சிறுகதை - சுழல்
‘கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வாசந்த்யா பிரபத்வதே..!’காலையில் ஊரையே எழுப்பும் அந்தச் சத்தம் தனுஜாவுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. துள்ளலோடு எழுந்தாள்.
எதிர்வீட்டு மாமியின் கோலம்தான் முதலில் கண்களில் பட்டது. திருநீறு, சந்தனம் கலந்து ஏதோ ஒரு வாசம். சின்ன வயதிலிருந்தே பழக்கமான பெருமாள் கோயில் வாசம்! ‘ஐ! பாட்டி வீட்ல இருக்குறோமா! ஜாலிதான். நல்லவேளை ஸ்கூலுக்கு போகவேணாம். மேத்ஸ் ஹோம்ஒர்க் பண்ணல. ஆமா ஏன் பண்ணல? அதான் அம்மா அப்பா ராத்ரி சண்டை போட்டுக்கிட்டாங்களே!’
அந்தச் சண்டை நினைவுக்கு வந்ததும் அவள் உற்சாகம் தண்ணீரில் விழுந்த உப்பு போல் கரைந்து போனது. உதிர்க்கப்பட்ட கெட்ட வார்த்தைகள் அத்தனையும் அவள் காதுகளில் மீண்டும் ஒலித்தன. அம்மாவின் முகத்திலும் வயிற்றிலுமாக எத்தனை அடிகள், உதைகள். ரத்தம் கொட்டிய அம்மாவின் முகமும், கிழிந்த சேலையும், அலங்கோலமான கோலத்துடன் பதறியபடியே வெளியே ஓடிவந்ததும் அவள் கண் முன் வந்து போனது. பஸ்ஸில் ஏறியதும் அழுதபடியே அவள் தலைகோதியதும், காற்று வரூட கண்கள் மூடியது வரை நினைவில் இருக்கிறது.
படுக்கையை விட்டு எழுந்து ஓடினாள் அம்மாவைத்தேடி. ‘‘எழுந்துட்டியா சாமி! பால் குடிக்கிறியா?’’ இடைமறித்த பாட்டியிடம், ‘‘அம்மா எங்க பாட்டி?’’ என்று
கேட்டாள். ‘‘பதறாத சாமி. அவ தோட்டத்துல உக்காந்துருக்கா, போயி பாரு...’’தோட்டத்தை நோக்கி ஓடினாள். மாட்டிற்கு புண்ணாக்கு கலந்து கொண்டிருந்தாள் அம்மா.
ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொண்டாள்.‘‘எழுந்துட்டியா தனு? முகம் கழுவி பல் விளக்கிட்டு வா...’’அம்மா எதுவுமே நடக்காதது போல் காட்டிக்கொண்டாலும் அவள் கண்களில் ஈரம் இன்னும் காயவில்லை. முகம் வீங்கி ரத்தம் அங்கங்கே உறைந்திருந்தது.
மனதில் உள்ள காயங்களுக்கு, செய்யும் வேலைகளின் மூலம் நிவாரணம் தேட முயற்சித்துக்கொண்டிருந்தாள். காலை சாப்பாடு, மதிய சாப்பாடு என்று இழுத்துப் போட்டுச் செய்தாள். தனு பாத்ரூம் சென்ற நேரம், போன் ஒலிக்கவும் ஓடிச் சென்று எடுத்தாள்.
செல்வன் என்ற அந்த பெயரைக்கண்டதுமே கண்களில் நீர் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. ‘‘அழாத அவிரா... அதான் ஏற்கனவே திட்டம் போட்ருக்கோமே! ராத்ரி சரியா 9 மணிக்கெல்லாம் ரெயில்வே ஸ்டேஷன் வந்துடு. சரியா?’’ ‘‘ம்...’’ அழுகை மட்டுமே அவள் பதிலாக இருந்தது.
‘‘அழுதுட்டே இருக்காதடி தங்கம். நான்தான் இருக்கேன்ல. உன் புருசன், பொண்டாட்டி அருமை தெரியாதவன். என் தங்கத்தை எப்படிலாம் கொடுமைப்படுத்துறான்? எனக்கு வர்ற கோபத்துக்கு அவனை அப்பவே கொன்றுப்பேன்.
