இந்தியப் பெண்களை சிதைப்பதில் காதலர்களே முதலிடத்தில் இருக்கிறார்கள்!
உலகளவில் சுமார் 100 கோடி பெண்களாவது தங்கள் குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களாக இருக்கிறார்கள் என பதற வைக்கிறது சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆய்வு.இதை வெளியிட்டிருப்பது வேறு யாருமல்ல.
 உலகளவில் மிகப் பிரபலமான அறிவியல் பத்திரிகையான ‘லேன்சட்’. இந்த ஆய்வு 2023க்கானது என்பதை நினைவில் கொள்க. ‘உலகளவில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் சுமார் 100 கோடி பேர் தங்கள் வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் ஏதோ ஒருவகையில் பாலியல் வன்முறையை அனுபவித்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதோடு உலகளவில் இதே வயதுடையை பெண்களில் சுமார் 68 கோடி பேர் தங்கள் காதலர்களால் பாலியல் வன்முறையை அனுபவித்ததாகவும் தெரிவிக்கின்றனர்’ எனச் சொல்லும் ‘லேன்சட்’, இந்தியா பற்றியும் இதில் புட்டுவைக்கிறது. ‘இந்தியாவில் இதே வயதுடைய பெண்களில் சுமார் 23 சதவீதத்தினர் தங்கள் நெருங்கிய காதலர்களாலேயே பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமல்ல இந்தியாவில் சுமார் 30 சதவீதப் பெண்களும், 13 சதவீத ஆண்களும் தங்கள் குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்’ எனச் சொல்லும் ‘லேன்சட்’, இவ்விரு பிரச்னைகளும் ஒருவருக்கு என்ன வகையான உடல் ரீதியான பிரச்னைகளைக் கொண்டுவரும் என்றும் பட்டியலிடுகிறது.
‘நெருங்கிய காதலர்களால் ஏற்படும் பாலியல் வன்முறையானது, பாதிக்கப்பட்டவரின் மனதில் பதட்டம், மன அழுத்தம் போன்ற 8 வகையான பிரச்னைகளைக் கொண்டுவரும். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பாலியல் வன்முறையானது பாதிக்கப்பட்டருக்கு மனநோய், போதைப் பழக்கம், நீண்டகால நோய்கள், தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வதற்கான உளவியல் மற்றும் மனச்சிதைவு போன்ற பிரச்னைகளைக் கொண்டுவரும்’ எனப் பட்டியலிடுகிறது ‘லேன்சட்’.இந்த அறிக்கை மாதிரியே உலக சுகாதார நிறுவனமும் கணித்த புள்ளிவிவரங்களையும் நாம் கவனத்தில்கொள்வது நல்லது.
‘உலகளவில் சுமார் மூன்றில் ஒரு பெண் - அதாவது 84 கோடி பெண்கள் தங்கள் சொந்த காதலர்களாலேயே பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தளவில் 15 வயதிலிருந்து 49 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் ஐந்தில் ஒரு பெண் காதலர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்...’ எனச் சொல்கிறது. இந்த எச்சரிக்கை மணியை புறக்கணிப்பது எதிர்காலத் தலைமுறைக்கு நல்லதல்ல!
டி.ரஞ்சித்
|