாக சொல்வது பிடிக்கும். அந்த மாதிரி கதைகள் வந்தால் உடனே ஓகே சொல்வேன்.
சினிமாவில் பல வருடங்களாக இருந்தாலும் முன்னணி நடிகர்கள் படங்கள் பண்ண முடியவில்லையே என்ற ஆதங்கம் உண்டா?

பகத் ஃபாசில், துல்கர் சல்மான் போன்றவர்களுடன் நடிக்க வேண்டும். சினிமாவில் என்னுடைய பயணம் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளது. இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டும்நடிகையாக மாறியபிறகும் உங்களை அதிகம் கவர்ந்த நடிகர், நடிகை யார்?

முதலாவதாக ஜோதிகா மேடம் பிடிக்கும். தபு மேடத்தின் இயல்பான நடிப்பு பிடிக்கும். விஜய் சேதுபதி சாரின் யதார்த்தமான நடிப்பு பிடிக்கும். பாலிவுட் நடிகர்கள் நஸ்ருதீன், நவாசுதீன், இர்ஃபான் கான் ஆகியோரையும் பிடிக்கும். 

படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன், புரொமோஷன் என சினிமாவில் உங்களுக்குப் பிடித்த பகுதி எது?


படப்பிடிப்பை மனநிறைவாக செய்து முடித்தபிறகு கிடைக்கும் நேரத்தில் ஓய்வெடுக்கும் அந்தப் பகுதிதான் பிடிக்கும். ஏனெனில், ஒவ்வொரு படத்துக்கும் கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாகவே ஓய்வுக்கு நேரம் இல்லாமல் போய்விடும்.சிலர் படம் தயாரிக்கும் ஐடியா இருக்கிறதா என்று கேட்டுள்ளார்கள். என்னுடைய பதில் - வாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்கவே விரும்புகிறேன். 

விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

என்னை யாரும் விமர்சனம் பண்ணுமளவுக்கு அனுமதிக்கமாட்டேன். ஏனெனில், எனக்கு நானே விமர்சனம் செய்துகொள்வேன். அதனால் மற்றவர்கள் என்னவிதமான விமர்சனங்கள் செய்தாலும் அது என்னை பாதிக்காது. 

சினிமாவில் உங்களுக்கு உதவும் முக்கியமான அம்சம் எது?

சினிமாவில் சரியான படங்கள், சரியான பாதையில் செல்லும்போதுதான் முன்னிலை பெற முடியும். எனக்கு சினிமா பேக்ரவுண்ட் எதுவுமில்லை. இன்றைய தேதி வரை என்னை வழிநடத்த யாரும் இல்லை. என்னுடைய துணிச்சல் குணம்தான் எனக்கு உதவி செய்கிறது. என் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். அந்த மனநிலைதான் எப்போதும் என்னை தொடர்ந்து பயணம் செய்வதற்கு காரணமாக உள்ளது. 

எந்த அம்சம் உங்கள் வாழ்க்கையை சமநிலைக்கு கொண்டு வந்துள்ளதாக நினைக்கிறீர்கள்?

ஆரம்பத்தில் சில படங்களை தவறுதலாக கமிட் பண்ணியிருக்கிறேன். சில தோல்விகளையும் பார்த்திருக்கிறேன். தோல்விதான் என்னை வலுவான நபராக மாற்றியுள்ளது. 
மூணு வார்த்தையில் உங்களை வரையறுப்பதாக இருந்தால் என்ன சொல்வீர்கள்?
சிருஷ்டி, வளர்ந்து வருகிறாள்.

எஸ்.ராஜா