உன்னாலதான் அமைதியா போறேன் தெரிமா?’’அவன் பேசப் பேச மனதிற்குள் மெலிதாக தென்றல் வீசத்தொடங்கியிருந்தது. ‘‘ப்ளான் போட்டமாதிரி நாம யாருக்கும் தெரியாத இடத்துக்கு போயி சந்தோசமா புது வாழ்க்கை ஆரம்பிக்கலாம். ஃபிரெண்ட்ஸ் மூலமா எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்.
அந்த டீக்கடைல ராத்ரி பகலா வேலை பாத்து நானும் சோர்ந்துட்டேன். இப்ப நீ இருக்கும்போது எனக்கு என்ன கவலை. உன்னை ராணியாட்டம் நான் பாத்துக்குறேன். எப்பவும் உன்னை மடில வச்சி...’’‘‘ச்சீ...’’ கண்களில் வெட்கத்துடன் போனை சரிக்க கன்னங்களில் அடிபட்ட காயம் வலித்தாலும் ஏனோ மனதில் அத்தனை மகிழ்வும் வெட்கமும் ஒருசேர பூத்தது.
கல்யாண வாழ்க்கையில் கிடைக்காத அத்தனை பரிவும் அன்பும் இவனிடம் ஆறு மாதங்களாக அனுபவிக்கிறாள். இவன் மாத்திரமே அவள் எதிர்கால நம்பிக்கை.
கருப்பாக இருந்தாலும் அரசாங்க வேலை என்பதால் கல்யாணம் இவளுக்கு சாத்தியமாயிற்று. ஆனால், சம்பளம் வரும் நாள் மாத்திரமே கணவனிடமிருந்து ஒரு அன்பான சிரிப்பு வரும். மற்ற நாட்களில் ‘அந்த காக்காச்சியை அடிச்சி கொல்லு’ என்கிற மாமியாரின் கொடுமைகளும், குடித்துவிட்டு தினமும் அடியும் உதையும் வாங்கி வாங்கி பழகிப்போன உடலும் இறுகிப்போன முகமுமாய் வாழ்க்கை போனபோது வந்த வசந்தம்தான் இந்த செல்வன். அவலட்சணமான தன்னை யாரும் விரும்ப வாய்ப்பே இல்லையென்று அத்தனை நம்பிக்கையும் இழந்தபோது கிடைத்த மழைநீர் அவன்.
‘‘செல்லம்...’’ அவன் குரல் மீண்டும் இடைமறித்தது. ‘‘வரும்போது மறக்காம கொஞ்சம் பணம் எடுத்துட்டு வந்துடு. அப்டியே உன் நகையும். இல்லனா அந்த நாசமா போறவன் அதை எடுத்துட்டு ஜாலியா இருப்பான். புதுசா எவளையாவது கட்டிட்டு அவளுக்கு குடுத்துடுவான். அது உன் சொத்து. நீ எல்லாத்தையும் தூக்கிட்டு வந்துடு. வந்துடுவல்ல செல்லம்..?’’ ‘‘ம்...’’ சிறு வெட்கத்துடன் சிரித்தாள்.நேற்றிரவு பட்ட காயங்கள் மறைந்து இப்போது இனம்புரியாத மகிழ்ச்சி உள்ளத்தை நிரப்பியது.
அதேவேளை அங்கே இவள் கணவன் நண்பர்களுடன் எப்போதும் போல் குடிக்கத் தயாரானான். போதைக்கு ஊறுகாயாக, மனைவியுடன் நடந்த சண்டையை அவர்கள் கிளப்பினார்கள்.
‘‘அவ சரியில்லடா. கண்டாலே எனக்கு ஆத்திரம்தான் வருது. எவன்கூடவோ தொடர்புல இருந்துட்டு இருக்கா. இவகூடலாம் வாழமுடியாது. என்னமாதிரி பேசுறா தெரியுமா? நான் அடிக்கிறதைதான் எல்லாரும் பாக்குறாங்க. ஆனா, அவ என்னலாம் பண்றானு யாருக்கும் தெரியாது.
என்ன பேச்சு... என்ன ஆத்திரம்... காக்கா மாதிரி இருக்குற இவளைலாம் நான் கட்டி குடும்பம் நடத்துறதே பெரிய விஷயம். எனக்கு எப்படிப்பட்ட பொண்ணுங்க வந்தாங்க தெரியுமா? எல்லாத்தையும் விட்டுட்டு இவளை என் தலைல கட்டி வச்சிட்டா என் தாய்க்கிழவி. பிறவு சண்டையை மூட்டி விட்டு கோபத்தை ஏத்தி அடிக்க வச்சி... ச்சே என்ன மாதிரி கேவலமான வாழ்க்கை.
எனக்கும் வீட்டுக்கு வந்தா ஒரு அழகான மூஞ்சியை பாத்துட்டு ஜாலியா பேசி சிரிச்சிட்டு தூங்கணும்னுதான் ஆசை. ஆனா, இந்த மூஞ்சி வந்து நிக்குது. பாத்தாலே பிடிக்கல. பேசாம குடிச்சிட்டு படுத்துட்றேன்...’’‘‘ஏன்டா மோகன்... இதான் பிரச்சனையாடா? அதை அவகிட்ட சொன்னா கொஞ்சம் ஃப்ரெஷ்ஷா இருந்துடப் போறா. எல்லா பொண்டாட்டிகளும் அப்படித்தான். அவங்க என்ன சினிமா நடிகைகளா எப்பவும் க்ளாமரா இருக்குறதுக்கு?’’நண்பர்களின் கேள்வி அவனைச்சிந்திக்க வைக்கவில்லை..மின்னும் மதுவை இன்னும் வயிற்றில் இறக்கினான்.
‘‘நீ அன்பா வச்சிருந்தா அவ ஏன்டா பேசாம போகப்போறா? என்னமோ போ. நீங்க அடிச்சி விளையாடுங்க. பொட்டை புள்ளைதான் பாவம்...’’ முகிலன் குறைபட்டுக்கொண்டான்.
சிப்ஸை எடுத்து வாயில் போடப் போனவன் பிள்ளை ஞாபகம் வந்ததும் முகம் சுருங்கி அமைதியானான். ‘‘என் புள்ள இப்ப சாப்பிட்ருப்பாளோ என்னவோ! தினமும் சில்லி சிக்கன் வாங்கிட்டு வாப்பானு சொல்லுவா.
நான் போறதுக்குள்ள தூங்கிடுவா. அவளை எழுப்பி அதை ஊட்டுனாத்தான் நமக்கு தூக்கம் வரும். அம்மாகாரி மாதிரி இல்ல என் புள்ள. தேவதை அது! அப்பா அப்பானு கட்டிக்கும். அவ வீட்ல இருந்தாதான் எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கும். அவதான் எனக்கு கிடைச்ச ஒரே சந்தோசம்...’’
“இதெல்லாம் நல்லா பேசு. இப்ப அவளையும் அனுப்பி விட்டாச்சி. உன் பொண்டாட்டிக்கு வயசு இருக்கு. நல்ல வேலை இருக்கு. காசுக்காகவாவது எவனாவது கட்டிப்பான். உன் பொண்ணைப் பத்தி நினைச்சி பாத்தியா? இன்னும் இரண்டு வருசத்துல அது வயசுக்கு வந்துடும்.
இவளை வச்சிருக்கிறவன் தன் புள்ளையாவா பாப்பான்? இப்பலாம் எங்கயும் புள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்ல. அதுக்கு ஏதாவது ஆச்சினா... உன் பொண்டாட்டியும் அவ்ளோ கூரானவ கிடையாதுனு சொல்ற... யோசிச்சிக்க...”அப்போதுதான் ஏற ஆரம்பித்த போதை இறங்க ஆரம்பித்தது. ஏதேதோ நினைத்தவன் அந்த இடத்தை விட்டு விருட்டென கிளம்பினான்.
இரவு 9 மணியை நெருங்க, பையில் துணிகளையும் நகைகளையும் பத்திரமாக எடுத்து வைத்து அப்போதுதான் தூங்கச் சென்ற மகளை எழுப்பினாள்.
“அப்பா வந்துட்டாங்களாமா?”“இல்லமா. நாம அங்க போகலாம். கிளம்பு..’’‘‘அங்கேயா! திரும்பவா! வேணாம்மா. அப்பாவை வேணா இங்க வரசொல்லுங்க. பாட்டி தாத்தா இருக்குறாங்கல்ல? அப்ப சண்டை வராது. அங்க போகவேணாம்...’’‘‘பேசாம வா.
பாட்டி தூங்குறாங்க. எழுப்பிடாம அமைதியா வா...’’ரெயில்வே ஸ்டேஷன் வாசலில் அவனைக் கண்டதுமே மகிழ்ச்சியின் ரேகைகள் அனைத்தும் மிளிர ஆரம்பித்தது. சிரிப்பின் மொத்த குத்தகையுடன் அவனை நெருங்கினாள்.
‘‘என்ன அவி... பொண்ணை கூட்டிட்டு வந்துருக்க?’’
அவன் கேள்வி அவள் மகிழ்ச்சிக்கு வேகத்தடை போட்டது. ‘‘புள்ளையை வச்சிட்டு சமாளிக்க முடியாதும்மா. வீட்ல விட்டுட்டு வந்துடு...’’கலக்கத்துடன் தன் மகளைப் பார்க்க... நடப்பது எதுவும் தெரியாமல் ரயிலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் தனு. ‘‘டைம் ஆகிட்டு தங்கம். சீக்கிரம் அவளை விட்டுட்டு வந்துடு.
நகைலாம் பத்திரமா வச்சிருக்கல்ல..? பையை என்கிட்ட குடுத்துட்டு போ. நான் இங்கயே வெயிட் பண்றேன். சீக்கிரம் போயிட்டு வா...’’இதை சற்றும் எதிர்பார்க்காத அவிரா செய்வதறியாது நின்றாள். குழப்பம் மேலோங்கியது. “யேய் என்னடி பண்ற..? டிரெயின் வந்துடும். சீக்கிரம் போயிட்டு வா...’’ இவள் பதறினாள். இவன் கோபப்பட்டுவிடுவானோ? மகளை வீட்டில் அதெப்படி விடுவது? அவர் பார்த்துக்கொள்வார். அவரா? குடிகாரனிடமா விட்டுவிட்டு போவது?
சட்டென முடிவெடுக்க முடியாமல் திணறினாலும் தனுவை விட்டுவிட்டு, தான் மட்டும் செல்வதில் மட்டும் அவளுக்கு உடன்பாடில்லை.
‘‘இல்ல செல்வன்... இவளை என்கூடவே வச்சிக்கிறேன். என்னால விடமுடியாது. பொட்ட புள்ள... அவ இல்லாம வரமுடியாது...’’திடுக்கிட்டான். ‘‘அப்டினா நான் போறேன்...’’
அவன் கிளம்புவதைப் போல் நடிக்க, அவள் பதறினாள். ‘‘எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. யோசிச்சிட்டு சொல்றேன். இன்னைக்கு உடனே முடிவு எடுக்க முடியாது...’’
அதுவரை கோபத்தை அடக்கி வைத்திருந்தவன் அதற்குப் பின் அவன் அவனாக மாறினான்.‘‘என்னடி உன் இஷ்டத்துக்கு வருவ... வேணாம்னு போவ... என்னைப் பாத்தா எப்படி தெரியுது?’’
முதன்முதலாக அப்படி ஒரு முகத்தைப் பார்த்து அதிர்ந்து நின்றாள். பயத்தில் ஒரு அடி பின் சென்றவள், தன் மகளின் கைகளை இழுத்து பிடித்தபடி தீர்க்கமாக நடக்க ஆரம்பித்தாள்.
‘‘டேய் அவ போறாடா... பிடிங்க. அந்தப் பையை மட்டும் புடுங்கிட்டு அனுப்புங்கடா...’’சடாரென இரு பக்கங்களிலிருந்தும் திமுதிமுவென நால்வர் வர, அதுவரை இவர்கள் மறைந்திருந்ததை அறியாதவள் பயத்தில் நடுங்க ஆரம்பித்தாள். விபரீதத்தை உணர்ந்தவள் பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பித்தாள்.
குரல் கேட்டு அந்த இரவில் அங்கு கூடியிருந்தவர்கள் திரண்டார்கள். “டேய் யார்றா இது... பொம்பளைங்ககிட்ட தகராறு பண்றீங்களா. யப்பா அந்த போலீசுக்கு போன் போடுப்பா...’’
பயந்து போனவன் தன் கூட்டாளிகளோடு அங்கிருந்து ஓடினான். உடல் நடுங்க தலை சுற்றி அப்படியே அமர்ந்தாள்.
தனுவின் கண்களிலும் அத்தனை மிரட்சி, பயம். ‘‘அம்மா... அம்மா...’’ திகிலில் உறைந்திருந்தவள் அந்தக் குரல் கேட்டுத் திரும்பினாள். அங்கே தனுவின் களங்கமில்லா கண்கள்... தன் வாழ்வின் அத்தனை அடி உதை நாடகங்களின் ஒரே பார்வையாளர். அந்தக் குழந்தையின் கண்கள் இவள் கண்களில் தேங்கிநின்ற அழுகையைஉடைத்தது.
கூட்டம் அவளைச் சுற்றி கூடியதால் அங்கிருந்து கிளம்பி மீண்டும் வீட்டை அடைந்தாள். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் கவனிக்கவில்லை. கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திரும்பினாள். ‘இந்த நேரத்தில் யார் வருவது...’ யோசனையுடன் கதவை நெருங்கும் முன் அவள் அம்மா கதவைத் திறந்தாள்.
எதிரில் அவன். அதிர்ச்சியில் அவள்.‘‘அப்பா...’’ கண்களை கசக்கியபடியே தூக்கத்திலிருந்த தனு அப்பாவைக் கட்டிக்கொண்டாள்..அவளை அணைத்தபடியே வாங்கி வந்திருந்த சிக்கனை அவளிடம் கொடுத்தான். ‘‘வாங்க மாப்ள...’’ வேறு ஏதும் கேட்டால் மருமகன் மீண்டும் கோவித்துக் கொள்ளக் கூடாதே என்ற பயத்துடன் மாமியார் இடத்தை காலி செய்ய... அவன் ஹாலில் இருந்த பிரம்பு இருக்கையில் படுத்துக்கொண்டான்.
காலருகில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த தனு, ‘‘அப்பா... நாங்களும் உங்களைத்தேடிதான் வந்தோம்... அப்ப...’’ தனு ஆரம்பிக்கவும் அவிரா பதற்றத்துடன் ஓடிவந்தாள். அவள் கண்களில் இருந்த மிரட்சியை தனு கவனிக்கத் தவறவில்லை. ஐயோ... எதுவோ தவறாக நடக்கப்போகிறது.
அம்மாவின் பயம் நிறைந்த கண்கள் இவளுக்கு ஏதோ உணர்த்தியது. திரும்பவும் சண்டை வருமோ?நினைக்கையிலே தனுவின் உடல் நடுங்க ஆரம்பித்தது. ஏதோ தவறாக நடந்திருப்பதால்தான் அம்மா நடுங்குகிறாள். அப்படியென்றால் அதை சொல்லக்கூடாது.
‘‘வீட்டுக்கா வந்தீங்க?’’ அவன் கேட்க, என்ன சொல்வதென்று தெரியாமல் சமாளித்தாள் தனு.‘‘வரணும்னு நினைச்சோம்ப்பா. ஆனா...’’ இழுத்தபடியே பேசி அவிராவை நோக்கினாள்.
நிலைமை உணர்ந்த அவிரா, ‘‘கிளம்பினோம். பிறகு லேட்டாகிட்டு, காலைல போயிக்கலாம்னு வந்துட்டோம்...’’அழுது வீங்கிய கண்களையும், ரத்தக்கறைகள் அங்கங்கே பரவிய முகத்தையும் அவன் கவனிக்கத் தவறவில்லை..‘‘காலைல மொத பஸ்ஸுக்கு கிளம்புவோம். அம்மாவையும் தயாரா இருக்கச்சொல்லு. கொஞ்சம் மருந்து ஏதாவது போடச்சொல்லு...’அவிரா திரும்பி தன் அறைக்குச் சென்றாள்.
விடிந்தது. அதே சுப்ரபாதம். அதே கோலம். அதே கோயில் வாசம். அதே பஸ். அவிரா, மோகன், இவர்கள் நடுவில் தனு... மூவரின் மனதிலும் ஒரே கேள்விகள்.திரும்பவும் அதே வாழ்க்கையா? அதே நிகழ்வுகள்தானா? அன்பும் காதலும் இல்லாத வாழ்வுதானா? இருவரின் கைகளும் தனுவை அணைக்க, தனு இருவரின் கரங்களையும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.
இந்திரா பங்கஜம்
|